குடைகளை விற்று லட்சாதிபதியான எம்பிஏ பட்டதாரி!
மதவிழாக்களில் இது காணப்படும். புகைப்படக் கலைஞர்கள் இதைப் பயன்படுத்துவார்கள். தாக்குதலுக்கு ஒரு ஆயுதமாகவோ அல்லது தற்காப்புக்கு உரிய கேடயமாகவோ கூடப் பயன்படும். இந்த உபகரணம் பற்றிய குறிப்பை முதன் முதலாக 24 நூற்றாண்டுகளுக்கு முன்புதான் காண முடிகிறது. அப்போது அது ‘ஸோஹூ லி’ (Zhou Li) எனக் குறிக்கப்பட்டது. இந்தியாவைப் பொருத்தவரையில், மகாபாரதத்தில் ஜம்தக்னி பற்றியும் அவரது பதி விரதை ரேணுகா பற்றியும் பேசும் போதும் இது பற்றிக் குறிப்பிடப்படுகிறது...
இப்போது அதற்குப் பெயர் குடை. மழையிலிருந்தும் வெயிலிலிருந்தும் பாதுகாக்கும் ஒரு சாதனம். பிரதீக் தோஷியின் குடை பற்றிய பார்வை பிறரது பார்வையிலிருந்து மாறுபட்டது. அவருக்கு குடை வர்த்தகத்திற்கான வாய்ப்பாக இருந்தது. இரண்டே மாதங்களில் குடையை விற்றே ஒருவர் 30 லட்சத்திற்கும் மேல் சம்பாதிக்க முடியுமானால், பிறகென்ன ப்ரதீக் அதை வரவேற்கத்தானே செய்வார். மழையை ஈடு கொள்ள முடியாத ஒரு உற்சாகத்துடன் தழுவிக் கொள்கிறார் ப்ரதீக்.
ப்ரதீக், தொழில்முனைவராக பல்வேறு வளைவு நெளிவும் மேடு பள்ளங்களும் உள்ள பாதையைக் கடந்திருக்கிறார். சீக்கி சன்க் நிறுவனத்தின்(அவரது குடை விற்பனை நிறுவனம்) வெற்றி ரகசியத்தை அறிந்து கொள்ள யுவர் ஸ்டோரி அவரிடம் உரையாடியது.

சீக்கி சங்க் நிறுவனர் ப்ரதீக் தோஷி
நிலைமை தலைகீழாக மாறியது
2014ல்தான் சீக்கி சன்க் (Cheeky Chunk)கை ப்ரதீக் தொடங்கினார். ஒரு சில குடைகளை விற்பனை செய்தார். அதற்குக் கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, பல்வேறு டிசைன்கள் போட்ட வித்தியாசமான குடைகளை, வாங்கக் கூடிய விலைகளில், விற்பனை செய்ய ஒரு நிறுவனத்தைத் தொடங்க முடிவு செய்தார். முதுநிலைப் பட்டப் படிப்பை முடித்ததும் இதை தொடங்கினார். அதுவே அவரது வேலை வாய்ப்பாகவும் ஆனது.
“நான் இந்த முடிவுக்கு வந்ததற்கு இரண்டு காரணங்கள் – ஒன்று இதற்கு முன்பு யாரும் இதைச் செய்யவில்லை. சந்தையில் ஏராளமான வாய்ப்பு திறந்து கிடந்தது. மற்றொன்று யாரோ ஒருவர் பணக்காரர் ஆவதற்கு சலிப்பூட்டும் ஒரே மாதிரியான வேலையைத் தூக்கிச் சுமக்க வேண்டியதில்லை” என்கிறார் ப்ரதீக்.
ஆரம்பத்தில் இந்த யோசனையைச் சொன்ன போது, குடைகளை விற்று பிழைப்பு நடத்துவதா என்று அவரது நண்பர்கள் பலர் அவரது முதுகுக்குக் பின்னால் சிரித்த சம்பவங்களை இப்போது நினைவு கூர்கிறார். அவரது எம்பிஏ நண்பர்களெல்லாம் உட்கார்ந்த இடத்தில் நல்ல சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த போது, குறைந்த மூலதனத்தைப் போட்டு தொழிலைத் தொடங்கி விட்டு, நகரம் முழுவதும் சுற்றி வர வேண்டியிருந்தது.
