'ப்ளவுஸ் டிசைனிங் முதல் ட்ரேடிங் வரை' - காதுகேளாத சமூகத்துக்கான சைகைமொழி கல்வி வழங்கும் 'Yunikee'
பங்கு வர்த்தகம், யோகா, ஆங்கிலம், போட்டோகிராபி உட்பட 70க்கும் மேற்பட்ட திறன்வளர்ப்பு படிப்புகளை சைகை மொழியில் வழங்கி, செவித்திறன் குறைபாடுள்ள சமூகத்தை முன்னேற்று பாதையில் கொண்டு செல்கிறது Yunikee எனும் அமைப்பு.
நீதா கோபாலகிருஷ்ணன் கற்றுக்கொண்ட முதல் மொழி இந்திய சைகை மொழி. செவி திறன் குறைபாடுக் கொண்ட பெற்றோருக்கு மகளாக பிறந்த அவர், நன்கு காது கேட்கக் கூடியவர். காது கேளாதவர்களுடன் நெருக்கமாக பயணித்ததில், அவர்களுக்கு கிடைக்கும் கல்வி, வாய்ப்புகள், தேவைகள் என அனைத்தையும் அறிந்தார். அதன் விளைவாய், காது கேளாதவர்களுக்கு திறன்களை வளர்க்கும் படிப்புகளை வழங்கும் 'யுனிகே' எனும் அமைப்பை தொடங்கினார்.
ஐதராபாத்தைத் தளமாக கொண்டு நிதா, அவரது கணவர் சைதன்யா கோத்தபள்ளி மற்றும் நண்பர் ராகுல் ஜெயின் உடன் இணைந்து இவ்வமைப்பை நிறுவியுள்ளனர். 2020ம் ஆண்டு முதல் இயங்கும் இவ்வமைப்பானது, சைன் மீடியம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின்கீழ், செவி திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு சைகை மொழியில் பங்கு வர்த்தகம், அடிப்படையான யோகா பயிற்சி, ஆங்கிலம், போட்டோகிராபி மற்றும் பல திறன்களை வளர்க்கும் படிப்புகளை வழங்குகிறது.
'Yunikee' என்ற சொல்லுக்கு தெலுங்கில் 'நான் இருக்கிறேன்' என்று அர்த்தம். காது கேளாதவர்களுடன் பேசும் வரை அவர்களை அடையாளம் காண முடியாது. இருப்பினும், அவர்களும் இங்கு தான் அனைவருடன் இணைந்து வாழ்கிறார்கள் என்பதை இந்த வார்த்தை குறிக்கிறது, என்று சைதன்யா விளக்குகிறார்.
"இந்திய சைகை மொழியில் அனைத்து சேவைகள் மற்றும் தயாரிப்புகளை கிடைக்க செய்வதன் மூலம் காதுகேளாத சமூகத்தை மேம்படுத்துவதே எங்களது குறிக்கோள். கூடுதலாக, திறன் மேம்பாடு மற்றும் கல்விப் படிப்புகளை வழங்குவதன் மூலம், அவர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கான வாய்ப்பை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளோம்," என்றார் சைதன்யா.
செவிதிறன் குறைவின் வலி உணர்...
சிறுவயதிலிருந்தே சைகை மொழியுடன் நெருங்கிய தொடர்பினை நீதா கொண்டிருந்ததால், படித்து ஒரு சிறப்புக் கல்வியாளரானார். கிராமப்புறங்களுக்குச் சென்று பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் சைகை மொழியைப் பயன்படுத்தி எவ்வாறு தொடர்புகொள்வது மற்றும் கல்வி கற்பது என்று கற்பித்தார். மறுபுறம், ஜெயின், Deaf child worldwide என்ற அமைப்பில் மூத்த முன்னணி பயிற்சியாளராக பணிபுரிந்தார். அங்கு நீதா கோபாலகிருஷ்ணனும் ஆலோசகராக இருந்தார். இந்த நேரத்தில்தான் ஜெயினும், நீதாவும் ஒருவரை ஒருவர் சந்தித்தனர்.
ஆனால், சைதன்யா 20 ஆண்டுகள் கார்ப்பரேட் உலகில் பணிபுரிந்து வந்தவர். அவரது மனைவியின் பணி மற்றும் அவரது மாமனார்- மாமியார்களுடனான உறவின்மூலம், அவர் காதுகேளாத சமூகத்தைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெற்றார். கார்ப்பரேட் உலகில் ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பிறகு, சமூகத் தாக்க தளத்தைத் தொடங்க நீதா மற்றும் ஜெயின் ஆகியோருடன் சேர 2020ம் ஆண்டு அவரது வேலையை விட்டுவிடவும் முடிவு செய்தார்.
2020ல் கோவிட்-19 தாக்கியதால், அனைத்தும் ஆன்லைனில் சென்றதால், காது கேளாதோர் சமூகம் பெரும்பாலும் கல்வி கற்க முடியாமல் போனது. இந்த நேரத்தில் தான், ஜாவா நிரலாக்க பாடத்தை சைகை மொழியில் மொழிபெயர்க்கும்படி, மூவரையும் கேட்டுக்கொண்டனர்.
