ரூ.10,000 கோடி சொத்தில் செல்லநாய் மற்றும் சமையல்காரருக்கு பங்கு: ரத்தன் டாடா காட்டிய மனிதநேயம்!
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா தனது வளர்ப்பு நாய், சமையல்காரர் மற்றும் உதவியாளருக்கும் கோடிக்கணக்கில் சொத்துக்களை உயிலாக எழுதி இருப்பது தெரிய வந்துள்ளது.
வாழும் போது மட்டுமல்ல.. வாழ்ந்து மறைந்த பிறகும் தங்களது நல்ல செயல்களால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்கள் பலர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான், சமீபத்தில் மறைந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா.
இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர்களில் ஒருவர் என்ற பெருமையெல்லாம் தனக்குத் தேவையேயில்லை என, தனது சொத்து முழுவதையும் வாழும் போதே, நல்ல செயல்களுக்காகவும், சேவைக்காகவும் செலவு செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்தான், இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான தொழிலதிபரான ரத்தன் டாடா.
தொலைநோக்குப் பார்வையுடன் வாழும்போதே மற்றவர்களுக்காகச் சிந்தித்த அவர், தனது மறைவுக்குப் பின்னர் தன்னை நம்பி இருந்தவர்களின் நிலையைப் பற்றி சிந்திக்காமல் இருந்திருப்பாரா? அதனால்தான், தனது செல்ல நாய் முதற்கொண்டு, தன் வீட்டில் வேலை பார்த்தவர்கள் வரை அனைவருக்கும் தனது சொத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை உயிலாக எழுதி வைத்து, மக்களை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்.
10,000 கோடி ரூபாய் சொத்து யாருக்கு?
பிரபல தொழிலதிபரும், டாடா அறக்கட்டளைகளின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா இம்மாதம் (அக்டோபர்) 9ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரின் மறைவுக்கு பிறகு அவர் வகித்து வந்த டாடா அறக்கட்டளைகளின் தலைமை பதவிக்கு அவரது சகோதரர் நோயல் டாடா நியமிக்கப்பட்டார்.
கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்து விட்டதால், ரத்தன் டாடாவின் 10,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், அவரது மறைவுக்குப் பிறகு யாருக்கு சென்றடையும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது அந்தக் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் விதமாக, அவரது உயில் குறித்த சில விபரங்கள் வெளியாகியுள்ளது.
டாடா எழுதிய உயில்
ரத்தன் டாடா தனது உடல்நலம் மோசமாகி வருவதை முன்கூட்டியே அறிந்த நிலையில், டாடா குழுமத்தில் தன்னுடைய மரணத்திற்குப் பின்பு என்ன நடக்க வேண்டும்..? டாடா குழுமத்தின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும்..? தன்னுடைய சொத்துக்கள் யாருக்கெல்லாம் செல்ல வேண்டும் என்பது வரையில் முன்கூட்டியே திட்டமிட்டு உயில் எழுதி வைத்துள்ளார்.
நிர்வாக பொறுப்புகளைத் தாண்டி தனது தனிப்பட்ட சொத்துக்கள் தன்னுடைய மறைவிற்குப் பின்பு எப்படிக் கையாள வேண்டும் என்பதைத் தெளிவாக உயிலாக எழுதி வைத்துள்ளார் ரத்தன் டாடா.
அதில், மக்கள் பெரிதும் எதிர்பார்த்ததுபோல், அவரது வீடுகள், கார்கள் மற்றும் பங்குகள் ஆகியவை விற்கப்பட்டு, அந்தத் தொகை ரத்தன் டாடா அறக்கட்டளைக்கு (RTEF) மாற்றப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த உயிலில் மக்களை ஆச்சர்யப்படுத்திய விசயம், தனது சொத்தில் தனது நம்பகமான உறவினர்கள், உதவியாளர், சமையல்காரர் மற்றும் செல்ல நாய் எனப் பலரையும் நினைவில் வைத்து, அவர்களுக்கும் ஒரு பகுதியை ரத்தன் டாடா ஒதுக்கி இருப்பதுதான்.
செல்ல நாய்க்கும் ஒரு பங்கு
மற்ற மனிதர்களை நேசித்தது மாதிரியே, நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகள் மீதும் அளவு கடந்த அன்பு வைத்திருந்தார் ரத்தன் டாடா. அதனால்தான் கால்நடைகளுக்கென மிகப்பெரிய மருத்துவமனை கட்டும் அளவிற்கு அவர் திட்டமிட்டார். மற்ற நாய்களுக்காகவே இவ்வளவு சிந்தித்த அவர், தனது செல்லப்பிராணியைக் கைவிட்டு விடுவாரா?
அதனால்தான், தனது செல்ல நாயான டிட்டோவுக்கு அதன் வாழ்நாள் முழுவதும் பராமரிக்கப்படுவதற்கான ஏற்பாடுகளைத் தன் உயிலில் தெளிவாக உறுதி செய்துள்ளார். இது குறித்து வெளியாகியுள்ள தகவல்களின்படி,
தனது மறைவுக்குப் பிறகு, தன்னுடைய நம்பகமான சமையல்காரர் ராஜன் ஷாவுக்கு தனது ஜெர்மன் ஷெப்பர்ட் நாயான டிட்டோ-வை பராமரிக்கும் கடமையை ஒப்படைத்துள்ளார். இதன் மூலம் ராஜன் ஷா, டிட்டோ வளர்ப்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தனது சொத்து மதிப்பில் இருந்து செலவு செய்யப்படும். இதன் மூலம் டிட்டோ-வின் வாழ்நாள் முழுவதுக்குமான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
6 ஆண்டுகால பாசம்
டிட்டோவை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தத்தெடுத்தார் ரத்தன் டாடா. அதற்கு முன்பு அவரிடம் அதே பெயரில் வேறு ஒரு நாய் இருந்தது. அந்த நாய் மறைந்ததையடுத்து, புதிதாக தான் தத்தெடுத்த நாய்க்கும், டிட்டோ என்ற அதே பெயரை சூட்டினார் அவர். தான் வாழும் வரை டிட்டோவை நன்றாக கவனித்துக் கொண்ட அவர், தன் மறைவிற்குப் பிறகும் அந்த நாய் அதே பராமரிப்புடன் வாழ வேண்டும் என தனது உயிலில் அதற்கென ஒரு பகுதியை ஒதுக்கியுள்ளார்.
