'ஆட்டிசம் எனது சூப்பர் பவர்' - இந்தியாவின் முதல் ஆட்டிசம் பாதித்த மாடல் பிரணவ் பக்ஷி!
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில தனித்துவமான திறமைகள் இருக்கும். இந்தியாவின் முதல் ஆட்டிசம் பாதித்த மாடலாகி அசத்தி வருகிறார் 24 வயதான பிரணவ் பக்ஷி.
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில தனித்துவமான திறமைகள் இருக்கும். பெயின்டிங், படிப்பு, பாடுதல், ஏன் சிலர் விளையாட்டிலும் சிறந்து விளங்குவர். இருப்பினும், மாடலிங் வழக்கமான பட்டியலில் இல்லாத ஒன்று. இதுவரை இந்தியாவில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் செய்யாத ஒன்றும்கூட. இவ்வெற்றிடத்தை நிரப்பி, இந்தியாவின் முதல் ஆட்டிசம் பாதித்த மாடலாகியுள்ளார் 24 வயதான பிரணவ் பக்ஷி.
இந்தியாவில் ராம்ப் வாக்கில் நடக்கும் முதல் ஆட்டிசத்தால் பாதித்த மாடலான பிரணவ், கூரிய தாடை, மயக்கும் கண்கள், கவரும் முகமைப்பு என மாடலுக்கே உரிய தோற்றத்திலும் கவருகிறார்.
2000ம் ஆண்டு மே மாதம் டில்லியில், பல உடல்நலக் குறைபாடுகளுடன் ஒரு கடினமான பிரசவத்தில் பிறந்தவர் பிரணவ் பக்ஷி. அவருக்கு 2 வயதாக இருந்தபோது, அவரது பேச்சுத்திறன் அதிகரிப்பதற்குப் பதிலாக, பின்வாங்கத் தொடங்கியது.
அத்துடன், எக்கோலாலியா என்று அழைக்கப்படும் ஒரு மருத்துவ நிலையால் பாதிக்கப்பட்டார். இதனால், மற்றவர்கள் சொல்வதை பிரணவ் திரும்பத் திரும்பச் சொல்லத் தொடங்கினார். விரைவில் பிரணவ், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டார் என்று தெரிந்தது. ஆனால் அவரது தாய் அனுபமா பக்ஷி, அவரது கனவுகளை அடைவதற்கு எத்தடையும் இருக்கக்கூடாது என்று முடிவு செய்தார்.
"பிரணவிற்கு ஆட்டிசம் இருப்பது கண்டறியப்பட்டவுடன், ஆட்டிசம் குறித்து நிறைய படித்து தகவல்களை சேகரித்தேன். அவனுக்கு ஆட்டிசத்துடன் தொடர்புடைய பல சவால்கள் இருந்தன. சமூக தொடர்பில் இடையூறு, உணர்வுப்பூர்வமான புரிதல், சுருக்கக் கருத்துக்களைக் கற்றுக்கொள்வது, உணர்வு சார்ந்த சவால்கள், ஹைப்பர் ஆக்டிவ் என பல சவால்கள் இருந்தன," என்றார்.
ஆங்கில இசை மீது பிரணவ்விற்கு ஆழமான காதல் இருந்தது. அவரது விடியற்காலையும், வெள்ளிக்கிழமைகளின் இரவுகளும் இசையுடனே நிறைந்திருக்கும். இசை நிகழ்ச்சிகள் மற்றும் கச்சேரிகளில் கலந்து கொள்வார். திரைப்படம் பார்ப்பதும் அவரது பொழுதுபோக்குகளில் ஒன்று. பயணம் மற்றும் போட்டோகிராபி அவரை ஆசுவாசப்படுத்திக் கொள்ள அவர் தேர்ந்தெடுத்தது.
அதே போல், கோல்ஃப் விளையாட்டை தவறவிடுவதில்லை. சிறு வயதிலே க்ரியேட்டிவ் சைடில் அதிக ஆர்வம் கொண்டிருந்ததால், அவருக்கான தளத்தை கண்டறிய வேண்டும், என்பதில் அவரது பெற்றோர் முனைப்புடன் இருந்தனர்.
"பிரணவ் உயர்நிலைப் படிப்பை முடிக்கும் முன்னரே கிராபிக்ஸ் டிசைனிங் படிப்பில் இரண்டாம் ஆண்டை நிறைவு செய்திருந்தார். படைப்பாற்றல் மிக்க விஷயங்களில் அவனது ஆர்வம் அதிகமாக இருந்ததால், அவனுக்கு 15 வயதாகுவதற்குள் அவனுக்கான தளத்தை கண்டறிந்திட வேண்டும் என்று நினைத்திருந்தோம்," என்றார்.
