ஆர்க்கிடெக்ட்; சினிமா என தோல்வி கேரியர்கள் - ஸ்பின்னராக உருபெற்று சாதித்த வருண் சக்கரவர்த்தி!
வருண் சக்கரவர்த்தி, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றதற்கு அவர் வீழ்த்திய விக்கெட்கள் ஒரு காரணம். ஆனால், இந்திய கிரிக்கெட்டில் ஒரு பிரபலமான வீரராக அவர் மாறுவதற்கு முன் அவர் சந்தித்தது, நிராகரிப்புகள், கேரியரில் தோல்விகள் மட்டுமே.
வருண் சக்கரவர்த்தி, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றதற்கு அவர் வீழ்த்திய விக்கெட்கள் ஒரு காரணம். ஆனால், இந்திய கிரிக்கெட்டில் ஒரு பிரபலமான வீரராக அவர் மாறுவதற்கு முன் அவர் சந்தித்தது, 40 நிராகரிப்பு, பல கேரியர் மாற்றம். ஆம், கிரிக்கெட் உலகில் தொடர் நிராகரிப்பை கடந்து, தமிழ் சினிமாவில் சிறுபயணம், ஆர்க்கிடெக்டாக 3 ஆண்டுகள் என பாதைகள்மாறி, உள்ளூரயிருந்த கிரிக்கெட் காதலால், இன்றைய புகழை அடைந்துள்ளார். இந்திய கிரிக்கெட் ரசிகர் பட்டாளமே அவரை பாராட்டினாலும், தமிழர்களுக்கு இன்னும் கூட நெருக்கமானவர்...

பட உதவி: என்டிடிவி
சுயசரிதையை பிரதிபலித்த 'ஜீவா' படத்தில் நடித்த வருண்!
பிறந்தது கர்நாடகாவிலுள்ள பீதர் நகரம். படித்து, வளர்ந்தெல்லாம் பக்கா சென்னைவாசியாக. அவரது அப்பா வினோத் சக்கரவர்த்தி, பாதி மலையாளி, பாதி தமிழர். அம்மா மாலினி கர்நாடகாவை சேர்ந்தவர். பள்ளி நாட்களில், வருண் ஒரு கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற உயர்ந்த லட்சியங்களைக் கொண்டிருந்தார். ஆனால், காலத்திற்கு ஏற்ப குழந்தைகளின் இலக்குகள் பரிணமித்து கொண்டே வருவது போலவே, வருணின் இலக்குகளும் தடம் மாறிக் கொண்டேயிருந்தன.
பள்ளிப்படிப்பிற்கு பிறகு எஸ்ஆர்எம் பல்கலைகழகத்தில் ஆர்க்கிடெக்ச்சர் முடித்த அவர், 3 ஆண்டுகள் ஆர்க்கிடெக்டாக பணியாற்றியுள்ளார். அங்கிருந்து சொந்தமாக அவரே ஆர்க்கிடெக்ட் நிறுவனத்தை தொடங்கினார். அங்கு ஏற்பட்ட தோல்வி அவரை தமிழ் சினிமா பக்கம் இழுத்துள்ளது. பிரபல ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.
ஒரு சாகப்தத்திற்கு முன்பாக தமிழ் சினிமாவில் கேமரா, ஸ்கிரிப்ட் எழுதுதல், ஷார்ட்-பிலிம் எடுத்தல் என வேறு கோணத்தில் பயணித்துள்ளார். அப்போது, 2014 ஆம் ஆண்டில், அவர் அறியாமலேயே அவரது சொந்த வாழ்க்கைப் பயணத்தை பிரதிபலித்த கிரிக்கெட் விளையாட்டு படமான விஷ்ணு விஷால் நடித்த 'ஜீவா' திரைப்படத்தில் ஒரு சிறியத் தோற்றத்தில் நடித்தார்.
அப்படத்தில் நடிக்கும் போதும் அவர் பின்னாளில் கிரிக்கெட்டராவார் என்ற எண்ணம் கொள்ளவில்லை. ஏனெனில், கிரிக்கெட்டை கேரியராக அவர் தேர்ந்தெடுத்த போது அவருக்கு வயது 26. அவருடைய திட்டங்கள் அனைத்தும் தோல்வியை சந்திக்க, சிறுவயதிலிருந்தே ஸ்ட்ரெஸ் ரீலிஃபராக இருந்த கிரிக்கெட்டை முழு மூச்சாக விளையாடலாம் என்று எண்ணத்தில் தொடங்கினார். ஆனால், அங்கும் அவருக்கான போராட்டங்கள் காத்திருந்தன. அவரது வெற்றி ஒரே இரவில் நடந்ததல்ல, மாறாக ஏராளமான தடைகளைச் சந்தித்த போதிலும் இடைவிடாத முயற்சியின் மூலம் கிடைத்தது.