இச்சம்பவம் காது கேளாத சமூகத்திற்கான கல்வி வளங்களில் இருக்கும் குறிப்பிடத்தக்க இடைவெளியை அவர்களுக்கு உணர்த்தியது. இந்த உணர்தலால் 2020ம் ஆண்டில் பங்கு வர்த்தகப் பாடத்திட்டம் உட்பட திறன் வளர்க்கும் பாடங்களை சைகை மொழியில் கற்பிக்க யுனிகே எனும் அமைப்பை தொடங்கினர். அங்கிருந்து மூவரும் அவர்களது பயணத்தைத் துவக்கினர்.
"காதுகேளாதவர்கள் எல்லோரையும் போல திறமையானவர்கள். ஆனால் அவர்களுக்கான கல்வி வளங்களில் நிலவும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும்," என்று நீதா கூறுகிறார்.
இந்திய சைகை மொழி (ISL) இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாக இருந்தாலும், பிராந்தியங்களில் வேறுபாடுகள் இருக்கலாம். ஐஎஸ்எல் பேச்சு மொழிகளிலிருந்து முற்றிலும் சுயாதீனமானது. இந்தி, ஆங்கிலம் அல்லது இந்தியாவில் உள்ள வேறு எந்த மொழியின் பிரதிநிதித்துவமும் இதிலிருக்காது. கூடுதலாக, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓபன் ஸ்கூலிங் அறிக்கையின்படி, ஐஎஸ்எல் ஃபிங்கர்ஸ் ஸ்பெல்லிங்கை பயன்படுத்துகிறது. ஆனால், அதை எழுத்து மொழியில் இருந்து வார்த்தைகளை மேற்கோள் காட்ட மட்டுமே பயன்படுத்துகிறது. மேலும், ISL என்பது மற்றொரு மொழியை அடிப்படையாகக் கொண்டதல்ல.
இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (ISLRTC) 10,000 வார்த்தைகள் கொண்ட அகராதியை உருவாக்குவதற்கு பொறுப்பான முன்னணி அமைப்பாகும். புதிய வார்த்தைகளை சேர்த்து அவர்கள் அதை தொடர்ந்து புதுப்பிக்கிறார்கள். அதை அவர்களின் வலைத்தளத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும். மேலும் 10,000 வார்த்தைகளை அகராதியில் சேர்க்க ஐ.எஸ்.எல்.ஆர்.டி.சி.யுடன், யுனிகே சேர்ந்து ஒத்துழைத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
"வணிகக் கண்ணோட்டத்தில் பார்த்தால், பல நிறுவனங்கள் அதன் தயாரிப்புகள் அல்லது சேவைகளை காதுகேளாத சமூகத்திற்கானதாகவும் வடிவமைப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. சில நேரங்களில் காது கேளாதவர்களுக்கான தயாரிப்புகளை உருவாக்குவதால் கிடைக்கும் வணிக நன்மைகளை தயாரிப்பாளர்களுக்கு சொல்லி புரியவைக்கிறோம்," என்றார் சைதன்யா.
காதுகேளாத சமூகத்தின் எதிர்காலத்தை கட்டமைத்தல்...
யுனிகே ஆன்லைன் கற்றல் தளமாகத் தொடங்கப்பட்ட நிலையில், இன்று வெவ்வேறு படிப்புகளுக்கான சந்தையாக மாறியுள்ளது. பல்வேறு துறைகளில் உள்ள வல்லுநர்கள் பதிவு செய்து அவர்களது பாடத்திட்டங்களை இணையத்தில் சேர்க்கலாம். இருப்பினும், காதுகேளாத சமூகத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்ட அவர்களின் குழு, பதிவேற்றப்பட்ட அதன் உள்ளடக்கம் மற்றும் சைகை மொழிக்காக சரிபார்க்கப்படுகிறது.
பதிவு செய்யும் ஆசிரியர்கள் காதுகேளாத சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். அவர்களது பாடத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருவாயில் 30% முதல் 70% வரை அவர்களை சென்றடையும்.
"நாங்கள் மானிய விலையில் கோர்ஸ்களை வழங்குகிறோம். பங்கு வர்த்தக படிப்பிற்கு ஆண்டுக்கு ரூ. 30-40,000 செலவாகும் என்றால், நாங்கள் அதை ரூ.5-7,000-க்கு வழங்குகிறோம். தற்போது ஆங்கிலம், பேங்கிங், இந்திய சைகை மொழி மற்றும் ப்ளவுஸ் டிசைனிங் உட்பட 70க்கும் மேற்பட்ட கோர்ஸ்கள் தளத்தில் கிடைக்கின்றன. இதுவரை 1,000 சந்தாதாரர்களைப் பெற்றுள்ளோம்."
சமூக வலைதளங்களில் உள்ள எங்களது சமூக ஊடக சேனல்கள் மூலம் காதுகேளாதவர்கள் என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்கிறோம். எங்கள் பணியாளர்களில் 80 சதவீதம் பேர் காது கேளாதவர்களாக இருப்பதால், சமூகத்தின் தேவைகளை நன்கு புரிந்து கொள்ளவும், பூர்த்தி செய்யவும் எங்களுக்கு உதவியாக உள்ளது. காதுகேளாத சமூகத்திற்கு கல்வியை அணுகுவதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றாலும், இன்னும் நீண்ட பாதை முன்னோக்கி உள்ளது, என்றார் சைதன்யா.
'விரும்பும் ஆடையினை அணிவது சுதந்திரம்!' - மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற ஆடையினை வடிவமைக்கும் ரஞ்சனி!