‘தன் வசனங்களின் மூலம் நம் வாழ்வை தீட்டியவர்’ - குட்பை விசு!
கொரோனா பாதிப்பால் ‘சோசியல் டிஸ்டன்சிங்’னு இன்னைக்கு பேசறோம். ஆனா அன்றே சொன்னார் விசு, ‘கோதாவரி வீட்டுக்கு நடுவுல கோடு கிழி...ன்னு .
இன்னைக்கு இருக்கற சூழல்ல எத பாத்தாலும் கொரானா நியாபகம் தாங்க வருது. ரெண்டு நாளைக்கு முன்னாடி கொரானா பத்தி எழுதுன ஒரு கதைக்கு (நாங்க கட்டுரைய கதைன்னு தான் சொல்லுவோம். கம்பெனி பேரு 'யுவர்ஸ்டோரி’ விசு அவர்களோட பிரபலமான ஒரு வசனத்த தலைப்பா வெக்கலாம்னு பேசினோம்.
ஏன்னா ‘கோதாவரி வீட்டுக்கு நடுவுல கோடு ஒன்னு கிழின்னு...’ அவரு சொல்லறது இந்த சூழலுக்கு அவளோ பொருந்தும். ஆனா பேசி 2 நாள்ல அவரு நம்மள விட்டுட்டு அவுரு குருநாதர் கே பி சார பாக்க கெளம்பிட்டாரு. நீங்க இத படிக்கற நேரத்துல மறுபடியும் அசிஸ்டண்ட்டா சேந்துருப்பாரு.
சரி விஷயத்துக்கு வருவோம். இன்னைக்கும் ஒரு ஹீரோவ புகழ்ந்து பேச அவரு பேசுன பன்ச் வசனம் தான் பயன்படுது. ஆனா ஹீரோவுக்கு இல்ல, படத்துல வர ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் பன்ச் டையலாக் வெச்சவரு மீனாக்ஷி சுந்தரம் ராமசாமி விஸ்வநாதன். நமக்கு சுருக்கமா தெரிஞ்ச பேரு விசு. பேரு மட்டுமில்ல, அவரோட
பன்ச் வசனங்களும் ரத்தினச் சுருக்கங்கள்.
கே பாலச்சந்தர் கிட்ட விசு வேல செஞ்சப்போ ‘தில்லு முல்லு’ படத்துல அவரோட கைவண்ணத்த காட்டி இருப்பாரு. அதுல அவரோட குரலும் நாம கேக்கலாம். கண்டிப்பா கவனிச்சுருப்பீங்க. தேங்காய் ஸ்ரீநிவாசன் நடத்தற இண்டர்வியூல சிகரெட்டு விலை சொல்ற குரல் விசு குரல் தான்.
"இந்த காலத்து இளைஞர்கள், பாவம் எவ்ளவோ கஷ்டத்துக்கு மத்தில படிக்கறாங்க. அவுங்கள சேஃபா, இவளோ தான் கேக்கலாம், இவளோ தான் கேக்கணும், இவளோ கேக்கறது தான் பெட்டர்," படம் - தில்லு முல்லு
இந்த வசனம் ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் அவ்ளோதான். படம் முழுக்க இந்த மாதிரி நெறைய இடத்துல அட அட அடன்னு நம்மள கவனிக்க வெப்பாரு விசு. அப்போ அவருக்கு அந்த படத்துக்கான பாராட்டு கெடச்சுதான்னு தெரியல. ஆனா அவரு இயக்குனர் ஆனதுக்கு அப்பறம் வசனத்துக்காக அவுரு படம் ஓடுச்சுனு சொல்லி கேள்விப்பட்டுருக்கேன்.
இது மட்டும் இல்ல, ஒரு ‘ஸ்கிரிப்ட் டாக்டரா’ (script doctor) விசு பல படங்களுக்கு வேல பாத்துருக்காரு. அவுரு எடுத்த படங்கள்ல அந்த அனுபவம் அதிகமாவே வெளிப்படும். பெரிய திருப்பங்கள் இல்லாம தினமும் நாம சந்திக்கற கதாபாத்திரங்கள் வெச்சு, அவரு கதையை நகத்தர விதம் அன்னைக்கு ஹிட்டு.
எப்போவுமே சுபம்னு போட்டு கதையை முடிச்ச காலத்துல தனிக்குடித்தனம் போன ஹீரோயின் அவுரு பட ஹீரோயின். படம் சம்சாரம் அது மின்சாரம்
பல படங்களுக்கு கதாசிரியரா வேல செஞ்சுட்டு, சில படங்கள்ல நடிச்சுட்டு 1986ல அவுரு எடுத்த படம் ‘சம்சாரம் அது மின்சாரம்’. அதுக்கு அப்பறம் இந்த 3 வார்த்தைல பேர வெக்கறத அவுரு இயக்கற படங்களுக்கு ஒரு பழக்கமாவே வெச்சுருந்தாரு..
ஏழ்மையான ஒரு குடும்பம். ஆனா அந்த குடும்பத்துல வேலைக்கு ஒரு அம்மா இருக்கு. அந்த அம்மா பேசற வசனத்துக்கு இருக்கற பலம், அந்த படத்து ஹீரோயின் பேசற வசனத்துக்குக் கூட இருக்காது. பாத்திரப் படைப்பு அந்த மாதிரி.
"நீ கம்முனா கம்மு, கம்முனாட்டி கோ..." ஆச்சி மனோரமா பேசற இந்த வசனத்த மறக்க முடியுமா? இல்ல அம்மையப்ப முதலியாரா விசு அந்த படத்துல பேசற வசனத்ததான் மறக்க முடியுமா?
