Gen Z -களுக்கு ‘அலர்ட்’ - சமூக வலைதள அடிக்ஷனை அகற்றுவது எப்படி?
இன்றைய ஜென் Z இளைஞர்களிடம் இருக்கும் சோஷியல் மீடியாவின் தாக்கம் சொல்லி மாளாது. ஆன்லைன் கன்டென்ட்களால் ஈர்க்கப்பட்டு சோஷியல் மீடியாவுக்கு அடிமையாவது மன அழுத்தம் மற்றும் பதற்றம் அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், யூடியூப் போன்ற சமூக ஊடக தளங்களுக்கு நீங்கள் அடியாமையாக இருக்கிறீர்களா? கவலை வேண்டாம்... நீங்கள் தனியாக இல்லை. பெரும்பாலான ‘ஜென் இசட்’ (Gen Z) அல்லது ஜெனரேஷன் இசட் என்கிற இளைய தலைமுறையினர் இதே பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறார்கள்.
ஜென் இசட்: ஒவ்வொரு தலைமுறைகளில் பிறந்தவர்களையும் ஜென் எக்ஸ், மில்லினியல்கள், ஜென் இசட் என பல பிரிவுகளாகப் பிரிக்கலாம். அதாவது, 1965 முதல்1980 வரை பிறந்தவர்கள் ஜென் எக்ஸ் என்றும், 1981 முதல் 1996 வரை பிறந்தவர்கள் மில்லினியல்கள் என்றும் அழைக்கப்படுவார்கள். அதேபோல, 1997 முதல் 2012 வரை பிறந்தவர்கள் ஜென் இசட் என்று அழைக்கப்படுவார்கள். இதில் ஜென் இசட் தான் இளையவர்கள்.
இந்த ஜென் இசட் தலைமுறைகள் சோஷியல் மீடியாவில் அடிமையாக இருப்பதனால், மன அழுத்தம், பதற்றம் போன்ற சிக்கலில் சிக்கி வருவதுடன், சோஷியல் மீடியாவின் பிடியில் இருந்து விடுபட அவர்கள் எவ்வாறு போராடுகிறார்கள் என்பதை சமீபத்திய ஆய்வு எடுத்துரைக்கிறது.
ஜென் இசட் தலைமுறை மீதான சோஷியல் மீடியாவின் தாக்கம்:
இன்றைய ஜென் Z இளைஞர்களிடம் இருக்கும் சோஷியல் மீடியாவின் தாக்கம் சொல்லி மாளாது. ஆன்லைன் கன்டென்ட்களால் ஈர்க்கப்பட்டு சோஷியல் மீடியாவுக்கு அடிமையாவது மன அழுத்தம் மற்றும் பதற்றம் அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த 2000 ஜென் Z இளைஞர்களிடம் நடத்திய சமீபத்திய ஆய்வில், சோஷியல் மீடியாவை பயன்படுத்திய பிறகு, 49% பேர் மன அழுத்தம், பதற்றத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் லோக்கல் சர்க்கிள்ஸ் நடத்திய ஆய்வில், அச்சத்தை தரும் புள்ளிவிவரங்கள் தெரியவந்துள்ளன. அதாவது, 9 - 17 வயதுடைய இந்திய குழந்தைகள் சோஷியல் மீடியா மற்றும் கேமிங் தளங்களில் ஒரு நாளைக்கு 3 மணி நேரத்துக்கும் மேலாக செலவிடுவது தெரியவந்துள்ளது. அதிலும், மகாராஷ்டிராவில் 17% குழந்தைகள் ஆன்லைனில் 6 மணிநேரம் செலவிடுகிறார்கள் என்கிற தரவு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீண்ட காலமாக சோஷியல் மீடியாவை பயன்படுத்துவதால், இளைஞர்களிடையே ஹைபர் ஆக்டிவிட்டி கோளாறு, ஆக்ரோஷம், பொறுமையின்மை ஆகியவை ஏற்படுவதும் இதே ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், சமூக ஊடக தளங்களில் ஒவ்வொரு நாளும் வெளியிடப்படும் ஆடம்பரமான வாழ்க்கை முறை தொடர்பான கன்டென்ட்கள் இன்றைய இளைஞர்களிடம் நிறைய தாக்கம் செலுத்துகின்றன என்பதும் தெரியவந்துள்ளது.
