இந்திய ராணுவத்திற்காக உள்நாட்டு தொழில்நுட்ப ட்ரோன்களை உருவாக்கும் இளம் ஸ்டார்ட் அப்!
2018 ல் துவக்கப்பட்ட ஐஜி டிரோன்ஸ், ராணுவ சிமுலேட்டர் மற்றும் இந்தியாவின் முதல் 5கி டிரோன் உள்ளிட்ட ஏஐ சார்ந்த சேவைகளால் புதுமையாக்கத்தை முன்னெடுக்கிறது.
இந்தியாவின் ட்ரோன் துறை முக்கிய மாற்றத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது. ஐஜி டிரோன்ஸ் (IG Drones) போன்ற நிறுவனங்கள் இந்த மாற்றத்தை முன்னெடுத்துச்செல்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
2018ல் போதிசத்வா சங்கபிரியா மற்றும் ஓம் பிரகாஷ் ஆகியோரால் துவக்கப்பட்ட இந்த ஸ்டார்ட் அப், வெளிநாட்டு சப்ளைகளை சார்ந்திருப்பது மற்றும் திறன் இடைவெளி உள்ளிட்ட துறை எதிர்கொள்ளும் முக்கிய சவால்களுக்கு தீர்வு காண முயற்சிக்கிறது.

உள்நாட்டு ட்ரோன் தொழில்நுட்பத்தை உருவாக்குவது நிறுவனத்தின் மைய நோக்கங்களில் ஒன்றாக அமைகிறது. மேம்பட்ட ஆய்வு மற்றும் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதன் மூலம் ஐஜி ட்ரோன்ஸ் நிறுவனம் இந்திய சந்தையின் தேவையை நிறைவேற்றும் தீர்வுகளை உருவாக்குவதோடு, வெளிநாடுகள் இறக்குமதி மீதான சார்பையும் குறைக்க விரும்புகிறது.
“மேம்பட்ட, உள்நாட்டில் உருவான ட்ரோன் நுட்பத்தை வழங்குவதன் மூலம், ட்ரோன் துறையின் முக்கிய தடைகளை எதிர்கொள்வதோடு, இந்திய ட்ரோன் பரப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது,” என்கிறார் நிறுவனர் சங்கபிரியா.
சுயநிதியில் உருவாக்கப்பட்ட இந்த ஸ்டார்ட் அப், ராணுவ சிமுலேட்டர், ஏஐ திறன் நுட்பம் மற்றும் இந்தியாவின் முதல் 5ஜி ட்ரோன் உள்ளிட்ட புதுமையாக்கம் சார்ந்த பொருட்களை உருவாக்கி வருகிறது. மேலும், ட்ரோன் செண்டர்ஸ் ஆப் எக்சலன்ஸ் மையங்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த மையங்கள் ஆர்வம் உள்ள தொழில்முறையினரை ஊக்குவிப்பதோடு, புதுமையாக்கத்திற்கும் வழி வகுக்கும்.
குருகிராமைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப், அளவிடல், வரைபடமாக்கல், கண்காணிப்பு உள்ளிட்ட சேவைகளை அளிக்கிறது. இந்திய ராணுவம், மாநில அரசுகள் மற்றும் பெரிய நிறுவனங்கள் பலவற்றுடன் இணைந்து செயல்படுகிறது.
பின்னணி கதை
ஐஜி டிரோன்ஸ் நிறுவனத்திற்கான நோக்கம் மற்றும் அதன் நிறுவனர்கள் ராக்கெட் செலுத்தும் திட்டத்தில் ஆர்வம் கொண்டது, சொந்த மாநிலமான ஒடிஷாவை இந்தியாவின் புதுமையாக்க வரைபடத்தில் இடம்பெற வைக்கும் விருப்பம் மற்றும் அவர்கள் படித்த வி.எஸ்.எஸ்.யு.டி (வீர் சுரேந்திர சாய் யூனிவர்சிடி ஆப் டெக்னாலஜி ) கல்லூரி மீதான நன்றியுணர்வின் அடிப்படையில் அமைகிறது.
இந்த கல்லூரியில் பொறியியல் படித்துக்கொண்டிருந்த போது, சங்கபிரியா மற்றும் பிரகாஷ் ஆசியாவின் முதல் மாணவர் ராக்கெட் திட்டத்தை முன்னெடுத்தனர். இதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் பாராட்டும் கிடைத்தது. இஸ்ரோவின் அங்கீகாரமும் கிடைத்தது.
“நிஜ உலக பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஏரோஸ்பேஸ் நுட்பத்தின் ஆற்றலை இது உணர்த்தியது. மேலும், பள்ளி அல்லது கல்லூரி அளவில் மாணவர்களை சரியாக தயார் செய்தால் இந்தியாவால் சொந்த செயற்கைகோளை உருவாக்க முடியும் என்பதையும் சவாலாக எடுத்துக்கொண்டோம்,” என்கிறார் சங்கபிரியா.
