'9 மாதங்கள் விண்வெளியில் தங்கிய முதல் பெண்' - யார் இந்த சுனிதா வில்லியம்ஸ்?
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பத்திரமாக பூமி திரும்பியுள்ள சுனிதா வில்லியம்ஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அவரது தந்தை வழி பூர்விக ஊரான குஜராத்தின் மெஹ்சானாவில், சுனிதாவின் சாதனையை மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 286 நாட்களுக்குப் பிறகு பத்திரமாக பூமி திரும்பியுள்ளார் 59 வயதான சுனிதா வில்லியம்ஸ். அவர் சிரித்த முகத்துடன் டிராகன் விண்கலத்தில் இருந்து வெளியில் வந்த காட்சிகளைப் பார்த்த பிறகுதான், அவரது பூர்வீக ஊரான ஜூலாசன் மக்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்துள்ளது.
சுனிதாவின் தந்தை பிறந்த குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள ஜூலாசன் கிராமத்தினர் தங்களது இந்த மகிழ்ச்சியை பட்டாசு வெடித்தும், இனிப்புகள் பரிமாறியும் கொண்டாடி வருகின்றனர். ஊரே விழாக்கோலம் பூண்டு சந்தோசத்தில் திளைத்துள்ளது.

சுனிதாவின் அப்பா இந்தியர்?
கல்பனா சாவ்லாவைத் தொடர்ந்து நாசாவில் பணிபுரியும் இரண்டாவது இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். இவருடைய அப்பா தீபக் பாண்டியா இந்தியாவைச் சேர்ந்தவர். இவரது சொந்த ஊர் குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள ஜூலாசன் கிராமம் ஆகும். மருத்துவரான தீபக் பாண்டியா, அகமதாபாத்தில் மருத்துவப் படிப்பை முடித்தார்.
தீபக் பாண்டியாவின் அண்ணன் அமெரிக்காவில் இருந்ததால், 1957ம் ஆண்டு அவரும் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். பின்னர் அங்கு ஸ்லோவீனிய அமெரிக்கரான உர்சுலின் போனியை மணந்தார். இந்த தம்பதிக்கு ஜெய், தினா, சுனிதா என மூன்று குழந்தைகள் பிறந்தனர். இதில் அமெரிக்காவின் ஓஹாயோ மாகாணத்தில் 1965ம் ஆண்டு பிறந்தவர்தான் சுனிதா வில்லியம்ஸ்.
மாசசூசெட்ஸில் உள்ள நீதம் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். 1983ல் பட்டம் பெற்றார். பின்னர், 1987 ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படை அகாடமியில் இயற்பியல் அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார் சுனிதா வில்லியம்ஸ்.

Image credit: NASA
எம்மதமும் சம்மதம்
சுனிதாவின் தந்தை ஒரு இந்து, அவரது தாயார் ஒரு கத்தோலிக்கர். இரு வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், தங்கள் வீட்டில் தங்கள் குழந்தைகளுக்கு அனைத்து மதமும் ஒன்றே என்பதைக் கற்பித்தனர் சுனிதாவின் பெற்றோர்.
ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயத்திற்கு பகவத் கீதையை சுனிதாவின் தந்தை தீபக் எடுத்துச் செல்வார் எனக் கூறப்படுகிறது. மேலும், அவர் தனது குழந்தைகளுக்கு ராமாயணம் மற்றும் மகாபாரத கதைகளையும் கற்பித்துள்ளார். கண்டம் கடந்து வாழ்ந்தாலும், தொடர்ந்து தனது குழந்தைகளுக்கு இந்திய கலாச்சாரத்துடன் ஒரு தொடர்பை ஏற்படுத்த அவர் முயற்சித்துள்ளார்.
அதனால்தான், தனது விண்வெளிப் பயணத்தின் போது, தனது தந்தை தனக்கு பரிசளித்த பகவத் கீதையையும் உடன் எடுத்துச் சென்றுள்ளார் சுனிதா வில்லியம்ஸ். அதோடு, இந்திய உணவுகளின் சுவையை மறக்க முடியாது எனக் கூறி, அவர் சமோசாவையும் தன்னுடன் விண்வெளிக்கு எடுத்துச் சென்றதாக முன்பொரு முறை பேட்டியில் கூறியது குறிப்பிடத்தக்கது.

