2021ல் இணையத்தை கலக்கிய சூப்பர் மீம்கள்...!
சுயஸ் கால்வாய் போக்குவரத்து நெரிசல் துவங்கி சஷி தரூர் தேங்காய் உடைப்பு வரை இந்த ஆண்டு இணையத்தை கலக்கிய மீம்கள் பற்றி ஒரு தொகுப்பு.
இணையத்தில் செய்திகளும், தகவல்களும் கவர்வது போல, மீம்களும் கவர்ந்திழுக்கின்றன. அதிலும், குறிப்பாக இளம் தலைமுறையினர் மத்தியில் மீம்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. எந்த நிகழ்வாக இருந்தாலும் மீம்கள் உருவாக்கப்படுவது வாடிக்கையாக இருக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை கேலி கிண்டலாக அமைந்தாலும், சிந்திக்க வைக்கும் மீம்களும் இல்லாமல் இல்லை.
அந்த வகையில், 2021 ம் ஆண்டில் இணையத்தை கலக்கிய மீம்கள் பற்றி ஒரு தொகுப்பு:
பெர்னி சாண்டர்ஸ்
ஆண்டு துவக்கத்தில் இணையத்தில் வலம் வரத்துவங்கிய பெர்னி சாண்டர்ஸின் மீம் தான் இந்த ஆண்டு இணையத்தை கலக்கிய மீம்களில் முன்னிலை வகிக்கிறது. அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சி முடிவுக்கு வந்து, ஜோ பைடன் புதிய அதிபராக பதிவேற்றுக்கொண்ட நிகழ்ச்சியில் மூத்த எம்பி பெர்னின் சாண்டர்ஸ் தனக்குள் மூழ்கியபடி அமர்ந்திருந்தார்.
குளிரில் இருந்து தற்காத்துக் கொள்ள ஸ்வெட்டர், கயுயறை அணிந்த படி, கைகளை கட்டிக்கொண்டு கால் மேல் கால் போட்டபடி இவர் தனியாக நாற்காலியில் அமர்ந்திருந்த காட்சி பார்வையாளர்களை மட்டும் அல்லாமல் இணையவாசிகளையும் கவர்ந்தது.
விளைவு, பதவியேற்பு விழாவில் சாண்டர்ஸ் அமர்ந்திருந்த நிலையை தங்களுக்கு தோன்றிய சூழல்களில் எல்லாம் பொருந்த வைத்து மீம் திருவிழாவை அரங்கேற வைத்தனர். இவற்றில் ஹைலைட்டான மீம்களில் ஒன்றாக, கேரளாவின் எழில் கொஞ்சம் மலைப்பகுதியில் சாண்டர்சை அமர வைத்து கேரளா டூரிசம் பகிர்ந்த மீம் அமைந்தது.
சஷி தரூர்
இந்திய எம்பியான சஷி தரூருக்கும் இணையத்திற்கும் நெருக்கமான பந்தம் இருக்கிறது. டிவிட்டரில் இவரது ஆங்கில வார்த்த விளையாட்டுகளும், ஜாலங்களும் அவ்வப்போது கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், தரூர் குருவாயூர் கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு தேங்காய் உடைப்பது போன்ற படத்தை டிவிட்டரில் பகிர்ந்து கொண்டார்.
தரூர் தேங்காயை கையில் வைத்திருக்கும் போஸ் அசத்தலாக இருக்கவே, இணையவாசிகள் உற்சாகமாகி கிரிக்கெட் மைதானத்தில் இருந்து, டீக்கடை வரை பல்வேறு இடங்களில் தரூரின் இந்த காட்சியை பொருத்தி மீம்களை உருவாக்கி மகிழ்ந்தனர். தரூரும் தன் பங்கிற்கு இந்த மீம்களை டிவிட்டரில் குறிப்பிட்டு, தனக்கு பிடித்தமான மீம்களை தேர்வு செய்தும் சான்றிதழ் வழங்கினார். (ஆனால், இதே தரூர், நாடாளுமன்ற வளாகத்தில் பெண் எம்பிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தொடர்பாக பகிர்ந்து கொண்ட குறிப்பிற்காக கண்டனத்திற்கு உள்ளானார்.)
சுயஸ் கால்வாய்
நம்மூர் போக்குவரத்து நெரிசலை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு மார்ச் மாதம் சுயஸ் கால்வாயில் பெரும் நெரிசல் உண்டானது. உலகின் மிகவும் பிஸியான கப்பல் போக்குவரத்து வழித்தடமான இந்த குறுகிய பாதையில் பெரிய கப்பல் ஒன்று குறுக்கு வெட்டாக சிக்கி கொள்ள மொத்த பாதையும் அடைபட்டு போக்குவரத்து ஸ்தம்பித்தது.