இந்த அனுபவத்தோடு அவர்கள், செயல்திறன் இல்லாத தன்மை, வெளிநாட்டு சார்பு, தொழில்முறை பணியாளர்கள் போதிய அளவு இல்லாதது போன்ற துறையின் சிக்கல்களை தீர்க்க ஐஜி ட்ரோன்ஸ் நிறுவனத்தை துவக்கினர்.
சொந்தமாக உருவாக்கப்பட்ட ஏஐ திறன் கொண்ட ட்ரோன்கள் தீர்வுகள் மூலம், பாதுகாப்பு, விவசாயம், உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் ட்ரோன்களின் செயல்முறை சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளனர். குலோபல் ஏர்வார்ட்ஸ் போன்ற விருதுகளையும் வென்றுள்ளனர்.
2025 வாக்கில் ட்ரோன் சந்தையில் ஐந்து சதவீதத்தை கைப்பற்றும் இலக்கு கொண்டுள்ளது. மேலும், இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்தி, தனது திறன் மையங்கள் மூலம் கல்லூரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

தொழில்நுட்பம்
நிறுவனம் அளவிடுதல், கண்காணிப்பு மற்றும் வரைபடமாக்கல் சேவைகளை வழங்குகிறது.
5ஜி திறன் கொண்ட ஐஜி டிரோன்ஸ் ஜகா இதன் புதுமையாக்கங்களில் ஒன்றாக அமைகிறது. இந்த ஏஐ திறன் கொண்ட கண்காணிப்பு ட்ரோன் பாதுகாப்பு, விவசாயம், சோதனை, உள்கட்டமைப்பு கண்காணிப்பு ஆகிய பனிகளில் சிறந்து விளங்குகிறது.
வேளாண் செயல்பாடுகளுக்காக, கிஸான் ட்ரோன்களை வழங்குகிறது. இத ஸ்கைஹாக் ட்ரோன், டெலிவரி, வரைபடமாக்கல், பாதுகாப்பு, கண்காணிப்பு உள்ளிட்ட சேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் மேம்பட்ட சேவையான டெல்டா 400, வரைபடமாக்கல் மற்றும் சோதனைகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது.
“ஐஜி ட்ரோன்ஸ் மின் இணைப்புகளை கண்காணிப்பது, சாலை சோதனை, ஸ்மார்ட் சிட்டி, சுரங்கம் மற்றும் தொழில் ஆய்வு, பைப்லைன் சர்வே, விவசாய சர்வே, ஆறுகள் வரைபடமாக்கல், பேரிடர் நிர்வாகம் உள்ளிட்டவற்றுக்கான ட்ரோன் சேவைகளை வழங்கி, வாடிக்கையாளர்களின் தொழில் 4.0 தேவையை பூர்த்தி செய்கிறது,” என்கிறார் சங்கபிரியா.
ட்ரோன் நுட்பத்துடன் ஏஐ மற்றும் அனல்டிக்ஸ் ஆகியவற்றை இணைத்து, இந்திய ராணுவம், அரசு அமைப்புகள், முன்னணி நிறுவனங்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு சேவை அளித்துள்ளது.
“சர்வே, மேப் சேவை மற்றும் சோதனை ஆகிய விரிவான தீர்வுகளை அளிக்கிறோம். இது கடந்த 3 ஆண்டுகளில் ஆண்டு அடிப்படையில் 250 சதவீத வளர்ச்சியை அளித்துள்ளது. எங்கள் புதுமையாக்க சேவைகள் மூலம், 2024ம் நிதியாண்டில் வருவாய் நான்கு மடங்காக உயர உள்ளது,” என்கிறார் சங்கபிரியா.
நிறுவனம் அடுத்த தலைமுறை ட்ரோன் தொழில்முறை பணியாளர்களை உருவாக்கி வருகிறது. அதன் ட்ரோன் பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி அளிக்கிறது.
“இந்த திட்டம் மூலம், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து கல்வி மற்றும் தொழில் துறை இடையிலான இடைவெளியை குறைக்க உதவியுள்ளோம்,“ என்கிறார்.
ஐஐடி புவனேஸ்வர் மற்றும் ஐஐடி சம்பல்பூர் உள்ளிட்ட 15 கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது. நிறுவன சவால்கள் பற்றி பேசும் போது, ட்ரோன் பயன்பாடு குறித்து நிறுவனங்களுக்கு புரிய வைப்பது தான் பெரிய சவால் என்கிறார் பிரகாஷ்.
“ட்ரோன்கள் எப்படி செயல்பாடுகளை சீராக்கி, செலவை குறைக்கும் என்பதை பல நிறுவனங்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் தொடர்ந்து ட்ரோன் பலன்களை வலியுறுத்துவதன் மூலம், பலரை டிரோன் ஆதரவாளர்களாக மாற்றியிருக்கிறோம்,“ என்கிறார் பிரகாஷ்.