அவரது சேமிப்பில் இருந்த 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்தான் அவரது ஆரம்ப முதலீடு. இந்தப் பணம் அவரது கல்லூரி நாட்களில் மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துச் சம்பாதித்தது. குடைகளை வடிவமைக்கவும் தயாரிக்கவும் ஒரு இணைய தளத்தை உருவாக்கவும் அவர் அந்தப் பணத்தைச் செலவு செய்தார். யோசனை நல்ல யோசனைதான். ஆனால் பணம் சம்பாதிப்பது கொஞ்சம் கடினமாகவே இருந்தது. 500 குடைகளைத் தயாரித்து, அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மூலம் விற்பனை செய்தார்.

சீக்கி சங்க்கின் குடை டிசைன்கள்
சீசன் முடிந்ததும் நான் வேலை இல்லாதவனாகி விட்டேன். டைம்பாஸ் முடிந்து விட்டது. ஏதாவது உருப்படியான வேலையைப் பார் என்று நண்பர்கள் சொல்ல ஆரம்பித்து விட்டனர். என் நண்பர்களெல்லாம் உட்கார்ந்த இடத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்க நான் மூலதனம் போட்டு, கஷ்டப்பட்டு, எல்லாவற்றையும் இழந்து சம்பாதிக்க வேண்டியிருந்தது. அதுவும் அவர்கள் இரண்டு மாதத்தில் பெறும் சம்பளத்தை நான் சம்பாதிக்க எனக்கு ஆறு மாதங்கள் ஆனது. நாட்கள் போகப் போக எனக்கும் சந்தேகம் வந்தது. நாம் உருப்படியான வேலையைத்தான் பார்க்கிறோமா?
தற்போது நிலைமை தலைகீழாக மாறி விட்டது. எம்பிஏ படித்த ஒருவர் இரண்டு ஆண்டுகளில் சம்பாதிப்பதை, ப்ரதீக் மூன்றே மாதத்தில் குடைகளை விற்றே சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார்.
ஒரு கச்சிதமான குடையைத் தயாரிக்க வேண்டுமானால், அதில் உள்ள கைப்பிடி, பேனல்கள், துணி, பிரேம், டிசைன், தையல் என அத்தனை அம்சங்களும் சரியாக இருக்க வேண்டும். ப்ரதீக் தனக்குத் தேவையான பிரேம்களை ராஜஸ்தானில் இருந்து வரவழைத்துக் கொள்கிறார். உள்ளூரில் துணியை வாங்கிக் கொள்கிறார். டிசைன் பிரின்ட் செய்வது மற்றும் தைக்கும் வேலைக்கு உள்ளூரில் கான்ட்ராட்டர்களை அமர்த்தியுள்ளார்.
ஒரு வெளிச்சம் குறைந்த அறையில், குடைகளில் டிசைன் செய்ய பிரின்டருடன் உதவி செய்வதில் இருந்து உரிய நேரத்திற்கு தயாரிப்பை முடிக்க, 10 கிலோ துணியை ஒரு கிலோ மீட்டர் வரையில் தூக்கிச் சுமப்பது வரையில் நான் இந்தத் தொழிலை வளர்க்க நான் நிறையப் பாடுபட வேண்டியிருந்தது என்கிறார் ப்ரதீக்..
நாளொன்றுக்கு 400 குடைகள் தேவை என்னும் அளவுக்கு ஆர்டர் உயர்ந்தது. தேவை உயர உயர, அதை நிறைவேற்றுவதற்கு தங்களிடம் உள்ள குறைந்த பணியாளர்கள் நிறைய கஷ்டப்பட வேண்டியிருந்தது என்கிறார் ப்ரதீக். குடைகளை பேக் செய்வது, தயாரித்த குடைகளைச் சரிபார்ப்பது, பில் போடுவது என்று அத்தனை வேலைகளையும் செய்வது கஷ்டமாக இருந்தது என்கிறார் அவர்.

பேக் செய்யும் பணி நடக்கிறது
வெவ்வேறு துறை நிபுணர்கள் திருமணம் செய்து கொண்டதைப் போலத்தான் இது. சுலபமானதில்லை ஆனால் மதிப்பு மிக்கது. ஒரு இணைய வர்த்தக நிறுவனம் எப்படி செயல்படுகிறது என்பதை பலபேரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டோம். என்கிறார் அவர்.
மாணவர்கள் பெரும்பாலும் தங்களது பை சார்ட்டிலும் எக்செல் சீட்டிலுமே தேங்கி விடுகின்றனர். உண்மையில் படிப்பு என்பது அதற்கு வெளியேதான் இருக்கிறது என்று கருதுபவர் ப்ரதீக்.