துறைமுக அதிகாரிகள் இந்த சிக்கலுக்குத் தீர்வு காண தீவிரமாக முயற்சித்துக்கொண்டிருந்த நிலையில், இணையவாசிகள் இந்த கப்பலை அகற்ற நூதனமான வழிகளைக் கண்டுபிடித்து மீம்களாக தெறிக்க விட்டனர். பொக்கலைன் இயந்திரம் கொண்டு மண்ணை அகற்றி பெரிய கப்பலை நகர்த்தும் வகையிலான மீமை இதில் ஹைலைட்டாக கருதலாம்.
கிம் கர்தாஷியான்
அமெரிக்க நடிகையான கிம் கர்தாஷியான் இணைய உலகில் வைரலாகும் கலையில் தேர்ச்சி பெற்றவர். வழக்கமாக கவர்ச்சிகரமான உடையில் கலக்குபவர் இந்த ஆண்டு மெட்டா கேலா நிகழ்ச்சியில் தலை முதல் கால் வரை மூடிய கருப்பு ஆடை அணிந்து வந்தார்.
அதோடு முகத்தை முழுவதும் மூடிக்கொண்டிருந்தார். கிம்மின் இந்த தோற்றத்திற்கான காரணங்கள் தொடர்பாக பலவித விளக்கங்கள் சொல்லப்பட்ட நிலையில், இந்த காட்சி மீமாக உலா வரத்துவங்கியது. கிம்மின் ஆடையை முடிந்தவரை கேலி செய்து ஒரு வழி செய்துவிட்டனர்.
ஜெயிலுக்கு செல்லுங்கள்
பாலிவுட் நடிகை அமிர்தா ராவ் நடித்த விவாஹா திரைப்படம் 2006ம் ஆண்டு வெளியானது. இது அத்தனை மறக்க முடியாத படமா என்று தெரியவில்லை. ஆமாம் இந்த படத்தில் அமிர்தா ஒரு காட்சியில் விருந்தினர்களுக்கு தண்ணீர் கொடுத்து பேசும் வசனம் திடிரென இணையத்தில் மீமாக பிரபலமானது.
போதைப்பொருள் கடத்தல் ஆசாமிகள்: கைது செய்யப்பட்ட செய்தியை அடுத்து, அமிர்தாவின் கைகளில் தண்ணீருக்கு பதிலாக கைவிலங்குகளை கொடுத்து ஜெயிலுக்கு செல்லவும் எனச் சொல்வது போன்ற மீம்கள் தூள் கிளப்பின. அசாம் காவல்துறை இந்த மீமை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இணையவாசிகளின் பாராட்டுகளையும் அள்ளியது.
ரொனால்டோ கோலா
கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டினா ரொனால்டோ கோல் அடித்தால் மட்டும் தான் செய்தியா என்ன? இந்த ஆண்டு செய்தியாளர் சந்திப்பில் அவர் கோகோ கோலா பாட்டிலை தள்ளி வைத்து தண்ணீர் பாட்டிலை முன்னிறுத்தியது வைரலானது. இதனால் கோகோகோலா பங்குகள் ஒருபக்கம் சரிந்த நிலையில், மறுபக்கம் இணையவாசிகள் மீம்களை உருவாக்கி வறுத்தெடுத்தனர்.
இளவரசி மேகன்
பிரிட்டிஷ் இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகன் மெர்கலும் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒபராவுக்கு கொடுத்த நேர்காணல் உலகம் முழுவதும் பேசப்படும் வகையில் அமைந்தது.
இந்த நேர்காணலில் மேகம் பகிர்ந்து கொண்ட பல கருத்துகளை பார்வையாளர்களை உலுக்கிய நிலையில், இவற்றை கேட்டு அதிர்ச்சி அடைந்து ஒபாரா வெளிப்படுத்திய முகபாவங்கள் மீம்களுக்கான அடித்தளமாக அமைந்தது.
மெட்டா மீம்கள்
ஃ
பேஸ்புக் நிறுவனம் இனி மெட்டாவர்ஸ் நிறுவனமாக மாறப்போவதாக தெரிவித்து தனது பெயரையும் மெட்டா என மாற்றிக்கொள்வதாக அறிவித்தது. நிறுவனர் மார்க் ஜக்கர்பர்கின் இந்த அறிவிப்பு மீம்களில் கேலிக்கு உள்ளாகி இணையத்தை கலக்கின.