#100Unicorns | 'யுனிக்' கதை 16 - Freshworks | ரஜினி ஸ்டைலில் கிரிஷ் மாத்ருபூதம் ‘ஸ்டார்ட்அப் சூப்பர் ஸ்டார்’ ஆன கதை!
ஃப்ரெஷ்வொர்க்ஸையும் கிரிஷ் மாத்ருபூதத்தையும் தனித்தனியாக பிரிக்க முடியாது. திருச்சியைச் சேர்ந்த கிரிஷ் மாத்ருபூதம் , குழந்தைப் பருவத்தில் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டு வளர்ந்தவர். அவற்றில் இருந்து மீண்டு நாஸ்டாகில் தன் நிறுவனத்தை ஐபிஒ வரை கொண்டு சென்றது எப்படி என்பதே கதை!
‘யுவர்ஸ்டோரி’ சார்பாக பெங்களூருவில் நடத்தப்பட்ட ஸ்டார்ட்-அப் கூட்டம். இளம் தொழில்முனைவோர்கள், சாதிக்க துடிப்பவர்கள் கூடியிருந்த கூட்டமும்கூட.
ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வெற்றியாளர்கள் தங்கள் வெற்றிக்கதைகளை சொல்லிக் கொண்டிருந்த அங்கு, “இங்கே எத்தனை பேர் ரஜினியின் ‘அண்ணாமலை’ படம் பாத்திருக்கீங்க" என்ற கேள்வியுடன் ஒரு குரல் பேச ஆரம்பித்தது.
“அதில் தலைவர் ஒரே பாட்டில் பணக்காரர் ஆவார். அதே மாதிரி எங்கள் நிறுவனத்தின் கதையும். ஆனால் என்ன ஒரே இரவிலோ ஒரே பாட்டிற்கான ஐந்து நிமிடத்தில் அது நடக்கவில்லை. ஐந்து வருடத்தில் நடந்தது...” என்றது அந்தக் குரல்.
அந்த குரலுக்குச் சொந்தக்காரர் வேறு யாருமில்லை, ஸ்டார்ட்அப் உலகின் இன்றைய சூப்பர் ஸ்டாராக இருக்கக் கூடிய கிரிஷ் மாத்ருபூதம். அவர் கூறிய நிறுவனம் பல இந்தியர்களை ஒரே இரவில் கோடீஸ்வரர்கள் ஆக்கிய ’Freshdesk' அலைஸ் 'Freshworks, தனது நான்காவது காலண்டு மற்றும் 2021ம் முழு ஆண்டு வருவாய் அறிக்கையின் ஒரு பகுதியாக 100 மில்லியன் டாலர் காலாண்டு வருவாயை எட்டியது.
'.இன்றைய யூனிகார்ன் எபிசோட் ஃப்ரெஷ்வொர்க்ஸ் கதை தான்.
Freshworks - கிரிஷ் மாத்ரூபூதம் கதை
ஃப்ரெஷ்வொர்க்ஸையும் கிரிஷ் மாத்ருபூதத்தையும் தனித்தனியாக பிரிக்க முடியாது. கிரிஷ் மாத்ருபூதம் பக்கா தமிழன். திருச்சியை அடுத்த ஆன்மிக நகரான ஶ்ரீரங்கத்துக்காரர். இன்று கோடிகளில் புரளும் ஒரு நபராக பொதுவெளியில் அறியப்படும் கிரிஷ், குழந்தைப் பருவத்தில் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டு வளர்ந்தவர். நிதி ரீதியாக மட்டுமல்ல, மனரீதியாகவும்.
பெற்றோர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் பிரிந்துவாழ அத்தை வீட்டில் வளர்ந்தவர் கிரிஷ். நடுத்தர வர்க்கத்துக்கும் கீழான குடும்பப் பின்னணியில் பல கஷ்டங்களுக்கு இடையே பள்ளிப்படிப்பை முடித்து இன்ஜினீயரிங் படிக்க சேர்ந்தாலும் படிப்புச் செலவுக்கான கட்டணத்துக்கு பணமில்லை.
கிரிஷின் தந்தை உறவினர் ஒருவரிடம் கடன் கேட்க, பணம் கொடுக்க மறுத்த அந்த உறவினர் “மண் குதிரையை நம்பி ஆத்துல இறங்காதே” என்று கிரிஷை ஏளனமாக எண்ணி உதாசீனப்படுத்தியுள்ளார்.
