காலத்தால் மறைந்த தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள்...
கோடைக்காலத்தில் நாம் விளையாடிய விளையாட்டுகள் இன்று ஒரு ஸ்மார்ட்போனுக்குள் அடங்கிவிட்டது..
தொழில்நுட்பம் நம்மை வசப்படுத்தும் முன்பு கோடைக்காலத்தில் நாம் விளையாடிய விளையாட்டுகள் இன்று கனவாகி போகிவிட்டது. அந்த காலங்களில் விடுமுறை நாட்களில் பெரியவர்கள் வீட்டின் திண்ணையில் விளையாடும் விளையாட்டுகள், இன்று நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனில் வந்துவிட்டது. தெருக்களில் சிறுவர் சிறுமிகள் விளையாடிய காலம் மாறி இன்று தெருக்களும் வெறுச்சோடி கிடைக்கிறது. அப்படி நாம் மறந்த தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள் சிலவற்றை பார்ப்போம்.
பல்லாங்குழி
பெரும்பாலும் வயது வந்த பெண்கள் தங்களது தோழிகளுடன் வீட்டினுள் அமர்ந்து பல்லாங்குழி ஆடுவது வழக்கம். வட்டமாக குழி உள்ள பலகையில் புளியாங்கோட்டை அல்லது சோழி அல்லது முத்துகளை சேர்த்து ஆடுவார்கள். கடைசி மணி தீரும் வரை ஆட்டம் நீடிக்கும். இதனால் விரலுக்கு பயிற்சியும் கணக்கு பயிற்சியும் பெற முடியும் என நம்பினர்.
இன்றைய காலத்தில் சதுரங்க பலகையே நம்மது பலரின் வீட்டில் இல்லாத நிலையல் பல்லாங்குழி பலகை எங்கே இருக்கும்.
கோலி
விடுமுறை நாட்களில் சிறுவர்கள் தெருவில் பளிங்கு போன்ற கோலிக்குண்டுகளை வைத்து விளையாடுவார்கள். ஒரு போட்டியாளரின் கோலியை மற்றொருவர் தனது கோலியை கொண்டு அடிக்க வேண்டும். இலக்கை நோக்கி சரியாக அடித்துவிட்டால் வெற்றிபெற்றவர் தோற்றவர் கோலிக்குண்டுகளை எடுத்துச் செல்லலாம்.
இது அன்றைய சிறுவர்களுக்கிடைய மிக பிரபலமான விளையாட்டாகும். இதே கோலிக்குண்டுகளை கொண்டு மற்றொரு பலகை விளையாட்டும் உண்டு.
பம்பரம்
தெருக்களில் மட்டுமல்ல அன்றைய படங்களில் கூட பம்பர விளையாட்டு காட்சிகள் அதிகமாக இடம்பெறும். பம்பரக்கட்டை மட்டும் சட்டையை கொண்டு இந்த விளையாட்டை துவங்க வேண்டும். இருவர் அல்லது பலர் இணைந்து இந்த விளையாட்டை விளையாடலாம். முதலில் கீழே ஓர் வட்டத்தை இட வேண்டும், பின் சிறுவர்கள் பம்பரத்தை சுழற்றி ஒரே நேரத்தில் கீழே விட்டு சுழற்றி விட வேண்டும். அதன் பின் சுழன்றுகொண்டு இருக்கும் பம்பரத்தை கையில் எடுத்து வட்டத்திற்குள் இருக்கும் பம்பரத்தை அடித்து வெளியில் எடுக்க வேண்டும்.
சில சமயங்களில் பம்பரம் உடைந்துவிடும், அதனால் சிறுவர்கள் பம்பரங்களை நேர்த்தியாக தேர்வு செய்வார்கள். சிலருக்கு இது பொக்கிஷம் போன்றது. தமிழகத்தை தாண்டி பல மாநிலங்களில் இந்த விளையாட்டு விளையாடப்படும்.
