2021: சமூகத்துக்கு தங்களை அற்பணித்து மாற்றத்தை வித்திட்ட தன்னலமற்ற நல்லுங்களின் தொகுப்பு!
2021-ம் ஆண்டில் `விதைத்தவர்கள்’ பிரிவின்கீழ் வெவ்வேறு நலப்பணிகளில் ஈடுபட்டு சமூக மாற்றத்திற்கு வித்திட்ட தனிநபரின் வாழ்க்கைப் பயணங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்கிற இலக்கு பொதுவாக நம் எல்லோர் மனதிலும் இருக்கும். ஆனால், நம்முடைய வளர்ச்சியையும் தாண்டி சமூக நலனிலும் பங்களிக்கவேண்டும் என்கிற உந்துதல் எல்லோருக்கும் ஏற்படுவதில்லை. வெகு சிலரே இதில் அர்ப்பணித்துக்கொள்கின்றனர்.
இத்தகைய நலப்பணிகள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடங்கிவிடுவதில்லை. ஒவ்வொருவரின் கண் முன்னே தெரியும் பிரச்சனையும் வெவ்வேறாக இருப்பதால் அவர்கள் பங்களிக்கும் நலப்பணிகளும் மாறுபடுகின்றன. இவர்கள் செயல்படும் பிரிவு மாறுபட்டாலும் நோக்கம் ஒன்றுதான்.
அந்த வகையில், சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு மாற்றத்திற்கு வித்திட்ட தனிநபரின் வாழ்க்கைப் பயணங்கள் ‘விதைத்தவர்கள்’ என்கிற தலைப்பின்கீழ் யுவர்ஸ்டோரி தமிழில் வெளியாகி வருகின்றன.
2021-ம் ஆண்டில் ’விதைத்தவர்கள்’ பிரிவின்கீழ் வெளியான 10 சிறந்த கட்டுரைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
1. களவாடப்படும் கலைப்பொருட்கள் மீட்கப்பட உதவும் விஜய்குமார்
தனிப்பட்ட ஆர்வம் காரணமாக சுவாமி சிலைகளையும் புராதானப் பொருட்களையும் மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ். விஜய்குமார்.
தஞ்சாவூர் சிற்பக்கலையைக் கண்டு வியந்துள்ளார். பொன்னியின் செல்வன் புத்தகத்தைப் படித்துள்ளார். சிற்பக்கலைகள் பற்றி ஆர்வமாகத் தெரிந்துகொண்டவர் அதுபற்றி வலைப்பதிவுகள் உருவாக்கினார். வெளிநாட்டவர்கள் இந்திய சிலைகளைப் பார்த்தால் புகைப்படம் எடுத்து பகிர்ந்துகொள்ளுமாறு சமூக ஊடகங்களில் பகிர்ந்தார். நண்பர்களுடன் இணைந்து இவர் மேற்கொண்ட முயற்சியால் சிலைத் திருடர்கள் பலர் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டுள்ளனர்.
கலைப்பொருட்கள் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லை என்று குறிப்பிடும் விஜய்குமார் சிலைகள் திருட்டுப்போனால் அதை முறையாக ஆவணப்படுத்தவேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். தொல்பொருட்களின் அழிவைத் தடுக்க கடுமையாக சட்டங்கள் இயற்றப்படவேண்டும் என்கிறார்.
2. ஆதிவாசிகள் வாழ்வாதாரம் மேம்பட போராடும் சூழலியல் ஆர்வலர்
வனப்பகுதிகளில் வசிக்கும் ஆதிவாசிகள் தங்கள் பாரம்பரிய அறிவை கொண்டு வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ளும் வகையில் டாக்டர். மஞ்சு வாசுதேவனின் ’ஃபாரஸ்ட் போஸ்ட்’ அமைப்பு செயல்பட்டு வருகிறது.
ஆதிவாசிகள் காட்டில் சேகரிக்கும் பொருட்களையும் தயாரிக்கும் பொருட்களையும் விற்பனை செய்து அவர்கள் வருவாய் ஈட்ட இந்த அமைப்பு உதவுகிறது.
3. ஏழை மாணவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் கார்த்தி
கார்த்தி வித்யா ‘டீம் எவரெஸ்ட்’ என்கிற நிறுவனத்தைத் தொடங்கி மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைக்கிறார்.
கார்த்தி தன்னார்வலர்களைக் குழுவாக இணைத்துக்கொண்டு ஏழை மாணவர்களுக்கு உதவி வருகிறார். கூட்டுநிதி பிரச்சாரம் மூலமாகவும் கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைகள் மூலமாகவும் நிதி திரட்டுகிறார்.
மாணவர்களின் படிப்பிற்காக உதவித் தொகை வழங்குவதுடன் வேலை கிடைப்பதற்காக திறன் பயிற்சியும் வழங்குகிறார். மக்கள் கிடைக்கும் நேரத்தில் தன்னார்வலப் பணிகளில் ஈடுபடுவதைக் காட்டிலும் நேரம் ஒதுக்கி ஈடுபடவேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
4. கொரோனா சூழலில் தன்னார்வலர்களாக மாறிய மாணவர்கள்
ஆகர்ஷ் ஷிராஃப் என்கிற பிட்ஸ் பிலானி மாணவர் பெற்றோர் அளித்த ஊக்கத்துடன் SPARK என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நிறுவியுள்ளார்.
