Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

மணமகளை க்யூட்டாக மாற்றும் திவ்யாவின் ‘ஐக்யூட் கேலரி’ நகைகள்!

தொழில்முனைவரான திவ்யா சென்னை நங்கநல்லூரில் திருமணங்களுக்கான பிரத்யேக நகைகளை வாடகைக்கு வழங்கும் ‘ஐக்யூட் கேலரி’ தொடங்கி தனித்துவமான டிசைன் கொண்ட நகைகளை வழங்கி வருகிறார்.

மணமகளை க்யூட்டாக மாற்றும் திவ்யாவின் ‘ஐக்யூட் கேலரி’ நகைகள்!

Wednesday October 21, 2020 , 5 min Read

”மாப்பிளை இவர்தான்.. ஆனா இவர் போட்டிருக்கற டிரெஸ் என்னோடது…” என்று ஒரு திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் சொல்லுவார். உங்களிடம் ஒருவர் ஒரு பொருளை பகிர்ந்துகொண்டால் அந்த நபர் பொருளுக்கான உரிமையைக் கொண்டாடும் வகையில் இப்படிச் சொல்வதுண்டு.


ஆனால் உண்மையில் பணத்தை சேமிக்க விரும்பும் பலர் எத்தனையோ வகையில் செலவுகளைப் பகிர்ந்துகொண்டு சேமிக்கின்றனர். உதாரணத்திற்கு கல்லூரி மாணவர்களும் வேலைக்குச் செல்வோர்களும் வாடகைக்கு வீடு எடுத்துக்கொண்டு ஒன்றாகத் தங்கி அனைத்து செலவுகளையும் பகிர்ந்துகொள்கின்றனர். அதேபோல் ஏராளமானோர் தொழில்முனைவு முயற்சிகளில் ஈடுபட்டு வரும் இன்றைய சூழலில் பலர் ஸ்மார்டாக பணத்தை நிர்வகிக்க செலவுகளைப் பகிர்ந்துகொள்கின்றனர்.


மணமகளுக்கு திருமணத்திற்கு எத்தனை சவரன் நகை போட்டாலும் திருமணம் என்கிற விசேஷமான நாளில் அதற்கென பிரத்யேகமாக இருக்கும் நகைகளை அணியவே பெண்கள் விரும்புவார்கள். இவற்றை பெண்கள் சொந்தமாக வாங்கிக் கொள்ளலாம். ஆனால் திருமணத்திற்கு பிறகு அதை எப்போது பயன்படுத்துவது? அப்படியானால் ஓரிரு நாட்கள் மட்டுமே பயன்படுத்துவதற்காக எதற்கு அதிகம் செலவு செய்வது?


இந்த கேள்விகளுக்கு பதிலாக திருமண நகைகளைப் வாடகைக்கு வழங்கும் சேவை உருவானது. இந்தப் பிரிவில் தொழில்முனைவு முயற்சியைத் தொடங்கி வெற்றியை வசப்படுத்தியுள்ளார் சென்னையைச் சேர்ந்த திவ்யா.

திவ்யாவின் பின்னணி...

திவ்யா மதுரையில் பிறந்தவர். திருச்சியில் படித்துள்ளார். பள்ளிப் படிப்பில் கணிதமும் உயிரியலும் முக்கியப் பாடமாக எடுத்துப் படித்துள்ளார். பாலிமர் தொழில்நுட்பம் படித்த பொறியியல் பட்டதாரியாக இருப்பினும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் நான்காண்டுகள் பணிபுரிந்துள்ளார். மூன்று வெவ்வேறு நிறுவனங்களில் சென்னை, பெங்களூரு போன்ற இடங்களில் பணிபுரிந்தார்.

1

திருமணம் என்பது பொதுவாகவே பெண்களின் வாழ்க்கையில் சீசன் 2 எனலாம். திருமணம், குழந்தை பிறப்பு போன்றவை அவர்களது குடும்பச் சூழலை மட்டுமல்லாது பணி வாழ்க்கையையும் திசை மாறச் செய்கிறது.


திவ்யாவும் அதேபோல் பணியை விட்டு விலக நேர்ந்ததால் தொழில் செய்வது குறித்து சிந்துள்ளார். ஃபேஸ்புக்கில் ஆக்டிவாக இருக்கும் இவர் ஆன்லைனில் நகைகள் வாங்கி மறுவிற்பனை செய்யத் தொடங்கியுள்ளார்.

