விவசாயி, நுகர்வோர், சுற்றுசூழல் - ஆரோக்கியமான தீர்வை வழங்கும் பட்டயக் கணக்காளர் விசாலாட்சி!
விவசாய ஆர்வலரான விசாலாட்சியால் தொடங்கப்பட்ட "பஃபேலோ பேக் கலெக்டிவ்" எனும் அமைப்பு, இயற்கை விவசாயிகளின் பிரச்னைகளுக்கு உதவுவதுடன், நகர்புற வாழ்வில் ஆரோக்கியமற்ற உணவை உண்பவர்களுக்கு ஹெல்தி தீர்வை வழங்கி விவசாயிகளையும், நுகர்வோரையும் நேரடியாக இணைக்கும் பாலமாக செயல்பட்டு வருகிறது.
அனைவருக்கும் ஒரு சின்ன வயசு கனவு இருக்கும். காலப்போக்கில் சிலர் அந்த கனவை கலைத்து கொள்வர், சிலர் அதை அப்டேட் செய்வர். அப்படி விசாலாட்சி பத்மநாபனுக்கு சின்ன வயதிலிருந்த ஒரு கனவு என்னவென்றால் ஒரு காட்டுப் பகுதியில் ஒரு நிலத்தை வாங்கி, அதில் வீடு கட்டி, தன் வாழ்நாள் முழுவதையும் அங்கேயே கழிக்க வேண்டும். அக்கனவிற்காக அவரது சிஏ பணியையும் உதறி கனவை நினைவாக்கினார்.
ஆனால், அவருடைய கனவை சுயநலத்துக்காக மட்டும் நினைவாக்கவில்லை. பரபரப்பான உலகில் வேகமாக மாறிபோன ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தை மாற்றிட வேண்டும் என்ற சமூக அக்கறையினால் நினைவாக்கினார்.
அவர் தொடங்கிய அமைப்பும், ஆர்கானிக் ஸ்டாேரான "பஃபேலோ பேக் கலெக்டிவ்" (Buffalo Back Collective) இயற்கை விவசாயிகளின் பிரச்னைகளுக்கு உதவுவதுடன், நகர்புற வாழ்வில் ஆரோக்கியமற்ற உணவை உண்பவர்களுக்கு ஹெல்தி தீர்வை வழங்கி விவசாயிகளையும், நுகர்வோரையும் நேரடியாக இணைக்கும் பாலமாக செயல்படுகிறது. நகர்ப்புற நுகர்வோருக்கும் அவர்களின் உணவுக்கும் இடையிலான உறவை மாற்ற முயல்கிறார் விசாலாட்சி.
தாவரவியல் மற்றும் விலங்கியல் படிப்பை படித்த விசாலாட்சி, அவரது இறுதியாண்டு இன்டர்ன்ஷிப்பை, பெங்களூருவில் உள்ள ஒரு மிருகக்காட்சி சாலையில் முடித்தார். விவசாயமும், இயற்கை சூழ்ந்த வாழ்வும் அவரது கனவாக இருந்தாலும், வாழ்க்கை அவருக்கு வேறு திட்டங்களைக் கொண்டிருந்தது.
அவரது குடும்பத்தின் நலனுக்கு கைநிறைய ஊதியம் அளிக்கும் பட்டயக் கணக்காளர் (CA) ஆனார். படிப்பு, வேலைக்கு அடுத்ததாக, இரண்டாம் தலைமுறை விவசாயக் குடும்பத்தில் இருந்தை சேர்ந்த பேராசிரியரை மணந்தார். எனவே, தம்பதியினரின் எதிர்கால திட்டம் அவர்களின் திருமணத்தின் ஆரம்பத்திலேயே முடிவாகியது. அவரது கனவுப்படி பெங்களூரில் உள்ள பன்னர்கட்டா வனப்பகுதிக்கு அருகில் ஒரு நிலத்தை வாங்கி, அங்கு குடியேறி, விவசாயத்தைத் தொடர்ந்தனர்.
அனைத்திற்குமான தொடக்கம்?
