ChatGPT-4o பின்புலத்தில் ஓர் இந்தியர் - ‘ஓபன் ஏஐ’ கொண்டாடும் பிரபுல்லா யார்?
மனித - கணினி தொடர்புகளில் மிகப் பெரிய படியாக கருதப்படும் ChatGPT-4o உருவாக்கத்தின் பின்னணியில் உள்ள இந்தியரின் பங்களிப்பு ஏஐ துறையில் மகத்தானது.
ஓபன் ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மன் இந்தியா வந்திருந்தபோது, “இந்திய நிறுவனங்களால் சாட்ஜிபிடி போன்ற ஏஐ சேவைகளை உருவாக்க முடியாது” என்று தெரிவித்தார். அதே சாம் ஆல்ட்மன் தான் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ChatGPT-4o-ன் வெற்றிக்கு புனேவைச் சேர்ந்த இந்தியரின் பங்களிப்பை வெகுவாக பாராட்டியுள்ளார். அவர்தான் பிரபுல்லா தரிவால்.
யார் இந்த பிரபுல்லா தரிவால்?
புனேவைச் சேர்ந்த கணினி விஞ்ஞானியான இந்த பிரபுல்லா தரிவால் 2016-ல் ஓபன் ஏஐ-ல் ஆராய்ச்சிப் பயிற்சியாளராக பணியில் சேர்ந்தார். இந்த எட்டு ஆண்டுகளில் ஏஐ மாடல் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றி ஓபன் ஏஐ நிறுவனத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
பிரபுல்லா பங்காற்றிய முக்கிய AI மாடல்கள் சில:
ChatGPT-3: 175 மிஷின் லேர்னிங் பாராமீட்டர்களை அடிப்படையாகக் கொண்ட ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஜென்-ஏஐ சாட்போட் இது. எழுத்துகளுடன் கூடிய மொழி தொடர்பான பணிகளை இது செய்கிறது.
DALL-E 2: இது டெக்ஸ்ட்-டு-இமேஜ் மாடல். பயனர்களுக்கு கஸ்டமைஸ் இமேஜ்களை உருவாக்க இது உருவாகிறது. படத்தின் தரத்தையும் மேம்படுத்துகிறது.
Glow: இதுவும் ஜெனரேட்டிவ் மாடலே. ப்ளோவை அடிப்படையாகக் கொண்ட இந்த ஜெனரேட்டிவ் மாடல் மூலம் உயர்தர தரவுத் தொகுப்புகளை உருவாக்க முடியும்.
Jukebox: நரம்பியல் வலையமைப்பை அடிப்படையாகக் கொண்ட ஏஐ மாடல் இது. இதனை கொண்டு பல்வேறு வகைகளின் இசை மாதிரிகளை உருவாக்க முடியும். 1.2 மில்லியன் பாடல்கள் கொண்ட ஒரு பெரிய தரவு தொகுப்பு இதில் உள்ளது.
இந்த நான்கினை தாண்டி பிரபுல்லா தரிவாலின் குறிப்பிடத்தக்க சாதனை ChatGPT-4o உருவாக்கத்தில் உள்ளது. பிரபுல்லா தலைமையில் உருவாக்கப்பட்ட ஓபன் ஏஐ-ன் புதிய ஜிபிடி மாடலான இது, டெக்ஸ்ட், ஆடியோ, படம் மற்றும் வீடியோ ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு அதே வடிவங்களில் மீண்டும் வெளியீடுகளைக் கொடுக்கக் கூடியது. மனித - கணினி தொடர்புகளில் இது ஒரு மிகப் பெரிய படியாகக் கருதப்படுகிறது.
இப்படி வருங்கால தொழில்நுட்பத்தில் மிகப் பெரிய பங்களிப்பை செய்துள்ள பிரபுல்லாவின் கணிதம் மற்றும் அறிவியல் மீதான ஆர்வம் சிறு வயதிலிருந்தே இருந்துள்ளது. அந்த ஆர்வமே இத்தகைய சாதனைகளுக்கு வழிவகுத்தது.
2009-ல் இந்திய அரசின் தேசிய திறமைக்கான தேடல் திட்டத்தின் ஸ்காலர்ஷிப்பை பெற்ற பிரபுல்லா, சீனாவில் நடந்த சர்வதேச வானியல் ஒலிம்பியாட்டில் தங்கப் பதக்கம் பெற்றவர்.
2012 மற்றும் 2013-ல் நடந்த சர்வதேச கணித ஒலிம்பியாட் மற்றும் சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் ஆகியவற்றில் தங்கப் பதக்கங்களை வென்று தனது திறமைகளை தொடர்ந்து வெளிப்படுத்தினார்.
கல்வியில் பிரபுல்லா வெளிப்படுத்திய ஆர்வம், அவரை புகழ்பெற்ற மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (எம்ஐடி) வரை அழைத்து சென்றது. அங்கு அவர் கணினி அறிவியல் மற்றும் கணிதம் படித்தார்.
பிரஃபுல்லாவின் அர்ப்பணிப்பும் திறமையும் அவரது 5.0/5.0 GPA மதிப்பெண் மூலம் பிரதிபலித்தது. இதுவே AI துறையில் அவரின் எதிர்காலத்துக்கான களத்தை அமைத்தது.
பிரபுல்லா தரிவால் பற்றி சாம் ஆல்ட்மேன் சொல்வது என்ன?
ChatGPT-4o வெளியீடு குறித்த தனது எக்ஸ் பதிவில் பிரபுல்லா தரிவால் கூறியது, “ஓம்னி குழுவிலிருந்து வெளிவந்த முதல் மாடல் இந்த GPT-4o (இதில் உள்ள ஓ என்பது ஓம்னியை குறிக்கிறது). OpenAI-ன் முதல் முழு மல்டி மாடல் இதுவாகும். இந்த வெளியீடு ஒரு பெரிய அளவிலான முயற்சி. இந்த மேஜிக் மாடலை சாத்தியமாக்கியது எனது குழு,” என்று தெரிவித்திருந்தார்.
"அவரின் இந்தப் பதிவுக்கு பதிலளித்த சாம் ஆல்ட்மேன், “பிரபுல்லா தரிவாலின் தொலைநோக்கு பார்வை, திறமை, நம்பிக்கை மற்றும் உறுதிப்பாடு இல்லாமல் GPT-4o உருவாகி இருந்திருக்காது. இது பலரின் பணிகளுடன் கணினிகளை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் ஒரு புரட்சியாக மாறும் என்று நம்புகிறேன்,” என்று பிரபுல்லா தரிவாலை புகழ்ந்திருந்தார்.
தகவல் உறுதுணை: Aasma Khan
Edited by Induja Raghunathan