ரூ.5 ஆயிரம் முதலீட்டில் தொடங்கி ரூ.5500 கோடிக்கு அதிபதியான ‘சுகுணா சிக்கன்ஸ்’ சௌந்திரராஜன்!
வெறும் 5000 ரூபாய் முதலீட்டில் தொழில் ஆரம்பித்த சௌந்திரராஜன், இன்று 5,500 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கு உரிமையாளராக சுகுணா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவர் இருக்கிறார். ஒரே நாளில் இந்த மாயம் நிகழ்ந்துவிடவில்லை. வாழ்க்கையில் ஒவ்வொரு படியாக, பல்வேறு அனுபவப் பாடங்களைக் கற்று, புதிய முயற்சிகளை மேற்கொண்டு இன்று வெற்றியாளராக உருவாகியுள்ளார் இவர்.
கோயம்புத்தூரில் இருந்து சுமார் 70 கிமீ தொலைவில் உள்ளது உடுமலைப்பேட்டை. இது தான் சௌந்திரராஜன் பிறந்த ஊர். தந்தை அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றியபோதும், 11ம் வகுப்போடு பள்ளிக்கல்வியை முடித்துக் கொண்டார் சௌந்திரராஜன். பின் தன் தந்தையின் அறிவுரையின் பேரில் விவசாயத்தில் தனது கவனத்தைத் திருப்பினார்.

பட உதவி: தி ஹிந்து
சுமார் 3 ஆண்டுகள் காய்கறிகளை விளைவித்து அதனை விற்பனை செய்து வந்தார். ஆனால், அதில் அவர் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை. ரூ. 2 லட்சம் வரையிலான நஷ்டத்தை சந்தித்தார். இதனால் விவசாயம் தனக்குச் சரிப்பட்டு வராது என முடிவு செய்த சௌந்திரராஜன், தனது கவனத்தை வேறு தொழிலில் திருப்ப முடிவு செய்தார்.
அதன்படி, கோவையில் இருக்கும் ஒரு பர்னீச்சர் தயாரிக்கும் நிறுவனத்தில் ஒன்றரை வருடம் வேலைக்குச் சென்றார். பின்னர் விவசாயத்துறையிலேயே விற்பனையாளராக முடிவு செய்த அவர், ஹைதராபாத்தில் விவசாயத்திற்குப் பயன்படுத்தும் பம்புகளைத் தயாரிக்கும் நிறுவனத்தில் விற்பனை மற்றும் மார்கெட்டிங் அதிகாரியாகச் சேர்ந்தார்.
“எனக்குத் தெலுங்கோ அல்லது ஆங்கிலமோ தெரியாது, ஆனால் புது ஊரில் புதிய மக்களிடம் பழகி பம்புகளை விற்பனை செய்தேன். இது பெரிய அளவிலான அனுபவத்தை எனக்குக் கொடுத்தது” என்கிறார் சௌந்திரராஜன்.
ஆனால், இந்தப் பணியிலும் அவரால் நீடிக்க இயலவில்லை. தொழிற்சாலைப் போராட்டம், விற்பனைக்குத் தேவையான பொருட்களைத் தயாரிக்க இயலாத சூழ்நிலையை உருவாக்கியது. எனவே, அந்த வேலையையும் விட்டுவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பினார் அவர்.
ஊருக்கு வந்ததும் வருமானத்திற்கு ஏதாவது ஒரு வேலை பார்த்தே ஆக வேண்டிய நிலை. அப்போது தான் அவரும், அவரது தம்பியும் சேர்ந்து புதிய தொழில் ஒன்றை தொடங்கலாம் என முடிவெடுத்தனர். அப்போது அவர்கள் தேர்ந்தெடுத்தது தான், கோழி வளர்ப்பு மற்றும் பண்ணை வர்த்தகம். இதற்காக தனது தாயாரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் கடனாகப் பெற்று, 1983ம் ஆண்டு தங்கள் தொழிலை அவர்கள் தொடங்கினர்.
அதன் தொடர்ச்சியாக 1986ம் ஆண்டு கோழித் தீவனத்தைத் தயாரித்து விற்கத் தொடங்கினார் சௌந்திரராஜன். ஆனால் கோழித் தொழில் கடும் வீழ்ச்சியைக் கண்டதால், கோழித் தீவனத் தொழில் கடனாக வழங்கிய ரூ.7-8 லட்சம் விவசாயிகளிடமிருந்து திரும்பப் பெற முடியாத சூழல் உருவானது. ஆனால் அந்த நஷ்டத்திலும் பாடம் கற்று அதில் இருந்து மீண்டு வந்தார் அவர்.
அதன் பலனாகத் தான், சிறிய அளவில் துவங்கப்பட்ட இந்த வர்த்தகம், இன்று ’சுகுணா ஹோல்டிங்ஸ்’ என்ற மிகப்பெரிய சாம்ராஜ்ஜியமாக வளர்ந்து நிற்கிறது. சுகுணா ஹோல்டிங்ஸ் கீழ் கோழி பண்ணை வர்த்தகம், ’சுகுணா புட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ எனப் பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கோயம்புத்தூரில் இருக்கும் தலைமை அலுவலகத்தில் இருந்து இதனை சௌந்திரராஜன் நிர்வாகம் செய்து வருகிறார்.

