ரூ.128 கோடிக்கு அடையாறு Fortis Malar மருத்துவமனையை வாங்குகிறது எம்ஜிஎம் ஹெல்த்கேர்!
சென்னை அடையாறு போர்டிஸ் மலர் மருத்துவமனையை எம்ஜிஎம் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் ரூ. 128கோடிக்கு வாங்கியுள்ளது.
எம்ஜிஎம் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் (MGM Healthcare Private limited) ரூ. 128 கோடிக்கு ஃபோர்டிஸ் மலர் (Fortis Malar) மருத்துவமனையை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்திய மருத்துவத்துறையில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் Fortis Healthcare limited-இன் Fortis Malar Hospital சென்னை அடையாறு காந்தி நகரில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த மருத்துவமனையை ஹெல்த்கேர் துறையில் வளர்ந்து வரும் மற்றொரு பிரபல நிறுவனமான எம்ஜிஎம் ஹெல்த்கேர் ரூ.128 கோடியே 25 லட்சத்திற்கு வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
140 படுக்கை வசதிகள் கொண்ட மலர் மருத்துவமனை, அடையாறு பகுதியின் அடையாளமாக இருந்தது. மருத்துவமனை மாற்றம் தொடர்பாக ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“மலர் மருத்துவமனை தொடர்பான வணிக நடவடிக்கைகளை, எம்ஜிஎம் ஹெல்த்கேருக்கு விற்பனை செய்வதற்கான உறுதியான ஒப்பந்தத்தில் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளதாக, ஃபோர்டிஸ் மலர் ஹாஸ்பிடல்ஸ் லிமிடெட் ஒழுங்குமுறை ஆவணத்தில் தெரிவித்துள்ளது.
மருத்துவமனை அமைந்துள்ள நிலம் மற்றும் கட்டிடம் மலர் மருத்துவமனை தொடர்பான OPD மற்றும் ரேடியோ நோயறிதல் வணிகச் செயல்பாடுகள் ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் லிமிடெட்டாலும் மற்றும் அருகிலுள்ள பார்க்கிங் இடம் உட்பட்டவை ஹாஸ்பிட்டலியா ஈஸ்டர்ன் பிரைவேட் லிமிடெட்டாலும் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த இரண்டு நிறுவனங்களும் Fortis healthcare limited கீழ் உள்ளது. இந்த அனைத்து சொத்துகளும் எம்ஜிஎம்க்கு வழங்கப்படுகிறது. ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனைகளில் ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் 62.7 பங்குகளை வைத்திருக்கிறது.
எம்ஜிஎம் ஹேல்த்கேருடனான இந்த பரிவர்த்தனையானது ரொக்க ஒப்பந்தமாக இருக்கும் என்றும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, இரண்டு நிறுவனங்களின் ஒப்புதலோடு ஜனவரி இறுதிக்குள் பரிவர்த்தனை முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"கடந்த சில ஆண்டுகளாக, மலர் மருத்துவமனையில் சில சிக்கல்கள் இருந்து வந்தன, அவற்றில் சிலவற்றிற்கு தீர்வு காணப்பட்டுள்ளன. இருப்பினும், சில தீர்க்க முடியாத பிரச்னைகள் தொடர்ந்து நீடிக்கின்றன, இது நிறுவனத்திற்கு சில சவால்களை ஏற்படுத்துகிறது, இதனால் இந்த மருத்துவமனையை விற்பதன் மூலம் முதலீட்டாளர்கள் சில சங்கடங்களை தவிர்க்க இயலும் என்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.”
சென்னையில் தனது மருத்துவச் சேவையை விரிவாக்கம் செய்யும் நடவடிக்கைகளை எம்ஜிஎம் ஹெல்த்கேர் மேற்கொண்டு வருகிறது. தற்போது 600 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையாக செயல்பட்டு வரும் எம்ஜிஎம், மேலும் 450 படுக்கை வசதிகளை உருவாக்கும் விதத்தில் மருத்துவமனைகளை வாங்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது, அதன் ஒரு பகுதியாகவே அடையாறு மலர் மருத்துவமனையை வாங்குகிறது.
"நிர்வாகத்தினரிடையே நடத்தப்பட்ட பலகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, மலர் மருத்துவமனையை விற்க முன்வந்தோம். அனைத்து பங்குதாரர்களின் வளர்ச்சி மற்றும் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு,” எடுக்கப்பட்டுள்ளதாக ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் லிமிடெட்டின் நிர்வாக இயக்குனரும் முதன்மை செயல் அதிகாரியுமான Dr. அசுடோஸ் ரகுவன்சி தெரிவித்துள்ளார்.
“மலர் மருத்துவமனையுடன் சென்னைக்கு ஆழமான பிணைப்பு உள்ளது. அந்த பிணைப்பை மேலும் பிரகாசிக்கச் செய்யும் விதமாக மலர் மருத்துவமனையில் மேம்பட்ட வசதிகளை ஏற்படுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்களின் நீண்ட கால வளர்ச்சி மற்றும் விரிவாக்க திட்டங்களின் முயற்சியாக பெருவாரியான மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வசதியை ஏற்படுத்தும் விதமாக எம்ஜிஎம் முதலீடுகளை செய்து வருகிறது.
தேசிய அளவிலான விரிவாக்கத்தில் ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையை வாங்குவது ஒரு மிக முக்கியமான முடிவு, ஹெல்த்கேரில் சிறந்த அனைத்து தரப்பினரும் பயனடையும் கட்டணத்தில் நாங்கள் சிறப்பான சிகிச்சையை அளிப்போம்.
“மலர் மருத்துவமனையை வாங்கியதன் மூலம் சென்னையில் எம்ஜிஎம் மருத்துவமனை 800 படுக்கை வசதிகளைக் கொண்ட மருத்துவமனையாக மாறி இருக்கிறது,” என்று எம்ஜிஎம் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குனர் Dr. பிரசாந்த் ராஜகோபாலன் கூறியுள்ளார்.
ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் பற்றிய விவரம்
போர்டிஸ் ஹெல்த்கேர் லிமிடெட் இந்தியா முழுவதும் ஹெல்த்கேர் துறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மருத்துவமனைகள், diagnostic centre, day care வசதி உள்ளிட்டவற்றை ஃபோர்டிஸ் வழங்குகிறது. 4500 படுக்கை வசதிகளைக் கொண்ட 27 ஹெல்த்கேர் மையங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
எம்ஜிஎம் ஹெல்த்கேரின் வளர்ச்சி
மருத்துவத் துறையில் மேம்பட்ட சேவைகளை வழங்கிக் கொண்டிருக்கும் எம்ஜிஎம் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் தென்இந்தியாவில் வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. 600 படுக்கை வசதிகளைக் கொண்ட மருத்துவமனையாக தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் எம்ஜிஎம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மருத்துவக்கல்லூரிகளையும் நடத்திக் கொண்டிருக்கிறது. 10,000 மாணவர்களுடன் 2 மருத்துவக் கல்லூரிகள், 4 துணை சுகாதார மற்றம் நர்சிங் கல்லூரிகள், 6 பள்ளிகள் எம்ஜிஎம் ஆல் நடத்தப்பட்டு வருகிறது.