சரவணா ஸ்டோர்ஸ் நடைக்கடையின் ரூ.235 கோடி மதிப்பு சொத்து இந்திய வங்கிக்கு மாற்றம்!
முடக்கப்பட்ட சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நகைக்டையின் ரூ.235 கோடி மதிப்பிலான சொத்துகள் இந்தியன் வங்கிக்கு மாற்றப்பட்டுள்ளன, என அமலாக்கத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நகைக்டையின் ரூ.235 கோடி மதிப்பிலான சொத்துகள் இந்தியன் வங்கிக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்தச் சொத்துகள் சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனைச் சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறையால் முடக்கப்பட்ட அசையாச் சொத்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மோசடி புகார்
சென்னை தியாகராய நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகை மாளிகை நிறுவனம் தொடர்பாக, கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம், இந்தியன் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி கே.எல்.குப்தா, சி.பி.சி.ஐ.டி-யில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், ‘சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகை மாளிகை நிறுவனம் கடந்த 2017ம் ஆண்டு இந்தியன் வங்கியில் தவறான நிதிநிலை அடங்கிய ஆவணங்களை தாக்கல் செய்து 2 கட்டங்களாக ரூ.240 கோடி கடன் வாங்கி உள்ளது. சொன்ன காரணங்களுக்காக பயன்படுத்தாமல், இத்தொகையை வேறு காரணங்களுக்காக முறைகேடாக பயன்படுத்தி மோசடி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியன் வங்கிக்கு ரூ.312.13 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது,’ என குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்தப் புகாரை அடுத்து, சரவணா ஸ்டோர்ஸ் பங்குதாரர்களான மறைந்த பல்லக்குத்துரை, பி.சுஜாதா மற்றும் ஒய்.பி.ஷிரவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பெயர் குறிப்பிடப்படாத சில அரசு அதிகாரிகள் மீதும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே, இந்தியன் வங்கியில் பெறப்பட்ட கடன் தொகை, வட்டியுடன் பல மடங்கு உயர்ந்ததால், சென்னை எழும்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இந்தியன் வங்கி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, சென்னை தியாகராய நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகை மாளிகை நிறுவனத்துக்கு சொந்தமான 2 கடைகளில் உள்ள பொருட்களை ஜப்தி செய்து கடைகளுக்கு சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடைகளுக்கு சீல்
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம், சம்பந்தப்பட்ட அந்த இரண்டு கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. மேலும், இந்த பண மோசடி தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தவும் பரிந்துரைக்கப்பட்டது.
இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், மறைந்த பல்லக்குத்துரை, பி.சுஜாதா மற்றும் ஒய்.பி.ஷிரவன் ஆகியோர் மீது அமலாக்கத் துறை கடந்த 2022ம் ஆண்டு மே 26ம் தேதி வழக்கு பதிவு செய்தது. அதன் அடிப்படையில், சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகை மாளிகை நிறுவனத்துக்கு சொந்தமான அசையா சொத்துகள் ரூ.234.75 கோடியை அமலாக்கத் துறை கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி முடக்கி நடவடிக்கை எடுத்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நகைக்டையின் ரூ.235 கோடி மதிப்பிலான சொத்துகள் இந்தியன் வங்கிக்கு மாற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனைச் சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறையால் முடக்கப்பட்ட அசையாச் சொத்துக்கள் இப்போது இந்தியன் வங்கி வசம் வந்துள்ளது.
இதுகுறித்து அமலாக்கத்துறை அதன் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
"சென்னை மண்டல அமலாக்கத்துறை அலுவலகம், M/s சரவணா ஸ்டோர்ஸ் (கோல்ட் பேலஸ்) மற்றும் அதன் பங்குதாரர்கள் சம்பந்தப்பட்ட பணமோசடி வழக்கு தொடர்பாக இந்தியன் வங்கிக்கு 235 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்களை மீட்டெடுப்பதற்கு வெற்றிகரமாக உதவியுள்ளது," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சை
1970-ம் ஆண்டு சாதாரண பாத்திரக் கடையாகத் துவங்கப்பட்டது தான் சரவணா ஸ்டோர்ஸ். வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற இந்த கடை அடுத்தடுத்த ஆண்டுகளில் பல்வேறு கிளைகளுடன் மிகப்பெரிய சாம்ராஜ்யமாக வளர்ந்தது.
சென்னை மற்றும் சுற்றுப்புற மக்கள் வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள், ஆடைகள், ஆபரணங்கள் வாங்குவதற்கு அதிகம் விரும்பும் கடையாக இருந்த இந்தக் கடைகள், ஒரு காலத்தில் சென்னையின் முக்கிய அடையாளமாகவே மாறியது என்றால் அது மிகையில்லை.
தற்போது வாரிசுகள் நிர்வாகத்தில் பல்வேறு கிளைப் பெயர்களுடன் இயங்கி வரும் சரவணா ஸ்டோர்ஸ், கொஞ்சம் கொஞ்சமாக தன் கிளைகளை சென்னைக்கு வெளியே மற்ற மாவட்டங்களிலும் விரிவாக்கத் தொடங்கியுள்ளது. இதன் கிளைகளில் இப்போது 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறார்கள்.
இந்தச் சூழ்நிலையில் கடந்த சில வருடங்களாக வரி ஏய்ப்பு, சொத்து முடக்கம், என பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி, இத்தனை வருடங்கள் சம்பாதித்த அதன் நன்மதிப்பையும் கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடையே இழந்து வருவது குறிப்பிடத்தக்கது.