அந்த வைராக்கியத்தில் மகனை கஷ்டப்பட்டு இன்ஜினீயரிங் படிப்பில் சேர்த்துவிட கம்ப்யூட்டர் சயினஸ் பிரிவில் பட்டம் பெற்றார் கிரிஷ். கேம்பஸில் வேலை கிடைக்காமல் போக, ஊர் வாயை அடைக்க சென்னைக்கு புலம்பெயர்ந்து எம்.பி.ஏ படிப்பை மேற்கொண்டார்.
மேலாண்மை படிப்பை படித்தாலும் இன்ஜினீயரிங்கில் படித்த ஜாவா ப்ரோகிராமில் கிரிஷ் கில்லி. அதை சொல்லிக்கொடுப்பதிலும் தான். “நான் அடிப்படையில் ஓர் ஆசிரியர்” என தனக்கு ஆசிரியர் வேலை பிடிக்கும் என்பதை எப்போதும் சொல்லும் அவருக்கு ஹெச்.சி.எல் நிறுவனத்தில் ட்ரைனராக முதல் வேலை.
பின்னூட்டத்தில் உருவான எண்ணம்
ஹெச்.சி.எல் நிறுவனத்தில் சில நாட்களுக்குப் பிறகு, ஜோஹோ நிறுவனம் சென்றார் கிரிஷ். ஶ்ரீதர் வேம்புவின் ஜோஹோவில் ப்ரீசேல்ஸ் என்ஜினீயர். ஹெச்.சி.எல் நிறுவனத்தில் செய்த ட்ரைனர் வேலையே இங்கும். முதல் 18 மாதங்கள் இப்படியாக சென்றுகொண்டிருக்க கிரிஷுக்கு இயல்பாகவே, புராடக்ட் டெவலப்மென்ட்டில் ஆர்வம் இருந்தன. இதனைக் கண்டுபிடித்த ஶ்ரீதர் வேம்பு, கிரிஷின் வாழ்க்கையில் கியரை மாற்றினார். புராடக்ட் மேனேஜராக புதுப்பணி.
சின்ன சின்ன தவறுகளுடன் கொடுத்த வேலையை திறம்பட செய்து புதிய விஷயங்களையும் கற்றுக்கொண்டார். அடுத்த 9 வருடங்களில் Manage Engine என்ற பகுதியின் தயாரிப்பு மேலாண்மைப் பிரிவின் துணைத் தலைவராக பதவி உயர்வு என ஜோஹோவில் கிரிஷின் வாழ்க்கை ஓஹோ என்று போய்க்கொண்டிருந்தது.
இவர் தலைமையிலான குழு வாடிக்கையாளர் சேவையில் குறிப்பிடத்தக்க புதுமைகளைப் புகுத்தி, பிரத்யேக வாடிக்கையாளர் சேவை மையத்தை அப்போது நிர்மாணித்தது. கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தைக் கடந்த தொழில்முறை பயணத்தில் முதல்முறையாக வெறுமையை உணர்ந்தார் கிரிஷ்.
நல்ல சம்பளம், நல்ல வேலை, குடும்பம் என பரபரப்பாக நாட்கள் ஓடினாலும், அது மெத்தனமாக வாழ்க்கையாகவே அவருக்கு தோன்றியது. அதற்குக் காரணம், அவருக்குள் இருந்த தொழில்முனைவு ஆசை.
ஜோஹோ நிறுவனத்தில் இருந்து விலகினார். ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கவேண்டும் என்ற ஆசை அவரை தினமும் தூங்க விடாமல் செய்தது. ஆனால், அதை வெளியில் சொல்ல முடியவில்லை. ஏனென்றால், ஏற்கனவே தொழில் தொடங்க வேண்டும் என்று அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பி அதில் பலத்த அடி வாங்கிய அனுபவம் கிரிஷுக்கு இருந்தது. இதனால் மீண்டும் அதே முடிவை எப்படி வெளியே சொல்வது என்ற தயக்கம்.
எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று இருந்தவர் 2010-ம் ஆண்டு தொழில்நுட்ப விவாத தளமான 'ஹேக்கர் நியூஸில்' தற்செயலாக ஒரு பின்னூட்டத்தை படித்தார்.
