பாரம்பரிய அரிசிகள் பற்றிய கணவரின் தேடலை அவரின் மறைவுக்குப் பின் தொடர்ந்த ‘மண்வாசனை’ மேனகா!
100-க்கும் அதிகமான பாரம்பரிய அரிசி வகைகளை விற்பனை செய்யும் 'மண்வாசனை' என்ற இயற்கை விளைபொருள் அங்காடியை ஆரம்பித்து, தற்போது அதனை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் மேனகா.
“வாழ்க்கையில் என்னமாதிரியான சோதனைகள் வந்தாலும், அங்கேயே தேங்கிவிடக் கூடாது. அதனைத் தாண்டி அடுத்தகட்டத்திற்கு செல்வதற்கு தயாராக இருக்க வேண்டும். கடவுள் நமக்கென்று நிச்சயம் ஒரு திட்டம் வைத்திருப்பார் என்பதை நம்ப வேண்டும். யோசித்து நிதானமாகச் செயல்பட்டால் நிச்சயம் வெற்றியை வசப்படுத்தலாம்,”
என வார்த்தைக்கு வார்த்தை நம்பிக்கையைத் தோய்த்துப் பேசுகிறார் பாரம்பரிய அரிசி வகைகளால் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து விற்பனை செய்துவரும் ‘மண்வாசனை’ மேனகா.
முன்பு இந்தியாவில் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகள் இருந்துள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரகங்கள் புழக்கத்தில் இருந்துள்ளது. ஆனால், காலப்போக்கில் இந்த எண்ணிக்கை குறைந்து அதிர்ச்சியளிக்கும் அளவில் உள்ளது.
இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதோடு, பாரம்பரிய அரிசி வகைகளில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து வெற்றிகரமாக விற்பனையும் செய்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த மேனகா. இவரிடம் சுமார் 100-க்கும் அதிகமான அரிசி வகைகள் உள்ளன. இவற்றை பாரம்பரிய உணவுத் திருவிழா போன்றவற்றின் மூலம் மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அதோடு, இரண்டு வருடத்திற்கு முன், 'மண்வாசனை' என்ற இயற்கை விளைபொருள் அங்காடியை ஆரம்பித்து, தற்போது அதனை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் மேனகா.
மேனகாவின் இந்த வெற்றிக்குப் பின்னால் இருப்பவர் அவரது கணவர் திலகராஜன். அவரின் பாரம்பரிய அரிசி வகைகள் குறித்த தேடலைத் தொடர்ந்து தான், மேனகாவிற்கும் அதில் ஆர்வம் வந்துள்ளது.
“மென்பொருள் பொறியாளராக இருந்த என் கணவர் எங்கள் முதல் பையன் பிறந்தபோது, அவனுக்கு ஆரோக்கியமான உணவு தர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த ஆராய்ச்சியைத் தொடங்கினார். நெல் திருவிழா ஒன்றில் பங்கேற்றபோது இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது முதல் அவருக்கும் இயற்கை வேளாண்மை மீது ஆர்வம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தனது வேலையை ராஜினாமா செய்த அவர், பாரம்பரிய அரிசிகளைத் தேடி ஊர் ஊராகச் சுற்றத் தொடங்கினார்,” என இந்தத் தேடலுக்கான ஆரம்பப்புள்ளி குறித்து கூறுகிறார் மேனகா.
பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடி தமிழகத்தில் உள்ள ஊர்கள் மட்டுமின்றி, ஒடிசா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களுக்கும் திலகராஜன் பயணித்துள்ளார். அங்குள்ள விவசாயிகளைச் சந்தித்த அவர் பாரம்பரிய நெல் ரகங்களைச் சந்தைப்படுத்த விவசாயிகளை ஊக்குவித்துள்ளார்.
பின்னர் சென்னையில் சிறிய அளவில் பாரம்பரிய அரிசிகளை விற்கும் கடையையும் அவர் ஆரம்பித்துள்ளார். ஆரம்பத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் மேனகா. எம்பிஏ பட்டதாரியான திலகராஜன் கை நிறைய சம்பளம் தந்த ஐடி வேலையை விட்டுவிட்டு பாரம்பரிய அரிசி வகைகளைத் தேடி அலைந்ததை அவரால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
திலகராஜன் அரிசி வகைகளைத் தேடி ஊர் ஊராகச் சுற்ற, மேனகாவின் சம்பளத்தில் மட்டுமே குடும்பம் நடந்துள்ளது. இருதரப்பு குடும்பங்களையும் எதிர்த்துக் காதல் திருமணம் செய்து கொண்டதால், பொருளாதார பிரச்சினை வந்தால் யாரிடமும் உதவி கேட்க முடியாது என்பதே அவரின் பெரும் கவலையாக இருந்துள்ளது.
