'அமெரிக்காவை விட இந்தியாவில் வாழ்வது நிறைவாக இருக்கிறது' - டில்லியில் குடும்பத்துடன் செட்டிலாகிய அமெரிக்க பெண்!
அமெரிக்காவை விட ஏன் இந்தியா ஏன் வாழச் சிறந்த இடம் என்று இன்ஸ்டாவில் வீடியோ பதிவிட்ட அமெரிக்க பெண்ணின் பதிவு வைரலாகியது.
எப்படியாவது படித்து அமெரிக்காவுக்கு சென்று செட்டிலாகிட வேண்டும் என்பது பல இந்தியர்களின் கனவு, லட்சியம். ஆனால், யுஎஸ் ரிட்டர்ன்ஸ் ஆட்களின் அமெரிக்க வாழ்க்கை கதை வேறுவிதமாக இருக்கும். அதேபோல், இந்தியாவுக்கு சுற்றுலா வரும் அமெரிக்கர்கள், இந்தியா கலாச்சாரம், பழக்கவழக்கங்களால் ஈர்க்கப்படுவர். அப்படி தான், இந்தியாவுக்கு சுற்றுலா வந்த அமெரிக்க பெண், அடடே இந்தியாவில் வாழ்வது நல்லாயிருக்கே என்று உணர்ந்து இங்கேயே லிவிங்ஸ்டனாகி விட்டார். அத்துடன், அமெரிக்காவை விட ஏன் இந்தியா சிறந்தது என்று காரணப்பட்டியலுடன் கூறி இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட, நெட்டிசன்கள் அவரை அக்காவாக்கி ட்ரெண்டாகிவிட்டனர்.
இந்தியா ஏன் பிடிக்கும்?
2017ம் ஆண்டில், அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டன் ஃபிஷர் என்பவர் அவரது கணவருடன், இந்தியாவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டார். நாட்டின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு, மக்களின் பழகும் தன்மை என அனைத்தையும் அனுபவித்த அவருக்கு இந்தியா பேவரைட் ஸ்பாட்களில் ஒன்றாக மாறியது.
சுற்றுலாவின்போது அவருக்குக் கிடைத்த அனுபவங்களாலும், குழந்தைகளின் வளமான எதிர்காலம் குறித்த எண்ணத்தாலும், இந்தியாவிலே குடியேற முடிவெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இப்போது, இரண்டு வருடங்களாக டெல்லியில் வசிக்கும் அவரது 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அமெரிக்காவில் தான் விட்டு வந்த வாழ்க்கையை விட, இந்தியாவின் வாழ்க்கை மிகவும் நிறைவாக இருப்பதாக சிலாகித்து, அதற்கான காரணங்களை இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட, உடனே வைரலாகி 3.6மில்லியன் வியூஸ்களை பெற்றது.
"எல்லோரும் என்னிடம் கேட்கும் ஒரு கேள்வி- ஏன் அமெரிக்காவை விட்டு இந்தியாவில் வந்து குடியேறுனீர்கள்? இந்த கேள்வியின் மூலம் அவர்கள் சொல்லவருவது இரண்டு விஷயங்களை தான். ஒன்று இந்தியா வாழ்வதற்கான தரம் குறைவாக இருக்கும். மற்றொன்று அமெரிக்கா வாழ மிகச் சிறந்த நாடு. அந்நாட்டை விட்டு வெளியேற நான் எடுத்த முடிவு பைத்தியக்கரமானது. இதில் இரண்டிலுமே உண்மையில்லை," என்கிறார்.
என் குழந்தைகளுக்கு இந்தியாவில் வெற்றிகரமான வாழ்க்கை மற்றும் எதிர்காலத்தை அமைக்கமுடியும் என்று நினைக்கிறேன். அமெரிக்காவில் அவர்கள் பெறமுடியாத வளமான வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் சமூகம் அவர்களுக்கு இங்கிருக்கும்.வெளிநாட்டில் வாழும் பல இந்தியர்கள் இந்தியாவை மிஸ் செய்கிறார்கள் என்றும் திரும்பிச் செல்ல விரும்புகிறார்கள் என்றும் நான் கேள்விப்படுகிறேன்.