“குழந்தையையும் குடும்பத்தையும் கவனிக்கறதுக்காக வேலையை விட்டுட்டேன். ஆரம்பத்துல ரொம்ப சுதந்திரமா இருக்கற உணர்வு இருந்துது. அதேநேரம் தனித்துவமா ஏதாவது ஒரு விஷயத்துல செயல்பட்டு சாதிக்கணுன்ற வெறி மட்டும் எப்பவும் உள்ளுக்குள்ள இருந்துது,” என்று வணிக முயற்சியின் துவக்கப்புள்ளியை விவரித்தார் திவ்யா.

இவரது பிறந்த வீட்டில் யாருக்கும் தொழில்முனைவு அனுபவம் இல்லை. ஆனால் இவரது கணவர் தவிர புகுந்த வீட்டில் அனைவருமே தொழில் செய்து வந்தனர். இதனால் திவ்யாவின் தொழில் முயற்சிக்கு வெகுவாக ஆதரவு கிடைத்துள்ளது. 2014-ம் ஆண்டு ஆன்லைனில் நகைகள் மறுவிற்பனை செய்யும் வணிகத்தைத் தொடங்கியுள்ளார்.

மறுவிற்பனையில் இருந்து வாடகை சேவை..

“முதல்ல ரீசெல்லரா இருந்தேன். அப்புறம் மொத்த விற்பனையாளர்களையும் தயாரிப்பாளர்களையும் நானே தேடி கண்டுபிடிச்சேன். நேரடியா டீலிங் பேசினேன். அப்படியே ரெண்டல் பிசினஸ் ஸ்டார்ட் பண்ணினேன்,” என்று வாடகை சேவையில் கவனம் செலுத்தத் தொடங்கியது குறித்து விவரித்தார்.


தொழில் எதுவாக இருந்தாலும் தரமான பொருட்களுக்கு அதிக விலை கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்பதை உணர்ந்தார் திவ்யா.

“தரமான நகை விலை அதிகமாவே இருக்கும். திருமணம் மாதிரியான நிகழ்வுக்கு அதிக நகைகள் தேவைப்படும். இது ரொம்ப முக்கியமான தருணம். இதுல குறை இருக்ககூடாதுன்னு எல்லாருமே நினைப்பாங்க,” என்று வணிக முயற்சியின் தேவையை சுட்டிக்காட்டினார்.

திருமணத்திற்கு அணியும் பிரத்யேக நகைகள் மிகவும் விலையுயர்ந்தவை. ஆடம்பரமானவை; அதுமட்டுமின்றி அவற்றை பணம் கொடுத்து வாங்கினாலும் பயன்பாடு குறைவே. சாதாரண நிகழ்வுகளுக்கு அவற்றை அணிய முடியாது.

“முக்கியமா நகைகளோட டிசைன் அப்பப்ப சந்தையில புதுசா அறிமுகமாகிட்டே இருக்கும். அதனால நகைங்களை வாடகைக்கு கொடுக்கற பிசினஸை தொடங்கினேன்,” என்றார்.

நகைகள் மீது இயற்கையாகவே இவருக்கு இருந்த ஆர்வம் மிகச்சிறந்த டிசைன்களைத் தேர்வு செய்யவும் வாடிக்கையாளர்களைக் கவரவும் உதவியுள்ளது. கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் வரை தரமான நகைகளை வாடகைக்கு கொடுத்து வாங்கியுள்ளார்.


இவரது நகைகளைப் பயன்படுத்தியவர்கள் திருப்தியடைந்துள்ளனர். நல்ல வரவேற்பு கிடைத்தது. பயனர்களின் பரிந்துரையின் பேரில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தன. அதற்கேற்ப நகைகளின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளார் திவ்யா.

“திருமணம் முடிஞ்சு குழந்தை பிறந்ததுக்கப்புறம் வேலையை விட்டுட்ட பெண்கள் எல்லாருக்குமே அடுத்து என்ன செய்யறதுன்ற குழப்பம் வருது. ஆனா இந்த மாதிரி தொழில்ல பெண்கள் துணிஞ்சு இறங்கலாம். ரிஸ்க் எடுக்காமே வாழ்க்கையில எதுவுமே இல்லை. யாருமே செய்யாத வழியில ஸ்மார்டா தொழில் செஞ்சோம்னா கண்டிப்பா வெற்றிதான்,” என்று மற்ற பெண்கள் மனதிலும் நம்பிக்கை விதைக்கிறார் திவ்யா.

