நியூஸ் பேப்பர் போட்டுக் கொண்டிருந்த பாலமுருகன் இன்று ஐஎஃப்எஸ் அதிகாரி ஆன கதை!
கூரை வீடு, சம்பாதிக்க பேப்பர் போடும் வேலை என்று வளர்ந்த பாலமுருகன், கடும் முயற்சியால் ஐஎஃப்எஸ் ஆனது எப்படி?
சென்னையில் கீழ்கட்டளையை பூர்விமாகக் கொண்டவர் பாலமுருகன். தனது கடின உழைப்புக்குப் பிறகு தனது லட்சியமான ஐ.எஃப்எஸ் அதிகாரியாக இன்று வளர்ந்து நிற்கிறார்.
சிறுவயதில் அவருடைய அப்பா, தன்னுடயை மனைவி மற்றும் 7 குழந்தைகளை தன்னந்தனியாக விட்டுச் சென்றுவிட்டார். குடும்பமே நிற்கதியாகிவிட்டது. அப்போது பால முருகன் பல்வேறு சிரமங்களையும், கஷ்டங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சிறுவயதில் வீடு வீடாகச்சென்று நியூஸ்பேப்பர் விநியோகம் செய்திருக்கிறார் பாலமுருகன்.
அன்று அவர் போட்ட விதைதான், இன்று அவர் ராஜஸ்தானில் துங்கர்பூர் வனப் பிரிவில் திறமையாக ஒரு அதிகாரியாக பரிணமிக்க உதவியுள்ளது.
தனது கணவர் விட்டுச்சென்ற பிறகு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வாழ்க்கை இருட்டாகிவிட, தன்னிடமிருந்த நகைகளை விற்றார் பாலமுருகனின் தாயார். அதன்மூலம் சென்னையில் புறநகர் பகுதியில் 4,800 சதுர அடியில் இடம் வாங்கினார். பாலமுருகன், தனது ஐந்து சகோதரிகள் மற்றும் இரண்டு சகோதரர்களுடன், இரண்டு அறைகளைக் கொண்ட ஒரு சிறிய கூரை வீட்டில் வசித்தார்.
அவருடைய தாய் 10ம் வகுப்பு வரை படித்தவர். இருந்தபோதிலும், தன் குழந்தைகள் நிறையபடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
என் அம்மா எப்போதும், ‘நான் கல்வியறிவு இல்லாததால் என் வாழ்க்கையை பாழாக்கிவிட்டேன். நீங்கள் அனைவரும் உங்கள் காலில் நிற்க கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று அடிக்கடி கூறுவார் என்கிறார் பாலமுருகன்.
1997-98 ஆம் ஆண்டில், அவரது தாயார் தனது குழந்தைகளின் படிப்புச்செலவுக்காக 1,200 சதுர அடி நிலத்தை ரூ.1.25 லட்சத்திற்கு விற்றார்.

நீங்கள் வளரும் காலத்தில் என்ன மாதிரியான சவால்களை சந்தித்தீர்கள் என்று பாலமுருகனிடம் கேட்டபோது,
“நான் ஒரு நாள் ஒரு செய்தித்தாள் விற்பனையாளரை அணுகி, தமிழ் செய்தித்தாளைப் படிக்க வேண்டும் என்று கோரினேன். அதற்கு அவர் மாதா மாதம் 90 ரூபாய் செலுத்து வேண்டும் என்றார். நான் பணமில்லை என்றதும், எனக்கு நியூஸ் பேப்பரை விநியோகிக்கும் வேலை கொடுத்து, மாதம் 300 ரூபாய் தருவதாக உறுதியளித்தார்.
பல சமயங்களில் இரவு உணவில்லாமல் தூங்கிய நாட்கள் உண்டு. ஆனால் ஒருபோதும் படிக்காமல் தூங்கச்சென்ற நாட்கள் இருந்ததில்லை, என தன்னுடைய கடந்த கால நாட்களை நினைவுகூர்கிறார் அவர்.
2011ம் ஆண்டு மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியராக பட்டம் பெற்றார் பாலமுருகன். கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக வேலையும் கிடைத்தது.
இருப்பினும், அவர் விரைவில் எம்.என்.சி.யிலிருந்து தனது வேலையை விட்டுவிட்டார்.
“நான் இதைப் பற்றி மோசமாக நினைக்கவில்லை. நான் ஐந்து சகோதரிகள் மற்றும் இரண்டு சகோதரர்களுடன் குடும்பத்தில் ஆறாவதாக பிறந்தவன். எங்கள் குடிகார தந்தை ஒருபோதும் எங்களை கவனித்துக்கொண்டதேயில்லை. என் அம்மாவின் உழைப்பால் தான் நான் இன்று ஒரு நல்ல நிலையில் இருக்கிறேன்.
கடந்த 2013ம் ஆண்டு அரசியல் ரீதியாக பலம் வாய்ந்த நபர் ஒருவர் எங்கள் நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றார். நிலம் ஆக்கிரமிக்கப்பட்டவுடன், எங்கள் வீட்டிற்குள் நுழைய வெறும் பத்து அடி இடம் மட்டுமே எங்களுக்கு இருந்தது. இதற்கு காவல்துறை, எங்களுக்கான நிலத்தை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்ததில்லை.

நான் அலுவலகத்தில் மதிய உணவு இடைவேளையின் போது புகார் அளித்தேன், அதை மறந்துவிட்டேன். சுமார் 45 நாட்களுக்குப் பிறகு, அதிகாரிகள் எங்கள் வீட்டுக்கு வந்து பார்வையிட்டு ஆவணங்களைக் கேட்டனர். மேலும் ஆவணங்களை சரிபார்த்தபின், நிலத்தில் எந்த அத்துமீறலும் நடைபெறாமல் இருக்க போதிய நடவடிக்கைகளை எடுத்தனர்.
இதுதான் நான் சிவில்சர்விஸ் சேர உந்ததுலாக இருந்தது. அதே ஆண்டில், வேலைக்காக ஆஸ்திரேலியா செல்ல எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.
“படிப்பு செலவுக்காகவும், குடும்பத்துக்காகவும் பணத்தை சம்பாதிக்க சிலநாட்கள் ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்தேன். பணம் சேர்ந்ததும் இந்தியாவுக்கு வந்தேன். 3 வருடம் சிவில் சர்வீஸஸ் தேர்வில் வெற்றி பெறமுடியவில்லை. இறுதியாக 2019ல் ஐஎஃப்எஸ் தேர்வில் வெற்றி பெற்றேன்,” என்கிறார் பாலமுருகன்.
தடைகளை தகர்த்து வெற்றியாளராக உருவெடுத்திருக்கிறார் பாலமுருகன்!
தகவல் உதவி - indiatimes