ஆடுபுலி ஆட்டம்
பெண்கள் மத்தியில் பிரபலாமான மற்றொரு பலகை விளையாட்டு இது. இருவராக அல்லது இரு குழுவினர்களாக பிரிந்து இந்த விளையாட்டை ஆடுவர். பெயருக்கு ஏற்றார்போல் புலி ஆட்டை வேட்டையாடுவது தான் விளையாட்டு. ஒருவர் 3 புலி காய்களை வைத்தும் மற்றொருவர் 15 ஆடுகளை வைத்தும் விளையாடுவர். புலி ஆட்டை வேட்டையாட முயல ஆடுகள் புலியை முடக்க வேண்டும்.
இது ஒரு மதிநுட்ப உத்தி விளையாட்டாகும். தமிழகத்தை பிற மாநிலங்களிலும் இந்த விளையாட்டு பிரபலமானதாகும்
தாயம்
இரண்டு அல்லது நான்கு பேர் இணைந்து தாயம் மற்றும் காய்களை கொண்டு விளையாடும் சதுரங்க பலகை விளையாட்டு. ஒவ்வொருவரும் நான்கு காய்களை கொண்டு விளையாடுவர். முதலில் எவர் பலகையின் மையத்திற்கு சென்று மீண்டும் ஆரம்பப் புள்ளிக்கு வருவதே விளையாட்டாகும்.
மஹாபாரத காலத்தில் இந்த விளையாட்டு விளையாடப்பட்டதாக வரலாறு உண்டு. இது பார்க்க சுலபமாக தெரிந்தாலும் வெற்றிபெற யுத்த தந்திரம் வேண்டும்.
பாண்டியாட்டம் / நொண்டி
சிறுமிகள் தெருக்களில் விளையாடும் விளையாட்டு இது. ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருக்கும் எட்டு தொடர் பெட்டியை தரையில் வரைந்து கொள்ள வேண்டும். போட்டியாளர்கள் முதல் பெட்டியில் கல்லை போட்டு அந்த பெட்டியையும் கோடுகளையும் தொடாமல் நொண்டி அடித்து கடைசி பெட்டி வரை சென்று திரும்ப வர வேண்டும்.
பெரும்பாலும் அனைத்து சிறுமிகளும் விளையாடும் மிக பிரபலமான விளையாட்டு இது. ஆனால் தற்போதைய சூழலில் குழந்தைகளை வெளியில் விளையாட அனுப்புவதே ஆபத்தாக அமைகிறது.
கண்ணாமூச்சி
இந்த ஒரு விளையாட்டு தான் தற்பொழுதும் சில குழந்தைகள் இன்றைய காலத்திலும் விளையாடும் விளையாட்டாகும். ஒருவர் கண்ணை மூடிக்கொள்ள மற்ற குழந்தைகள் வீட்டிற்குள் ஒளிந்துக்கொள்ள வேண்டும். பின்னரே கண்ணை மூடியவர் ஒளிந்திருப்பவரை கண்டுபிடிப்பது தான் விளையாட்டாகும்.
இது ஒரு முதன்மையான விளையாட்டாகும் இந்தியர்கள் மட்டுமின்றி சர்வதேச அளவில் குழந்தைகள் விளையாடும் ஓர் விளையாட்டு.
இங்கு நாம் பட்டியல் இட்டது ஒரு சில விளையாட்டுகள் தான் காலத்தால் மறைந்த பச்சைக் குதிரை, புளியங் கொட்டை, கள்ளன் போலீஸ், குலைகுலையா முந்திரிக்காய் போன்ற பல விளையாட்டுகள் உள்ளது. ஆனால் தற்பொழுதும் தேசிய அளவிலும், சில கிராமங்களில் விளையாடப்படும் கபடி, கோ கோ, உரியடி போன்ற விளையாட்டுகள் அழியாமல் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
நாமும் நம் வருங்கால சந்ததியனருக்கு நம் பாரம்பரிய விளையாட்டுகளை சொல்லிக் கொடுத்து அழியாமல் பார்த்துக்கொள்வோம். விளையாடி அனுபவிக்கும் சுவாரசியம் புத்தகத்தில் படித்து, ஸ்மார்ட் போனில் தெரிந்துக்கொள்ளுவதில் நிச்சயம் கிடைக்காது.