Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

'ரஜினிகாந்த் முதல் அம்பானி வரை' - அனைவரும் அறுசுவை அரசுவை ருசிக்க விரும்பும் சுவாரசிய கதை!

கும்பகோணத்தைச் சேர்ந்த நடராஜ ஐயர், ஐம்பதுகளில் வேலை தேடி சென்னைக்கு வந்தார். நகரில் உள்ள ஒரு உணவகத்தில் தலைமைச் சமையல்காரராகப் பணியாற்றி அவரின் கைமணம் 'அறுசுவை அரசு' என்ற பெயரில் பிரபலமாகி, இன்று ஆண்டுகளை கடந்தும் வெற்றிநடை போடுவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

'ரஜினிகாந்த் முதல் அம்பானி வரை' -  அனைவரும் அறுசுவை அரசுவை ருசிக்க விரும்பும் சுவாரசிய கதை!

Tuesday December 24, 2024 , 4 min Read

மார்கழி மாதம் தொடங்கிவிட்டது. சபாக்களில் கச்சேரிகள் களைக்கட்ட தொடங்கிவிட்டன. ஆனால், சபாக்களுக்கு மக்களைக் கவர்வது இசை மட்டுமல்ல; முழு மார்கழி அனுபவத்தில் உணவும் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. சபாக்களில் செவிக்கு விருந்தளிக்க வருபவர்கள் தாண்டி, நாவிற்கு விருந்தளிக்க வரும் கூட்டம் கலைக்கட்டுகிறது. அதிலும், அறுசுவை அரசு கேட்டர்ஸின் விருந்திற்கென ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

புகழ்பெற்ற 'டிசம்பர் இசை சீசன்' வந்துவிட்டது. தமிழ் மாதமான மார்கழியில் நடைபெறும் இந்த இசைப் பருவத்தில் நகரம் முழுவதும் நூற்றுக்கணக்கான கர்நாடக இசைக் கச்சேரிகள் பல்வேறு இடங்களில் நடத்தப்படுகின்றன. சபாக்கள் அல்லது இசையை மையமாகக் கொண்ட அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்த அரங்குகளுக்கு மக்களைக் கவர்வது இசை மட்டுமல்ல; முழு மார்கழி அனுபவத்தில் உணவும் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது.

சபாக்களில் செவிக்கு விருந்தளிக்க வருபவர்கள் தாண்டி, நாவிற்கு விருந்தளிக்க வரும் கூட்டம் கலைக்கட்டுகிறது. அதிலும், "அறுசுவை அரசு" கேட்டர்ஸின் விருந்திற்கென ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபாவிற்கான நிறுவனத்தின் புத்தாண்டு மதிய உணவு, இசை சீசனில் மிகவும் விரும்பப்படும் ஒரு விருந்தாகும். இதில், 40-45 உணவுகள் தங்க முலாம் பூசப்பட்ட தட்டில் பரிமாறப்படுகின்றன.

70 ஆண்டுகளுக்கும் மேலாக கேட்டரிங் துறையில் நிலைத்து நிற்கிறது 'அறுசுவை அரசு கேட்டரர்ஸ்'. முதன்மையாக திருமணங்கள் மற்றும் பிற நிகழ்வுகளில் அசத்தலான தென்னிந்திய உணவுகளை வழங்குகிறது. திருமணங்கள் இல்லாத மார்கழியின் போது, ​​அறுசுவை இசை ஆர்வலர்களின் சுவை மொட்டுகளுக்கு உணவளிக்கிறது.

"சபா கேன்டீன் மூலம், கச்சேரிகளுக்கு வருபவர்களுக்கு எனது தாத்தா (மறைந்த நடராஜ ஐயர்) உணவு வழங்க விரும்பினார். விரைவில் கேண்டீன் 'மிகப்பெரும் விதமான' பொருட்களுக்கு பிரபலமானது," என்று பகிர்ந்தார் அறுசுவையின் பாரம்பரியத்தை பெருமையுடன் எடுத்துச் செல்லும் மூன்றாம் தலைமுறை தொழில்முனைவோரான காமேஷ் நாராயணன்.
arusuvai arasu

அறுசுவை கண்ட பரிணாமம்..!

'அறுசுவை அரசு' என்பதற்கு 'ஆறு சுவைகளின் அரசன்' என்று பொருள் இந்த பெயருக்கு ஏற்ப வாழ்வது சிறிய சாதனையல்ல, ஆனால், அவ்வாறு அழைக்கப்படுவதற்கு பின்னாள் உள்ள பிராண்டின் பயணம் அசாத்தியமானது.

