மதுரையின் முதல் பெண் நடத்துநர்; கணவரை இழந்து தவித்தவருக்கு அரசு கொடுத்த பணி ஆணை!
மதுரையில் கணவனை இழந்த பெண் ஒருவர் அரசின் உதவியால் அம்மாவட்டத்திலேயே முதல் பேருந்து நடத்துநர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
மதுரையில் கணவனை இழந்த பெண் ஒருவர் அரசின் உதவியால் அம்மாவட்டத்திலேயே முதல் பேருந்து நடத்துநர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பல பெண்கள் கருணை அடிப்படையில் நடத்துநர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது மதுரையில் முதன் முறையாக பெண் நடத்துநர் ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட்டுள்ளது.
மதுரை கோ.புதூர் லூர்து நகரைச் சேர்ந்தவர் ரம்யா. இவரது கணவர் பாலாஜி, இவர் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தின் காரைக்குடி மண்டலத்தின் மதுரை உலகநேரி கிளையில் ஓட்டுநராக பணிபுரிந்துள்ளார். இவர் கொரோனா காரணமாக மரணமடைந்தார். இதனால் ரம்யா, தனது 9ம் வகுப்பு படிக்கும் மகளுடன் கடும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டார்.
இதனிடையே, தனது குடும்பச் சூழ்நிலை குறித்தும், தனக்காக போக்குவரத்து துறையில் ஏதாவது பணி ஒதுக்கும் படியும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ரம்யா கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதமானது முதலமைச்சர் அலுவலகத்தை சென்றடைந்த நிலையில், ரம்யாவின் கல்வித்தகுதிக்கு ஏற்ப கருணை அடிப்படையில் உடனடியாக பணி வழங்க போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். இதையடுத்து ரம்யாவுக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துநர் பணி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது ரம்யாவின் கணவர் பணியாற்றிய கும்பகோணம் கோட்ட மதுரை உலகநேரி கிளையிலேயே, அரசு போக்குவரத்து கழகம் ரம்யாவிற்கு மதுரை -ராமேஸ்வரம் பேருந்தில் நடத்துநர் பணி வழங்கியுள்ளது.
இதுகுறித்து ஊடகம் ஒன்றிற்கு ரம்யா அளித்த பேட்டியில்,
“கணவர் இறந்த நிலையில் குழந்தைகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்தேன். என் கோரிக்கை குறித்து முதல்வருக்கு கடிதம் அனுப்பினேன். அதற்கு உடனடியாக பலன் கிடைத்தது. கணவர் ஓட்டுநராக பணிபுரிந்த கிளையிலேயே எனக்கு நடத்துநர் பணி கிடைத்துள்ளது,” என்றார்.
பெண்களால் அனைத்து பணிகளையும் திறம்பட செய்ய முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக தனது பணியை திறம்பட செய்வதாக கூறியுள்ளார். என்னைப் போல் பெண்கள் ஏராளமானோர் நடத்துநர் பணியில் சேர முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.