பெங்களூருவில் வசித்த காலத்தில் ஆரோக்கியமான, சத்தான மற்றும் இயற்கை முறையில் விளைந்த உணவுப் பொருள்களை தன் குடும்பத்திற்காக தேடத் துவங்கினார். 2009ம் ஆண்டில் அவரது நண்பர்களுடன் இணைந்து இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளை சந்திக்கத் தொடங்கினர். அதன் நீட்சியாய், 2013ம் ஆண்டு தொடங்கப்பட்டதே "பஃபேலோ பேக் கலெக்டிவ்" எனும் அமைப்பு.
"என் கணவரும் விவசாயப் பின்னணியில் இருந்ததால், பெங்களூரில் உள்ள சில இளம் தாய்மார்களுடன் சேர்ந்து, ஒரு குழுவை உருவாக்கி, எங்களது குழந்தைகளுக்காக, பண்ணையிலிருந்து நேரடியாக இயற்கை முறையில் விளைந்த பொருட்களை வாங்கினோம்," என்றார்.
ஆரம்பத்தில், பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரத்தில் வார இறுதிச் சந்தையாகத் துவங்கிய இந்தக் குழு, பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்யத் தொடங்கியது. பூர்வீகக் காய்கறிகள், பழங்கள், மூலிகைகள், பூக்கள், மசாலாப் பொருட்கள் மற்றும் தானியங்கள் ஆகியவற்றின் பரம்பரை விதைகளை பெறுவதற்காகக் ஒரு விதை வங்கியுடன் கூட்டுச் சேர்ந்தனர்.
பஃபேலோ பேக் கலெக்டிவ்வின் நோக்கத்தை அறிந்து, அதற்காக உழைக்க அவர்களது நேரத்தை வழங்கிய நண்பர்கள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்புகளால், சந்தை விரைவாக வளர்ச்சிப் பெற்றது. சிறு மற்றும் குறு விவசாயிகளிடமிருந்து மட்டுமே விளைபொருட்கள் நேரடியாகப் பெறப்படுகிறதா என்பதை விசாலாட்சி உறுதி செய்து வந்தார்.
வெளிப்படைத்தன்மைக்கு அவர்கள் அளித்த முக்கியத்துவத்தால் இந்நிறுவனம் தனித்து நின்றது. காலப்போக்கில், இது பெங்களூரு முழுவதும் ஒன்பது சந்தைகளுக்கு விரிவடைந்தது.
"வளர்ச்சியைப் பற்றியோ, வணிகம் பெருகினால் அதை எப்படி நிர்வகிப்போம் என்பதைப் பற்றியோ நாங்கள் சிந்திக்கவே இல்லை. அது வெறும் நம்பிக்கைதான். எங்களது ஸ்டோரில் உள்ள பொருள்களை விளைவித்த விவசாயிகளின் பெயர்கள் மற்றும் அவரது தொலைபேசி எண்களை பலகையில் எழுதி காட்சிப்படுத்துவோம். பின்னர், நவீன வசதிகளால் அந்த விவரங்களை எங்கள் வாட்ஸ்அப் குழுவில் பகிர தொடங்கினோம். விவசாயிகளைப் பற்றியும் அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதைப் பற்றியும் சுருக்கமாக பகிர்ந்தோம்," என்றார்.
ஆரோக்கிய வாழ்வுக்கு இயற்கை உணவுகளே தீர்வு!
விவசாய சமூகங்கள், உள்ளூர் சந்தைகள் மற்றும் விவசாய நெறிமுறைகளில் விசாலாட்சி அதிக ஈடுபாடு கொண்டதால், விவசாயிகள் எதிர்கொள்ளும் சிக்கலான சவால்களை அவர் கண்டுபிடித்தார். உணவுப் பாதுகாப்பின் அரசியல் மற்றும் சந்தைகள் மற்றும் கொள்கைகளை வழிநடத்துவதில் சிறு விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களை பற்றியும் அறிந்துகொண்டார். விதை அரசியல், மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (ஜிஎம்சி) மற்றும் ஆர்கானிக் உணவு கட்டுப்பாடுகள் ஆகியவற்றை பற்றிய அவரது ஈடுபாடு அதிகரித்து, உணவு முறையின் சிக்கல்களைப் பற்றிய அவரது புரிதலை ஆழமாக்கியது.