ஆதரவற்ற இல்லங்களில் கல்வி உதவி, வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்தல், மொழியியல் திறன் வளர்ப்பு, பொதுவெளியில் பேசும் திறன் போன்றவற்றில் கவனம் செலுத்தி வந்த இந்த நிறுவனம், பெருந்தொற்று பரவலின் முதல் அலையின்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு வழங்கத் தொடங்கியது.
கல்வி கட்டணம் செலுத்த முடியாத ஏழை மாணவர்களுக்கு உதவியுள்ளது. அதேபோல், இரண்டாம் அலையின்போது ஆக்சிஜன் செறிவூட்டிகள், பிபிஇ கிட், சானிடைசர், கையுறைகள் போன்றவற்றைக் கொடுத்து உதவியுள்ளது.
5. பசிக்கு மதம் இல்லை என்பதை நிரூபித்துள்ளார் அசார் மக்சூசி
குடும்பச் சூழல் காரணமாக பத்து வயதிலேயே படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றுள்ளார் அசார். ஆதரவற்ற பெண் ஒருவர் பசியால் வாட, உணவு வாங்கிக் கொடுத்துள்ளார். இவரைப்போன்ற பலருக்கு உதவ நினைத்து 2015-ம் ஆண்டு Sani Welfare Foundation தொடங்கினார். பத்தாண்டுகளாக பசியில் தவிப்போருக்கு உணவு வழங்கி உதவி வரும் அசார் இந்த சேவையில் தொடர்ந்து ஈடுபடவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
6. 58 வயதில் 174 முறை ரத்த தானம் செய்துள்ள ‘ரத்த மனிதர்’
மத்தியப்பிரதேசத்தின் ஸ்ரீநகர் பகுதியைச் சேர்ந்த 58 வயது ஷபீர் கான் இந்தியாவில் அதிக முறை ரத்த தானம் செய்தவர். 1980-ம் ஆண்டு கால்பந்து விளையாடி காயம்பட்ட ஒருவருக்கு முதல் முறையாக ரத்த தானம் செய்த ஷபீர் அப்போதிருந்து தொடர்ந்து ரத்த தானம் செய்து வருகிறார்.
விபத்துக்குள்ளானவர்கள், கர்ப்பிணிகள் என ஏராளமானோருக்கு ரத்தம் தேவைப்படுவதால் மக்கள் அனைவரும் ரத்த தானம் செய்து உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார்.
7. 12 குழுக்களை அமைத்து கொரோனா பாதித்தவர்களுக்கு உதவிய ஹரிகிருணனன்
சென்னையைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் 2016-ம் ஆண்டு சமூக நலப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். வர்தா புயல், கேரள வெள்ளம், கஜா புயல் என பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். உதவிக்கு யாரிடமும் பண உதவி பெறாமல் சுய சம்பாத்தியத்தில் உதவி வருகிறார்.
பணத்தைக் கொடுக்க யாராவது முன்வந்தால் நேரடியாக அவர்களையே களமிறக்கி உதவச் சொல்கிறார். இதனால் மன திருப்தி கிடைப்பதால் பலர் இவருடன் இணைந்துகொள்ள தற்போது 1500 தன்னார்வலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
கொரோனா சமயத்தில் ஏழை மக்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தார் ஹரி.
8. கணவருடன் இணைந்து உடல்களை தகனம் செய்யும் செவிலியர்
ஒடிசாவின் புவனேஸ்வரில் பிரதீப் சேவா அறக்கட்டளையை நடத்தி வரும் மதுஸ்மிதா பிரஸ்டி மற்றும் அவரது கணவர் பிரதீப் குமார் பிரஸ்டி ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 20 இறந்த உடல்களை தகனம் செய்து வருகின்றனர்.
கொல்கத்தாவில் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்து வந்த மதுஸ்மிதா, கொரோனா இரண்டாம் அலையின்போது பலர் உயிரிழந்த சமயத்தில் சொந்த ஊரான புவனேஸ்வருக்கு திரும்பினார். உணவு, உறக்கம் எதையும் பொருட்படுத்தாமல் பலரது உடலைத் தகனம் செய்துள்ளனர் இந்த தம்பதி.
9. கொரோனா நோயாளிகளை அடக்கம் செய்யும் இரு கல்லூரி மாணவிகள்
நிக்கோல் ஃபுர்டடோ மற்றும் அவரது உறவினர் டினா செரியன் ஆகிய இருவரும் ’ஹியர் ஐம் ஸ்குவாட்’ என்கிற தன்னார்வலக் குழுவில் இணைந்தனர்.
குடும்பத்தினர் கொரோனா நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதைப் பார்த்து இவர்களும் களமிறங்க முடிவு செய்தனர். முறையான பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து ஏழை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுகின்றனர்.
10. நகைகளை அடகு வைத்து அரசு மருத்துவமனைக்கு உதவியுள்ள தம்பதி
தடுப்பூசி செலுத்திக்கொள்ள சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு சென்றுள்ளனர் கோவை ராம்நகரைச் சேர்ந்த ஒரு தம்பதி. அப்போது வெயிலின் தாக்கத்தால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாவதைக் கவனித்தனர்.
வீடு திரும்பிய தம்பதி தங்களது நகைகளை அடகுக் கடைக்குக் கொண்டு சென்று 2.20 லட்சம் பெற்றனர். அதைக் கொண்டு 100 மின்விசிறிகளை வாங்கி சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்குக் கொடுத்துள்ளனர். நோயாளிகளுக்கு உதவவே இதைச் செய்ததாகவும் தங்களைப் பற்றிய விவரங்களை வெளியிடவேண்டாம் என்றும் மருத்துவமனை டீனிடம் தெரிவித்துள்ளனர்.