‘கேரளாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர்’ - யார் இந்த பத்மா லட்சுமி?
கேரள மாநிலத்தின் முதல் திருநங்கை வழக்கறிஞர் என்ற வரலாற்றை படைத்துள்ளார், 27 வயதான பத்மா லட்சுமி... இயற்பியல் பட்டதாரியான இவர் வழக்கறிஞராக வரலாற்று சாதனை படைக்க தூண்டியது எது? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்...
கேரள மாநிலத்தின் முதல் திருநங்கை வழக்கறிஞர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார், 27 வயதான பத்மா லட்சுமி...
இயற்பியல் பட்டதாரியான இவர் வழக்கறிஞராக வரலாற்று சாதனை படைக்க தூண்டியது எது? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்...
திருநங்கைகள் என்றாலே பொது இடங்களில் கைத்தட்டி பிச்சையெடுப்பவர்களாகவும், பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களாகவும் பார்க்கப்படுகிறார்கள். அந்த கண்ணோட்டத்தை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் திருநங்கைகள் பலரும், கல்வி முதல் கலைத்துறை வரை கடுமையாக முயன்று முன்னேறி வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது கேரள மாநிலத்தின் முதல் திருநங்கை வழக்கறிஞராக வந்துள்ள பத்மா லட்சுமி ஒட்டுமொத்த திருநங்கை சமூகத்திற்கும் முன்னூதாரணமாக மாறியுள்ளார்.
பத்மா லட்சுமிக்கு சோசியல் மீடியாக்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர். குறிப்பாக கேரள மாநிலத்தின் தொழில்துறை அமைச்சரான ராஜீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,
“வாழ்க்கையின் அனைத்து தடைகளையும் தாண்டி கேரளாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக பதிவு செய்த பத்மா லட்சுமிக்கு வாழ்த்துக்கள். முதல்வராவதே வரலாற்றில் எப்போதும் கடினமான சாதனை. தடைகள் தவிர்க்க முடியாதவை. இதையெல்லாம் முறியடித்து சட்ட வரலாற்றில் பத்மா லட்சுமி தனது பெயரை எழுதி வைத்துள்ளார்,” என பதிவிட்டுள்ளார்.
ஆதரவான பெற்றோர்:
பத்மா லட்சுமி இயற்பியல் பட்டதாரி. இயற்பியல் பட்டம் பெற்ற பிறகு, எர்ணாகுளம் அரசு சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி.யில் படிக்கச் சேர்ந்தார். சட்டக்கல்லூரி மாணவியாக படிப்பை முடித்த பத்மா லட்சுமி, தற்போது வழக்கறிஞராக மாறியுள்ளார். இதற்கு முழுக்க முழுக்க பத்மா லட்சுமியின் பெற்றோரே காரணமாக இருந்துள்ளனர்.
பெற்றோர் மற்றும் குடும்பத்தினரால் கைவிடப்படுவது திருநங்கைகளுக்கு தெரிந்த விஷயமே. ஆனால், லக்ஷ்மியின் கதை வேறு மாதிரியானது.
"நான் மிகவும் கூச்சசுபாவம் கொண்ட குழந்தையாக இருந்தேன். யாராவது என்னிடம் ஏதாவது கேள்வி கேட்டால் ஆம், இல்லை என பதிலளித்துவிட்டு ஓடிவிடுவேன். இதனால் என் வீட்டில் ஒரு ஆண் குழந்தை இருப்பதே பெரும்பாலானோருக்கு தெரியாது.”
பத்மா லட்சுமி தன்னை பெண்ணாக உணர ஆரம்பித்த போது அவருடைய குடும்பத்தினர் அவரை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆணான இவருக்கு பத்மா லட்சுமி என்ற பெயரையே அவரது தந்தை தான் சூட்டியுள்ளார். ஆணில் இருந்து பெண்ணாக மாற அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தது முதல் வழக்கறிஞர் படிப்பு வரை பத்மாவின் அனைத்து முயற்சிகளுக்கும் அவரது பெற்றோர் உறுதுணையாக இருந்துள்ளனர்.
