உங்கள் கரியரையே காலி செய்யும் 8 தவறுகள் - திருத்திக் கொள்வது எப்படி?
வேலை - தொழில் வாழ்க்கையை பாதிக்கும் 8 தீய பழக்கங்களையும், அவற்றிலிருந்து விடுபடுதுவதற்கான வழிகாட்டுதலையும் இங்கே பார்க்கலாம்.
நாம் அனைவருமே நம் வேலை அல்லது தொழிலில் எப்போதும் முன்னோக்கி செல்லவே விரும்புகிறோம். ஆனால், சில நேரங்களில், நாம் அறியாமலேயே சில மோசமான பழக்கவழக்கங்களால் பாதிக்கப்படுகிறோம்.
நம்முடைய வேலை அல்லது தொழிலை ஒரு கார் என்று உருவகப்படுத்திக் கொள்ளலாம். அதற்கு தேவை ஒரு நல்ல என்ஜின் (திறமை) மற்றும் எரிபொருள் (கடின உழைப்பு). கார் சாலையில் ஓடிக் கொண்டிருக்கும்போது தேவையின்றி தொடர்ந்து பிரேக் (மோசமான பழக்கங்கள்) அடித்துக் கொண்டிருந்தால் சரியான நேரத்தில் இலக்கை போய் சேர முடியாது.
வேலை - தொழில் வாழ்க்கையை பாதிக்கும் 8 தீய பழக்கங்களையும், அவற்றிலிருந்து விடுபடுதுவதற்கான வழிகாட்டுதலையும் இங்கே பார்க்கலாம்.

படம்: மெட்டா ஏஐ
1) புகழை விரும்புதல்
நாம் அனைவருமே அங்கீகாரத்துக்கு ஏங்கக் கூடியவர்கள். ஆனால், தொடர்ந்து அதை மட்டுமே இலக்காக கொண்டு ஓடினால் பாதிப்பு நமக்குதான். அனைத்துக்கும் தலையாட்டுவது, பிரச்னைகளை தவிர்ப்பதற்காக அனைவரையும் திருப்திபடுத்த முயல்வது ஆகியவை அந்த நேரத்துக்கு உதவலாம், ஆனால் நம்முடைய அதிகாரத்தை அது குறைத்துவிடும்.
செய்ய வேண்டியது: மரியாதை சம்பாதிப்பதில் கவனம் செலுத்துங்கள். உங்கள் முடிவுகளில் நியாயமாகவும் உறுதியாகவும் இருங்கள். மரியாதை என்பது நீண்டகால நிலைத்திருக்கக் கூடிய ஒன்று என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
புகழ் மங்கிவிடும். ஆனால், மரியாதை என்றென்றும் நிலைத்திருக்கும்.
2) புலப்படாமல் இருத்தல்
உங்கள் கடின உழைப்பு அதுவாக கவனிக்கப்படும் என்று நம்புவது, ஒரு மீன் படகை தேடி வந்து குதிக்கும் வரை காத்திருப்பது போன்றது. அது நடக்க வாய்ப்புள்ளதுதான், ஆனால் அதை மட்டுமே நம்பாதீர்கள். உங்கள் பங்களிப்புகளை தீவிரமாக வெளிப்படுத்தாவிட்டால், உங்கள் சாதனைகள் கவனிக்கப்படாமல் போகலாம்.
செய்ய வேண்டியது: கலந்துரையாடல்களில் வெளிப்படையாகப் பேசுங்கள். உங்கள் சாதனைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். வாய்ப்புகளை உருவாக்குங்கள், அவை உங்கள் மடியில் விழும் வரை காத்திருக்காதீர்கள்.
3) விமர்சனங்களை கண்டு அஞ்சுதல்
விமர்சனங்கள் கசப்பானவைதான். ஆனால், வளர்ச்சிக்கு அவை மிகவும் முக்கியம். விமர்சனங்களை பெர்சனலாக எடுத்துக் கொண்டால் அவை நம் வளர்ச்சியை சிதைத்து விடும்.
செய்ய வேண்டியது: வேலை வேறு, நாம் வேறு என்பதை நினைவில் கொள்ளுங்கள். விமர்சனம் என்பது நம்மை மேம்படுத்த மட்டுமே, நம்மை தாக்குவதற்கானது அல்ல. கற்றுக்கொள்வதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பாக அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.

