’மியா கலிஃபா’ பற்றி நீங்கள் அறிந்ததும், அறியாததும்...
'மியா கலிஃபா' என்ற பெயர் தான் இந்த கட்டுரையை நீங்கள் வாசிக்கத் தூண்டிய மிகப்பெரியக் காரணம் என்றாலும், அவரைப் பற்றி நீங்கள் அறிந்தவை வேறாக இருந்தாலும், அவரது இருண்ட மறுபக்கத்தையும் அறிய முயற்சிப்போம்.
வெறும் 3 மாதங்கள் நீங்கள் செய்த ஒரு செயல் வாழ்நாள் முழுவதும் உங்களைத் துரத்தும் என்று தெரிந்தால், அதனை நீங்கள் செய்திருப்பீர்களா?
இந்த கேள்விக்கு நீங்கள் பதில் யோசிக்கும் வேளையில், 'மியா கலிஃபா' என்ற பெயர் தான் இந்த கட்டுரையை நீங்கள் வாசிக்கத் தூண்டிய மிகப்பெரியக் காரணம் என்பதையும் நான் உறுதி செய்து கொள்கிறேன். அவரைப் பற்றி நீங்கள் அறிந்தவை வேறாக இருந்தாலும், அவரது இருண்ட மறுபக்கத்தையும் அறிய முயற்சிப்போம்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் வேளையில், பல பெண்கள் தாங்கள் கடந்து வந்த கடினமான பாதைகள் குறித்தும், தங்களைப் போன்ற மற்ற பெண்கள் அனுபவித்து வரும் கஷ்டங்களையும் உலகிற்கு அறிமுகம் செய்து வைக்கின்றனர். அவர்கள் மீதும் அவர்களை போன்றவர்கள் மீதுமான உலகின் பார்வை மாறுவதற்கு இவை போன்ற முயற்சிகள் பெரிதும் உதவுகின்றன.
1993 ஆம் ஆண்டு லெபனான் நாட்டில் கட்டுப்பாடுகள் நிறைந்த கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்த மியா கலிஃபா 2003ல் அமெரிக்காவில் குடும்பத்தோடு குடியேறுகிறார்.
சிறுவயது முதலே அதிக சதைப்பிடிப்புக் கொண்ட உடல்வாகு இருந்ததால், அதிக மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் மியா கலிஃபா. லெபனான் போன்ற பழமைவாதம் நிரம்பிய நாட்டில் இருந்து வந்த அவருக்கு அமெரிக்காவின் பேஷன் உலகம் உச்சகட்ட வியப்பை தந்துள்ளது. அது மட்டுமல்லாது அது எட்டாக்கனியாகவும் இருந்துள்ளது. பருவ வயதில், தன்னைப் போன்ற மற்ற பெண்களுக்கு கிடைக்கும் ஆண்களின் கவனம், தனக்கும் கிடைக்க வேண்டும் என ஒரு சாதாரண பெண்ணின் ஏக்கம் அவருக்கும் இருந்துள்ளது.
எடைக்குறைப்பு :
இதற்கிடையில் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்காக டெக்ஸாஸ் சென்ற மியா, அங்கு பெரும் முயற்சிக்கு பிறகு தனது உடல் எடையை குறைத்துள்ளார். 22 கிலோ வரை உடல் எடை குறைய, அதுவரை அவருக்கு எட்டாக்கனியாக இருந்த ஆண்களின் கவனம், அவரைத் தேடி வந்துள்ளது.
இதன் பின்னர், அதனை தக்கவைக்க என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்த துவங்கினார் மியா. இப்படிப்பட்ட நேரத்தில் தான், நிர்வாண மாடலிங் என்ற போர்வையில் போர்ன் உலகம் அவரைத் தேடி வந்தது.
"முதலில் என்னை நடிப்பதற்காக அணுகிய பொழுது அதனை பற்றிய முழு உண்மை விவரம் நான் அறியவில்லை. அழகாக உள்ளாய், நீ மாடலிங் செய்தால் அற்புதமாக இருக்கும். மேலும் நிர்வாண மாடல் ஆனால் அதிகம் புகழ் மற்றும் பணம் தேடி வரும் என்று கூறினார்கள். முதல் நாள் அந்த நிறுவனத்திற்கு சென்று பார்த்தபொழுது அனைத்தும் மிக இயல்பாக இருந்தது. வேலைசெய்யும் இடத்தில் அவரவர் குடும்பங்களின் புகைப்படங்கள் இருந்தன.
