சுயநிதியில் ரூ.10,000 கோடி நிறுவனமாக உருவெடுத்த ‘ரூட் மொபைல்’ வெற்றிக்கதை!
ரூட் மொபைலின் கதை விடாமுயற்சி, உறுதி மட்டுமல்ல, சந்தைக்கேற்ற சரியான தயாரிப்பு இருந்தால், எந்தவித நிதியுதவியும் இல்லாமல் பூட்ஸ்ட்ராப் செய்யப்பட்ட நிறுவனமாக வளர முடியும் என்பதை காட்டுகிறது.
ராஜ்திப் குப்தா 2008-ல் ரூட் மொபைலை நிறுவிய நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வேறொரு நிறுவனம் Route Mobile-லை கையகப்படுத்த இருந்தது. நிறுவனத்துக்கு ரூ.60 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு, ஒப்பந்தம் கிட்டத்தட்ட இறுதியானது. ராஜ்திப் குப்தா முழுவதுமாக நிறுவனத்தை விட்டு வெளியேறும் கடைசிகட்ட பிளான் குறித்த மெயிலும் வந்தது.
இவ்வளவு சீக்கிரம் முழுவதுமாக விலக ஆர்வமில்லாததால், சில விஷயங்களை யோசித்து ராஜ்திப் ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, அதே நிறுவனம் வேறொரு ப்ரோபோசலுடன் வந்தது.
இம்முறை ரூட் மொபைலை கையகப்படுத்த அல்ல, மாறாக அந்த நிறுவனம் தங்களை வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற திட்டத்துடன் ரூட் மொபைலை அணுகியது. ராஜ்திப் ஸ்டார்ட்அப்பில் நிலைத்திருக்க எடுத்த முடிவு பலனளித்ததையே இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. எப்படி என்றால், 2024-ஆம் ஆண்டில் ரூ.11,170 கோடி சந்தை மூலதனத்துடன் ரூட் மொபைல் இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக உருவாகியது.

ரூட் மொபைலின் கதை விடாமுயற்சி, உறுதி மட்டுமல்ல, சந்தைக்கேற்ற சரியான தயாரிப்பு இருந்தால், எந்தவித நிதியுதவியும் இல்லாமல் பூட்ஸ்ட்ராப் செய்யப்பட்ட நிறுவனமாக வளர முடியும் என்பதை காட்டுகிறது. இதை செய்துகாட்டிய ராஜ்திப், மற்றவர்களாலும் இதனை சாதிக்க முடியும் என்று நம்புகிறார்.
“2003-ல் எனது ஐடியாவை செயல்படுத்திய தொடங்கியபோது, இந்தியாவில் ஸ்டார்ட்அப் சிஸ்டேமே இல்லை. எனினும் டிஜிட்டல் தளங்கள் குறித்த எச்சரிக்கை இருந்தது. அந்த சமயத்திலேயே மொபைல் போன் சந்தையில் பெரிய வணிக வாய்ப்பு இருப்பதை ஆராய்ந்து முன்கூட்டியே கணித்தோம்,” என்கிறார் ராஜ்திப் குப்தா.
ராஜ்திப்பின் இந்தக் கூற்று நிகழ்காலத்தில் உண்மை என்பதை கண்கூடாக பார்க்கிறோம். இந்தியாவில் 90 கோடிக்கும் அதிகமான இன்டர்நெட் பயனர்கள் உள்ளனர். இந்தியா உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக உள்ளது. இதற்கு சான்று, 2023-ல் 146 மில்லியன் ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்தது. மார்ச் 2004 நிலவரப்படி இந்தியாவில் 33.7 மில்லியன் மொபைல் பயனர்கள் இருந்தனர். 2023-ம் ஆண்டு இறுதியிலோ இந்த எண்ணிக்கை 1.1 பில்லியனாக உயர்ந்தது.
ராஜ்திப்; இங்கிலாந்தில் நல்ல சம்பளம் பெறும் வேலையில் பணிபுரிந்தவர். எல்லோருக்கும் வரும் பிசினஸ் ஆசையால், அப்படியான வேலையை உதறிவிட்டு இந்தியா வந்தார். இரு சிறு குழந்தைகளுக்கு தந்தையாக இருந்ததால், ராஜ்திப்பின் பிசினஸ் முடிவு அவரது குடும்பத்தில் பயத்தை ஏற்படுத்தியது. ஒருபக்கம் குடும்பம், மறுபக்கம் பிசினஸ் கனவு என இருந்த ராஜ்திப் தீர்க்கமான முடிவை எடுத்தார்.
தனது ஐடியாவை சோதிக்க, ஒரு வருடம் அவகாசம் அளிக்க வேண்டும் என குடும்பத்திடம் ஆதரவு கோரினார். அதற்காக அவர் கொடுத்த உறுதி, பிசினஸில் வெற்றி பெற்றால் அதிலேயே தொடர்ந்து பயணம். ஒருவேளை தோல்வியை தழுவினால் வேறொரு வேலைக்கு செல்வது. அந்த திறமை அவருக்கு இருந்ததால், குடும்பத்தினரிடம் அந்த உறுதியை கொடுத்தார்.