அப்துர் ரெஹ்மான் தெருவில் உள்ளே நுழைந்து பாருங்கள். அங்கு கிடைப்பதெல்லாமே வித்தியாசமான அனுபவங்கள்தான். மனிதர்களின் நடவடிக்கை, ஒருவரிடம் எப்படிப் பேசுவது என்ற கலை, தனித்துவத்தின் மதிப்பு, திரும்பத் திரும்ப சலிக்காமல் வற்புறுத்துவதால் கிடைக்கும் பலன் என அங்கு நிறையக் கற்றுக் கொண்டேன். எல்லாவற்றிற்கும் மேலாக நான் கற்றுக் கொண்டது.. கீதையில் இருந்து நான் அடிக்கடி மேற்கோள் காட்டும் இந்த வரிகளைத்தான். “கடமையைச் செய் பலனை எதிர்பாராதே”
சீக்கி சன்க் ஏழு பேர் குழுவைக் கொண்டது. இரண்டு எம்பிஏ பட்டதாரிகள், ஒரு அக்கவுன்ட்டன்ட், குடைகளை பரிசோதிக்கவும் பேக் செய்யவும் அக்கறையுடன் வேலை செய்யும் இரண்டு பேர். இவர்கள்தான் சீக்கி சன்க் குழு. தண்ணீர் ஒழுகாமல் இருக்குமா, குறைபாடு இல்லாமல் இருக்கிறதா என்று ஒவ்வொரு குடையும் முழுமையாக பரிசோதிக்கப்படுகிறது. சீக்கி சன்க்கில் குடைகளின் விலை குறைவுதான்.
சந்தைப்படுத்தலுக்கு செலவு கிடையாது
ப்ரதீக்கைப் பொருத்தவரையில் அவரது மார்க்கெட்டிங்கில் போட்டோகிராபி முக்கியப் பங்கு வகித்ததாகச் சொல்கிறார். 50 சதவீத விற்பனைக்கு பொருளின் தரமும் வாடிக்கையாளர்களின் நற்சான்றும்தான் காரணம் என்கிறார் அவர். விற்பனையை விரிவு படுத்த சீக்கி சன்க் தனது வாடிக்கையாளருக்கு பரிசு வழங்கும் உத்தி ஒன்றைக் கையாள்கிறது. பிற வாடிக்கையாளருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. ஊடகங்களில் ஒரு பொருளைப் பற்றி எழுதுவது அதன் விற்பனையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் தனது பொருளைப் பற்றி யாருக்காவது பணம் கொடுத்து எழுதச் செய்வதை ப்ரதீக் விரும்புவதில்லை.
ப்ரதீக் இணைய வழி வர்த்தகத்தைத்தான் வலியுறுத்துகிறார்.
இணைய தளப் பட்டியலில் உங்கள் பொருளை சேர்த்த உடனேயே சந்தைப்படுத்தல் ஆரமபித்து விடுகிறது. தேடும் குறிச் சொற்கள் (Search keywords) முக்கியம். நமது பொருளை எப்படித் தேடினாலும் கிடைக்கும் விதத்தில் அதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட குறிச் சொற்களைக் கொடுத்து வைக்க வேண்டும். அவற்றில் சில எழுத்துப் பிழைகளுடன் கூட இருக்கும். நமது பொருளைச் சந்தைப்படுத்தும் நிறுவனங்களைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
மே 27ம் தேதி நான் ரொம்பவும் பதற்றத்தில் இருந்தேன். அப்போதுதான் எனது குடையை அமேசானின் விற்பனைப் பட்டியலில் சேர்த்தேன். எனது மாமாவிடம் சொல்லி, அமேசான் மூலம் குடையை ஆன்லைனில் வாங்கச் சொல்லியிருந்தேன். அந்த நேரத்தில் அது 20வது பக்கத்தில் இருந்தது. மூன்றே வாரத்திற்குள் அது முதல் பக்கத்தில் வந்ததோடு, அமேசானில் அதிகம் விற்ற குடை நம்முடையுதுதான் என்ற பெயரைப் பெற்றது என்கிறார் ப்ரதீக் பெருமையுடன்.

உங்கள் பொருளை வாங்கச் சொல்லி ஒருபோதும் சொல்லாதீர்கள் என்கிறார் ப்ரதீக். அதற்கு பதிலாக உங்களின் தரமான பொருளைக் காட்சிப் படுத்துங்கள். உங்கள் பொருள் எந்தச் சூழ்நிலைக்குத் தேவையோ அந்தச் சூழ்நிலையை விரும்பச் செய்யுங்கள் என்கிறார் அவர். சீக்கி சன்க், மக்களை மழையை விரும்பச் செய்கிறது. மழையுடன் அவர்களது இனிமையான நினைவுகளை அசை போடத் தூண்டுகிறது.