சாஸ் நிறுவனமான Zendesk தனது கட்டணத்தை 60 முதல் 300 சதவீதம் வரை உயர்த்தியது தொடர்பான வாடிக்கையாளர்கள் அதிருப்தி தொடர்பான கட்டுரையின் கீழ் அந்தப் பின்னூட்டம் இடம்பெற்றிருந்தது. Zendesk என்பது சிஆர்எம் டிக்கெட்டிங் சேவை முறையில் சமூக வலைதளங்களின் பின்னூட்டத்துடன் செயல்படும் வாடிக்கையாளர் சேவை மையம். அந்தத் துறையில் அப்போதைய தனிக்காட்டு ராஜா Zendesk மட்டுமே. அதனால், தன் சேவைக்கு அவர்கள் வைத்ததே ஊதியம். மார்க்கெட்டை விட சேவை கட்டணத்தை ஐந்து மடங்காக உயர்த்தியிருந்ததை கிரிஷ் உணர்ந்தார்.
FreshDesk உதயம்
இந்த அநியாயம் தனக்கான ஐடியாவாக கிரிஷின் சிற்றறிவை தூண்டியது. முழு செயல்திட்டத்துடன் தனது குருநாதர் ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவின் கதவை தட்டினார். கிரிஷ் மீது அபார நம்பிக்கை வைத்தே ஒரே நபர் அவர் மட்டுமே என்பதால், ஸ்ரீதரால் இந்த கனவை நனவாக்கலாம் என்ற நம்பிக்கையுடன் சென்றவருக்கு ஏமாற்றமே கிடைத்தது.
முதலீட்டுக்கு ஸ்ரீதர் வேம்பு தயாராக இல்லை. முதலீடு விஷயத்தில் இருவருக்கும் இரு மாதிரியான மனநிலை. இதனால் தானே கோதாவில் குதிக்க தைரியமாக முடிவெடுத்த கிரிஷ், தனது ஆரம்ப நாட்களிலிருந்து அனைத்து கட்டத்திலும் தனக்கு உறுதுணையாக இருந்த ஜோஹோவில் தன்னுடன் வேலை பார்த்துவந்த ஷான் கிருஷ்ணசாமியிடம் விஷயத்தை தெளிவுபடுத்தினார்.
கிரிஷ் மேலாண்மையில் கில்லி என்றால், ஷான் தொழில்நுட்பத்தில் சித்தன். இவர்கள் இருவர் மற்றும் நான்கு பேருடன் சேர, 2010ல் உதயமானது ஃப்ரெஷ்டெஸ்க். சென்னையின் கீழ்கட்டளையில் ஒரு சிறிய வாடகை அறையில் ’ஃப்ரெஷ்டெஸ்க்’ அலுவலகம். ஆறு பேரும் இரவு பகல் பாராமல் உழைத்தனர். முதல் ஒன்பது மாதங்களில் முதல் புராடக்ட் வெளியீடு. மைக்ரோசாப்டின் பிட்ஸ்பார்க் போட்டியாக முதல் புராடக்ட்.
இது வெளியிடப்பட்ட முதல்நாளே, ஆஸ்திரேலியாவிலின் சிட்னியில் இருந்து ஒரு போன் கால். ஃப்ரெஷ்டெஸ்க்கின் முதல் புராடக்ட்டை தெரிந்துகொண்டவர்கள் அதனை இரண்டு மணிநேரம் பயன்படுத்தி பார்த்து உடனே, அதற்கான பணத்தையும் கட்டினர். இவர்கள் தான் ஃப்ரெஷ்டெஸ்க்கின் முதல் வாடிக்கையாளர், இன்றும் இவர்கள் ஃப்ரெஷ்டெஸ்க்கின் வாடிக்கையாளர்.
முதலீடு
அடுத்தடுத்த வாரங்களில் வாடிக்கையாளர்கள் வர, முதல் 100 நாள்களில் 100 வாடிக்கையாளர்கள் வந்தனர். இப்படியாக படிப்படியாக ஃப்ரெஷ்டெஸ்க் உயர்ந்தது. டாலர்களிலும், பவுண்டிலும் வருமானம் குவித்தன. வாடிக்கையாளர்கள் அதிகரிக்க, ஊழியர்களும் அதிகமானார்கள்.