“ஆரம்பத்தில் வேலையை ராஜினாமா செய்து விட்டு, பாரம்பரிய அரிசி வகைகளைத் தேடிய திலக்கின் பயணம் எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ஆனால், ஒவ்வொரு அரிசி வகையாகக் கொண்டு வந்து, அதை சமைத்துத் தரும்படி அவர் கூறுவார். வேறு வழியில்லாமல் நானும் அவற்றைச் சாப்பிடத் தொடங்கினேன். ஆனால், ஆச்சர்யமாக என்னுடைய தைராய்டு பிரச்சினை இந்த பாரம்பரிய அரிசிகளைச் சாப்பிட்டபோது மருந்து மாத்திரை இல்லாமல் தானாக குணமானது. அதன்பின்னர் தான் எனக்கும் பாரம்பரிய அரிசிகள் மீது நம்பிக்கை வந்தது,” என்கிறார் மேனகா.
வெள்ளையாக பட்டை தீட்டப்பட்ட இன்று நாம் சாப்பிடும் அரிசிகளில் சத்துகள் இல்லை எனும் மேனகா, பாரம்பரிய அரிசிகளில் வைட்டமின் சத்துக்கள் கொட்டிக் கிடப்பதாகக் கூறுகிறார். ஆரம்பத்தில் டி.நகரில் கடை ஒன்றை ஆரம்பித்து பாரம்பரிய அரிசி விற்பனையை திலகராஜன் தொடங்கியிருக்கிறார். ஆனால், அப்போது இது குறித்த போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லாததால், அதனை வெறும் மூலிகைக்கடை என்றே மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், தனது முயற்சியில் சற்றும் மனம் தளரத திலகராஜன், நெல் ஜெயராமனின் நெல் திருவிழா மூலம் பாரம்பரிய நெல் ரகங்களை வாங்கிச் சேமிக்கத் தொடங்கியுள்ளார். பின் அந்த நெல் வகைகள் எங்கே விளைவிக்கப்படுகிறது என்பதை ஆராய்ந்து, நேரடியாக அவர்களிடமிருந்தே வாங்கி விற்பனை செய்யத் தொடங்கியுள்ளார். அப்போதும் அதற்கு அவ்வளவாக வரவேற்பில்லை. இதனால் மக்களுக்கு நல்ல ஆரோக்கியமான அரிசி வகைகள் சென்றடைய வேண்டும் என விரும்பிய திலகராஜன் - மேனகா தம்பதி அதற்கான வழிகள் குறித்து ஆராயத் தொடங்கினர்.
“சில பாரம்பரிய அரிசி வகைகளை மணிக்கணக்கில் ஊற வைத்தால் மட்டுமே சமைக்க முடியும். இன்றைய இயந்திர உலகில் அதற்கான சாத்தியம் குறைவு. அதோடு அவை குழம்பில் ஒட்டாமல் அரிசி குழையாமல் இருக்கும். இதனால் பலருக்கு சுவை பிடிப்பதில்லை. எனவே, வாடிக்கையாளர்களுக்கு எளிதாக சமைக்கும் வகையில், அதே சமயத்தில் சுவையானதாக பாரம்பரிய அரிசி வகைகளை மாற்றித் தர வேண்டும் என முடிவு செய்தோம்.
“அதனைத் தொடர்ந்து பாரம்பரிய அரிசி வகைகளில் இருந்து மதிப்புக் கூட்டும் பொருட்கள் தயாரிக்க ஆரம்பித்தோம். இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்ததால், எங்கள் வியாபாரமும் சூடு பிடித்தது. மக்களுக்கு நல்ல பொருட்களை விற்பனை செய்கிறோம் என்ற திருப்தியும் கிடைக்கிறது,” என்கிறார் மேனகா.
மேனகா தற்போது பாரம்பரிய அரிசி வகைகள் மற்றும் தானியங்களைப் பயன்படுத்தி கஞ்சி, இட்லி, தோசை, பனியாரம், இடியாப்பம், சத்துமாவு உள்ளிட்ட ரெடி மிக்ஸ் வகைகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இயற்கை அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்படும் இவரது தயாரிப்புகளை மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனராம். இது தவிர மண்வாசனை என்ற பெயரில் தனியாக கடையும் நடத்தி வருகிறார் மேனகா.
பாரம்பரிய உணவு முறைக்கு மீண்டும் மக்கள் மாறினாலே, தடுப்பூசிகள் உள்ளிட்ட மருத்துவச் செலவுகள் குறையும் என்பது மேனகாவின் வாதம். வைத்தியனுக்கு தருவதை, வாணிபனுக்குக் கொடு என்கிறார் அவர்.