இதற்கிடையில், பிரணவும், அவரது தாய் அனுபமாவும் ஒருமுறை மும்பையில் நடைபெற்ற ஆட்டிசம் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கான வேள்வி கலை விழாவில் கலந்து கொண்டனர். அங்கு, கிரியேட்டிவ் மூவ்மென்ட் தெரபியின் ஒரு பகுதியாக, அவருக்கு ராம்ப் வாக் அறிமுகப்படுத்தப்பட்டது. அவர் அதை தீவிரமாக எடுத்துக் கொண்டு அசத்தினார்.
ஒரு வேளை அவர் எப்போதும் ஆழமாக விரும்புவது அப்போது தான் முதல் முறையாக அவருக்கு வழங்கப்பட்டிருக்கலாம். ஏனெனில், அதன்பின்னே பிரணவ் மாடலிங்கின்மீது அவருக்கு இருந்த ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.
"ஒருநாள் மாலுக்கு சென்றிருந்தபோது திடீரென விளம்பரப் பலகையை காட்டினான். மாடலிங் செய்ய வேண்டும் என்ற அவனது விருப்பத்தை வெளிப்படுத்தினான். அவனுடைய முடிவை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். பிரணவ் அவனுக்கு ஆட்டிசம் இருப்பதை நன்கு உணர்ந்து அதை எதிர்த்து நாளுக்கு நாள் போராடுகிறான். அவர் ஒரு வலிமையான மனிதர். பிரணவின் விருப்பத்தை நிறைவேற்றுவதன் மூலம் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மற்ற குழந்தைகள் தன்னம்பிக்கையுடன் எதற்கும் போராடும் உத்வேகத்தை பெறுவர் என்று நம்பினோம்," என்றார் அனுபமா.
பிரணவ் மாடலிங்கில் இருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்திய உடன், அனுபமா மகனுக்கான வாய்ப்புகளைத் தேடி அலைத் தொடங்கினார். எவ்வாறு அதை அடையலாம் என்பது குறித்து ஆன்லைனில் விரிவாக ஆராய்ச்சி செய்தார். நாட்டின் முக்கியமான துறைகளில் ஒன்றான மாடலிங்கில், ஆட்டிசத்தால் பாதித்தவர்கள் பங்கேற்றது பற்றி அவர் எந்த முன்னுதாரணத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இறுதியாக, பல்வேறு மாடலிங் ஏஜென்சிகளுக்கு வாய்ப்புக்கோரி மின்னஞ்சல்களை அனுப்பினார். அதில் நிஞ்ஜா மாடல் ஏஜென்சி தவிர எதுவும் சாதகமான பதிலை அளிக்கவில்லை.
"ஒரு மாடலுக்குத் தேவையான தோற்றமும் பண்புகளும் அவரிடம் இருந்தன. அதுவே அவரை ஏஜென்சியில் பதிவு செய்ய போதுமானதாக இருந்தது. உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் இந்தியா பன்முகத்தன்மையை பிரதிநிதித்துவப்படுத்துவது வரலாற்றில் இதுவே முதல் முறை. இந்தியா ஃபேஷனை ஊக்குவிக்கும் என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இது மிகவும் தார்மீக உணர்வு," என்றார் நிஞ்ஜா.
மாடலிங்கில் துறையில் நுழைந்தவுடன், பிரணவ் மிகவும் அர்ப்பணிப்புடன் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு ஃபிட்னஸில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். மிகக் குறுகிய காலத்தில், மாடலிங்கில் மிகவும் திறமையானவராக மாறினார். உலகளாவிய முன்னணி பிராண்டான பெனட்டன் பிராண்டிடம் இருந்தும் அழைப்பு விடுக்கப்பட்டது.
மற்றவர்கள் போல் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களால் வழங்கப்படும் வழிமுறைகளை செயலாக்குவது சவாலானது. ஆயினும், ராம்ப் வாக்கில் நடக்க தீவிரமாக பயிற்சி எடுத்து அவரை முன்னுதாரணமாக்கியுள்ள பிரணவ், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "ஆட்டிசம் எனது சூப்பர் பவர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
"ராம்ப்பில் ஏறி நின்றவுடன் அவனுடைய பாடி லாங்குவேஜ் முற்றிலும் வேறுப்பட்டது. அவனது கனவை அடைய நிறைய உழைத்தான். அவன் தேர்ந்தெடுத்திருப்பது கடினமான ஒன்று. அவன் எப்படியாவது உயிர்பிழைத்து வாழ வேண்டும் என்று தினமும் பிரார்த்தனை செய்துள்ளேன். இன்று அவனது திறமையை கண்டு பெருமை கொள்கிறேன்," என்று ஆனந்த கண்ணீர் வழிய பெருமிதத்துடன் தெரிவித்தார் அனுபமா.
நகைச்சுவையை போராட்டத்தின் கருவியாக்கிய மாற்றுத்திறனாளி ஸ்டாண்ட்-அப் காமெடியன் ஸ்வேதா!