தங்களது செல்லப்பிராணிகளுக்கு மக்கள் சொத்துக்களை உயில் எழுதி வைக்கும் வழக்கம், வெளிநாடுகளில் சகஜமான ஒன்றுதான். ஆனால் இந்தியாவில் இது அபூர்வம் என்பதால், ரத்தன் டாடாவின் இந்த செயல் அவரது மனிதாபிமானத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.
நீண்டகால சமையல்காரர்
இதேபோல், ரத்தன் டாடாவின் நெருங்கிய உதவியாளராக வலம் வந்தவர் சாந்தனு நாயுடு என்ற இளைஞர். இவருக்கு தனது ரூ. 10,000 கோடி எஸ்டேட்டில் பங்கு கொடுத்துள்ளார் ரத்தன் டாடா. அதாவது, ரத்தன் டாடாவின் `குட்ஃபெல்லோஸில்` தனது பங்குகளை சாந்தனுவுக்கு கொடுத்துள்ளதாகவும், சாந்தனுவின் வெளிநாட்டுக் கல்விச் செலவுகளைத் தள்ளுபடி செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதோடு, சாந்தனுவின் ஸ்டார்ட் ஆப் நிறுவனத்திலும் ரத்தன் டாடா முதலீடு செய்திருக்கிறார்.
தன்னிடம் சுமார் 30 ஆண்டுகளாக பணியாற்றி வரும், தனது பணியாளரான பட்லர் சுப்பையா மற்றும் கடைசி வரை தனக்கு சமையல்காரராக இருந்த ராஜன் ஷாவுக்கும் தனது உயிலில் சில ஏற்பாடுகளை செய்துள்ளார் ரத்தன் டாடா. சுப்பையாவிற்கும், ரத்தன் டாடாவிற்கும் இடையே 30 ஆண்டு பந்தம் இருந்தது. ரத்தன் டாடா வெளிநாடுகளுக்கு சென்றால் சுப்பையாவிற்கு உடைகள் வாங்கி வந்து கொடுப்பது வழக்கம்.
மேலும், சகோதரர் ஜிம்மி டாடா, ஒன்றுவிட்ட சகோதரிகள் ஷிரீன் மற்றும் டீன்னா ஜெஜீபோய் ஆகியோருக்கும் குறிப்பிட்ட சொத்துகளைக் கொடுத்துள்ளார் ரத்தன் டாடா.
ரூ. 10,000 கோடி சொத்து
ரத்தன் டாடாவின் சொத்து மதிப்பு ரூ.10,000 கோடிக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது. அவரது சொத்துக்களில் மும்பை அலிபாக்-ல் 2,000 சதுர அடி பரப்பளவு கொண்ட கடற்கரை பங்களா, மும்பையின் ஜூஹு தாரா சாலையில் 2 மாடி வீடு, ரூ.350 கோடியைத் மதிப்பிலான வைப்புத்தொகை மற்றும் 165 பில்லியன் டாலர் மதிப்புள்ள டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸில் 0.83% பங்கு போன்றவையும் அடங்கும்.
ரத்தன் டாடா மிகப்பெரிய கார் பிரியர் என்பதால், அவரிடம் சுமார் 30 விலையுயர்ந்த கார்கள் உள்ளன. இந்தக் கார்களை டாடா குழுமம் தனது புனே அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்துவார்கள் அல்லது அவற்றையும் ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை ரத்தன் டாடா அறக்கட்டளைக்கு மாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உயர்நீதிமன்ற விசாரணை
ரத்தன் டாடாவின் உயிலின் படி, அவரது விருப்பத்தினை நிறைவேற்றுபவர்களாக அவருடைய வழக்கறிஞர் தாரிஸ் கம்பதா, நீண்ட கால நண்பரான மெஹ்லி மிஸ்ட்ரி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த இரண்டு பேருடன் ரத்தன் டாடாவின் சகோதரிகளான ஷிரீன் மற்றும் டீன்னா ஜெஜீபாய் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ரத்தன் டாடா மறைந்து விட்டதால், அவரது இந்த உயில் உடனடியாக செயல்படுத்தப்படாது என்றும் மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டே இறுதி செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது
.
நோயல் டாடா
100 பில்லியனுக்கும் அதிகமான சொத்து மதிப்புள்ள டாடா குழுமத்திற்கு தலைமை தாங்கிய போதிலும், ரத்தன் டாடா குழும நிறுவனங்களில் குறைந்த அளவு தனிப்பட்ட பங்கு வைத்திருப்பதால் பணக்காரர் பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ரத்தன் டாடாவின் மறைவால், டாடா குழுமத்தின் தலைமைப் பதவி அவரது சகோதரர் நோயல் டாடாவுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. டாடா டிரஸ்ட்-ன் தலைவராகவும் நோயல் டாடாவே பதவி வகித்து வருகிறார்.