“எந்த விஷயமும் எனக்கு பயம் அளிக்கும் விதத்தில் இல்லை. மேலும் முதல் முறை சென்ற போது நான் போர்ன் படத்தில் நடிக்கவில்லை. ஆவணங்களில் கையெழுத்து இடுதல், இதில் நடிக்க விருப்பம் உள்ளதா? இது போன்ற கேள்விகள் தான் இருந்தன," என மியா கலிஃபா, பிபிசி நிறுவனத்திற்கு கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார்.
தற்பொழுது 26 வயதாகும் அவரிடம் 21 வயதில், உங்கள் அறியாமையை இந்தத் துறையில் இருந்தவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்று நினைக்கறீர்களா என கேட்ட பொழுது,
"கண்டிப்பாக இல்லை. என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. முடிவுகள் அனைத்தும் தவறானவை என்றாலும், அவை அனைத்தையும் நானே எடுத்தேன். எனவே பாதிக்க பட்டவர் என்று எப்போதும் என்னை கருதமாட்டேன்,“ என்று மிகவும் உறுதியாகக் கூறுகிறார் மியா கலிஃபா.
இளம் வயதில் போர்ன் படத்தில் நடித்திருந்தாலும், தான் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பிவிட்டால் தன் இருண்ட பக்கத்தை யாரும் அறியமாட்டார்கள், தன்னை அடையாளம் காணமாட்டார்கள் என்றே எண்ணினார் மியா. பொழுதுபோக்காக இந்த படங்களில் நடித்துவிட்டு வேறு ஒரு துறைக்கு தான் திரும்பிவிடலாம் என்று நினைத்த மியா கலிஃபாவிற்கு வாழ்க்கை நினைத்தது போல் நடக்கவில்லை.
வருடத்திற்கு 40 பில்லியன் டாலர்கள் புரளும் ஒரு துறையாக இந்த போர்ன் துறை உள்ளது. அதில் மியா கலிஃபா’வின் காணொளிகளை மட்டும் 100 பில்லியனுக்கும் மேற்பட்ட முறைகள் மக்கள் கண்டுள்ளனர். இவ்வாறு இருக்க, இது போன்ற வீடியோக்களில் நடிக்கும் நடிகர் நடிகையருக்கு எந்த அளவு அந்த காணொளிகள் மீது உரிமை உள்ளது என்ற கேள்விக்கு 0.1% கூட இல்லை என்பதே பதிலாகும்.
எங்கு இந்த காணொளிகள் படமாக்கப்படுகின்றன, என்ன உடை, என்ன செய்யவேண்டும் எவ்வாறு செய்யவேண்டும் என எந்த முடிவிலும், நடிப்பவர்களின் பங்கு மிக மிகக் குறைவு. ஆனால் அவர்களின் சம்மதம் இன்றி எதையும் இங்கு செய்ய முடியாது.
நடிப்பவர்கள் நிலை :
அவருக்கு மட்டுமல்ல, போர்ன் படங்களில் நடிக்கும் அனைவருக்கும் இதே நிலைதான். அப்படிப்பட்ட ஒப்பந்தங்களே நடிகர் நடிகையருக்கு கொடுக்கப்படுகின்றன. மேலும் அந்த நேரத்தில் மியாவுக்கு கொடுக்கப்பட்ட ஒப்பந்தத்தில் என்ன இருந்தது என்பதை புரியவைக்கவும், பண விவகாரத்தில் தனக்கு சரியான திசையை உணர்த்தவும் சரியான நபர்கள் அவரோடு இல்லை. இதுவே அவர் ஏமாற்றத்தின் முதல் படியாக அமைந்துவிட்டது.
ஹிஜாப் அணிந்து ஒரு வீடியோவில் ’மியா கலிஃபா’ நடிக்க, அது அவரை போர்ன் உலகில் முடிசூடா ராணியாக உச்சியில் அமரவைத்தது.
அந்த காணொளியை தயாரித்த நிறுவனத்திற்கும், அதனை வெளியிட்ட வலைதளத்திற்கும் இதன் மூலம் பல மில்லியன் டாலர்கள் லாபமாக கிடைத்தது. ஆனால் இதுவரை காணொளிகள் மூலம் மியாவுக்கு கிடைத்துள்ளது வெறும் 12000 டாலர்கள் மட்டுமே. கூடவே கொலை மிரட்டல்களும்...