காலப்போக்கில் வியாபாரம் அதிகரிக்கவே தனது வேலையையும் ராஜினாமா செய்த மேனகா, கணவருடன் இணைந்து பாரம்பரிய உணவுப் பொருட்களைத் தேடும் முயற்சியில் இறங்கினார். இதற்காக பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்ட அவர், தொழிலை விரிவு படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
இப்படியாக படிப்படியாக முன்னேறி மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த மேனகாவின் வாழ்க்கையில் கடந்தாண்டு மாபெரும் சோகம் நிகழ்ந்தது. ஆம், கடந்தாண்டு ஜூன் மாதம் விபத்து ஒன்றில் எதிர்பாராதவிதமாக திலகராஜன் உயிரிழந்தார். திடீரென வாழ்க்கையே இருண்டு விட்டதைப் போல் உணர்ந்த மேனகா, தன் குழந்தைகளுக்காக மீண்டும் பீனிக்ஸ் பறவையாக மாறினார்.
கணவரின் பல ஆண்டுகால உழைப்பு வீணாகக் கூடாது என்ற கவலை ஒருபுறம், தன் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பொருள் சேர்க்க வேண்டும் என கட்டாயம் ஒருபுறம், முழுவீச்சில் தொழிலில் இறங்கினார் மேனகா.
கணவரின் பிறந்தநாளான நவம்பர் 25-ம் தேதி, அவரின் ஆசைப்படி சென்னையில் பாரம்பரிய உணவுத் திருவிழா ஒன்றை அவர் நடத்தினார். இதில் ஆண், பெண், திருநங்கைகள் என முப்பாலினத்தவர் 100 பேர் சேர்ந்து 100 வகையான பாரம்பரிய அரிசி வகைகளைக் கொண்டு விதவிதமான பொங்கல் சமைத்து சாதனை படைத்தனர். இதற்காக மேனகா 'Assist World Records' எனும் துணை உலகச்சாதனை விருதைப் பெற்றார். அதோடு, திலகராஜனுக்கு கிடைக்கவிருந்த 'நம்மாழ்வார் விருது'-ம் இந்த திருவிழாவில் மேனகாவுக்கு வழங்கப்பட்டது.
“இன்றைய வாழ்க்கைச் சூழலில் நாம் உண்ணும் உணவில் சத்து இருக்கிறதா எனப் பார்ப்பதைவிட அதில் விஷம் இல்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் நாம் இருக்கிறோம். அந்தளவிற்கு பூச்சிக்கொல்லிகளால் மண் பாழ்பட்டு, அதில் விளையும் பயிர்கள் நாசமாகியுள்ளன. பொதுவாக நீரிழிவு பாதிக்கப்பட்டவர்கள் அரிசி உணவை அதிகம் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பது மருத்துவர்களின் அறிவுரை. ஆனால், பாரம்பரிய அரிசிகளை குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை எந்தநோயால் பாதிக்கப்பட்டவர்களும் சாப்பிடலாம். அதில் பின்விளைவுகள் இல்லை,” என்கிறார் மேனகா.
பாரம்பரிய அரிசி வகைகளில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் மட்டுமின்றி, மசாலாப் பொருட்கள், வடகம், பொடி வகைகள் போன்றவற்றையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். சுமார் 52 வேல்யூ ஆடட் பொருட்களை அவர் தயாரித்து வருகிறார்.
பாரம்பரிய அரிசி வகைகளில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கு. இதைப் பிரபலப்படுத்தினாலே, அடுத்த தலைமுறைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள். தற்போது பாரம்பரிய அரிசியின் விலை சற்று அதிகமாக உள்ளது. குறைந்தபட்சமாக ரூ.90-லிருந்து அதிகபட்சமாக ரூ.300 வரை அரிசி வகைகள் விற்கப்படுகின்றன. மக்கள் அதிகம் வாங்காததே இந்த அதிகவிலைக்குக் காரணம்.
”பல இடங்களில் விவசாயிகள் தங்கள் குடும்பத்திற்கு மட்டுமே சில வகை அரிசி வகைகளைப் பயிரிட்டுக் கொள்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும். மக்கள் அதிகளவில் வாங்கினால் மட்டுமே, இந்த வகை நெல்லை அதிகளவில் விவசாயம் செய்ய முடியும். அப்போது அரிசியின் விலை தானாக குறையும்” என்கிறார் மேனகா.
தமிழக பாரம்பரியப் பொருள்கள் விற்பனையில் பட்டையைக் கிளப்பும் 'Native Things'