பிப் 28 முதல் மார்ச் 2 வரை ஐஐடி மெட்ராஸ் நடத்தும் e-summit - தொழில் முனைவோர்களுக்கு அழைப்பு!
e-summit மாநாட்டில் முதன்முறையாக நிதி திரட்டும் நிகழ்வு நேரடியாக நடைபெறும்- ‘பிட்ச்ஃபெஸ்ட்’ எனப்படும் இந்நிகழ்வில் நாடு முழுவதும் உள்ள நம்பிக்கைக்குரிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு நிதியளிக்கும் போட்டியில் முன்னணி முதலீட்டு நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
ஐஐடி மெட்ராஸ், ‘செயல்பாடுமிக்க பத்தாண்டு கொண்டாட்டமாக வருடாந்திர முதன்மை நிகழ்வான தொழில்முனைவோர் உச்சி மாநாட்டை (e-summit 2025) ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் பிப்ரவரி 28 முதல் மார்ச் 2-ந் தேதி வரை நடத்துகிறது.
இம்மாநாட்டில் இந்தியா முழுவதும் இருந்து சுமார் 1,000 நிறுவனர்கள், 50க்கும் அதிகமான முதலீட்டாளர்கள், 400-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐஐடி மெட்ராஸ் தொழில்முனைவோர் பிரிவு (E-Cell) ஏற்பாடு செய்துள்ள இந்த வருடாந்திர நிகழ்வு, ஆர்வமுள்ள தொழில்முனைவோரை இணைக்கும் மையமாகச் செயல்படுகிறது. புத்தம்புது சிந்தனைகளை வளர்த்தெடுக்கச் செய்து, அவற்றை சாத்தியமான வணிக முயற்சிகளாக மாற்றுவதற்கான தளத்தை வழங்குகிறது. அத்துடன் தொழில் வல்லுநர்கள், முதலீட்டாளர்கள், மாணவர்கள் ஆகியோரை ஒரே தளத்தில் ஒன்றிணைக்கச் செய்கிறது.
இ-உச்சி மாநாடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி அண்மையில் செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டார். ஐஐடி மெட்ராஸ் டீன் (மாணவர்கள்) பேராசிரியர் சத்தியநாராயணா என்.கும்மாடி, ஐஐடி மெட்ராஸ் தொழில்முனைவோர் பிரிவு ஆலோசகர் பேராசிரியர் ரிச்சா அகர்வால், மாணவத் தலைவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
“தொழில்நுட்பத்தில் பாரதம் தன்னிறைவு பெற வேண்டுமெனில் உற்பத்தி மிகுந்த நாடாகவும், ஸ்டார்ட்அப்கள் நிறைந்த நாடாகவும் இருப்பது அவசியம். புதுமையான சிந்தனைகளை ஸ்டார்ட்அப் நிறுவனங்களாக எவ்வாறு மாற்றலாம் எனப் புரிந்து கொள்ளவும், செயல்படுத்தவும் ஒரு தளமாக, இந்த முதலீட்டாளர்கள் மாநாடு அமையும்,” என ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி குறிப்பிட்டார்.
தொழில்முனைவோர் பிரிவில் உள்ள அனைவருக்கும் எனது பாராட்டுகளையும், 10-வது ஆண்டு நிகழ்வு மகத்தான வெற்றிபெற எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
“இ-சம்மிட் மாநாட்டில் முதன்முறையாக நேரடி நிதி திரட்டும் நிகழ்வு நடைபெற உள்ளது. ‘பிட்ச்ஃபெஸ்ட்’ எனப்படும் இந்நிகழ்வில் நாடு முழுவதும் இருந்து நம்பிக்கைக்குரிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வசதிபடைத்த முதலீட்டாளர்களிடம் நிதிதிரட்ட போட்டியை ஏற்படுத்தும் விதமாக தங்களின் புதுமையான சிந்தனைகளை பார்வையாளர்களுக்கு விளக்கவிருக்கின்றன,“ என்று ஐஐடி மெட்ராஸ் டீன் (மாணவர்கள்) பேராசிரியர் சத்தியநாராயணா என்.கும்மாடி கூறினார்.
மாணவர்கள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் ஏதுவாக செயலாக்கம் கொண்ட சந்தையை இ-சம்மிட் 2025-ல் முதன்முறையாக ‘பிஸ்-பஜார்’ என்ற பெயரில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்கள் வணிகம் மற்றும் தொழில்முனைவு வாய்ப்பைப் பெறுவதற்கான குறுகியகாலத் தயாரிப்பாக இந்நிகழ்வு இடம்பெற உள்ளது.
“இ-சம்மிட் 2025 என்பது இக்கல்வி நிறுவன வளாகத்திலும், வெளியிலும் தொழில்முனைவோர் பிரிவு ஓராண்டாக மேற்கொண்ட உச்சக்கட்ட முயற்சியின் வெளிப்பாடாகும். ஸ்டார்ட்அப் ஆர்வலர்களை ஊக்குவிப்பது, புதிதாகத் தொடங்கும் ஸ்டார்ட்அப்களுக்கு உதவுவது, இளம் தொழில்முனைவோர் தங்கள் ஸ்டார்ட் அப் கனவுகளை நனவாக்க ஊக்குவிப்பது போன்ற பல வழிகளில் தொழில்முனைவோர் பிரிவு உதவிகளை மேற்கொள்ளும்,” என்று ஐஐடி மெட்ராஸ் தொழில் முனைவோர் பிரிவு ஆலோசகர் பேராசிரியர் ரிச்சா அகர்வால் கூறினார்.

'ஸ்டார்ட் அப்'களுக்கான வளர்ச்சி மேடை'- ஐஐடி மெட்ராஸ் நடத்தும் e-summit மற்றும் ஸ்டார்ட் அப் கண்காட்சி!
Edited by Induja Raghunathan