இந்த பரப்பில், கருடா ட்ரோன், ஐடியா போர்ஜ், பான்விஏரோ, டிரோன் ஆச்சர்யா ஏரியல் உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஐஜி டிரோன்ஸ் போட்டியிடுகிறது.
டிரோன் பரப்பு போட்டி மிக்கதாக இருந்தாலும், ஒருங்கிணைந்த அணுகுமுறை மூலம் நிறுவனம் தன்னை வேறுபடுத்திக்கொள்வதாக அவர் கூறுகிறார். நிறுவனம், பாதுகாப்பு, விவசாயம், உள்கட்டமை உள்ளிட்ட துறைகளுக்கான ஆரம்பம், முதல் இறுதி வரையான சேவைகளை வழங்குவதாக தன்னை முன்னிறுத்திக்கொள்கிறது.
வர்த்தக மாதிரி
இந்நிறுவனம் பி2பி மாடலை பின்பற்றுகிறது. அரசு அமைப்புகள், ரெயில்வே, ராணுவம், பவர் கிரிட் கார்ப், அதானி குழுமம், ஆதித்யா பிர்லா குழுமம், ரிலையன்ஸ் குழுமம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கான நம்பகமான பார்ட்னராக திகழ்கிறது.
“ஐஜி ட்ரோனின் ஜிஐஎஸ் மேப்பிங் மற்றும் புவிபரப்பு சார் சேவைகள் இந்திய வாடிக்கையாளர்களுக்கு குறிப்பாக ராணுவத்தினருக்கு மிகவும் மதிப்பு வாய்ந்தவை, பல முனை போரின் அடிப்படை அம்சங்களாக அமையும் கண்காணிப்பு மற்றும், வரைபடமாக்கலை மேம்படுத்திவதில் மற்றும் ராணுவ செயல்பாடுகள் எதிர்காலத்திற்கு முக்கியமானவை,” என்கிறார் இந்தியா ஆக்ல்சலேட்டரின் ரோபோடிக்ஸ் அன்மேண்ட் அண்டு ஸ்பேஸ் தீசிஸ் ஆலோசகர் அனில் சைட்.
“மேலும், இதன் ட்ரோன் சிமுலேட்டர் மேடை, எல்லைப்புற பகுதிகள் மற்றும் கடலோர பகுதிகள் சார்ந்த செயல்பாடுகளுக்கான நிஜ சூழல்களுக்கு ஏற்ப டிரோன் பைலட்களுக்கு பயிற்சி அளிக்க பயன்படும். 50 கிலோ வரையான சரக்கு போக்குவரத்தை நிறுவனம் சாத்தியமாக்கியுள்ளது எதிர்காலத்தில் சிவில் மற்றும் ராணுவ பரப்பில் லாஜிஸ்டிக்சில் பயன்படும், என்கிறார் அவர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த ஸ்டார்ட் அப், இந்தியா ஆக்சலேட்டர் தலைமை வகித்த துவக்க சுற்றில் ஒரு மில்லியன் டாலர் நிதி திரட்டியது. ஏஞ்சல் முதலீட்டாளர்களும் இதில் பங்கேற்றனர். மேலும், 3 மில்லியன் நிதி திரட்ட நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆய்வு மேம்பாடு மற்றும் இந்திய, சர்வதேச விரிவாக்கத்திற்காக நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
ஐந்து நாடுகளில் செயல்பாடுகள் கொண்டுள்ள ஐஜி டிரோன்ஸ், கொரிய ட்ரோன் ஸ்டார்ட் அப் ஐஜிஐஎஸ் (iGiS) உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களுடன் கூட்டு வைத்துள்ளது. நிறுவனம் வருவாய் எண்ணிக்கையை குறிப்பிடாமல், ராணுவம் மற்றும் முன்னணி நிறுவனங்களுக்கு, டிரோன் மையங்களுக்கு பல்வேறு டிரோன்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கிறது.
“ராணுவம் தொடர்புடையதால எண்ணிக்கையை வெளியிட விரும்பவில்லை என்கிறார் சங்கபிரியா. விவசாய விளைபொருள் கண்காணிப்பு, பேரிடர் நிர்வாகம், பாதுகாப்பு செயல்பாடுகள் உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்ள குறிப்பிட்ட தீர்வுகளை உருவாக்க விரும்புகிறோம்.“ என்றும் கூறினார்.
சர்வதேச வளவில் விரிவாக்கம் செய்யும் நிலையில், ட்ரோன் மையங்கள் மூலம் பல்லாயிரக்கணக்கானோருக்கு பயிற்சி அளித்து, செயல்திறன் மற்றும் புதுமையாக்கத்தில் டிரோன்கள் ஒருங்கிணைந்த அங்கமாக இருக்கும் நிலையை எதிர்நோக்குகிறோம், என்கிறார் பிரகாஷ்.
ஆங்கிலத்தில்: திரிஷா மேதி, தமிழில்: சைபர் சிம்மன்

Edited by Induja Raghunathan