ஏழ்மையில் இருந்து உயரம் தொட்ட சாதனையாளர்கள்: 2018ன் ஊக்கமிகு கதைகள்!
சாதாரண பின்னணியைக் கொண்டிருக்கும் பலரும் தங்களது கடின உழைப்பால் தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து லட்சியத்தை எட்டியுள்ளனர். இந்த காரணத்தினாலேயே இவர்களது பயணம் நமக்கு உந்துதலளிப்பதாக அமைந்துவிடுகிறது.
நீங்கள் மனம் தளர்ந்துவிடாமல் உயர்ந்த லட்சியங்களை எட்ட உதவும் வகையில் ஊக்கமளிக்கக்கூடிய அத்தகைய ஒன்பது இந்தியர்களின் அற்புதமான பயணத்தை யுவர்ஸ்டோரி இந்த கட்டுரையில் தொகுத்து வழங்குகிறது.
அசோக் காதே
அசோக் காதேயின் அப்பா செருப்பு தைப்பவர். மும்பையின் பரபரப்பான நகரில் உள்ள ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து கடினமாக பணிபுரிந்துள்ளார்.
அசோக் மஹாராஷ்டிராவின் சங்கிலி மாவட்டத்தில் இருக்கும் பெட் என்கிற கிராமத்தில் பிறந்தார். இவரது குடும்பத்தில் ஆறு குழந்தைகள். வறுமையின் காரணமாக பல நாட்கள் பட்டினியுடன் உறங்கியுள்ளார். இவர் சாமர் என்கிற தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். விலங்குகளின் தோலை உரித்தெடுப்பது இவர்களது பாரம்பரிய பணியாகும். உயர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் நிலத்தில் இவரது அம்மா விவசாயக் கூலியாக பணியாற்றினார். சமூகப் புறக்கணிப்பு, வாய்ப்புகள் மறுக்கப்படுதல் என வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் இவரது குடும்பம் பாகுபாட்டினை சந்தித்துள்ளது.
அசோக் அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து கல்லூரிப் படிப்பை மேற்கொண்டார். பின்னர் அரசுக்கு சொந்தமான கப்பல்களை உருவாக்கும் நிறுவனத்தில் பணியாற்றினார்.
கடலை ஒட்டியுள்ள பகுதிகள் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகள், பராமரிப்புப் பணிகள் மற்றும் கட்டுமானப் பணிகள் போன்றவற்றிற்குத் தேவையான திறன் பெற்ற பிறகு DAS Offshore என்கிற நிறுவனத்தைத் துவங்கினார். இந்நிறுவனம் இன்று 4,500 ஊழியர்களை பணியிலமர்த்தியுள்ளது. 500 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டுகிறது.
கல்பேஷ் படேல்
கல்பேஷ் படேல் சூரத்தைச் சேர்ந்தவர். இவர் ஐந்து மாதக் குழந்தையாக இருந்தபோது போலியோ நோய் தாக்கம் ஏற்பட்டது. வைரஸ் உடல் முழுவதும் பரவி நாள்பட்ட காய்ச்சல் இருந்தது. பல மாதங்கள் படுக்கையிலேயே கழித்தார். முழுமையாக குணமடைந்த போது அவர் ஒரு காலை இழந்திருந்தார்.
இத்தகைய சூழலிலும் மனம் தளராத கல்பேஷ், வாழ்க்கையில் ஏதாவது சாதிக்கவேண்டும் என்கிற தீர்மானத்துடன் மீண்டெழுந்தார். குடும்பத்தின் பொருளாதார சூழல் காரணமாக அவரால் பதினோறாம் வகுப்பிற்கு மேல் படிக்கமுடியவில்லை. இருப்பினும் அவர் கற்பதை நிறுத்திக்கொள்ளவில்லை. வைரம் வர்த்தகம் செய்வது அவர்களது குடும்ப வணிகமாக இருந்தது. அவரது அப்பா இந்த வர்த்தகத்தில் சிறியளவில் ஈடுபட்டிருந்தார். கல்பேஷ் அப்பாவிற்கு துணையாக பணியில் உதவி செய்து வணிகத்தின் நுணுக்கங்களைக் கற்றறிந்தார்.
