Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

பழைய போன்களை புதுப்பித்து விற்கும் ஸ்டார்ட்-அப் - ஆண்டுக்கு ரூ.15 கோடி வருவாய் ஈட்டும் நண்பர்கள்!

ஐபோன்கள் வைத்திருப்பது அந்தஸ்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஐபோன் வாங்குவது என்பது பலரது பக்கெட் லிஸ்ட். அக்கனவுகளை மெய்பித்து, புதுப்பிக்கப்பட்ட ஐபோன்கள் விற்பனையில் ரூ.15 கோடி வருவாய் ஈட்டியுள்ளது கிரெஸ்ட் ஸ்டார்ட்அப்!

பழைய போன்களை புதுப்பித்து விற்கும் ஸ்டார்ட்-அப் - ஆண்டுக்கு ரூ.15 கோடி வருவாய் ஈட்டும் நண்பர்கள்!

Wednesday February 26, 2025 , 4 min Read

ஸ்மார்ட் போன்கள் அற்ற மனிதரேது? என்ற அளவிற்கு, ஸ்மார்ட்போன்களின் உபயோகம் அதிகரித்துள்ளது. இதிலும், ஐபோன்கள் வைத்திருப்பது அந்தஸ்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஐபோன் வாங்குவது என்பது பலரது பக்கெட் லிஸ்ட். அக்கனவுகளை மெய்பித்து, புதுப்பிக்கப்பட்ட ஐபோன்கள் விற்பனையில் ரூ.15 கோடி வருவாய் ஈட்டியுள்ளது கிரெஸ்ட் (Grest) ஸ்டார்ட்அப்.

குருகிராமை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப்பான கிரெஸ்ட், புதுப்பிக்கப்பட்ட மொபலை்போன்கள் மற்றும் பிற மின்னணு சாதனங்களை பெஸ்ட் குவாலிட்டி மற்றும் சிறப்பான பெர்பாமன்ஸுடன், மலிவு விலையில் வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

Mobile phones

2021ம் ஆண்டு பால்யகால நண்பர்களான ஷ்ரே சர்தானா மற்றும் நிதின் கோயல் ஆகியோர் இணைந்து நிறுவிய இந்த ஸ்டார்ட்அப், புதுப்பிக்கப்பட்ட ஐபோன்கள், மேக்புக்குகள் மற்றும் மடிக்கணினிகளை வாரன்டி மற்றும் கியாரான்டி உடன் விற்பனை செய்கிறது.

"புதுப்பிக்கப்பட்ட தொலைபேசிகள் பெரும்பாலும் குறைந்த தரம் கொண்டவை என்ற கருத்தைக் கொண்டுள்ளன. அவற்றை வாரன்டிகள் மற்றும் தர உத்தரவாதத்துடன் வழங்குவதன் மூலம் அந்தக் கருத்தை மாற்றுவதே எங்கள் நோக்கம்," என்கிறார் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஷ்ரே சர்தானா.

சுவாரஸ்யமாக, சமீப காலங்களில், பயன்படுத்தப்பட்ட சாதனங்களைச் சுற்றியுள்ள கருத்தும் மெதுவாக மாறி வருகிறது. குறிப்பாக, புதுப்பிக்கப்பட்ட ஐபோன்கள் மீதான மோகமும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவில் புதுப்பிக்கப்பட்ட ஐபோன்களுக்கான தேவை 38% உயர்ந்துள்ளது.

கார்பரேட் டூ தொழில்முனைவு...

கிரெஸ்ட்டைத் தொடங்குவதற்கு முன்பு, சர்தானாவும், நிதினும் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றினர். அமெரிக்காவில் எலக்ட்ரானிக்ஸ் பழுதுபார்ப்பு மற்றும் புதுப்பித்தலில் சர்தானா நிபுணத்துவம் பெற்றிருந்தாலும், அவர் தொலைத்தொடர்பு ஜாம்பவான்களான நோக்கியா, எரிக்சன் மற்றும் ZTE ஆகியவற்றில் பணியாற்றினார்.