அப்போதிருந்து, பஃபேலோ பேக் ஒரு சந்தையாக மட்டுமல்லாமல், ஆர்கானிக் உணவு இயக்கத்தில் ஒரு முக்கிய பங்காளராக மாறியது, விளைப்பொருள்களின் விலையினை விவசாயிகளே நிர்ணயித்தல், இயற்கை உணவுப்பொருள்களுக்கான நிலையான சந்தையை உருவாக்குவது என சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நிலையான தீர்வுகளை உருவாக்குவதில் குழு கவனம் செலுத்த தொடங்கியது
"விவசாயிகள் மற்றும் நுகர்வோர் இடையே வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பிக்கை அடிப்படையிலான உறவுகளை கட்டியெழுப்புவதே எங்களது நோக்கமாகும். ஆர்கானிக் பொருள்களுக்கான சந்தையை உருவாக்க விரும்புகிறோம். அதில் எங்களது வளர்ச்சியும், வருவாயும் முக்கியமில்லை. ஆர்கானிக் உணவைப் பற்றி மக்கள் உணர்ந்து, அதை வாழ்க்கைமுறைத் தேர்வாக்க வேண்டும். ஆர்கானிக் உணவினை அதிகம் வாங்க அவர்களை ஊக்குவிக்கிறோம். இது எங்கள் விவசாயிகளுக்கும் பெரிய அளவில் விற்பனை செய்வதற்கான கதவுகளைத் திறக்கிறது," என்றார்.
கோவிட்-க்கு பிந்தைய சந்தையும், சந்தா முறை வணிகமும்...
கொரோனா தொற்றுக்கு பிறகு, எங்களது வணிக மாதிரியை மறுபரீசிலனை செய்யும் கட்டாயம் ஏற்பட்டது. 'சமூக ஆதரவு விவசாயம்' முறையை பின்பற்றி வணிகத்தை தொடர கவனம் செலுத்தியதாக விசாலாட்சி கூறினார்.
சமூக ஆதரவு விவசாயம் (Community-Supported Agriculture) என்பது ஒரு குறிப்பிட்ட பண்ணையின் அறுவடைக்கு நுகர்வோரை பங்கெடுக்க வைப்பதன் மூலம் உற்பத்தியாளர்களையும் நுகர்வோரையும் உணவு முறையில் நெருக்கமாக இணைக்கும் அமைப்பாகும். அதன்படி, நுகர்வோர்கள் பண்ணையாளர்களுக்கு சந்தா செலுத்துகின்றனர். அறுவடைக்கு அவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.
சந்தா செலுத்துவதற்கு ஈடாக, சந்தாதாரர்கள் வாராந்திர அடிப்படையிலோ, இருவாரத்திற்கு ஒருமுறையோ விளைபொருட்களைப் பெறுகிறார்கள். இம்மாதிரியின் மூலம் உற்பத்தியாளர்களும், நுகர்வோர்களும் விவசாயத்தில் நிறைந்துள்ள அபாயங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.
"இன்று, 25 பெண் விவசாயிகளும், 60 குடும்பங்களும், பெங்களூருவில் உள்ள கஃபேக்கள் மற்றும் பள்ளிகளுடன் இணைந்து CSA மாதிரிக்கு பதிவு செய்துள்ளனர். நாங்கள் இனி விநியோக சங்கிலி வடிவமைப்பை ஊக்குவிக்க மாட்டோம். சந்தாதாரர்களாக சில காலம் உறுதியுடன் இருந்து விவசாயிகளுக்கு உதவ நாங்கள் மக்களைக் கேட்டுக்கொள்கிறோம். பெண் விவசாயிகளுக்கு நிலம் மற்றும் வளங்களை அணுகுவதற்கு உதவுகிறோம். மேலும் தேவைப்பட்டால் பயிற்சியையும் வழங்குகிறோம்," என்றார்.
‘நூற்பு’ - ஐ.டி பணியை விட்டு, கைத்தறியை மீட்டு நெசவுத் தொழிலை உயிர்ப்பிக்கும் ஈரோடு சிவகுருநாதன்!