ஆகச் சிறந்த ‘தல’ ஆவது எப்படி? - விவசாய வியூகம் சொல்லும் 7 பாடங்கள்!
விதைகளைத் தெரிவு செய்வது, களைகளை அகற்றுவது, கணித்து செயல்படுவது என விவசாயம் சொல்லித் தரும் 7 லீடர்ஷிப் பாடங்கள் எளிமையும் தெளிவும் நிறைந்தவை.
‘லீடர்ஷிப்’ எனப்படும் தலைமைத்துவம் என்பது நிர்வாகம் செய்வதோ, திட்டங்களை மேற்பார்வை செய்வது மட்டுமல்ல; அது வளர்ச்சி, பின்னடைவு மற்றும் முன்னேற்றத்தை பற்றியது.
லீடர்ஷிப் பற்றி அறிந்துகொள்ள சிறந்த வழிகளில் ஒன்று, ஒரு விவசாயியைப் போல சிந்திப்பதே ஆகும்.
விவசாயிகள் இயற்கையோடு இணைந்து பருவக் காலங்களில் இருந்து பாடங்களை கற்றுக்கொண்டு அதற்கேற்ப பயிர்களை பயிரிட்டு சவால்களுக்கு ஏற்ப செயல்படுகின்றனர். அப்படியான விவசாயத்தில் இருந்து உத்வேகம் அளிக்கக் கூடிய 7 லீடர்ஷிப் பாடங்கள் இங்கே...
1. மண்ணுக்கேற்ற பயிரை தேர்ந்தெடுங்கள்
எல்லாப் பயிர்களும் எல்லா சூழலிலும் செழித்து வளராது. அதனால், ஒரு விவசாயி தனது மண்ணுக்கும், காலச் சூழலுக்கும் ஏற்ற பயிரை கவனமாக தேர்ந்தெடுப்பார். அதேபோல், தலைமைத்துவத்தில் நீங்கள் உங்கள் டீமின் பலம் என்பதை மதிப்பிடுங்கள். மேலும், டீம் உறுப்பினர்களின் திறன் என்ன, அவர்களால் என்ன செய்ய முடியும் என்பதை அறிந்து அவர்களுக்கான பொறுப்புகளை ஒதுக்குங்கள். அவ்வாறு செய்வது வெற்றிக்கான வாய்ப்பை அதிகரிக்கும்.
டீமில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களின் தனிப்பட்ட திறமைகளை மேம்படுத்துவது உற்பத்தியை அதிகரிப்பதோடு, இணக்கமான பணியிடத்தை உருவாக்க உதவும்.
2. கத்துவதை தவிர்க்கவும்
லீடர்கள் பலரும் விரைவான தீர்வை எதிர்பார்த்து தேவையில்லாத வலையில் சிக்குகிறார்கள். அவர்கள் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்காதபோது. அது விரக்தியை உண்டாக்குகிறது. இந்த நிலைமையை விவசாயத்துடன் ஒப்பிடுவோம்.
விவசாயத்தில் பயிர்களை பார்த்து கத்தினால் பயிர்கள் விரைவாக வளர்ச்சியை அடையும் என ஒரு மூடநம்பிக்கை உண்டு. ஆனால், விவசாயிகள் அப்படி செய்வதில்லை. ஏனென்றால், பயிர்கள் உணர்ச்சிகளைக் கொண்டிருப்பதால் அவற்றால் ஆபத்தை உணர முடியும். அப்படிச் செய்வது பயிரின் இயல்பான வளர்ச்சியை பாதிக்கும். அது தலைமைத்துவத்துக்கும் பொருந்தும்.
தலைவர்கள் டீமில் இருந்து உடனடி வளர்ச்சியை எதிர்பார்க்கக் கூடாது. வளர்ச்சி என்பது இயல்பாக, படிப்படியாக நடக்க வேண்டியதாகும். எனவே, தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் பொறுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மாறாக, அவசரப்படுத்துவதோ, அழுத்தம் கொடுப்பதோ உங்கள் டீமின் இயக்கத்தையும், முன்னேற்றத்தையும் பாதிக்கும். அதற்கு பதிலாக, தங்கள் அணியின் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையிலான சூழலை உருவாக்க வேண்டும்.
3. மெதுவான வளர்ச்சியை குறை கூறாதீர்கள்!
பயிர்களின் வளர்ச்சிக்கு தாக்கம் ஏற்படுத்தும் முக்கியக் காரணம், மழை போன்ற காலநிலைகளும், மண்ணின் தரம் ஆகியவை தான். இதனை விவசாயிகள் நன்றாகவே அறிவார்கள். இதே பாணியில் டீமின் வளர்ச்சியும், ப்ராஜெக்டின் வளர்ச்சியும் வெவ்வேறு காரணிகளால் நிகழ்கிறது என்பதை தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
முன்னேற்றம் மந்தமாக இருக்கும்போது, பழிபோடுவதற்கு பதிலாக இடையூறுகள் என்ன இருக்கிறது என்பதை மதிப்பிடுங்கள். அதற்கான நேரமாக அதனை கருதுங்கள்.
