Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

மதுரையை பட்டினியில்லா நகராகமாக்கும் 'சுவடுகள்' - இளம் தலைமுறையினரின் உன்னத சேவை!

சரியாக கடிகாரத்தில் ஒரு மணி அடித்தது தான் தாமதம், மதுரை காளவாசல் சாலை பரபரப்பாக மாறுகிறது. இளைஞர்கள் கூட்டம் ஒன்று சாலையோரம் பசியுடன் இருக்கும் மக்களுக்கு உணவு பொட்டலங்களை வேக, வேகமாக விநியோகிக்கத் தொடங்குகின்றனர். பசியின் கொடுமை அறிந்து உணவு பரிமாறும் இவர்கள் யார் என்பதை அறிந்து கொள்வோம்...

மதுரையை பட்டினியில்லா நகராகமாக்கும் 'சுவடுகள்' - இளம் தலைமுறையினரின் உன்னத சேவை!

Friday June 02, 2023 , 3 min Read

சரியாக கடிகாரத்தில் ஒரு மணி அடித்தது தான் தாமதம், மதுரை காளவாசல் சாலை பரபரப்பாக மாறுகிறது. இளைஞர்கள் கூட்டம் ஒன்று சாலையோரம் பசியுடன் இருக்கும் மக்களுக்கு உணவு பொட்டலங்களை வேக, வேகமாக விநியோகிக்கத் தொடங்குகின்றனர்.

பசியின் கொடுமை அறிந்து உணவு பரிமாறும் இவர்கள் யார் என்பதை அறிந்து கொள்வோம்...

பசியாற வைக்கும் ‘சுவடுகள்’:

மதுரையைச் சேர்ந்த ’சுவடுகள்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் தெருக்களில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு ஆரோக்கியமான உணவு வழங்கும் சேவையை கடந்த 3 ஆண்டுகளாக செய்து வருகின்றனர். தினமும் குறைந்தது 100 பேருக்காவது மதிய உணவு வழங்க வேண்டும் என்ற இலக்குடன் இந்த குழுவினர் சேவையாற்றி வருகின்றனர்.

2020ம் ஆண்டு தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தலைவிரித்தாடிய தருணம், சாலையோரம் வசித்து வந்த மக்களும், ஆதரவற்ற முதியவர்களும் ஒருவேளை உணவுக்காக திண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டது. பெருந்தோற்று காலத்தில் சாமானிய மக்களே குடும்பத்தை சமாளிக்க முடியாமல் தள்ளாடிய சமயம், இந்த நேரத்தில் சாலையோரம் வசிக்கும் மக்களின் உணவுத்தேவையை சமாளிப்பதற்காக மதுரை எம்.பி. வெங்கடேசன் ஒரு முன்முயற்சியை மேற்கொண்டார்.

அதன்படி, 13 கல்லூரி மாணவர்களை ஒன்றிணைந்து ஆதரவற்ற மக்களுக்கு உணவு விநியோகிக்கும் சேவையை தொடங்கினார். கொரோனா லாக்டவுனின் போது மாணவர்கள் குழு, சாலையோரம் பசியுடன் காத்திருக்கும் மக்களுக்கு உணவு வழங்க ஆரம்பித்தனர்.

food

நிதி பற்றாக்குறை:

கொரோனா காலக்கட்டத்தில் தீயாய் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம் லாக்டவுனுக்குப் பிறகும் இன்று வரை அதே தீவிரத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உணவு விநியோகத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்களே ஆதரவற்ற மக்களுக்கு தொடர்ந்து சாப்பாடு தரலாம் என முடிவெடுத்தனர்.

வழக்கறிஞரும், சுவடுகள் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவருமான ஆர்.பாக்யராஜா கூறுகையில்

“கல்லூரி மாணவர்களாக இருப்பதால், நிதி நெருக்கடி காரணமாக முயற்சியை கைவிட்டோம். அப்போது தான் எங்களிடம் தினமும் உணவு பொட்டலங்களை வாங்கும் முதியவர் ஒருவரை சந்தித்தோம். அவர் உணவு கிடைக்காமல் மிகவும் மோசமான உடல்நிலையில் இருந்தார். இது எங்கள் மனதை கடுமையாக பாதித்தது. எனவே, சற்றும் தாமதிக்காமல் மீண்டும் உணவு விநியோகிக்கும் வேலையை ஆரம்பித்தோம்,” என்கிறார்.