இயற்பியல் பட்டதாரி:
ஆண் குழந்தையாக இருந்த போது அனைத்து திருநங்கைகளைப் போலவே பத்மா லட்சுமியும் பெண்மையை உணர்ந்துள்ளார். தனது சகோதரிகளின் உடையை அணிவது, மேக்கப் போட்டுக்கொள்வது ஆகியவற்றை செய்துள்ளார். ஆனால் அப்போது அவருக்கு திருநங்கை என்ற வார்த்தைக்கு கூட அர்த்தம் தெரியாது என்கிறார்.
லட்சுமி 10ம் வகுப்பு படிக்கும் போது இணைய வசதி வந்துள்ளது. அப்போது தனது உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து இணையத்தில் தேடியுள்ளார். அப்போது தான் திருநங்கை என்ற வார்த்தைக்கான அர்த்தமே அவருக்குத் தெரிந்துள்ளது. அதன் பின்னர், தான் 11ம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவை தேர்வு செய்துள்ளார். இது தன்னைப் பற்றியும், தனது உடலையும் புரிந்து கொள்ள உதவும் என நினைத்தார்.
மேலும், கடினமான பாடப்பிரிவை தேர்வு செய்தால் மாணவர்கள் தன்னை கவனிக்க மாட்டார்கள் என்பதால் கல்லூரியில் இயற்பியல் பட்டப்படிப்பை தேர்வு செய்தார்.
ஆனால், உண்மையில் அப்படியில்லை பத்மா லட்சுமி கல்லூரிப் பருவம் முழுவதும், அவதூறான கருத்துக்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. எனவே, சமுதாயத்தில் தனித்து நிற்கும் மரியாதையான வேலையில் அமர வேண்டும் என முடிவெடுத்தார்.
வழக்கறிஞர் ஆக முடிவு:
சமூகத்தில் திருநங்கைகளின் குரல் கேட்கப்படாத ஒன்றாகவே உள்ளதாக உணர்ந்தார். எனவே ஒடுக்கப்படும் மக்களின் குரலாக வாதாட வழக்கறிஞராக முடிவெடுத்தார். எர்ணாகுளம் அரசு சட்டக் கல்லூரியில் பிஏபிஎல் படிப்பில் சேர்ந்தார். திருநங்கையாக கல்லூரியில் காலடி எடுத்து வைத்த பத்மா லட்சுமிக்கு அவரது பேராசிரியை டாக்டர் மாரியம்மா அளித்த ஊக்கம் படிப்பை முடிக்க உறுதுணையாக அமைந்துள்ளது.
“சட்டக் கல்லூரியில் எனது ஒரே தோழி பேராசிரியை மாரியம்மா மட்டுமே. நான் அவர்களுடன் பேசும்போதெல்லாம், நான் பாதுகாப்பாக உணர்ந்தேன். எனது பேராசிரியை மட்டுமே எனக்கு பாதுகாப்பு அரணாக இருந்தார்.”
மாரியம்மாவின் கணவரும், உச்ச நீதிமன்ற நீதிபதியுமான அனில் குமார் தான் பத்மா லட்சுமிக்கு ஆவணங்களில் பாலினம் உள்ளிட்ட விவரங்களை மாற்ற உதவியுள்ளார்.
சுமார் 1500 மாணவர்களில் வழக்கறிஞராக அங்கீகாரம் பெற்றுள்ள பத்மா லட்சுமி இன்று திருநங்கைகளின் தனி அடையாளமாக உயர்ந்து நிற்கிறார்.
தமிழ்நாட்டில் முதன் முறை - தூத்துக்குடி கிராம உதவியாளர் பணியில் சேர்ந்த திருநங்கை!