மழையாய்க் குவிந்த விற்பனை
தற்போது சீக்கி சன்க், ஃபிலிப்கார்ட், அமேசான், ஸ்நாப்டீல் ஆகிய இணையதளங்களிலும் மற்றும் தனது சொந்த இணையதளத்திலும் விற்பனை செய்கிறது. இது தவிர மும்பையில் பாந்த்ரா, மாதுங்கா, பிரீச்கேண்டி, சர்ச்கேட் ஆகிய இடங்களில் உள்ள ஒரு சில சில்லறை விற்பனைக் கடைகளிலும் விற்பனை நடக்கிறது. இந்த ஆண்டின் துவக்கத்தில் 1000 குடைகள் விற்பனை செய்வது என இலக்கு நிர்ணயித்திருந்தனர். ஆனால் இதற்குள்ளாகவே 7 ஆயிரம் குடைகளுக்கு மேல் விற்றுத் தீர்ந்து விட்டது. பீகார், சத்தீஸ்கர், ஒடிஸ்ஸா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மட்டுமே 40 சதவீத விற்பனை நடந்துள்ளது. பெரும்பாலான குடைகள் மறு விற்பனையாளர்கள் மூலமாகத்தான் நுகர்வோருக்கு விற்பனையாகியுள்ளன. அவர்கள் இணைய தளம் உள்ளிட்ட சந்தைகளில் மொத்தமாக வாங்கி சில்லறையாக விற்கின்றனர். இந்த சீசன் முடிவில் எப்படியும் விற்பனை எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தொட்டு விடும் என எதிர்பார்க்கிறார் ப்ரதீக். நிறுவனம் லாபகரமாக இயங்குகிறது. ஆரம்பத்தில் குடைக்குத் தேவையான உதிரிபாகங்கள் விற்பனை செய்பவர்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டுமே கொடுத்து விட்டு மீதிப்பணத்தை குடைகளை விற்றுத் தருவதாக ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தது சீக்கி சன்க். அந்த நேரத்தில் நடைமுறை மூலதனத்தில் இருந்த பற்றாக்குறையை இப்படித்தான் சரிக்கட்டினார்கள்.
வெள்ளை வயலில் ஊதாப் பசுவாகத் தோன்றுங்கள்
சீக்கி சன்க் ஒரு நேரத்தில் ஏதேனும் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் கவனம் வைக்கிறது. கடந்த வருடத்தில் முன்மாதிரியாக ஒரு சில தயாரிப்புகளை கொண்டு வந்தது. அவற்றை இந்த ஆண்டு தீபாவளிக்கு அறிமுகப்படுத்துகிறது. தயாரிப்புகளின் எண்ணிக்கையை விரிவு படுத்த வேண்டும் என்பதை ப்ரதீக் புரிந்திருக்கிறார். சீக்கி சன்க் பணிகளை விரும்பக் கூடிய முதலீட்டாளர்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
ஒரு கூட்டத்தில் ஒரு பத்துப் பேர் வழக்கமான அதே கருப்புக் கலர் குடையைப் பிடித்துக் கொண்டிருக்கும் போது பதினோராவது நபர் சீக்கி சன்க்கின் மஞ்சள் நிறக் குடையைப் பிடித்துக் கொண்டிருந்தால், நிச்சயம் அது உங்களுக்கு புன்னகையை வரவழைக்கும். எங்கள் அனைத்துத் தயாரிப்புகளுக்கும் நாங்கள் இதைத்தான் செய்ய விரும்புகிறோம் என்கிறார் ப்ரதீக்.

புதிய பணியாளர்களை அமர்த்தி, நிறுவனத்தை விரிவாக வளர்த்து வெள்ளை வயலில் ஒரு ஊதா நிறப் பசு போல தனித்துத் தெரிய ஆசைப்படுகிறார் ப்ரதீக். நம்பிக்கை நிறைந்த ப்ரதீக் பின்வருமாறு முடிக்கிறார்:
“வழக்கமான ஒரு காபி மக் அல்லது ஒரு டீ சர்ட்டை நாங்கள் விற்பதை நீங்கள் ஒருபோதும் பார்க்க முடியாது. நிறையப் பேர் அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றனர். அதே விஷயத்தைச் செய்வதற்கு எங்கள் நேரத்தை வீணடிக்க நாங்கள் விரும்ப மாட்டோம். உண்மையான பிரச்சனைகளுக்கு எங்கள் படைப்பாற்றல் மூலம் நாங்கள் தீர்வு காண்போம்.”
இணையதள முகவரி: Cheeky Chunk