ஐஐடி மெட்ராஸின் புதிய ஆய்வு மையத்தை இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் துவக்கி வைத்தார்!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் வி.நாராயணன், ஐஐடி மெட்ராஸ் புதிய ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் வி.நாராயணன், ஐஐடி மெட்ராஸ் புதிய ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கி வைத்தார்.
‘ஸ்ரீ எஸ்.ராமகிருஷ்ணன் திரவ மற்றும் வெப்ப அறிவியல் ஆராய்ச்சிக்கான உயர் சிறப்பு மையம்’ என்ற இந்த மையம், மேம்பட்ட விண்வெளித் தொழில்நுட்பங்களில் தன்னம்பிக்கையை ஊக்குவிப்பதுடன் உலகளாவிய திறமையையும் ஆராய்ச்சிக்கான நிதியையும் ஈர்க்கும் வகையில் ‘ஆத்மநிர்பர் பாரத்’ முயற்சிகளை ஆதரிக்கும்.
இந்த நிகழ்வின்போது, இஸ்ரோ தலைவர் டாக்டர் வி.நாராயணன் முன்னிலையில் ‘ஆற்காடு ராமச்சந்திரன் கருத்தரங்கு மண்டபத்தை’ ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி திறந்து வைத்தார். உலகப் புகழ்பெற்ற வெப்ப பரிமாற்றப் பேராசிரியரான பேரா. ஆற்காடு ராமச்சந்திரன் (1923-2018), ஐஐடி மெட்ராஸ்-ன் இயக்குநராக 1967 முதல் 1973ம் ஆண்டு வரை பணியாற்றினார். ஐஐடி மெட்ராஸ்-ல் வெப்பப் பரிமாற்றம், வெப்ப ஆய்வகம் ஆகியவற்றை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தவர் அவர்.
வெப்ப பரிமாற்றம், குளிரூட்டும் அமைப்புகள், திரவ இயக்கவியல் ஆராய்ச்சிக்கான தொடர்பு மையமாக இந்த புதிய மையம் செயல்படும். அடுத்த தலைமுறை விண்கலம், செயற்கைக்கோள் தொழில்நுட்பங்களுக்கு இவை மிகவும் அவசியம். விண்வெளிப் பயன்பாடுகளில் சிக்கலான வெப்ப சவால்களை நிவர்த்தி செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள், பொறியாளர்கள் ஐஐடி மெட்ராஸ்-ன் ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள்.
செயற்கைக்கோள்களின் நீண்ட ஆயுள், விண்கலப் பாதுகாப்பு, பயண வெற்றி ஆகியவற்றுக்கு வெப்பக் கட்டுப்பாடு இன்றியமையாதது என்பதால், இந்த முயற்சி இந்தியாவின் விண்வெளித் திட்டத்திற்கு திருப்புமுனையாக இருக்கும்.
இந்த உயர்சிறப்பு மையத்தில் (CoE) மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி, வரவிருக்கும் சந்திரன், செவ்வாய் உள்ளிட்ட நீண்ட விண்வெளிப் பயணங்களை நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், விண்வெளித் தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் இருப்பதை உறுதிசெய்யும்.
இந்த ஆய்வகத்தை இஸ்ரோ தலைவர் டாக்டர் வி.நாராயணன் தொடங்கி வைத்தார். ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, இஸ்ரோவின் டாக்டர் விக்ரம் சாராபாய் பேராசிரியர் டாக்டர் எஸ்.சோமநாத், ஐஐடி மெட்ராஸ் இயந்திரப் பொறியியல் துறையைச் சேர்ந்த மைய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அர்விந்த் பட்டமட்டா, ஐஐடி மெட்ராஸ் இயந்திரப் பொறியியல் துறைத் தலைவரான பேராசிரியர் பி.சந்திரமவுலி, ஐஐடி மெட்ராஸ் இயந்திரப் பொறியியல் துறையின் பயிற்சிக்கான பேராசிரியர் டாக்டர்.பி.வி.வெங்கிடகிருஷ்ணன், ஐஐடி ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
“கிரியோஜினிக் நுட்பம் இந்தியாவுக்கு மறுக்கப்பட்டது. இன்று நாம் மூன்று விதமான இத்தகைய இஞ்சின்களை பெற்றுள்ளோம். இந்த நுட்பம் கொண்ட ஆறு நாடுகளில் ஒன்றாக விளங்குகிறோம். இந்த நுட்பத்தில் மூன்று உலக சாதனைகளை படைத்துள்ளோம். மூன்றாவது முயற்சியில் இதை சாதித்தோம். இதை 28 மாதங்களில் நிறைவேற்றினோம். மற்ற நாடுகளுக்கு 42 மாதங்கள் முதல் 18 ஆண்டுகள் வரை ஆனது. 34 நாட்களில் சோதனை செய்தோம். மற்ற நாடுகளுக்கு 6 மாதங்கள் வரை ஆனது,” என இஸ்ரோ தலைவர் நாராயணன் பேசும் போது கூறினார்.
“விண்வெளி தொடர்பாக நாம் மேலும் மேலும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருப்பதால், வெப்பம் மற்றும் குளிரூட்டும் தேவைகளைக் கையாளக்கூடிய தொழில்நுட்பத் தேவை அதிகரித்து வருகிறது. புதிதாக அமையவுள்ள மையம் இஸ்ரோவுடன் இணைந்து இதற்கான மிகவும் பயனுள்ள தீர்வுகளை ஏற்படுத்தும் என நம்புகிறேன், என கூட்டு முயற்சியை ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி மேலும் கூறும்போது குறிப்பிட்டார்.
Edited by Induja Raghunathan