2020-ல் நெட்ஃபிக்ஸில் வெளிவந்த ஆவணப்படமான 'The Social Dilemma' இளைஞர்களின் சோஷியல் மீடியா அடிக்ஷன் பிரச்சினையை வெளிப்படுத்துகிறது. மேலும், சோஷியல் மீடியா அடிக்ஷனின் ஆபத்துகள், மனநலத்தில் அது ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவற்றை பற்றிய விழிப்புணர்வை கொடுக்கிறது இப்படம்.
இந்த ஆவணப்படம் ஒருதலைப்பட்சமாக இருந்ததாகவும், ஓவர் டிராமாவாக இருந்ததாகவும் விமர்சிக்கப்பட்டது. ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா இந்த ஆவணப்படத்தின் முக்கியக் கருத்துகளை மறுத்து பதிலளித்தது.
முடிவற்ற ஸ்க்ரோலிங்:
ஜென் Z இளைஞர்கள் மனநலனில் சோஷியல் மீடியா அடிக்ஷன் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அவர்களால் ஏன் அந்தப் பழக்கத்தை கைவிட முடியவில்லை என்பதை எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
இந்த அடிக்ஷன் பற்றி நன்கு அறிந்திருந்தாலும், சோஷியல் மீடியாவின் பிடியில் இருந்து விடுபடுவது அவர்களுக்கு கடினமாக உள்ளது. எதையும் தவறவிட்டுவிடுவோமோ என்கிற பயம், சோஷியல் மீடியா தளங்கள் தரும் போதை ஆகியவை இதற்கான காரணிகளாக இருக்கலாம்.
இன்ஸ்டாவில் ஸ்வைப் செய்வதன் மூலமும், மற்ற சமூக வலைதளங்களில் ஸ்க்ரோல் செய்வதன் மூலமும் குறுகிய கால சந்தோஷத்தை அடையலாம். ஆனால், அது உங்கள் மனநலனில் நீண்டகால தீங்குகளை விளைவிக்கும்.
ஜென் Z தலைமுறை நேரத்தை ஏன் மதிக்க வேண்டும்?
ஆன்லைனில் அதிக நேரத்தை செலவிடுவது, ஜென் Z தலைமுறை புரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம். தங்களின் மனநலனில் சோஷியல் மீடியா ஏற்படுத்தும் தாக்கத்தை உணர்ந்து, அதன் விளைவுகளை தடுக்க தேவையான நடவடிக்கையை ஜென் Z தலைமுறைகள் எடுக்க வேண்டும்.
குறிப்பாக சமநிலையுடன் இருப்பது அவசியம். தங்களுக்கென இலக்குகளை அமைப்பது, ஆஃப்லைன் ஆக்டிவிட்டியில் ஈடுபடுவது போன்றவை சோஷியல் மீடியாவால் ஏற்படும் மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் குறைக்க வழிவகுக்கும்.
மன நலத்துக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் ஆன்லைன் அடிக்ஷனில் இருந்து விடுபட முடியும். மேலும் சமநிலையான வாழ்க்கையை அமைக்க முடியும்.
நமது கம்யூனிகேஷனை சமூக ஊடகங்கள் நிச்சயம் வேறு லெவலுக்கு மாற்றியுள்ளது என்பது மறுப்பதற்கில்லை. எனினும், இளைஞர்கள் தங்கள் மன நலனில் கவனமாக இருக்க வேண்டும். சமூக ஊடகங்களின் பின்னணியை புரிந்துகொள்வதன் மூலம் சமூக ஊடங்களில் ஆரோக்கியமான செயல்பாடுகளை உருவாக்கி, நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்க முடியும். இதனை ஜென் Z இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
நிஜ வாழ்க்கையிலும், அனுபவத்திலும் கவனம் செலுத்துவது முக்கியம் என்பது நினைவில் கொள்ளுங்கள். உங்கள் போஸ்டுக்கு கிடைக்கும் லைக்ஸை விட, உங்களின் மனநலனும், ஆரோக்கியமும் மிக முக்கியம். எனவே சுதாரித்து கொள்ளுங்கள்.
கட்டுரை உறுதுணை: ஆஸ்மா கான்
யாரெல்லாம் ‘Boomer’ அங்கிள்? - வரலாற்றுப் பின்புலமும்; சமகால பூமர்களும்!
Edited by Induja Raghunathan