ஐக்யூட் கேலரி

திவ்யா தனது வணிக முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து செயல்பாடுகளை ஆஃப்லைனிலும் விரிவுபடுத்த திட்டமிட்டார். ஷோரூம் ஒன்றைத் திறக்க விரும்பினார். இந்த ஆண்டு மார்ச் மாதம் நங்கநல்லூரில் iCute Gallery (ஐக்யூட் கேலரி) தொடங்கியுள்ளார்.

1

இந்த ஆஃப்லைன் ஸ்டோரில் பிரத்யேகமாக திருமண நகைகள் மட்டும் வாடகைக்கு கொடுக்கப்படுகின்றன. அதுவே ஆன்லைனில் வாடகை சேவை மட்டுமின்றி ஜுவல்லரி விற்பனையும் செய்கிறார் திவ்யா.


இவரது ஆஃப்லைன் ஸ்டோருக்கு அதிகளவில் வாடிக்கையாளர்கள் வரத் தொடங்கினார்கள். தடையில்லாத பயணம் உண்டா என்ன? இவரது முயற்சியில் தடங்கல் கொரோனா தொற்று ரூபத்தில் வந்து சேர்ந்தது. அரசு வழிகாட்டல்களின்படி கடையை மூடவேண்டியிருந்ந்தது.


இதுதவிர திருமணங்களிலும் அதிக கூட்டமின்றி 50 பேர் என்கிற அளவிலேயே அனுமதிக்கப்பட்டனர். நகைக்கான தேவைகளும் குறைந்தது. வாடிக்கையாளர்களும் குறைந்தனர். நம்பிக்கையுடன் காத்திருந்தார் திவ்யா.

“கொரோனா தாக்கம் கொஞ்சம் குறைஞ்சதும் திருமணங்கள் நடக்க ஆரம்பிச்சுது. நாலஞ்சு மாசம் தொழில் முடங்கினாலும் என் மேலயும் என் நிறுவனத்து மேலயும் மக்களுக்கு அன்பும் நம்பிக்கையும் இருந்தால என்கிட்ட தொடர்ந்து வாங்க ஆரம்பிச்சாங்க. நகைங்களோட டிசைன், தரம், வாடிக்கையாளர் சேவை இதெல்லாம்தான் வெற்றியை சாத்தியப்படுத்துது,” என்கிறார் நம்பிக்கையுடன்.

தனித்துவமான செயல்பாடுகள்

சந்தையில் ஏற்கெனவே வாடகைக்கு கொடுப்பவர்கள் அனைவரும் அதிக விலைக்கு கொடுக்கின்றனர். அந்த விலையுடன் ஒப்பிடுகையில் இவரது விலை மிகவும் குறைவு.

“குறைஞ்ச விலையில கொடுக்கணுன்றதுதான் என்னோட நோக்கம். ஒரு வாடிக்கையாளரைக் கொண்டு லாபத்தைக் கணக்கிடறதில்லை. வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிச்சு லாபம் ஈட்ட விரும்பறோம். இதனால எங்க லாபமும் குறையாது. அதேசமயம் வாடிக்கையாளர்கள் செலவும் குறையும்,” என்றார்.

இதுதவிர வாடகைக்குக் கொடுக்கும் நகைகளைத் திருப்பியளிக்க இரண்டு நாட்கள் வரை அவகாசம் அளிக்கிறார். மேலும் வெளியூர் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வாரம் வரை அவகாசம் வழங்கப்படுகிறது. அதற்காக சிறிய தொகை மட்டுமே கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

“கோவிட் பிரச்சனை வந்ததால வாடிக்கையாளர்கள் வீட்டுக்கே போய் நகைகளை டெலிவர் பண்ணி, பணத்தை கலெக்ட் பண்ணிட்டு, நாங்களே நகைங்களை திரும்ப எடுத்துக்கறோம். வாடிக்கையாளர் பாதுகாப்புக்காக இந்த சேவையை இப்ப புதுசா அறிமுகம் செஞ்சிருக்கோம்,” என்றார்.

திவ்யா வாடிக்கையாளர்களுக்கு முகம் சுளிக்காமல் பொறுமையாக டிசைன்களை எடுத்துக் காட்டுவது பலரும் குறிப்பிட்டுப் பாராட்டும் அம்சம்.