CPaaS...
A communications platform as a service அல்லது CPaaS என்பது கிளவுட் அடிப்படையிலான தளமாகும். இது பயனர்களுக்கு அவர்களின் சொந்த அப்ளிகேஷனில் எந்தவித இடைமுகங்களும் (interfaces) இல்லாமல் வாய்ஸ், வீடியோ, மெசேஜிங் என ரியல் டைம் கம்யூனிகேஷன் தகவல்களை சேர்க்க உதவுகிறது. இந்த CPaaS தொழில்நுட்பம் டெலிகம்யூனிகேஷன் துறையில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
அக்காலகட்டத்தில் CPaaS வளர்ந்து வரும், அதேநேரம் பல வாய்ப்புகளை கொண்ட தொழில்நுட்பமாக இருந்ததை கணித்த ராஜ்திப், அதனை அடிப்படையாக கொண்டு ரூ.1 லட்சம் முதலீட்டில் சுயநிதி நிறுவனமாக ரூட் மொபைலை நிறுவினார்.
ஒரு பழைய கம்ப்யூட்டரை கொண்டு ரூட் மொபைலுக்கான தளத்தை உருவாக்கினார். மற்றவர்களிடம் குறைகளை அறிந்துகொள்வதற்கு பதிலாக தானே தனது தயாரிப்பை சோதித்து பார்த்து குறைகளை தெரிந்துகொண்டார். அதன் பிறகு, ரூட் மொபைல் மெதுவாக அதேநேரம், சீராக வளர்ந்தது.
ரூட் மொபைலின் முதல் கையகப்படுத்தல் 365squared, இது ஒரு SMS அடிப்படையிலான ஃபயர்வால் தீர்வுகள் வழங்கும் நிறுவனம். இதன்பின், பேங்கிங் OTP, திரைப்பட டிக்கெட் என வாடிக்கையாளர்களின் தினசரி வாழ்க்கைக்கு தேவையானவற்றை செய்யத்தொடங்கியது ரூட் மொபைல். மாதம் 15 பில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தியது.

வெற்றிக்கு வித்திட்டது எது?
ஒவ்வொரு வளர்ச்சியும் தனது சொந்த காசைப் போட்டு சுயநிதி நிறுவனமாக வளர்ந்த ரூட் மொபைல், நிதி திரட்ட முயற்சித்தது. செப்டம்பர் 2020-ல், ரூட் மொபைல் இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டது. அது எதிர்பார்த்த அளவைவிட நிதியை பெற்றுதந்தது. எந்த அளவுக்கு என்றால், ஐபிஓவுக்குப் பிறகு ரூட் மொபைலில் வேலை பார்த்த அலுவலக உதவியாளர் ஒருவர் வங்கிக் கணக்கில் ரூ.3 கோடி சேர்ந்தது. இது ராஜ்திப்பை உற்சாகப்படுத்தியது.
“ரூட் மொபைலின் இவ்வளவு பெரிய வெற்றிக்கு 100% வாடிக்கையாளர்கள்தான் காரணம்,” என்கிறார் ராஜ்திப்.
ரூட் மொபைலில் தற்போது 22 நாடுகளில் 1,500 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா முழுவதும் 1,000 ஆபரேட்டர்களுடன் ரூட் மொபைல் செயல்படுகிறது. எமிரேட்ஸ், கூகுள், அமேசான் போன்ற பிரபல நிறுவனங்கள் ரூட் மொபலின் வாடிக்கையாளர்கள்.
“புதுமை முக்கியமான ஒன்று” என்ற கூற்றை எப்போதும் நம்பும் ராஜ்திப், ரூட் மொபைலை சந்தையில் எதிர்காலத்துக்கும் நிலைத்து நிற்க சில நடவடிக்கைகளை எடுத்தார். எதிர்காலத்திலும் ஒரு நிறுவனம் நிலைக்க வேண்டும் என்றால் வரப்போகும் மாற்றத்தை கவனித்து செயல்படுத்த வேண்டும். அதனைத்தான் ராஜ்திப் செய்தார்.
எதிர்காலத்தில் வரப்போகும் மாற்றத்தை கணித்து சில நிறுவனங்களை கையகப்படுத்தியும், சில டெக்கனிக்கை அறிமுகப்படுத்தியும் ரூட் மொபலை சந்தையில் நிலைத்து நிற்க உதவினார்.
மூலம்: ஷ்ரத்தா சர்மா
Edited by Induja Raghunathan