படம்: மெட்டா ஏஐ
4) எப்போதும் பிஸி!
எல்லா நேரமும் பரபரப்பாக இருப்பது என்பது ஆக்கபூர்வமானம் முன்னேற்றம் என்று அர்த்தம் அல்ல. ஒரு பரபரப்பான தேனீயைப் போல ஓடுவது உங்களை முக்கியமானவராக உணர வைக்கலாம். ஆனால், அது நிலையானது அல்ல. அர்த்தமுள்ள முடிவுகளை அடையாமல் நீங்கள் தொடர்ந்து பணிகளைச் செய்து கொண்டிருந்தால், உங்கள் முன்னுரிமைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது.
செய்ய வேண்டியது: அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து, உங்கள் இலக்குகளை நோக்கிய செயல்பாடுகளில் கவனம் செலுத்துங்கள். அளவை விட தரமே எப்போதும் முக்கியம்
5) பிரச்னைகளை தவிர்த்தல்
கடினமான பிரச்னைகளை தவிர்ப்பது குறுகிய காலத்துக்கு எளிதான பாதையாகத் தோன்றலாம். ஆனால் தீர்க்கப்படாத பிரச்னைகள் நச்சுத்தன்மை வாய்ந்த பணிச்சூழலை உருவாக்கும். அவை உறவுகளை சேதப்படுத்துவதோடு, அணியின் செயல்திறனுக்கும் இடையூறாக அமையும்.
செய்ய வேண்டியது: பிரச்சினைகளை நேரடியாகப் பேசுங்கள். உரையாடல்கள் சங்கடமானவைதான் ஆனால் அவை மிகவும் அவசியம். சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வதன் மூலம் தலைமைத்துவத்தையும் நுண்ணறிவையும் வெளிப்படுத்துங்கள்.
6) தனிமை விரும்பி
உதவி கேட்பது பலவீனம் அல்லது திறமையின்மையின் அடையாளம் என்று பலரும் தவறாக நம்புகிறார்கள். ஆனால் உண்மை, இதற்கு நேர்மாறானது. உங்கள் வரம்புகளை உணர்ந்து மற்றவர்களிடமிருந்து உதவி பெறுவது சுய விழிப்புணர்வு, பணிவு மற்றும் கற்றுக்கொள்ளும் விருப்பத்தை வெளிப்படுத்துகிறது.
செய்ய வேண்டியது: அனைவருக்கும் சில நேரங்களில் உதவி தேவை என்பதை புரிந்து கொள்ளவும். உங்களுக்குத் தேவைப்படும்போது உதவியை நாடுவதன் மூலம் ஒத்துழைப்பையும் கற்றலையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.

7) நம்பகத்தன்மையை இழத்தல்
சீரற்ற செயல்திறன் உங்கள் நற்பெயருக்குக் கடும் சேதத்தை ஏற்படுத்தும். அது உங்கள் தொழில் முன்னேற்றத்தைத் தடுக்கக் கூடும். நீங்கள் எப்போதாவது சிறப்பான வேலையை வழங்கினாலும், நீங்கள் பெரும்பாலும் வேலையை தாமதப்படுத்தினால், காலக்கெடுவைத் தவறவிட்டால், உறுதிமொழிகளைப் பின்பற்றத் தவறினால், மக்கள் உங்களை நம்ப தயங்குவர்.
செய்ய வேண்டியது: உங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். எப்போதும் உங்கள் காலக்கெடுவை உரிய நேரத்தில் பூர்த்தி செய்யுங்கள். ஏதேனும் தாமதங்கள் அல்லது சவால்களை நீங்கள் எதிர்கொண்டால், உடனடியாக அது குறித்து பேசுங்கள். நிலையான பணி நெறிமுறையைப் பேணுங்கள். நிலையான முயற்சி மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துங்கள்.
8) சாக்குபோக்கு
சாக்குப்போக்கு சொல்வது என்பது மனிதனின் இயல்பு. ஏதாவது தவறு நடக்கும்போது, வெளிப்புறக் காரணிகளைக் குறை கூறுவது, நமது பங்கைக் குறைத்து மதிப்பிடுவது அல்லது பழியை மற்றவர்கள் மீது மாற்ற முயற்சிப்பது எளிது. ஆனால், சாக்குப்போக்குகளைச் சொல்வது நம்பிக்கையை உடைத்து, உங்கள் நம்பகத்தன்மையை குறைத்துவிடும்.
செய்ய வேண்டியது: உங்கள் தவறுகளுக்கு நீங்களே பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். தீர்வுகளைக் கண்டுபிடிப்பதிலும் உங்கள் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வதிலும் கவனம் செலுத்துங்கள்.
மூலம்: ஆஸ்மா கான்

Edited by Induja Raghunathan