100 பேர் வேலை பார்க்கும் அலுவலகமாக கீழ்கட்டளையின் சிறிய அறை, பக்கத்தில் ஹோட்டலுக்காக இருந்த இடத்தையும் சேர்த்து பெரிய அலுவலகமாக மாறியது. இன்றைக்கு கிரிஷின் நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்திற்கும் மேல்.
அதேபோல், ஊழியர்களின் எண்ணிக்கையும் 4,000+. விரைவாகவே 1Click, friilp என்ற இரு மென்பொருள் சேவை நிறுவனங்களை ஃப்ரெஷ்டெஸ்க் உடன் இணைக்கப்பட்டன.
“தொழில் நன்றாக நடக்கும்போதும், முதலீட்டைப் பெற வேண்டும்; தொழில் அவ்வளவு நன்றாக நடக்கவில்லை என்றாலும் முதலீட்டைப் பெற வேண்டும்...” என்பார் கிரிஷ் மாத்ருபூதம்.
ஃப்ரெஷ்டெஸ்க்கின் வளர்ச்சிக்கேற்ப முதலீடுகளும் கிடைத்தன. நல்ல லாபம் உள்ள தொழில்களில் முதலீடுகளை குவித்த வென்ச்சர் கேப்பிடல் ஃபண்ட் நிறுவனங்கள் ஃப்ரெஷ்டெஸ்க்கை தேடிவந்தன. ஆக்சல் பார்ட்னர்ஸ், டைகர் குளோபல், கூகுள் கேபிட்டல் நிறுவனம் என இதில் முக்கியமான நிறுவனங்களின் முதலீடுகள் கிடைக்க, 2016-லேயே அசுர வளர்ச்சி கண்டது கிரிஷின் கனவு.
2016-ன் முதல் காலாண்டில் ஃப்ரெஷ்டெஸ்க் ஈட்டிய முதலீடுகள் 94 மில்லியன் டாலர். இன்றைய சூழ்நிலையில் இது 300 மில்லியன் டாலருக்கு மேல். அதிகமான முதலீட்டாளர்களின் குறுக்கீடோ அல்லது போட்டி நிறுவனங்களின் பெருக்கமோ ஃப்ரெஷ்டெஸ்க்கின் வளர்ச்சியில் எந்த மாற்றத்தையும் ஏற்படவில்லை. 2018ல் இந்தியாவின் 16வது யூனிகார்ன் எனும் அந்தஸ்தைப் பெற்றது.
சாஸ் (SaaS) தொழில்நுட்பம்
சென்னையின் சிறிய அலுவலகத்தில் இருந்து பல ஆயிரம் வாடிக்கையாளர்களை FreshDesk-இல் ஈர்க்க முடிந்தது என்றால், அதற்கு உறுதுணையாக இருந்தது, சாஸ் (Software as a Service - SaaS) தொழில்நுட்பம். ஒரு நிறுவனத்துக்குத் தேவையான சாஃப்ட்வேரைத் தயார் செய்து, அவற்றை அந்த நிறுவனத்திடம் விற்றுவிடாமல், மாதம்தோறும் எவ்வளவுக்கு பயன்படுத்துகிறார்களோ அதற்குரிய பணத்தை மட்டும் கட்டணமாக பெறுவதே இந்த சாஸ். இந்த தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்தி ஃப்ரெஷ்டெஸ்க்கை படிப்படியாக வளர்த்தார் கிரிஷ். உலகின் மற்ற நகரங்களிலும் புதிய கிளைகளை தொடங்கினார்.
ஆரம்பத்தில் சி.ஆர்.எம் அடிப்படையில் புராடக்டுகளை வழங்கிய கிரிஷ், நிறுவனத்தின் அதிவேக வளர்ச்சியை அடுத்து மேலும் சில புராடக்டுகளை தயார் செய்து வழங்கியதுடன், நிறுவனத்தின் பெயரை ஃப்ரெஷ்டெஸ்க் என்பதில் இருந்து ‘FreshWorks' 'ஃப்ரெஷ்வொர்க்ஸ்' என்று மாற்றினார். இதன்பின் நடந்தவை அனைத்தும் ஸ்டார்ட்அப் உலக வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டவை.