மீண்டும் இத்திட்டத்தை ’தனி ஒரு மனிதனுக்கு’ என்ற பெயரில் 13 நபர்களைக் கொண்ட குழுவுடன் தொடங்கியுள்ளனர். இப்போது 70 உறுப்பினர்களைக் கொண்ட பெரிய குழுவாக உள்ளது. உணவு விநியோகம் மட்டுமின்றி, பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பொது இடங்களை சுத்தம் செய்வது போன்ற சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

food

ஆரோக்கியமான உணவு:

இந்த முறை திட்டத்தில் மாபெரும் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இலவசமாக தானே கொடுக்கிறோம் ஓட்டலில் இருந்து வாங்கிக்கொடுத்தால் என்ன என்றில்லாமல், ஆரோக்கியமான முறையில் உணவை சமைத்துக்கொடுக்க முடிவெடுத்தனர். சமையல் செய்யும் பொறுப்பை குழுவைச் சேர்ந்த சரண்யா மற்றும் சஞ்சய் ஆகியோர் எடுத்துக்கொண்டனர். இதற்காக காளவாசலில் சிறப்பு சமையல் கூடம் அமைக்கப்பட்டது.

அத்துடன் வீணாக கீழே கொட்டப்படும் உணவுகளையும் சேகரித்து பசியால் வாடும் மக்களுக்கு விநியோகிக்க ஆரம்பித்தனர். இதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. திருமணம் மற்றும் பிற நிகழ்ச்சிகளில் மீதமாகும் உணவுகளை மக்களே முன்வந்து இவர்களிடம் ஒப்படைக்க ஆரம்பித்தனர்.

தனி ஒருவர் குழுவினரை தொடர்பு கொண்டால் குழு 30 நிமிடங்களுக்குள் குறிப்பிட்ட இடத்தை அடைந்து, உணவு புதியதா என்பதை உறுதிப்படுத்தி, சேகரித்துக்கொள்வார்கள். அதன் பின்னர், அந்த உணவு பசியால் வாடும் சாலையோர மக்களுக்கு வழங்கப்படும். இந்த முறையில் வாரந்தோறும் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இவர்களுக்கு அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளதாம்.

எதிர்காலத் திட்டம்:

அடுத்ததாக அரசு ராஜாஜி மருத்துவமனை அருகே ஒரு ஸ்டாலைத் திறக்கத் திட்டமிட்டுள்ளனர். அங்கு ஏழை மக்களுக்கு இலவசமாக உணவு விநியோகிக்க முடிவெடுத்துள்ளனர்.

“கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம், மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுமக்களின் கூட்டு முயற்சியால் பசியில்லா நிலையை அடைந்தது என்பதை நாம் படித்திருக்கிறோம். மெல்ல மெல்ல மதுரையை பசியில்லாத இடமாக மாற்ற வேண்டும். அந்த இறுதி இலக்கை அடைய நாம் ஒவ்வொருவரும் அனைத்து முயற்சிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம்,” என்கின்றனர்.
food

கொரோனா லாக்டவுனின் போது மிகச்சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, கடந்த இரண்டு ஆண்டுகளில் விஸ்வரூப வளர்ச்சியை எட்டியுள்ளது. தினந்தோறும் 100 வயதான மற்றும் ஆதரவற்றவர்களுக்கு ஆரோக்கியமான உணவை வழங்கி வருகிறது.

தினசரி உணவை தயாரிக்க 2 ஆயிரம் முதல் 2,500 ரூபாய் வரை செலவாகுமாம். அதனை பல்வேறு தன்னார்வலர்கள் கொடுத்து உதவுகின்றனர். திருமண நாள், பிறந்தநாள் போன்ற விசேஷ நாட்களில் பலரும் நிதி உதவி செய்வதால் தற்போது இந்த சேவை தடையில்லாமல் நடைபெற்று வருகிறது.

தகவல் உதவி - நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் | தமிழில்: கனிமொழி