கல்பேஷுக்கு 18 வயதிருக்கையில் அவரது அப்பா உயிரிழந்தார். குடும்பத்திற்கு மூத்தவர் என்பதால் குடும்பப் பொறுப்பு முழுவதையும் அவர் சுமக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. மேற்கொண்டு படிக்கவேண்டும் என்கிற அவரது கனவிற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
கல்பேஷ் அவரது அப்பாவின் வணிகத்திற்கு பொறுப்பேற்றார். சந்தை ஆய்வு மேற்கொண்ட பிறகு வைர வர்த்தகத்தில் ஈடுபட்டார்.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு பெரிய ஆபரண நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வாடிக்கையாளர் தொகுப்பை அதிகரிக்கச் செய்தார். இன்று இவரது நிறுவனம் 10 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டுகிறது. இரண்டு நபர்கள் மட்டுமே கொண்ட குழுவுடன் இதை சாத்தியப்படுத்தியுள்ளார் கமலேஷ்.
சுதீக்ஷா பாத்தி
உத்திரப்பிரதேசத்தின் புலந்தசகர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் சுதீக்ஷா பாத்தி. இவர் நான்காண்டுகள் இளங்கலை படிப்பு மேற்கொள்ள மாசசூசெட்ஸ் பகுதியில் வெல்லெஸ்லியில் அமைந்துள்ள ஒரு தனியார் பிசினஸ் பள்ளியான பாப்சன் கல்லூரிக்குச் செல்ல உள்ளார்.
டீ விற்பனை செய்பவரின் மகளான இவருக்கு அமெரிக்காவில் உள்ள முன்னணி கல்லூரிகளில் ஒன்றில் படிப்பதற்கான முழு உதவித்தொகை கிடைத்துள்ளது. சுதீக்ஷாவின் குடும்பத்திலேயே மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்லும் முதல் நபர் இவர்தான். இவரது வாழ்க்கை எளிதானதாக அமையவில்லை. இவரது அப்பாவிற்குக் கிடைக்கும் மிகக்குறைவான ஊதியத்தைக் கொண்டு இவர்கள் குடும்பத்தை நிர்வகிக்க போராடி வந்தனர். எனினும் மனிதவியல் மாணவியான இவர் கடுமையாக முயற்சியெடுத்து படிப்பில் கவனம் செலுத்தினார். அவரது உழைப்பிற்கு பலன் கிடைத்தது. சிபிஎஸ்ஈ தேர்வில் 98 சதவீத மதிப்பெண் எடுத்தார்.
சுதீக்ஷாவிற்கு முழு உதவித்தொகையாக ஒரு செமஸ்டருக்கு 70,428 டாலர் (சுமார் 4 கோடி ரூபாய்) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாப்சன் கல்லூரியில் நான்காண்டுகள் இளங்கலை படிப்பு மேற்கொள்ள இந்தத் தொகை வழங்கப்படுகிறது.
இந்த பிசினஸ் பள்ளி தொழில்முனைவுக் கல்வியில் கவனம் செலுத்துகிறது. அமெரிக்காவில் மதிப்புமிக்க தொழில்முனைவுக் கல்லூரியாக பட்டியலிடப்பட்டுள்ளது.
பாபு ராவ்
இரானிய தேநீருக்கு பிரபலமான Café Niloufer ஹைதராபாத்தில் இருக்கும் ஒரு பாரம்பரிய கஃபே ஆகும். முன்பு அங்கு சுத்தப்படுத்தும் பணியில் இருந்த பாபு ராவ் 1976-ம் ஆண்டு அதற்கு பொறுப்பேற்றபோது கஃபே பிரபலமாகத் துவங்கியது.
