‘அப்பா பெயரை தப்பாமல் காப்பாற்றிய மகன்’ - யூபிஎஸ்சி தேர்வில் சென்னை ஆணையர் ராதாகிருஷ்ணன் மகன் தேர்ச்சி!
சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மகன் அரவிந்த் யூபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அதுவும் முதுகலை மருத்துவம் படித்துக்கொண்டே இந்த வெற்றியை சாத்தியமாக்கியுள்ளது பாராட்டுக்களை குவித்து வருகிறது.
சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மகன் அரவிந்த் யூபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அதுவும் முதுகலை மருத்துவம் படித்துக்கொண்டே இந்த வெற்றியை சாத்தியமாக்கியுள்ளது பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.
மத்திய அரசின் தேர்வாணையம் இந்திய குடிமைப்பணிகளான இந்திய காவல் பணி, இந்திய வெளியுறவுப் பணி, இந்திய வனத்துறை, இந்திய வருவாய்த் துறை ஆகிய பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களைத் தேர்வு செய்து வருகிறது.
2022ம் ஆண்டுக்கான இந்தியக் குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு செப்டம்பர் 16ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை முதன்மைத் தேர்வுகள் நடைபெற்றன. இந்தத் தேர்வின் முடிவுகள் டிசம்பர் 6ஆம் தேதி அன்று வெளியாகின.
முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 2023ஆம் ஆண்டு மார்ச் 13 முதல் மே 18 வரை தலைநகர் டெல்லியில் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், சென்னை மாநகர ஆணையரான ராதாகிருஷ்ணனின் மகன் அரவிந்த் ராதாகிருஷ்ணன் இந்தத் தேர்வில் வெற்றி பெற்று பாராட்டுக்களைக் குவித்து வருகிறார்.

ஐ.ஏ.எஸ். தேர்வில் அசத்திய வாரிசுகள்:
புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்பது போல் நடந்து முடிந்த இந்தியக் குடிமைப் பணிக்கான தேர்வுல் தமிழகத்தைச் சேர்ந்த 3 ஐஏஎஸ் அதிகாரிகளின் மகள்கள் மற்றும் மகன் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அரசுச் செயலாளரான ஜெகநாதனின் மகள் சத்ரியா கவின் 169வது ரேங்குடன் தேர்ச்சி பெற்றுள்ளார்.
தமிழ்நாடு அரசுத் தொழிலாளர் ஆணைய முதன்மை செயலாளரும், ஆணையருமான அதுல் ஆனந்தின் மகளான எசானி 290வது இடம் பிடித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் மகன் அரவிந்த் ராதாகிருஷ்ணன் 361வது இடம் பிடித்துள்ளார்.

ராதாகிருஷ்ணன் மகன் சாதனை:
தமிழகத்தில் பல்வேறு மாணவ, மாணவிகள் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், சென்னை மாநகராட்சி ஆணையரும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ராதாகிருஷ்ணனின் மகன் தேர்ச்சி பெற்றது கவனம் ஈர்ப்பதாகவும், மாணவர்களுக்கு உத்வேகமூட்டுவதாகவும் அமைந்துள்ளது.
ஏனெனில், அரவிந்த் ராதாகிருஷ்ணன் ஏற்கனவே இளங்கலை மருத்துவம் படித்துள்ளார். தற்போது முதுகலை பொது மருத்துவம் படித்துக்கொண்டே ஐ.ஏ.எஸ். தேர்விற்கும் தயாராகி, அதில் வெற்றி பெற்றுள்ளார்.
பொதுவாக மருத்துவம், சிவில் சர்வீஸ் ஆகியவற்றிற்கு தயாராவது மாணவர்களுக்கு பெரும் சவாலான விஷயமாகும். அப்படியிருக்கையில், அரவிந்த் ராதாகிருஷ்ணன் முதுகலை மருத்துவம் படித்துக்கொண்டே ஐஏஎஸ் தேர்விலும் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார்.
மகிழ்ச்சியில் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்:
ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தற்போது சென்னை மாநகராட்சி ஆணையராக உள்ளார். கால்நடை மருத்துவம் படித்தார். 1992ல் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்ற இவர், நாகை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி போது, அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனே இவர் சுனாமியின் போது அவர் ஆற்றிய மீட்புப் பணிகளைப் பாராட்டினார்.
சுகாதாரத் துறை செயலர், உணவுப் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று தலைவிரித்தாடிய போது அதனை கட்டுப்படுத்த இவர் மேற்கொண்ட தீவிர பணிகள் பல்வேறு தரப்பிலும் பாராட்டுக்களை குவித்தது.
அதேபோல், உணவுத்துறையில் அதிகாரியாக இருந்தும், ரேஷன் அரிசி கடத்தல், பருப்பு பதுக்கல் போன்றவற்றை கண்டுபிடித்தார். அவர் பேரிடர் நிபுணர் என்றும் அழைக்கப்படுகிறார். அவருக்கு எந்தப் பணி வழங்கப்பட்டாலும் அதில் தனக்கென முத்திரை பதித்து விடுவார்.
இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
“2022ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணித் தேர்வுகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். அகில இந்திய அளவில் அதிகப் போட்டி நிறைந்த தேர்வில் 361வது இடம் பிடித்த அரவிந்த் ராதாகிருஷ்ணனை எண்ணிப் பெருமை கொள்கிறேன். முதுகலை பொது மருத்துவம் படித்துக் கொண்டே, இடையில் குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராகி, அதில் வெற்றியும் பெற்றதை எண்ணிப் பெருமைகொள்கிறேன். தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்களுக்கும் முயற்சித்தவர்களுக்கும் அன்பு வாழ்த்துகள்,’’ என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இன்று தன்னைப் போலவே தனது மகனும் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வாகியுள்ளதை எண்ணி பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.