தமிழ் திரைப்படமான 'ஜீவா'வில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த வருண் (வலது பக்க புகைப்படம்)
பட உதவி: எக்னாமிக்ஸ் டைம்ஸ்.
யூடியுப் பார்த்து ஸ்பின்னிங் கற்றுக் கொண்ட சீக்ரெட் ஸ்பின்னர்!
ஆரம்பத்தில் ஒரு விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக இருந்த வருண், தேர்வு போட்டிகளில் கடுமையான போராட்டத்தை எதிர்கொண்டார். 40 நிராகரிப்புகளைத் தாங்கிய பிறகு, தொடர்ச்சியான ஏமாற்றங்கள் அவரை சோர்வடையச் செய்தன. மேலும், அவர் விளையாட்டிலிருந்து விலக முடிவு செய்ததாக தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ராவிடம் ஒரு நேர்காணலில் கூறினார். அவரது கனவு முடிவுக்கு வந்துவிட்டதாக நம்பி அவரது கிரிக்கெட் உபகரணங்களை அவரது நண்பர்களுக்கு வழங்கினார்.
இருப்பினும், அவரது இரண்டாவது இன்னிங்ஸ் சுமூகமாக இருந்தது. விக்கெட் கீப்பிங், வேகப்பந்து வீச்சு மற்றும் பேட்டிங் என பல்வேறு வேடங்களில் அவர் தன்னை பரிசோதித்தார், ஆனால், எதுவும் வெற்றி பெறவில்லை. மீண்டும் ஒருமுறை விட்டுக்கொடுக்கும் தருவாயில் இருந்தபோது, ஒரு முக்கியமான திருப்புமுனை ஏற்பட்டது. ஒரு சுழற்பந்து வீச்சாளராக அவரது திறமையைக் கண்டுபிடித்தார். அதுவும், யூடியுப் வீடியோவில் ஸ்பின்னிங் பயிற்சியை கற்றுக்கொண்டார்.
வேகப்பந்து வீச்சாளராக அவர் பங்கேற்க இருந்த முதல் போட்டியின் போது, முழங்காலில் காயம் ஏற்பட்டதில் 6 மாதங்களுக்கு ஓய்வு எடுக்க மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டார். அந்த சமயத்தில், யூடியுப் வீடியோக்களில் ஸ்பின்னிங் கற்று கைத்தேர்ந்தார் இன்றைய சீக்ரெட் ஸ்பின்னர் என்ற பட்டம் பெற்ற வருண்.
தொழில்முறை கிரிக்கெட்டுக்கு தாமதமாக வந்த போதிலும், வருண் இந்தியாவின் மிகவும் நம்பகமான சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். அதற்கான சான்று சமீபத்திய ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அவரது ஆட்டம். போட்டியின் இரண்டாவது அதிக விக்கெட் வீழ்த்திய வீரரானார். நியூசிலாந்திற்கு எதிரான இறுதிப் போட்டியில், அவரது முக்கியமான திருப்புமுனைகள் எதிரணியை பின்னுக்குத் தள்ளி, போட்டியின் வெற்றியாளராக அவரது நற்பெயரை உறுதிப்படுத்தின.

கிரிக்கெட் வாழ்வில் நிகழ்ந்த திருப்புமுனை
2017-18 சீசனில் மாநிலஅளவிலான கிரிக்கெட் போட்டிகளில் வருண் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார். ஒரு நாள் போட்டியில் ஜூபிலி கிரிக்கெட் கிளப்புக்காக விளையாடிய அவர், ஏழு போட்டிகளில் 31 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது வழக்கத்திற்கு மாறான மர்மமான சுழற்பந்து வீச்சு அவரத தனித்து நிற்க செய்தது. பல்வேறு மாறுபாடுகளுடன் பேட்ஸ்மேன்களை திகைக்க வைத்தது. தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் (TNPL) அவரது திறமைகளை மேலும் மேம்படுத்தினார். 2017ம் ஆண்டு காரைக்குடி காளை அணிக்காகவுமு், 2018ம் ஆண்டு மதுரை பாந்தர்ஸ் அணிக்காவும் விளையாடினார். அவரது திறமை கவனிக்கப்படாமல் போகவில்லை, விரைவில், ஐபிஎல் அணிகள் அவர் மீது ஆர்வம் காட்டின.
2019ம் ஆண்டில், ஐபிஎல் ஏலத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி (இப்போது பஞ்சாப் கிங்ஸ்) அவரை ரூ.8.4 கோடிக்கு வாங்கியது. இருப்பினும், காயங்கள் மற்றும் சீரற்ற தன்மை அவரது சீசனுக்கு இடையூறாக இருந்ததால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேம் சேஞ்சிங் தருணம் மற்றொரு பின்னடைவாக மாறியது. ஒரு கணம், அவரது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வாய்ப்பு அவரது விரல்களைவிட்டு நழுவிப் போனது போல் தோன்றியது. ஆனால், கம்பேக் கொடுப்பது வருணுக்குப் புதிதல்ல.
2020ம் ஆண்டில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அவருக்கு ஒரு வாய்ப்பை அளித்தது. இந்த முறை, அவர் சிறப்பாக விளையாடினார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஐந்து விக்கெட்டுகள் உட்பட 17 விக்கெட்டுகளுடன், அவர் போட்டியின் சிறந்த வீரர்களில் ஒருவரானார். அவரது ஆட்டம் இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான தேசிய அணியில் இடம் பெற அவருக்கு வாய்ப்பளித்தது.
இருப்பினும், உடற்தகுதி பிரச்சினை அவரது அறிமுகத்தை தாமதப்படுத்தியது. இறுதியாக 2021ம் ஆண்டு அவருக்கு வாய்ப்பு கிடைத்தபோது, சர்வதேச அரங்கில் அவரது திறமையை நிரூபித்தார்.
இடைவிடாத நிராகரிப்புகளைச் சந்திப்பதில் இருந்து வாழ்க்கையை மாற்றுவது, காயங்களுடன் போராடுவது, இறுதியாக சர்வதேச கிரிக்கெட்டில் தனது முத்திரையைப் பதிப்பது வரை, வருண் சக்ரவர்த்தியின் பயணம் தோல்வி என்பது வெற்றிக்கான ஒரு படிக்கட்டு என்பதின் ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டலாகும்.