கும்பகோணத்தைச் சேர்ந்த நடராஜ ஐயர், ஐம்பதுகளின் தொடக்கத்தில் வேலை தேடி சென்னைக்கு வந்தார். நகரில் உள்ள ஒரு உணவகத்தில் தலைமைச் சமையல்காரராகப் பணியாற்றி வந்தார். அவரது உணவு மற்றும் சேவையின் மாயாஜால தரம் பற்றிய செய்தி ஊர் முழுக்க பரவியது. தொடர்ந்து அவர், சிறிய கேட்டரிங் ஆர்டர்களைப் பெறத் தொடங்கினார்.

அதற்கு 'அறுசுவை அரச' என்ற பெயரை இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி அவர்கள் வழங்கினார். அவருடைய மகளின் திருமண விருந்தை நடராஜ ஐயர் தான் கையாண்டார். இனிப்பு, புளிப்பு, கசப்பு, உப்பு, துவர்ப்பு, மற்றும் கார்ப்பு ஆகிய ஆறு சுவைகளை உணவின் மூலம் வழங்கும் அதே வேளையில், அறுசுவையில் ஏற்ற இறக்கங்களின்வழி சுவையில் பல வகைகளை உருவாக்கினார்.

பல ஆண்டுகளாக, உணவுத் துறையில் நீடித்து நிற்கும் இந்நிறுவனம் பல உயரங்களை அடைந்துள்ளது. வெறும் நான்கு பேர் கொண்ட குழுவாக துவங்கிய நிலையில், இன்று 250-300 பணியாளர்கள் நிரந்தர பணியாளர்களாவும் மற்றும் சுமார் 2,000 பேர் ஒப்பந்த முறையிலும் பணியாற்றுகின்றனர்.

பண்டிட் ஜவஹர்லால் நேரு, ரஜினிகாந்த் குடும்பம், அம்பானி மற்றும் தனுஷ் குடும்பம் போன்ற பிரபலங்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டு, அறுசுவை கேட்டரிங் வணிகத்தில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள நிகழ்வுகளைத் தவிர, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், துபாய் மற்றும் பாலி ஆகிய நாடுகளில் நடைபெறும் தென்னிந்திய திருமணங்களுக்கும் உணவுகளை ஏற்பாடு செய்துள்ளது.
arusuvai arasu

"உணவு என்பது மக்களை மையப்படுத்திய வணிகமாகும்!"

உணவை தயாரிப்பதில் மட்டுமின்றி, அறுசுவை அரசு சேவையிலும் சமமான அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. மக்களை மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் வைத்திருப்பதுதான், போட்டிமிகுந்த சந்தையில் பிராண்டை தனித்து நிற்க செய்வதாக நாராயணன் நம்புகிறார்.

ஒரு வருடத்தில் 200-250 நிகழ்வுகளை கையாண்டாலும், ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் தனிப்பயனாக்கப்பட்ட கவனத்தை வழங்க அறுசுவை தவறுவதில்லை.

"பிரபலங்களின் திருமணமாக இருந்தாலும் சரி, சிறிய நிகழ்வாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் ஒரே மாதிரியான கவனம் செலுத்த வேண்டும். மக்களும் அதை தான் எதிர்பார்க்கிறார்கள். அதனால்தான் அவர்கள் எங்களிடம் வருகிறார்கள். நாங்கள் ஒரு முகூர்த்தத்தில் மூன்று முதல் நான்கு திருமணங்களை மட்டுமே ஏற்றுக்கொள்கிறோம். ஒவ்வொரு நிகழ்விலும் நானோ, மனைவியோ, அத்தை அல்லது அப்பா என யாராது ஒருவர் இருந்து, நிகழ்வின் மிகச்சிறிய விஷயங்களையும் கவனித்து கொள்வோம்," எனும் நாராயணன், ஒவ்வொரு நிகழ்வையும் எப்போதும் தன் குடும்பத்தில் ஒன்றாகக் கருதும் தாத்தாவிடம் இருந்து கற்றுக்கொண்ட பண்பு இது, என்கிறார் காமேஷ்.

காமேஷ் நாராயணனுக்கான வணிக படிப்பினைகளும், கற்றலும் அவரது சிறுவயதிலே துவங்கிவிட்டது. அன்று தொடங்கி இன்று வரை அவர் கற்றுக் கொள்வதையும் நிறுத்தவில்லை. சாம்பார் அல்லது ரசம் உள்ள கரண்டி மற்றும் வாளியை எப்படிப் பிடிப்பது, வாழை இலையில் பரிமாறுவது, உணவுகளை பரிமாற வேண்டிய வரிசை போன்ற அனைத்தையும் அவர் புதிதாக கற்றுக்கொண்டார்.

"உணவு பரிமாறும் கலையிலுள்ள அனைத்து நுட்பங்களையும் கற்றுக்கொண்டேன். பின்னரே, சமையலறைக்குள் வந்து அங்கு என்ன நடக்கிறது என்பதைக் கவனித்தேன். ஒவ்வொரு நாளும் ஒரு பாடமாக இருந்தது," என்று பகிர்ந்தார்.