சுகுணா ஹோல்டிங்கஸ் நிறுவனத்தின் 98 சதவீத முதலீடு சுகுணா புட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் செய்யப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் இந்நிறுவனத்தின் கீழ் இந்தியா முழுவதும் சுமார் 23,000 விவசாயிகள் பணியாற்றி வருகின்றனர்.
1990ஆம் ஆண்டு முதல் ஒப்பந்த கோழி வளர்ப்புத் திட்டம் என்ற முறையை தமிழகத்தில் அறிமுகப்படுத்தினார் சௌந்திரராஜன். அதாவது, கோழி வளர்ப்புக்கான கட்டமைப்புகளை அவர்களது சொந்த இடத்திலேயே கட்டமைத்துத் தந்து விவசாயிகளுடன் அவர் ஒப்பந்தம் செய்து கொண்டார். கோழிகள், அதற்கான தீவனம் மற்றும் மருந்துகள் என அனைத்தையுமே இவர்கள் வழங்கி விடுவார்கள். கோழிகளை ஆரோக்கியமாக வளர்த்துத் தருவது மட்டுமே சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வேலை.
இந்த ஒப்பந்தம் விவசாயிகளுக்கும் மிகவும் லாபமானதாகவே இருந்தது. உதாரணத்திற்கு, 8000 சதுரடியில் ரூ.1.20 லட்சம் முதலீட்டில் 5 ஆயிரம் கோழிகளை ஒரு விவசாயி வளர்த்து வந்தாரானால், இரண்டே வருடத்தில் அவர் முதலீடு செய்த பணம் திரும்பக் கிடைத்து விடும். அதன்பின்னர், கிடைப்பதெல்லாம் அவருக்கு லாபமே. எனவே, இந்த ஒப்பந்தத்தில் விவசாயிகள் ஆர்வமாக சேர்ந்தனர்.
ஒவ்வொரு 45 நாட்களுக்கும் ஒரு முறை ஒப்பந்தம் செய்யப்பட்ட விவசாயிகளிடம் இருந்து கோழிகளை வாங்கி வெளிச்சந்தையில் சௌந்திரராஜன் விற்பனை செய்வார். கோழியின் ஒரு கிலோ எடைக்கு ஆரம்பத்தில் 50 பைசா கொடுக்கப்பட்டது. தற்போது இது 5 ரூபாயாக உயர்ந்துள்ளது.
ஆரம்ப காலத்தில் உடுமலைப்பேட்டையில் உள்ள இரண்டு முதல் மூன்று விவசாயிகளிடம் மட்டுமே இந்த ஒப்பந்த முறை கோழி வளர்ப்பு செய்து வந்தனர். பின்னர் இரண்டே வருடங்களில் தமிழகம் முழுவதும் இது விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனால், 1997ஆம் ஆண்டில் ஒப்பந்தம் செய்யப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்தது. அப்போது நிறுவனத்தின் மொத்த விற்றுமுதல் 7 கோடி ரூபாயாக உயர்ந்தது. இதனால், தனியார் நிறுவனமாக உயர்வு பெற்றது சுகுணா.

சௌந்திரராஜனின் தொடர் முயற்சியால் 2000ம் ஆண்டில், 25 ஊழியர்களுடன் 10 மாவட்டகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்ட நிறுவனம், மொத்த விற்றுமுதலாக ரூ.100 கோடியைத் தொட்டது.
“எங்களது முயற்சிக்கு தமிழகத்தில் கிடைத்த வரவேற்பு மற்றும் வெற்றியத் தொடர்ந்து இதனை வெளி மாநிலங்களுக்கு கொண்டுச் செல்ல முடிவு செய்தோம். அதன்படி கர்நாடகா மற்றும் ஆந்திராவில் எங்கள் பிசினசை விரிவாக்கம் செய்தோம். அதன் பலனாக இன்று 18 மாவட்டங்களில் 9,000 கிராமங்களில், 23,000 விவசாயிகளுடன் இணைந்து சுமார் 10 கோடி சதுரடியில் இறைச்சி கோழிகளை வளர்த்து வருகிறோம். ஒரு வாரத்திற்குச் சுமார் 80 லட்ச கோழிகளை வளர்த்து வருகிறோம்,” என்கிறார் சௌந்திரராஜன்.
இந்தியா முழுவதும் தற்போது 250 கிளைகளுடன் சுகுணா இயங்கி வருகிறது. ஒவ்வொரு கிளையிலும் 15-20 ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். ஏற்கனவே வளைகுடா நாடுகளுக்கு இறைச்சி கோழிகளை ஏற்றுமதி செய்து வரும் சுகுணா நிறுவனம், தனது புதிய கிளையை பங்களாதேஷில் திறந்துள்ளது.
“ஒவ்வொரு நாளும் சிறப்பாகத் துவங்கத் தூக்கம் மிகவும் அவசியம். இரவு 8.30 -9 மணிக்கே தூங்கிவிட்டு காலை 5 மணிக்கே எழுந்துடுவேன், சுமார் 8 மணிநேர தூக்கம் தான் என் வெற்றியின் ரகசியம்,” எனச் சொல்கிறார் 53 வயதான சௌந்திரராஜன்.
தகவல்கள் உதவி: ஒன் இந்தியா