"என்றுமே நல்ல விலைக்கு விற்றுவிடலாம் என்ற எண்ணத்துடன் ஒரு நிறுவனத்தை உருவாக்க முயலாதீர்கள். உண்மையான ஆதரவாளர்கள் உங்களுடன் இணைந்து பயணிக்க எப்போதுமே தயாராக இருப்பார்கள். அது முதலீட்டாளராகவோ அல்லது நல்ல பணியாளராகவோகூட இருக்கலாம்," - கிரிஷ்.
மேலே ரஜினியின் டயலாக்கை குறிப்பிடக் காரணம், கிரிஷ்; ரஜினியின் அதிதீவிர ரசிகன். சொல்லப்போனால் ரஜினியை தனது ஆதர்ஷமான மாடலாக கடைபிடிப்பவர். வாழ்வின் எந்தவொரு இக்கட்டான தருணத்திலும் அதற்குப் பொருத்தமான ஒரு ரஜினி பொன்மொழியை உதிர்க்கும் அளவுக்கு மிகத் தீவிரமான ரசிகன். ரஜினி படம் வெளியாகும் முதல் நாளன்றே பார்த்துவிடும் கிரிஷ், அன்றைய தினம் ஊழியர்கள் அனைவரையும் படம் பார்க்க வைப்பார்.
நாஸ்டாக் ஐபிஒ லிஸ்ட்டிங்
கடந்த வருடம் அமெரிக்க பங்குச்சந்தையான நாஸ்டாக்கில் தன் பங்கை ஐ.பி.ஒ மூலம் வெளியிட்டார் கிரிஷ். உலகம் முழுக்க உள்ள முதலீட்டாளர்கள் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் நாஸ்டாக்கில் ஐ.பி.ஒ வெளியிட்டார். இருபது ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் இன்போசிஸ் நிறுவனம் அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. அதன்பிறகு அந்தப் பெருமையை பெற்றது ஃப்ரெஷ்வொர்க்ஸ் மட்டுமே.
'நாஸ்டாக் வெளியீடு ஆரம்பம் மட்டுமே, கடின உழைப்பு இப்போது தான் துவங்குகிறது’ - Freshworks கிரிஷ் மாத்ருபூதம்!
ஒரு பில்லியன் அளவுக்கு முதலீட்டைத் திரட்டும் எண்ணத்துடன் ஐ.பி.ஓ வெளியிட நினத்தவருக்கு 36 டாலர் விலையில் 28.5 மில்லியன் பங்குகள் விற்பனையானது. நாஸ்டாக் ஐ.பி.ஓ வெளியீடு ஃப்ரெஷ்வொர்க்கின் முதலீட்டாளர்களை மட்டுமல்ல, அந்நிறுவனத்தின் 500 ஊழியர்களையும் (இந்தியர்களையும்) கோடீஸ்வரர்களாக உயர்ந்தியது.
ஆம், ஃப்ரெஷ்வொர்க்கில் பணியாற்றும் 90% ஊழியர்களுக்கு அந்நிறுவனத்தின் பங்குகள் வழங்கப்பட்டிருந்தது. அதன்மூலம் தனது நிறுவனத்தில் பணிபுரிந்த அத்தனை இந்திய இளைஞர்களையும் ஒரே இரவில் கோடீஸ்வரர்களாக மாற்றி அழகு பார்த்தார் கிரிஷ். ஒருமுறை ஊழியர்கள் அனைவருக்கும் பங்கு தருவது ஏன் என்ற கேள்விக்கு கிரிஷ் அளித்த பதில்,
“நான் மட்டும் முன்னேறினால் போதாது; என்னுடன் இருப்பவர்கள் அனைவரும் முன்னேற வேண்டும்...”
- இப்படி ரஜினி ஸ்டைலில் சொன்னவர் கிரிஷ் மாத்ருபூதம். நாஸ்டாக் லிஸ்ட்டிங்கிலும் தவறாமல் ரஜினி பெயரை உச்சரித்து பெருமைப்படுத்திய கிரிஷ் உண்மையில் இந்திய ஸ்டார்ட் அப் உலகின் சூப்பர் ஸ்டார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
கட்டுரை உதவி: ஜெய்
யுனிக் கதைகள் தொடரும்...
#100Unicorns | 'யுனிக்' கதை 15 - BYJU'S - சர்ச்சைகளைத் தாண்டி ஆசிரியர் பைஜுவின் இமாலய வெற்றிப் பயணம்!