தொடர்ந்து 2018ம் ஆண்டு, எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை பழுதுப்பார்க்கும் தொடக்க நிறுவனமான Radical Aftermarket Services-ஐத் தொடங்கியதன் மூலம் அவர்களது தொழில்முனைவு பயணத்தைத் தொடங்கினர். மலிவு விலையில் புதுப்பிக்கப்பட்ட கேஜெட்களுக்கான வளர்ந்து வரும் சந்தையைக் கவனித்த அவர்கள், 2021ம் ஆண்டில் கிரெஸ்ட்டை தொடங்கினர்.

"இந்த முயற்சி மூலம், ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒன்றை ஒன்றாக சேர்ந்து உருவாக்க வேண்டும் என்ற எங்கள் பால்யபருவ கனவினை நினைவாக்கினோம். அணுகக்கூடிய விலையில் பிரீமியம்-தரமான தொலைபேசிகளுக்கான தேவை அதிகரித்து வருவதை கண்டோம். மேலும், எங்கள் நிபுணத்துவத்தினால் புதுப்பிக்கப்பட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தரம் குறைந்தவை என்ற பொது பார்வையை மாற்றமுடியும் என்று நம்பினோம்," என்றார் சர்தானா.
grest

பழைய ஐபோன்களுக்கும் மவுசு அதிகம்...

ஆப்பிள் விற்பனை நிலையங்கள், விஜய் சேல்ஸ், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் குரோமா போன்ற நிறுவப்பட்ட சில்லறை கூட்டாளர்களிடமிருந்தும், தனிப்பட்ட நுகர்வோர்களிடமிருந்தும் பயன்படுத்தப்பட்ட சாதனங்களை ஸ்டார்ட் அப் சேகரிக்கிறது. இதுபோன்று 22 மாநிலங்களில் அவர்கள் கொண்டுள்ள கூட்டாண்மைகள், ஸ்டார்ட்அப்பின் விநியோகச் சங்கிலியின் முதுகெலும்பாக உள்ளது.

"கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தியா முழுவதும் சுமார் 200 சப்ளையர்களைக் கொண்ட ஒரு வலுவான வலையமைப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இது செயல்பாட்டுத் திறன் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்த எங்களுக்கு உதவுகிறது. எங்கள் விரிவான விநியோக வலையமைப்பானது 125 பொது வர்த்தக கூட்டாளர்களையும் 15 பெரிய வடிவ சில்லறை கூட்டாளர்களையும் உள்ளடக்கியது," என்று கூறினார் சர்தானா.

கிட்டத்தட்ட, அவர்களது ஒட்டுமொத்த வருவாயில் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளால் மட்டும் 15% வருவாயை ஈட்டுகின்றனர். குர்கானில் பழுதுபார்க்கும் யுனிட்டை அமைத்து, 45க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் கொண்ட குழுவுடன், சாதனங்களை பழுதுபார்ப்பதில் கிரெஸ்ட் 70%–80% வெற்றி விகிதத்தைக் கொண்டுள்ளது.

ஒவ்வொரு சாதனமும் ஒப்பனை சோதனைகள், வன்பொருள் செயல்பாடு, பேட்டரி ஆரோக்கியம், மென்பொருள் ஒருமைப்பாடு மற்றும் செயல்திறன் சோதனை ஆகியவற்றை உள்ளடக்கிய கடுமையான 50-புள்ளி ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. சாதனங்களுக்கு ஆறு மாத உத்தரவாதம், ஏழு நாள் திரும்பும் கொள்கை மற்றும் நாடு தழுவிய இலவச ஷிப்பிங் ஆகியவை வழங்கப்படுகின்றன.

போன்களில் மதர்போர்டு சேதம், பேட்டரி சிக்கல்கள் மற்றும் தண்ணீரினால் ஏற்படும் சேதம் உள்ளிட்ட கடுமையான சேதங்களை கூட சரிசெய்ய முடியும், என்கிறது. ஸ்மார்ட் போன்களுடன், கிரெஸ்ட் மடிக்கணினிகளையும் புதுப்பிக்கிறது. தங்களது ஊழியர்களுக்கு செலவு குறைந்த சாதனங்களைத் தேடும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை இலக்காகக் கொண்டு, மடிக்கணினிகளை புதுப்பித்துவருகிறது. மடிக்கணினிகள் தற்போது நிறுவனத்தின் வருவாயில் 10% ஆகும்.