நெருக்கடி மேலாண்மை என்பது அவதானிப்பு மற்றும் அனுபவத்திலிருந்து அவர் கற்றுக்கொண்ட மற்றொரு முக்கியப் பாடமாகும். குடும்பத் தொழிலில் சேர்ந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, கோயம்புத்தூரில் அவரது முதல் நிகழ்வைக் கையாண்டார். விருந்தினர்களின் எண்ணிக்கை 3,000 பேர் என தெரிவித்தநிலையில், கூட்டம் 5,000 ஆக உயர்ந்தது.

ஒரு கட்டத்திற்கு மேல் அவர் குழம்பிய நிலையில், அதிர்ஷ்டவசமாக, அவரது குழுவினர் அவரை நன்கு ஆதரித்தனர். சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு சூழ்நிலையை கையாண்டு நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் யாரும் உணவு இல்லாமல் போகாமல் உறுதிப்படுத்தி உள்ளார். சென்னையில் சமீபத்தில் பெய்த மழை ஒரு வெளிப்புற நிகழ்வில் பேரழிவை ஏற்படுத்தும் என்று அச்சுறுத்தியபோது, ​​நெருக்கடியைக் கையாள்வதில் காமேஷ் மற்றொரு பெரிய பாடத்தைப் பெற்றார்.

arusuvai arasu

அறுசுவை அரசு நிர்வாக இயக்குநர் காமேஷ் நாரயணன்.

பாரம்பரியத்துடன் கலக்கும் புதுமை!

பாரம்பரிய உணவுகளை தயாரித்தாலும், அறுசுவை அரசு ஒருபோதும் புதுமைகளில் இருந்து விலகியதில்லை. உதாரணமாக, பாரம்பரிய எலுமிச்சை சாதத்திற்கு மாற்றாக எலுமிச்சை புல் சாதத்தை உருவாக்கியது. அறுசுவை அரசு தென்னிந்திய உணவைத் தாண்டி பஞ்சாபி, மகாராஷ்டிர மற்றும் ராஜஸ்தானி, பெங்காலி இனிப்புகள், இத்தாலிய மற்றும் மெக்சிகன் உணவு வகைகள், ஆசிய உணவு வகைகள் மற்றும் பல உணவு வகைகளுக்கு விரிவடைந்துள்ளது.

அறுசுவை உணவை பரிமாற பல்வேறு வழிகளிலும் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தில், வாழைப்பழத்தில் செய்யப்பட்ட சிப்ஸ், வறுவல் மற்றும் வடை போன்ற பொருட்களைப் படகு வடிவிலான வாழை இலைக்குள் வைத்து பரிமாறியது.

"எனது மாமாவும் தந்தையும் பல புதிய உணவுகளையும் யோசனைகளையும் கண்டுபிடித்தனர். என் மாமா வட இந்திய இனிப்புகள் மற்றும் பல கலாச்சார உணவுகளை தென்னிந்திய திருமணத்தில் கொண்டு வந்தார், அதுவரை வழக்கமான தென்னிந்திய உணவுகளை மட்டுமே வழங்கியது. இதற்காக புதிது புதிதாக பதார்த்தங்களை உருவாக்க எங்களது குழு உழைத்து வருகிறது. ஆனால், மக்கள் அதை ஏற்கவில்லை என்றால், நாங்கள் அந்த உணவை பரிந்துரைக்க மாட்டோம்."

arusuvai arasu
"தொற்றுநோய்க்குப் பிறகு கேட்டரிங் துறை மிகவும் தொழில்முறையாக மாறிவிட்டது. இன்று திருமணங்கள் ஒருவரின் வளர்ச்சி மற்றும் வாழ்க்கை முறையை வெளிப்படுத்துகின்றன. பெரிய இந்திய திருமணங்களில், மக்கள் உணவுக்காக நிறைய செலவழிக்கத் தயாராக இருக்கிறார்கள். சிலர் ஒரு தட்டு உணவை ரூ.15,000 கூட வாங்கத் தயாராக இருக்கிறார்கள்," என்று காமேஷ் விவரிக்கிறார்.

சுமார் 9 வருடங்கள் அறுசுவையை வழிநடத்தியுள்ள அவர், வணிகத்தின் எதிர்காலம் குறித்த தெளிவான பார்வை கொண்டுள்ளார். கேட்டரிங் தொழிலில் சாதிக்க இன்னும் நிறைய இருக்கிறது, என்று அவர் நம்புவதாக தெரிவித்தார்.

ஆங்கிலத்தில்: ஸ்வேதா கண்ணன், தமிழில்: ஜெயஸ்ரீ