1,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ஓலா எலெக்ட்ரிக் திட்டம்!
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், லாபத்தை அடைவதற்காக நிறுவனம் 500 பேரை பணி நீக்கம் செய்தததை அடுத்து இரண்டாவது முறையாக இந்த பணி நீக்கம் மேற்கொள்ளப்படுகிறது, என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின்வாகன உற்பத்தி நிறுவனம் ஓலா எலெக்ட்ரிக், அதிகரிக்கும் நஷ்டத்தை கட்டுப்படுத்துவதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக ப்ளும்பர்க் செய்தி தெரிவிக்கிறது.
யூக அடிப்படையில் எண்ணிக்கைகள் தொடர்பாக கருத்து தெரிவிப்பதில்லை, என யுவர்ஸ்டோரி தொடர்பு கொண்ட போது ஓலா எலெக்ட்ரிக் செய்தி தொடர்பாளர் கூறினார்.
நிறுவனம் மேற்கொள்ளும் மறு சீரமைப்பின் ஒரு பகுதியாக, ஓலா தனது வாடிக்கையாளர் உறவு செயல்பாடுகளை தானியங்கிமயமாக்கி, செலவுகளை குறைக்க லாஜிஸ்டிக்ஸ் டெலிவரி உத்திகளை மாற்றி அமைத்து வருவதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

விற்பனை, சேவையில் உள்ள ஊழியர்கள் மற்றும் ஷோரூம்கள், சேவை மையங்களில் உள்ள வேர்ஹவுஸ் பணிகளும் நீக்கப்படுவதாக தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம், லாபத்தை அடைவதற்காக நிறுவனம் 500 பேரை பணி நீக்கம் செய்தததை அடுத்து இரண்டாவது முறையாக இந்த பணி நீக்கம் மேற்கொள்ளப்படுகிறது.
இருப்பினும், 2024 டிசம்பர் காலாண்டில் அதன் நஷ்டம் ரூ.562 கோடியாக அதிகரித்ததாக ஓலா எலெகெட்ரிக் அறிவித்தது. முந்தைய இணையான காலாண்டில் இது ரூ.374 கோடியாக இருந்தது.
மின்வாகனப் பிரிவில் போட்டி அதிகரிக்கும் நிலையில், பாவிஷ் அகர்வாலின் ஓலா எலெக்ட்ரிக் நஷ்டம் மற்றும் சந்தை மதிப்பு தாக்கத்தை எதிர்கொண்டு வருகிறது. டிசம்பர் மாதம், நிறுவனம் மின்சார இருசக்கர வாகன பிரிவில் முதலிடத்தை பஜாஜ் ஆட்டோவிடம் இழந்தது. எனினும், இந்த நிலையை மீட்டது. பிப்ரவரியில் ஓலா எலெக்ட்ரிக் 25,000 வாகனங்கள் விற்று, 28 சதவிதத்துடன் முன்னிலை பெற்றது.
எனினும், இந்த எண்ணிக்கை வாஹன் இணையதளத்தில் பிரதிபலிக்கவில்லை. நிறுவனம் பதிவு நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தை சீரமைத்து வருவதால் தரவுகள் பதிவு ஆவது பாதிக்கப்பட்டுள்ளது. செலவுகளை குறைத்து, செயல்பாட்டை சீரமைக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
பணிநீக்கம் தவிர, நிறுவனம் பிப்ரவரியில் பிராந்திய வேர்ஹவுஸ்களை ரத்து செய்தது. நாடு முழுவதும் உள்ள 4,000 விற்பனை மைய வலைப்பின்னலை, வாகன இருப்பும், உதிரி பாகங்கள், டெலிவரி உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்திக்கொள்வோம், என தெரிவித்தது.
இந்த நடவடிக்கை சாப்ட்பேங்க் ஆதரவு பெற்ற ஓலா எலெக்ட்ரிக் லாப விகிதத்தை பத்து சதவீத புள்ளிகள் உயர்த்தும் என நிறுவனம் தெரிவிக்கிறது.
(பொறுப்பு துறப்பு: யுவர்ஸ்டோரி நிறுவனர் மற்றும் சி.இ.ஓ ஷரத்தா சர்மா, ஓலா எலெக்ட்ரிக் சுயேட்சை இயக்குனராக இருக்கிறார்)
ஆங்கிலத்தில்: சாய் கீர்த்தி, தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan