'மீசை ஆணின் அடையாளம் மட்டும் அல்ல’ - மீசையை முறுக்கும் ‘மீசைக்காரி’ ஷைஜா!
ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என்பதை பறைசாற்றும் விதமாக, மீசையொன்றும் ஆண்களின் ஏகபோக உரிமையல்ல, பெண்களும் மீசை வளர்க்கலாம் என பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக மீசை முறுக்கிக் கொண்டு கிளம்பி விட்டார் ஷைஜா.
மீசை கம்பீரத்தின் அடையாளம்; மீசை வீரத்தின் அடையாளம்; மீசை ஆண்மையின் அடையாளம் என்ற மீசை குறித்த ஆணாதிக்க கருத்துக்களை உடைத்தெறிந்திருக்கிறார் கேரளத்தைச் சேர்ந்த இளம்பெண்ணான ஷைஜா.
கேரள மாநிலம், கண்ணூர் சோலையாடு பகுதியை பூர்வீகமாக கொண்டவர் ஷைஜா (34). இவருக்கு பள்ளிப் பருவத்தின் இறுதியில் உதட்டுக்கு மேலே ஆண்களுக்கு இருப்பதைப் போல லேசாக அரும்பு மீசை துளிர்க்கத் தொடங்கியுள்ளது. தொடக்கத்தில் அவர் இதனை கண்டுகொள்ளவில்லை. ஆனால், நாளடைவில் மீசை சற்று அடர்த்தியாகவே வளரத் தொடங்கியுள்ளது.
இதனால், ஷைஜாவை அருகில் இருந்தவர்கள், நண்பர்கள் என அனைவரும் கேலியும் கிண்டலுமாக அவமானப்படுத்தியுள்ளனர். தொடக்கத்தில் மிகுந்த மன உளைச்சலுக்கும், வேதனைக்கும் ஆளான ஷைஜா, நாளடைவில் இது இறைவன் தனக்களித்த பரிசு எனக் கருதி, அனைவரும் கிண்டலும், கேலியும் செய்த தனது மீசையையே தனது அடையாளமாக மாற்றிக் கொண்டு, தன்னம்பிக்கையோடு வாழக்கையில் அடியெடுத்து வைக்கத் தொடங்கினார்.
ஆம்! அனைவரும் கேலியும் கிண்டலும் செய்த மீசையை ஆசையாக பராமரித்து வளர்க்கத் தொடங்கினார்.
இந்நிலையில், திருமண வயதை எட்டிய ஷைஜாவுக்கு, பாலக்காடு பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவருடன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து தனது வருங்கால கணவரிடம் திருமணத்துக்கு முன்பே தனது மீசை பற்றியும், அதனை வாழ்நாள் முழுவதும் பேணி வளர்க்க முடிவெடுத்துள்ளதையும் குறித்து விரிவாக பேசியுள்ளார்.
எலெக்ட்ரீசியனான லட்சுமணன், உன் மீசை வளர்க்கும் ஆசைக்கு நான் எவ்விதத்திலும் இடையூறாக இருக்க மாட்டேன் என பெருந்தன்மையாக கூறி அவரை ஊக்குவித்துள்ளார்.
இதனால், மேலும் உற்சாகமடைந்த ஷைஜா, தனது மீசையை முறுக்கிக் கொண்டு திருமண பந்தத்திலும் இறங்கி வீறு நடை போட்டார். தொடக்கத்தில் ஷைஜாவின் மீசையை கேலியும், கிண்டலும் செய்தவர்கள், அவரின் தன்னம்பிக்கையையும், தனது பலவீனத்தையே, தனது பலமாக, அடையாளமாக மாற்றிக் கொண்டதையும் பார்த்து ஆச்சரியப்பட்டனர். அவரது தன்னம்பிக்கையை பாராட்டத் தொடங்கினர்.
அப்பகுதி பெண்கள் அவரை செல்லமாக ’மீசைக்காரி’ என அழைக்கத் தொடங்கினர். ஆண்களும் கூட அவர் மீசை வளர்க்கும் பணிக்கு தங்களது ஆதரவை தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.
தற்போது திருப்பூர் பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஷைஜாவை திருப்பூர் மக்கள் ’மீசைக்காரி ஷைஜா’ எனச் செல்லமாக அழைத்து வருகின்றனர்.
ஷைஜா - லட்சுமணன் தம்பதிக்கு அஷ்விகா என்ற மகள் உள்ளார். மொத்த குடும்பமும் ஷைஜாவின் மீசை வளர்க்கும் ஆசைக்கு பெரிதும் உறுதுணையாக உள்ளனர். தற்போது அவருக்கு முறுக்கு மீசை புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு அவரின் குடும்பத்தினரும், நண்பர்களும் முழு ஆதரவு அளித்து வருகின்றனர்.
”இந்த மீசை இறைவன் எனக்களித்த சிறப்பு பரிசு. இதனை நான் ஏன் ஓர் குறையாக பார்த்து வருத்தப்பட வேண்டும். இறைவன் எந்த பெண்ணுக்கும் அளிக்காத பாக்கியத்தை எனக்களித்து இருக்கிறார். எனவே, நான் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கடவுள் எனக்களித்த பரிசை போற்றி பாதுகாத்து வருகிறேன்,” என்கிறார் தன்னம்பிக்கையுடன்.
ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என்பதை பறைசாற்றும் விதமாக, மீசையொன்றும் ஆண்களின் ஏகபோக உரிமையல்ல, பெண்களும் மீசை வளர்க்கலாம் என பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக மீசை முறுக்கிக் கொண்டு கிளம்பி விட்டார் ஷைஜா.