தெலுங்கானாவின் அதிலாபாத் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த பாபு ராவ் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். மஹாராஷ்டிராவில் பள்ளிப்படிப்பை மேற்கொண்ட காலத்தில் அவரது மாமாவின் கடைக்குச் சென்று உதவியுள்ளார். பாபுவின் வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாகவே இருந்துள்ளது. செகந்திராபாத் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடையில் படுத்து உறங்கியுள்ளார். கிடைத்த சிறு பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில் குறைந்தபட்சம் ஒருவேளை உணவாவது கிடைக்கும் என்பதால் கஃபேயில் பணியில் சேர தீர்மானித்தார்.
சுத்தம் செய்யும் பணியில் சேர்ந்த இவர் பின்னர் வெயிட்டர் ஆனார். பிறகு பிஸ்கெட் மற்றும் தேநீர் தயாரிப்பில் ஈடுபடுத்தப்பட்டார். விரைவாக வளர்ச்சியடைந்த இவர் கஃபேவை நடத்த 1978-ம் ஆண்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார்.
ஆரம்பத்தில் பாபு ராவ் லாபத்தை எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை உரிமையாளருக்கு செலுத்தவேண்டியிருந்தது. எனினும் அதிக வருவாய் ஈட்டி 1993-ம் ஆண்டு கஃபேவை வாங்கிக்கொண்டார். அப்போதிருந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார். சுவையான தேநீருக்கு பிரபலமான இந்த கஃபே இன்று மக்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்படுகிறது.
மொஹமத் ஆமீர் அலி
எலக்ட்ரீஷியன் ஒருவரின் மகனான மொஹமத் ஆமீர் அலி, டெல்லி ஜமியா மிலியா இஸ்லாமியா (JMI) கல்வி நிறுவனத்தின் டிப்ளமோ மாணவர். இவருக்கு ஃப்ரிசன் மோட்டார் வெர்க்ஸ் (Frisson Motor Werks) என்கிற அமெரிக்க நிறுவனத்தில் 1,00,000 டாலர் (சுமார் 70 லட்ச ரூபாய்) ஆண்டு வருமானத்துடன் பணி கிடைத்துள்ளது.
இந்நிறுவனம் இவருக்கு வட கரோலியாவின் சார்லட்டில் பேட்டரி மேனேஜ்மெண்ட் சிஸ்டம் பொறியாளராக பணி நியமனம் செய்துள்ளது. ஜேஎம்ஐ கல்லூரி துவங்கப்பட்டதில் இருந்து பொறியியல் படிப்பில் டிப்ளமோ படிக்கும் மாணவருக்குக் கிடைத்த மிகப்பெரிய ஊதியத் தொகை இதுதான் என அந்த கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜேஎம்ஐ பள்ளியில் பொதுத்தேர்வில் சிறப்பான மதிப்பெண் எடுத்தபோதும் மொஹமத்திற்கு பொறியியல் படிப்பிற்கான அனுமதி கிடைக்கவில்லை. பொறியியல் படிப்பை மேற்கொள்வதற்கான முதல் முயற்சி தோல்வியடைந்ததும் 2015-ம் ஆண்டு ஜேஎம்ஐ-யில் மெக்கானிக்கல் பொறியியல் பிரிவில் டிப்ளமோ படிக்கத் தீர்மானித்தார்.
மொஹமத் தோல்வியுற்றபோதும் எலக்ட்ரிக் வாகனங்களில் பணிபுரிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மீதான அவரது ஆர்வம் வழிவகுத்தது. கல்லூரி கண்காட்சி ஒன்றில் தனது ஆராய்ச்சியின் முன்வடிவத்தை மொஹமத் சமர்ப்பித்தார். அவரது திட்டத்தால் ஈர்க்கப்பட்ட பேராசிரியர் வாக்கர் ஆலம் அதை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவேற்றம் செய்தார். அப்போதுதான் சார்லட் பகுதியில் அமைந்துள்ள ஃப்ரிசன் மோட்டார் வெர்க்ஸ் நிறுவனம் கல்லூரி நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டது.
ஷகிலா ஷேக்
ஷகிலா ஷேக் கொல்கத்தாவிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு எளிமையான இல்லத்தில் வசிக்கிறார். இவருக்கு சொந்தமான ஒரு தனியார் ஸ்டூடியோ உள்ளது. கொலாஜ் கலைக்கு உலகம் முழுவதும் பிரபலமான இவர் ஒரு இல்லத்தரசி ஆவார்.
இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகள் முழுவதும் உள்ள பலரது வீடுகளை இவரது கலை அலங்கரித்துள்ளது. காய்கறி விற்பனை செய்பவரின் மகளான ஷகிலா 1990-ம் ஆண்டு தனது முதல் கண்காட்சியை ஏற்பாடு செய்தபோதே 70,000 ரூபாய் ஈட்டினார். இன்று அவரது விற்பனையை பராமரிக்க ஒரு குழு உள்ளது.
இவர் வளரும் பருவத்திலேயே அதிக கஷ்டங்களை அனுபவித்துள்ளார். இவருக்கு ஒரு வயது இருக்கும்போது இவரது அப்பா குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் இவரது அம்மாவான செஹ்ரன் பிபி, மொக்ராகாத் பகுதியில் இருந்து தல்தலா சந்தை வரை தினமும் 40 கிலோமீட்டர் பயணிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. மொக்ராகாத் கிராமத்தில் இருந்து தினமும் பள்ளிக்கு பயணம் செய்வது கடினமாக இருந்ததால் ஷகிலா தனது படிப்பை நிறுத்திக் கொண்டார்.
அவரது பன்னிரண்டு வயதில் அவரைக் காட்டிலும் பதினைந்து வயது மூத்தவரான ஏற்கெனவே திருமணமான அக்பர் ஷேக் என்பவருடன் திருமணம் நடந்தது. பணப் பற்றாக்குறை ஏற்பட்டதால் ஷகிலா பனேசரிடம் உதவி கேட்டார். ஷகிலா தனது கணவருக்கு ஆதரவளிக்க பேப்பர் பேக் செய்யும் பணியில் ஈடுபடுமாறு அவர் பரிந்துரைத்தார்.
இந்தக் கலையால் உந்துதலளிக்கப்பட்ட ஷகிலா காய்கறிகள் மற்றும் பழங்களை சித்தரிக்கும் வகையில் தனது முதல் கொலாஜ் பணியைத் துவங்கினார். இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. 1991-ம் ஆண்டு முதல் முறையாக தனது கொலாஜை கண்காட்சியில் காட்சிப்படுத்தினார்.
ராணி ராம்பல்
2010-ம் ஆண்டு இருந்த ராணி ராம்பல் இந்திய ஹாக்கி அணியில் இணைந்தபோது பதின்ம வயதில் இருந்தார். தற்போது எட்டு ஆண்டுகள் கடந்த நிலையில் லண்டனில் நடக்கவுள்ள உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் 16 ஹாக்கி வீரர்கள் அடங்கிய இந்திய அணிக்கு இவர்தான் கேப்டன்.
23 வயதில் 212 சர்வதேச விளையாட்டுகளில் பங்கேற்று 134 கோல்களை அடித்துள்ளார். வண்டி இழுப்பவரின் மகளான ராணி ராம்பலின் பயணம் நாடு முழுவதும் மில்லியன் கணக்கானோருக்கு உந்துதலளிக்கிறது.
ராணி டெல்லியில் இருந்து சுமார் 120 மைல் தொலைவில் உள்ள ஷாஹாபாத் பகுதியின் சிறு நகரைச் சேர்ந்தவர். பெற்றோர், இரண்டு சகோதரர்கள், சகோதரர்களின் மனைவி, குழந்தைகள் ஆகியோருடன் வசித்து வருகிறார். ராணி ஹாக்கி விளையாடினால் சமூகத்தில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என எண்ணி அவரது பெற்றோர் தயக்கம் காட்டினர். அவர்களை சம்மதிக்க வைக்க ராணிக்கு மூன்றாண்டுகள் ஆனது. ராணியின் பயிற்சியாளரான பால்தேவ் சிங் அவருக்கு பெரிதும் ஆதரவளித்தார். ராணி அடைந்த வெற்றி அவர்களது குடும்பத்திற்கு ஒரு புதிய வீட்டை அவர் பரிசளிக்க உதவியது.