கொண்டாட்டத்தில் ஜூலாசன் கிராம மக்கள்
அப்பா கற்றுத் தந்த பாடம்
சுனிதா வில்லியம்ஸின் குடும்பத்தில் உடற்பயிற்சிக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. இதனால் அவரும் அவரது உடன் பிறந்தவர்களும் நீச்சல் கற்றுக்கொண்டனர். காலையில் இரண்டு மணி நேரமும், மாலையில் பள்ளி முடிந்த பிறகு இரண்டு மணி நேரமும் அவர்கள் நீச்சல் பயிற்சி செய்தனர். சுனிதாவுக்கு நீச்சல் மிகவும் பிடிக்கும். ஆறு வயதிலிருந்தே, அவர் நீச்சல் போட்டிகளில் போட்டியிட்டு பல பதக்கங்களை வென்றுள்ளார்.
சிறுவயதில் இருந்தே அவருக்கு உடற்பயிற்சியின் மீது இருந்த ஆர்வம்தான், அவரை விண்வெளிப் பயணத்தின் போதும் மராத்தான், டிரையத்லான் போன்றவற்றில் கலந்து கொள்ளவும் தூண்டுதலாக இருந்துள்ளது. விண்வெளியில் மராத்தானில் ஈடுப்பட்ட முதல் நபர் என்ற சாதனையையும் சுனிதா வில்லியம்ஸ் புரிந்துள்ளார்.
புகழ்பெற்ற பாஸ்டன் மராத்தானில் பங்கேற்க பதிவு செய்திருந்த சுனிதா, விண் பயணம் மேற்கொண்டதால், 2012-ஆம் ஆண்டு விண்வெளி நிலையத்தில் உள்ள டிரெட்மில்லில் நடந்து நான்கரை மணி நேரத்தில் பாஸ்டன் மராத்தானுக்காக நிர்ணயித்த தூரத்தை கடந்தார். இதேபோல், விண்வெளியில் டிரையத்லான் மேற்கொண்டு சாதனை படைத்தார். எதிர்ப்பு பயிற்சிகளைப் பயன்படுத்தி நீச்சல் அடித்து, நிறுத்தி வைக்கப்பட்ட கைக்கிளை ஒட்டி, டிரெட்மில்லில் நடந்து டிரையத்லானை நிறைவு செய்தார்.

சொந்த ஊர் பாசம்
அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தாலும், சொந்த ஊர் பாசமும் சுனிதாவிற்கு எப்போதுமே உண்டு. தன் தந்தையின் சொந்த ஊரான ஜூலாசனுக்கு, மூன்று முறை வந்து சென்றுள்ளார். சுமார் 7 ஆயிரம் மக்கள் வசிக்கும் ஜூலாசன் கிராமத்தில் இன்னமும் சுனிதாவின் உறவினர்கள் பலர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சிறிய நூலகம் ஒன்று உள்ளது. இதற்கு சுனிதா வில்லியம்ஸின் தாத்தா, பாட்டியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதால், இந்த கிராம மக்களுக்கு சுனிதா வில்லியம்ஸ் குடும்பத்தின் மீது அதிக அன்பும், பாசமும் நிறையவே உள்ளது. அதனால்தான் ஒவ்வொரு முறை சுனிதா விண்வெளி பயணம் மேற்கொள்ளும் போதும், திரும்பி அவர் வெற்றிகரமாக பூமிக்கு வரும் போது தங்களது மகிழ்ச்சியை கொண்டாடித் தீர்த்து விடுகின்றனர். சுனிதாவின் இந்த அற்புதமான தருணங்களை தங்களது ஊரில் ஒரு திருவிழா போலவே கொண்டாடுகின்றனர் ஜூலாசன் கிராமத்தினர்.
இந்தமுறையும் அவர் எதிர்பார்த்தது மாதிரி உடனடியாக திரும்ப முடியாமல், விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கிய போது, ரொம்பவே கலங்கிப் போயினர் இந்த கிராம மக்கள். தொடர்ந்து அவருக்காக பிரார்த்தனைகள் மேற்கொண்டு வந்தனர்.
நேற்றும் அவர் டிராகன் விண்கலத்தில் கிளம்புவதற்கு முன்னதாகவே தங்கள் ஊரில் சிறப்புப் பிரார்த்தனைகளை அவர்கள் ஆரம்பித்து விட்டனர். இரவு முழுவதும் தொடர்ந்து சுனிதாவிற்காகவும், அவருடன் பயணித்த மற்ற விண்வெளி வீரர்களுக்காகவும் அவர்கள் பிரார்த்தித்து வந்தனர்.
இன்று அதிகாலை இந்திய நேரப்படி, 3.27 மணிக்கு சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமி திரும்பியதை நாசாவின் நேரடி ஒளிபரப்பைப் பார்த்த பிறகுதான், அவர்களுக்கு நிம்மதிப் பெருமூச்சே ஏற்பட்டது. பின்னர், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், கொண்டாட்டங்களை ஆரம்பித்து விட்டனர். ஒருவருக்கொருவர் இனிப்புகளைப் பகிர்ந்து அவர்களது தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சுனிதா வில்லியம்ஸ் இந்தியா வருகை?
விண்வெளிப் பயணங்களை வெற்றிகரமாக முடித்த பிறகு, கடந்த காலத்தில் வில்லியம்ஸ் தனது தந்தையின் சொந்த கிராமமான ஜூலாசனுக்கு மூன்று முறை பயணம் செய்துள்ளார். தனது மூதாதையர் ஊரில் உள்ள ஒரு பள்ளிக்கு அவர் நிதியுதவியும் அளித்தார். அந்தப் பள்ளியின் பிரார்த்தனை மண்டபத்தில் அவரது தாத்தா பாட்டியின் புகைப்படம் இன்னும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த முறையும் வெற்றிகரமாக விண்வெளிப் பயணத்தை முடித்து சாதனைப் பெண்ணாக பூமி திரும்பியுள்ள சுனிதா, தங்களைப் பார்க்க இந்தியா வருவார் என்ற எதிர்பார்ப்பில் ஜூலாசன் கிராமத்தினர் உள்ளனர்.
இது குறித்து, சுனிதா வில்லியம்ஸின் உறவினரான தினேஷ் ராவல் கூறுகையில்,
“இன்று நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். பாதுகாப்பான தரையிறக்கத்திற்காக இரவு முழுவதும் பிரார்த்தனை செய்தோம். கடந்த ஒன்பது மாதங்கள் எங்களுக்கு எளிதானவை அல்ல. நாங்கள் மிகவும் கவலைப்பட்டோம். சுனிதா மிகவும் துணிச்சலானவர்.. இது எங்களுக்கு ஒரு பெரிய நாள்... அவர் நாட்டின் பெருமை...” எனப் பாராட்டியுள்ளார்.
சுனிதா வில்லியம்ஸின் மற்றொரு உறவினரான நவீன் பாண்டியா கூறுகையில்,
“எதிர்காலத்தில் சுனிதாவை எங்கள் கிராமத்திற்கு அழைக்க நாங்கள் ஆர்வமாக உள்ளோம். அவர் பாதுகாப்பாக திரும்புவதற்காக நாங்கள் பிரார்த்தனை செய்து ஜோதியை ஏற்றினோம்,” எனத் தெரிவித்துள்ளார்.
தான் அமெரிக்காவில் வாழ்ந்தாலும், தனது வாரிசு இந்தியராக இருக்க வேண்டும் என விரும்பிய சுனிதா, தனது கணவரோடு சேர்ந்து கடந்த 2012ம் ஆண்டு அகமதாபாத்தில் உள்ள ஒரு பெண் குழந்தையை தத்தெடுக்க ஆர்வம் காட்டினார் என்பது இங்கே நினைவுகூரத் தக்கது.