“ஹிஜாப் அணிந்து நடிக்குமாறு கூறியபோது, இதன் மூலம் எனது உயிர் பறிபோகலாம் என்று நான் கூறினேன். ஆனால் அங்கிருந்தோர் அதைக்கேட்டு சிரிக்க மட்டுமே செய்தனர். அதற்கு மேல் அவர்களிடம் மறுத்து பேச எனக்கு தைரியம் இல்லை. ஒப்பந்தப்படி நடித்து முடித்துவிட்டு விலகிவிட்டால், நம்மை பற்றி யாருக்கும் தெரியாது என்று எண்ணி இருந்தேன். ஆனால் இந்த ஒரு காணொளி என் முகத்தை உலகம் முழுவதும் அறிய வைத்துவிட்டது,” என்று வருந்துகிறார் மியா.
ஆனால் அந்த வருத்தம் அவரை முடக்கிவிடாதவாறு, ஒரு கட்டத்தில் தன்னைப் பற்றியும், தான் இருந்த துறை பற்றியும் வெளிப்படையாக பேசத்துவங்கியுள்ளார். இதன் காரணமாக இதை போன்று பாதிக்கப்பட்ட மற்ற பெண்களும் இவரை தொடர்பு கொண்டுள்ளனர்.
“அந்த மின்அஞ்சல்களில் அவர்கள் எழுதி இருப்பதை படிப்பதற்கே நமக்கு அதிக தைரியம் வேண்டும். கடத்தப்பட்டு இந்தத் தொழிலுக்காக விற்கப்பட்ட பெண்களின் கதைகள் எவரின் கண்களில் இருந்தும் கண்ணீரை வரவழைத்துவிடும்,” என்கிறார் மியா.
இதுவரை மொத்தமாக அவர் நடித்திருப்பது வெறும் 12 போர்ன் படங்களில் மட்டுமே. ஆனால் அவர் தொலைத்தது அவரது வாழ்வை. அவரது குடும்பத்தை. அவரது சுதந்திரத்தை. அவரது தனிப்பட்ட வாழ்க்கையை.
“அந்தத் துறையில் இருந்து வெளியில் வந்த பிறகும், என்னை எனது குடும்பம் ஏற்றுக் கொள்ளவில்லை. நிராதரவாக நின்றேன். யாரும் இல்லா அனாதையாக உணர்ந்தேன். அனைத்தையும் தாண்டி, வெளியில் செல்லும் பொழுது மற்றவர் பார்வை என் மீது விழும்போதே வெட்கத்தில் கூனிக்குறுகி நிற்கின்றேன். எனக்கான தனிப்பட்ட வாழ்க்கை என்ற ஒன்றே இல்லாமல் ஆகிவிட்டது. ஒரு கிளிக் செய்தால் கூகிள் அனைத்தையும் கொடுக்கும்,” என்கிறார் மியா.
அவமானம், துணை நின்ற குடும்பமும் விலகிச்செல்வது. இவை மட்டும் அல்லாது, ஹிஜாப் அணிந்து நடித்ததால், இவருக்கு கொலை மிரட்டல்களும் வந்த வண்ணம் உள்ளன. இவரது தலையை துண்டிப்பது போன்று சித்தரிக்கப்பட்ட ஒரு காணொளி, இவர் வசித்த வீட்டின் புகைப்படம் ஆகியவை இவருக்கு சில அமைப்புகள் அனுப்ப, பல நாட்கள் வேறு வேறு விடுதிகளில் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது மியாவுக்கு. இத்தோடு இஸ்லாமிய நாடுகள் பலவற்றில் இவர் நுழைவதற்கும் தடையிடப்பட்டுள்ளது.
துறையை விட்டு விலகிய பிறகு அந்த வீடியோக்களை நீக்க பல்வேறு வழிகளில் முயற்சித்துள்ளார் மியா. பணம் கொடுக்கிறோம் என்று கூறியும், அதனை நீக்க அந்த நிறுவனம் மறுத்துள்ளது. இப்போது தனது கடந்த காலத்தை மறந்து, இதன் மூலம் தன்மேல் விழுந்துள்ள புகழ் வெளிச்சத்தை சரியான வகையில் பயன்படுத்தி தன்னை போன்று பாதிக்கப்பட்டோருக்கு உதவ வேண்டும் என்ற அவரது முயற்சியை கண்டிப்பாக நாம் பாராட்ட வேண்டும்.