சந்தோஷ் ஷர்மா
சந்தோஷ் ஷர்மா 2007-ம் ஆண்டு ஏர் இந்தியாவில் அதிக சம்பளத்துடன்கூடிய வேலையில் இணைவதற்கு முன்பு பல்வேறு பணிகளைச் செய்துள்ளார். ஏர் இந்தியாவின் கொல்கத்தா கிளையில் உதவி மேலாளராக பணியாற்றினார். பிறகு ஏபிஜே அப்துல் கலாம் அவர்களை சந்திப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
முன்னாள் குடியரசுத் தலைவருடனான அந்த சந்திப்புதான் சந்தோஷின் தொழில்முனைவுப் பயணத்திற்கு வித்திட்டது. வெறும் எட்டு மாடுகளுடன் பால் பண்ணை ஒன்றை துவங்கினார். 2014-ம் ஆண்டு M’ma ஆர்கானிக் பண்ணை துவங்கி குறுகிய காலத்திலேயே அவர் 2 கோடி ரூபாய் வருவாய் ஈட்டினார்.
ஜார்கண்ட் மாநிலத்தின் ஜம்ஷெட்பூர் பகுதியில் அதிக வசதியில்லாத குடும்பத்தில் பிறந்தவர் சந்தோஷ். இந்தச் சூழலே அவர் கடுமையாக உழைத்து வெற்றியடைவேண்டும் என உந்துதலளித்தது. அதே சமயம் சமூக நலனில் பங்கேற்கவும் விரும்பினார். ஆகையால் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காக படிக்கத் துவங்கினார். இறுதியாக அவர் தேர்வுகளுக்கு படிப்பதை நிறுத்திவிட்டு பன்னாட்டு நிறுவனங்களில் பணியைத் தொடர்ந்தார்.
அர்ஜுன் சோலான்கி
அர்ஜுன் சோலான்கியின் அப்பா இறந்தபோது அர்ஜுனின் வயது 14. இரண்டு மகன்களை வளர்ப்பதற்கு அவரது அம்மாவின் வருமானம் போதுமானதாக இல்லை. எனவே அவரது அம்மாவைப் போலவே அவர்களும் பணிபுரிய தங்களது பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டனர். மூன்று வேளை சாப்பிட உணவு கிடைப்பதை உறுதி செய்வதைத் தாண்டி மூவரும் எந்தவித ஆடம்பரம் குறித்தும் கற்பனை செய்துகூட பார்த்ததில்லை. ஆனால் ஐசிஐசிஐ வழங்கிய திறன் பயிற்சி வகுப்பு குறித்து இளைய மகனான அர்ஜுன் கேள்விப்பட்டதும் அவர்களது நிலைமை முற்றிலுமாக மாறியது.
இரண்டு மாதம் முழுவதும் அர்ஜுனின் தரப்பிலிருந்து ஈட்டப்படும் வருமானம் இன்றி குடும்பத்தை நடத்துவது கடினம் என்றபோதும் அவர்கள் ஆதரவளித்து அர்ஜுன் அந்த வகுப்பிற்குச் செல்ல ஊக்குவித்தனர். அர்ஜுன் தொடர்ந்து வகுப்பிற்கு வருவாரா என்று ஆரம்பத்தில் அவரது பயிற்சியாளர் சந்தேகித்தார். ஆனால் அர்ஜுன் வெற்றிகரமாக வகுப்பை நிறைவு செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அத்துடன் விரைவிலேயே அவரது பணியிலும் மென்மேலும் சிறப்பிக்கத் துவங்கினார்.
அர்ஜுன் சோலான்கி தற்போது பல லட்ச ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களை ஏற்று செயல்படுத்துகிறார். தனது குடும்பத்தை பராமரிப்பதுடன் தன்னிடம் உள்ள பணத்தைக் கொண்டு அவரது கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்களுக்கும் உதவி வருகிறார்.
கட்டுரை : சோஷியல் ஸ்டோரி குழு | தமிழில் : ஸ்ரீவித்யா