“பெண்கள் நிறைய வெரைடீஸ் பார்த்துதான் செலக்ட் பண்ணுவாங்க. பொறுமையா அவங்களோட ரசனைக்கு ஏத்தமாதிரி காட்டணும். அப்பதான் திருப்தி அடைவாங்க. அதுமட்டும் இல்லாம ட்ரெண்டியா எதிர்பார்ப்பாங்க. சென்னையில இருக்கற கஸ்டமர்ஸ் பெரும்பாலானவங்க செலபிரிட்டி பிக்சர்ஸ் எடுத்துட்டு வருவாங்க. அதுல இருக்கற மாதிரி நகைங்களைதான் கேப்பாங்க. அதனால மார்கெட் ட்ரெண்டுக்கு ஏத்த மாதிரி வெச்சிருக்கோம்,” என்று நகைகள் பற்றி விவரித்தார்.
2

தொடர் கற்றல்

சமூக வலைதளங்களை சிறப்பாகப் பயன்படுத்தி வரும் திவ்யா தொடர்ந்து தன்னை மேம்படுத்திக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கிறார்.

“என்னைப் பொறுத்தவரைக்கும் அவுட்சோர்ஸ் செய்யாம, முடிஞ்ச வரைக்கும் எல்லாத்தையுமே நானே செய்யணும். அதுக்காக திறனை மெருகேற்றிகிட்டே இருக்கேன். கோவிட் சமயத்துல டிஜிட்டல் மார்கெட்டிங் நுணுக்கங்களை கத்துகிட்டேன். எந்த இடத்துக்கு ட்ராவல் பண்றனோ அங்க விளம்பரம் செஞ்சு அங்க இருக்கிற வாடிக்கையாளர்களை அட்ராக்ட் பண்ணுவேன்,” என்றார்.

சவால்

மற்ற வணிகங்கள் போன்றே கோவிட் பெருந்தொற்று மிகப்பெரிய சவாலாக இருந்துள்ளது. குடும்பத்தையும் குழந்தையையும் பராமரிப்பது மிகப்பெரிய சவால் என்கிறார் திவ்யா.

“குழந்தையை காரணம் காட்டி நான் வீட்டுக்குள்ளயே முடங்கிடலை. பக்கத்து ஏரியால நகைங்களை டெலிவர் பண்ணவேண்டியிருந்தா குழந்தையை கங்காரு குட்டி மாதிரி தூக்கிட்டே போவேன். அதனால அதுக்கே உரிய சவால் இருக்கதான் செஞ்சுது,” என்று குறிப்பிட்டார்.

திவ்யா 25,000 ரூபாய் மதிப்புள்ள நகையை வெறும் 2,000 ரூபாய்க்கு வாடகைக்கு கொடுக்கிறார். வாடிக்கையாளர்களிடம் உரிய ஆவணங்களையும் முன்பணமும் பெற்றுக்கொண்டாலும் நம்பகத்தன்மை அடிப்படையிலேயே இந்தத் தொழில் இயங்கி வருவதாக விவரிக்கிறார்.

முதலீடு மற்றும் வருவாய்

2014-ம் ஆண்டு தொழில் முயற்சியைத் தொடங்கியபோது 10,000 ரூபாய் ஆரம்பகட்டமாக முதலீடு செய்துள்ளார். ’ஐக்யூட் கேலரி’ தொடங்குவதற்கான செயல்பாடுகளில் கூடுதலாக 10 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார்.

தற்போது 10-12 லட்ச ரூபாய் வரை வருவாய் ஈட்டி வரும் ஐக்யூட் கேலரி இந்த ஆண்டில் 20-25 லட்ச ரூபாய் வரை ஈட்டும் என எதிர்பார்க்கிறார்.
jewels

வருங்காலத் திட்டம்

வரும் நாட்களில் ஒப்பந்த அடிப்படையில் திருமணம் தொடர்புடைய மற்ற சேவைகளையும் இணைத்துக்கொள்ள திவ்யா திட்டமிட்டுள்ளார். உதாரணத்திற்கு மேக் அப், மெஹந்தி, பிரைடல் பிளவுஸ் தைப்பது போன்ற சேவைகளை வழங்க விரும்புகிறார். ஏற்கெனவே இந்த சேவைகளை அவுட்சோர்ஸ் செய்யும் பணியில் களமிறங்கியுள்ளார். இதற்காக அந்தந்த பிரிவில் நிபுணத்துவம் பெற்றுள்ள நண்பர்களை ஒருங்கிணைத்துள்ளார்.


குறிப்பிட்ட பணியை ஒப்பந்த அடிப்படையில் வழங்கி அதற்கான கமிஷன் தொகையை பெற்றுக்கொள்ளும் வகையில் வருவாய் மாதிரி திட்டமிட்டுள்ளார்.

“மணமகளுக்கான எல்லா தேவைகளையும் ஒரே இடத்தில் பூர்த்திசெய்ய விரும்பறேன்,” என்கிறார் திவ்யா.

வாழ்த்துக்கள் சகோதரி!