சுனிதா முன்பு இந்தியா வந்திருந்தபோது எடுத்த புகைப்படம்
குவியும் பாராட்டுகள்
வெற்றிகரமாக பூமி திரும்பிய சுனிதாவிற்கு பல்வேறு பக்கங்களில் இருந்தும் வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. அமெரிக்காவில் மட்டுமின்றி, இந்தியாவிலும் அவரை சமூகவலைதளப் பக்கங்கள் வாயிலாக பாராட்டி,வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி,
“சுனிதா வில்லியம்ஸ்-ல் 140 கோடி இந்தியர்கள் பெருமை,” எனப் பாராட்டியுள்ளார்.
இதேபோல், விண்வெளியில் இருந்து பூமி திரும்பிய நாசா வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்க்கு இஸ்ரோ சார்பில், அதன் தலைவர் நாராயணன் வரவேற்பும், வாழ்த்தும் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“வெல்கம் பேக் சுனிதா வில்லியம்ஸ். விண்வெளி மையத்தில் இருந்து நீண்ட பயணத்திற்குப் பிறகு நீங்கள் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை. நாசா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுக்கான அர்ப்பணிப்புக்கு ஒரு சான்று. உங்கள் அர்ப்பணிப்பு உலகெங்கிலும் உள்ள விண்வெளி ஆர்வலர்களை தொடர்ந்து ஊக்குவிக்கிறது.“
இஸ்ரோ தலைவர் என்ற முறையில், எனது சக ஊழியர்களின் சார்பாக நான் உங்களுக்கு அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடி தலைமையில், இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றும் நோக்கில் பாடுபடும் போது, விண்வெளி ஆராய்ச்சியில் உங்கள் நிபுணத்துவத்தைப் பயன்படுத்த விரும்புகிறோம், எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல், இஸ்ரோ முன்னாள் இயக்குனரான மயில்சாமி அண்ணாதுரை கூறுகையில்,
“சுனிதா வில்லியம்ஸ் உடல்நலன், மனநலனால் சாதனை படைத்துள்ளார். சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மைய கமாண்டராக இருந்துள்ளார். அவருக்கு உடல்நலன் , மனநலன் ஆகியவை சிறப்பாக இருக்கிறது. அது இருப்பதால்தான் கமாண்டராக இருந்து வழிநடத்தி இருக்கிறார்.“
ஒரு பெண்ணால் எவ்வளவு நாளாக விண்வெளியில் இருக்க முடியும் என்பதை சுனிதா வில்லியம்ஸ் நன்றாக உணர்த்தி இருக்கிறார். பத்து நாட்களில் திரும்பி இருக்க வேண்டியவர், அங்கு இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டபோதும், சர்வதேச விண்வெளி மையத்தில் தலைமை பொறுப்பு ஏற்று பணிபுரியும் அளவிற்கு அவரது உடல் நலம் சிறப்பாக இருக்கிறது, எனப் பாராட்டியுள்ளார்.