அவர்கள் வெளிநாட்டில் எங்காவது ஒரு சிறந்த வாழ்க்கையை அமைத்து கொள்ளலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், சொந்த நாட்டை விட்டு வெளியேறி வாழத் தொடங்கிய பிறகு, அவர்களது நாட்டின் அருமையை உணர்கிறார்கள். வாழ்க்கையில் பணத்தைவிட முக்கியமானவைகள் இருக்கின்றன.
"அமெரிக்காவில் அதிக பணம் சம்பாதிக்கலாம். ஆனால், சமூகம், உறவுகள், அனுபவங்கள் மற்றும் மகிழ்ச்சி போன்ற விஷயங்களை கணக்கீட்டால் இந்தியாவில் தான் அதிக செல்வம் உள்ளது..." எனும் கேப்ஷனுடன் அவ்வீடியோவை வெளியிட்டிருந்தார்.
அமெரிக்காவில் உள்ளவர்கள் அந்நியர்களுக்கு உதவ தங்கள் வழியில் செல்வது குறைவு என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
"நான் அமெரிக்காவை நேசிக்கிறேன். அங்கு தான் வளர்ந்தேன். என் குடும்பத்தினர்கள் அங்கு தான் வாழுகிறார்கள். ஆனால், எல்லாவற்றிற்கும் அமெரிக்கா பெர்பெக்ட் ஆன இடமல்ல. அங்கும் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றது."
அமெரிக்கா சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட ஒரு சமூகம். ஒவ்வொருவரும் தனக்கென ஒருவிதமான மனநிலை கொண்டவர்கள். அவர்கள் தங்களுக்குத் தெரியாத அந்நிய மனிதர்களுக்கு உதவ முன்வரமாட்டார்கள். மறுபுறம், இந்தியாவில் வாழ்க்கை, நிறம், கலாச்சாரத்தால் நிறைய வேறுபாடுகள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக ஒற்றுமை உணர்வு நிறைந்துள்ளது. மக்கள் மிகவும் விருந்தோம்பல் உணர்வுடன் இருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் உதவுவதில் தயக்கம் காட்ட மாட்டார்கள்.
இந்தியாவில் நீங்கள் தனிமையில் இருப்பதாக உணர மாட்டீர்கள். எங்கு சென்றாலும் லட்சக்கணக்கான மக்கள் அன்போடு பழகுவதற்காக இருக்கிறார்கள். நான் அமெரிக்காவில் வாழும் எண்ணற்ற இந்தியர்களை சந்தித்துள்ளேன். அவர்கள் என்னிடம் அமெரிக்காவில் மக்கள் எங்கு தான் இருக்கிறார்கள் என்று கேட்பார்கள். ஏனெனில், அங்கு தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக உணர்வார்கள்.
கண்டிப்பாக, அமெரிக்காவில் கை நிறைய பணம் சம்பாதிக்கமுடியும். பணம் சம்பாதிக்க உகந்த நாடு தான். அது தான் உங்களது வாழ்வின் நோக்கமும் எனில், உங்களால் அங்கு சந்தோஷமாக வாழ முடியும். என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பதை தாண்டி நிறைய விஷயங்கள் இருக்கின்றன. நாங்கள் எதிர்பார்க்கும் மகிழ்ச்சி, நிறைவு இன்னும் பல காரணிகளால் இந்திய நாடு நிரம்பியுள்ளதால், வாழ்வதற்கு சிறந்த நாடாக உள்ளது," என்று இருநாட்டுக்கும் உள்ள வேறுபாட்டை விவரித்தார்.
'நடனமாடி இளமையை மீட்டெடுத்து, தனிமையை நீக்கும், இன்ஸ்டாவின் 'வைரல் பாட்டிகள்'