நல்ல தலைமை என்பது சூழ்நிலையின் தேவைகளைப் பூர்த்திசெய்ய எதிர்பார்ப்புகளையும் உத்திகளையும் வகுப்பதும் சரிசெய்வதும்தான்.
4. வளர நேரம் கொடுங்கள்
ஒரு விவசாயி பயிர்களை வேகமாக அறுவடை செய்தால், பயிர்களின் வளர்ச்சி பாதியாக இருப்பதோடு அது விளைச்சலை கெடுக்கலாம். இது, லீடர்ஷிப்பில் டீமில் உள்ள உறுப்பினர்களை அவர்களின் ரோலில் வளர அனுமதிக்க வேண்டியதன் முக்கியத்துவதையே உணர்த்துக்கிறது.
குறுகிய காலத்தில் எதிர்பார்த்தபடி வேலை செய்யவில்லை என்பதால், ஒருவரை பணியிலோ இருந்தோ, பொறுப்புகளில் இருந்தோ நீக்குவதைத் தவிர்க்கவும்.
சில நேரங்களில் டீமில் இருப்பவர்கள் தங்களின் வளர்ச்சியை மேம்படுத்த ஆதரவும், வழிகாட்டுதலும், வாய்ப்புகளும் தேவைப்படுகிறது. எனவே, தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் உங்களின் ஊழியர்களிடம் பொறுமையாக இருங்கள், அவர்களை தங்களின் சொந்த காலில் நிற்க அனுமதியுங்கள்.
5. களைகளை அகற்றவும்
வயல்களில் பயிர்களுடன் போட்டியிடுவது களைகள். தலைமைப் பண்பில், களைகள் என்பது நெகட்டிவ் எண்ணங்களும், கவனச் சிதறல்களும், டாக்ஸிக் குணங்களும்தான். இது நமது எனெர்ஜியை தடுத்து முன்னேற்றத்தை தடுக்கும். இந்தச் சவால்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து நிவர்த்தி செய்வது முக்கியம்.
குறிப்பாக, தனக்கு இருக்கும் சவால்கள் பயனற்ற மனப்பான்மையா, திறமையின்மையா அல்லது தனிப்பட்ட முரண்பாடுகளா என்பதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அவற்றைத் தீர்ப்பது முக்கியம்.
எனவே, இந்தக் களைகளை அகற்றுவதன் மூலம், உங்கள் குழு தேவையான விஷயங்களில் கவனம் செலுத்த உதவுவதோடு, டீமில் ஆரோக்கியமான பணிச்சூழலை உருவாக்கவும் உதவமுடியும்.
6. தொடர்ந்து உரமிடுங்கள்
தாவரங்கள் வளர நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் எப்படி தேவையோ, அதேபோல் ஒரு டீமுக்கு நிலையான ஆதரவும், பயிற்சியும், மேம்பாடும் நிச்சயம் தேவை.
ஒரு நல்ல லீடர் தனது டீம் நல்ல வளர்ச்சியை பெற தேவையான சூழலையும் உருவாக்கித் தருவார். அதாவது, ஊழியர்களுடன் தொடர்ச்சியாக பேசுவது, அவர்களுக்கு ஆக்கபூர்வமான யோசனைகளை வழங்குவது, தேவையான வாய்ப்புகளை அவர்களுக்கு அளிப்பது அவசியம்.
விளைச்சலை மேம்படுத்த விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு உரமிடுவது போல, தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்கள் டீமை வெற்றியை நோக்கி மேம்படுத்த வேண்டும்.
7. எப்போதும் தயாராக இருங்கள்
விவசாயிகளால் வானிலையை கட்டுப்படுத்த முடியாது. ஆனால், வானிலைகளுக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொள்ள முடியும். இது தலைமை பொறுப்புக்கு பொருந்தும்.
ப்ராஜெக்ட் வெற்றி பெறும் சில நேரங்கள் இருக்கலாம். அப்படியான தருணங்களில் டீம் உற்சாகமடையும், எல்லாம் சீராக செல்வதாக தோன்றும். ஆனால், திட்டமிட்டபடி விஷயங்கள் நடக்காத கடினமான நேரங்களும் வரக்கூடும். அப்போது கையாள முடியாத அளவுக்கு பெரிய சவால்களும் உண்டாகும். இந்த ஏற்றத் தாழ்வுகள் வேலையின் ஒரு பகுதியே என்பது ஒரு நல்ல தலைவர் புரிந்துகொள்வார்.
எனவே, சவால்களுக்குத் தயாராக இருப்பது, மாற்றத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வது, கஷ்டமான நேரங்களிலும் நிலையாக இருப்பது முக்கியம்.
டேக் அவே...
விவசாயியை போல சிந்திக்கும்போது தலைமைத்துவம் குறித்து பார்வை விரிவடைகிறது. அனைத்தையும் கட்டுப்படுத்துவதோ அல்லது விரைவான ரிசல்ட்டை பெறுவதோ அல்ல தலைமைத்துவம். அதைத் தாண்டி, உங்கள் டீமை ஆதரிப்பது, அவர்களுக்கு தேவையான வாய்ப்புகளை வழங்குவது, அவர்கள் வளர்ச்சிக்காக பொறுமையாக இருப்பது அவசியம்.
- மூலம்: ஆசம் கான்
Edited by Induja Raghunathan