அடுத்து ‘பெண்மணி அவள் கண்மணி’ படத்துல அவுரு பேசற இன்னொரு வசனமும் ரொம்ப பிரபலம்.
"அது என்னப்பா அது மருமக ஏத்தற ஸ்டவ் மட்டும் வெடிக்குது, மாமியார் ஏத்தற ஸ்டவ் வெடிக்க மாட்டிங்குது? அது மேனுபேக்சரிங் டிபெக்ட்டா இல்ல மாமியார் டார்ச்சரிங் எபெக்ட்டா? புரியல.. !
1980-1990கள்ல இந்த ஸ்டவ் வெடிச்சு பெண்கள் இறக்கறது அடிக்கடி நிகழ்வா இருந்துச்சு. ஆனா அதையும் கதையில சேத்து சொல்றவிதத்துல விசுவால சொல்ல முடிஞ்சுது.
இது எல்லாத்துக்கும் முன்னாடி ‘மணல் கயிறு’ படத்துல அவரோட கதாபாத்திரம் படம் முழுசும் சொன்னது பொய்னு தெரியும் போது, கிளைமாக்ஸ்ல எல்லாரையும் கிழிச்சு தொங்கவிடுவாரு. அந்த பாத்திரம் பேசற வசனம் அற்புதம். ஒவ்வொருத்தர் கிட்டையும் போயிட்டு வரேன்னு சொல்ற மாதிரியே அவுங்கள வெச்சு செய்வாரு. இந்த காலத்துல அவளோ வசனம் சீரியல்ல கூட பேசறது இல்ல. ஆனாலும் அந்த வசனங்கள் ரசிக்க வெச்சுது.
முக்கியமா ரொம்ப கம்மியான பட்ஜெட்ல எப்படி ஒரு குடும்பப் படம் எடுக்கறதுன்னு அன்னைக்கு பல பேருக்கு முன்னோடியா இருந்தவரு விசு. இப்பிடி விசு இயக்கின படங்கள், அவரு வசனம் எழுதின படங்கள், கதை எழுதின படங்கள்னு ஒரு பெரிய லிஸ்ட்டையே சொல்லலாம்.
வசனங்களுக்காக விசுவ பத்தி இவளோ எழுதிட்டு, அவரு நண்பன பத்தி எழுதலைனா என்னோட கீபோர்டு என்ன மன்னிக்காதுங்க.
"அவுரு என்ன விட வயசுல சின்னவர். ஆனா அவுரு பேனாவுக்கு என்னவிட வயசும் திறமையும் அதிகம். இன்னைக்கு அந்த பேனா உறங்கிட்டு இருக்கு."
இது விசு தன்னோட நண்பர் கிரேஸி மோகன் இறந்ததுக்கு அப்பறம் ஒரு நேர்காணல்ல சொன்னது. இன்னைக்கு விசுவோட பேனாவும் உறக்கத்துக்கு போயிருக்கு.
1975 காலகட்டத்துல நாடகத்துல விசு விஸ்வரூபம் எடுக்கும் போது, அவருக்கு மன உளைச்சல் உண்டாக்கின ஒரு எழுத்தாளர் கிரேசி மோகன். ஏன்னா கிரேஸி எழுதின நாடகத்துக்கு கிடைச்ச பாராட்டு. அதே சமயம் விசு திரை உலகத்துல நுழைய காரணமாவும் அதே கிரேஸி மோகன் தான் இருந்திருக்காரு.
பல படங்கள்ல ரெண்டு பேரும் சேந்து வேலை செஞ்சுருக்காங்க. அருணாச்சலம், சின்ன மாப்பிள்ளை, சிகாமணி ரமாமணி இப்பிடி பல படங்கள் இருக்கு அந்த வரிசைல. மொத்தத்துல போட்டி போட்டுக்கிட்டு வசனமும் கதையும் ரெண்டுபேரும் எழுதி இருக்காங்க.
வெள்ளித்திரை மட்டுமில்ல, 90ஸ் கிட்ஸ் கிட்ட கேட்டா சொல்லுவாங்க, ஞாயிரு வந்தா காலைல விசுவின் அரட்டை அரங்கத்தோட அவுங்க நாள் துவங்கும்.
கல்ஃப் நாடுகள்ல வெள்ளி தான் லீவு. அதனால இந்த நிகழ்ச்சியை பதிவு செஞ்சு வெச்சுட்டு அப்பறம் அத பாப்பாங்க நம்ம தமிழர்கள்னு கேள்விப்பட்டிருக்கேன்.
மொத்தத்துல ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துருக்கு. இன்னொரு நல்ல விஷயம், அவரு படங்கள் எல்லாமே நீங்க முழுசா இண்டர்நெட்ல பாக்கலாம். ரொம்ப மெனக்கெட வேண்டியது இல்ல.
கடைசியா விசு எழுத வசனத்தை இந்த கதைக்கும் கிளைமாக்ஸா வெச்சுருவோம். ‘சோசியல் டிஸ்டன்சிங்’னு இன்னைக்கு பேசறோம். ஆனா சம்சாரம் அது மின்சாரம்ல
"இப்படியே ஒரு அடி விலகி நின்னு, நீ சவுக்கியமா, நான் சவுக்கியம். நீயும் நல்லா இரு, நானும் இருக்கேன்னு..." கொரோனாவை தள்ளி நிக்க வைங்க. முடிஞ்சா உங்கள் படங்கள் லிஸ்ட்ல விசு படங்கள் சேர்த்துக்குங்க.