"நாங்கள் பழைய போன்களை மட்டும் மறுவிற்பனை செய்வதில்லை; அவற்றை புதிய நிலைக்கு மீட்டெடுப்பதில் மிகுந்த கவனத்துடன் இருக்கிறோம். வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையே புதுப்பிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் எங்கள் அணுகுமுறையின் மையக்கரு. பிராண்ட் நியூ தயாரிப்பை காட்டிலும் புதுப்பிக்கப்பட்ட சாதனத்தை வாங்க 60% குறைவாக செலவாகும்," என்றார்.

சவால்களும்; சாத்தியங்களும்!

புதுப்பிக்கப்பட்ட சாதனங்களுக்கான தேவை அதிகரித்து வந்தாலும், அவற்றைப் பற்றிய நுகர்வோர் கருத்துக்களை மாற்றுவது கிரெஸ்டுக்கு ஒரு குறிப்பிடத்தக்க சவாலாகவே உள்ளது. ஆரம்பத்தில், புதுப்பிக்கப்பட்ட தொலைபேசிகள் பற்றிய விழிப்புணர்வு வாடிக்கையாளர்களிடையே மிகக் குறைவாகவே இருந்தது.

இதற்காக, நிறுவனம் அதன் வலைத்தளம் மற்றும் வலைப்பதிவு மூலம் சாதனங்கள் எவ்வாறு மீட்டெடுக்கப்படுகின்றன என்பது பற்றிய விரிவான நுண்ணறிவுகளை வழங்கி, இந்த செயல்பாட்டில் உள்ள விரிவான சோதனை மற்றும் கடுமையான ஆய்வு ஆகியவற்றை எடுத்துரைக்கிறது. எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை புதுப்பித்து மீண்டும் சந்தைக்கு கொண்டு வருவதன் மூலம், மின் கழிவுகளைக் குறைத்து சுற்றுச்சூழல் பொறுப்புடனும் ஸ்டார்ட்அப் செயல்படுகிறது.

"சாதனங்களின் ஆயுட்காலத்தை நீட்டித்து, புதிய தயாரிப்புகளுக்கு மலிவு விலையில் மாற்றுகளை வழங்குவதோடு, நிலைத்தன்மை முயற்சிகளுக்கு நாங்கள் பங்களிக்கிறோம். இந்தியாவைத் தவிர, கிரெஸ்ட் சீனாவிலிருந்தும் உதிரிபாகங்களை பெறுகிறோம்," என்றார்.

இதுவரை இந்த ஸ்டார்ட் அப் 3,15,000 டாலர் நிதியை திரட்டியுள்ளது. மேலும், அதன் வணிகத்தை விரிவுபடுத்தவும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் கூடுதல் நிதியினை திரட்டும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த ஆண்டு கிரெஸ்ட் ரூ.100 கோடி வருவாயை அடைய முடியும் என்று சர்தானா நம்புகிறார்.

குர்கானில் உள்ள கிரெஸ்டின் புதுப்பித்தல் யுனிட்டானது, ஒரு மாதத்திற்கு 20,000 சாதனங்களை செயலாக்கும் வசதியுடன் 5,000 சதுர அடி பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. இதை, வருங்காலத்தில் 15,000 சதுர அடியில் பரந்த யுனிட்டாக விரிவுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

இந்த மறு வணிக தளம் 2024ம் நிதியாண்டில் ரூ.15 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. மேலும், மாத வருமானமான ரூ.3.5 கோடியை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது. தவிர, இந்தியாவிலும் சர்வதேச சந்தைகளிலும் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வணிகம் செய்ய சுமார் 400 கடைகளை நிறுவுவதே நீண்டகால இலக்காகக் கொண்டுள்ளது.

தமிழில்: ஜெயஸ்ரீ