எலக்ட்ரிக் கார்களால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
பெட்ரோல்/டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில் மக்களின் கவனம் எலக்ட்ரிக் வாகனங்களின் பக்கம் திரும்பியுள்ளது.
பெட்ரோல்/டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில், மக்களின் கவனம் எலக்ட்ரிக் வாகனங்களின் பக்கம் திரும்பியுள்ளது. இந்தியாவில் மின் வாகனங்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்துலாக மாறியிருக்கிறது. காற்று மாசுபாடு, புவி வெப்பமயமாதல் போன்ற பிரச்சனைகளுக்கு மின்சார வாகனங்கள் சிறந்த தீர்வாக அமையும்.
இப்போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தொடர்ந்து பல முன்னணி நிறுவனங்கள் மின்சார் கார்களை அறிமுகம் செய்து வருகின்றனர். பிரபல நிறுவனம் Tesla இந்தியாவிற்கு வரவிருப்பதாக பரவிய தகவல்களாக, ஏற்கனவே கார்கள் உற்பத்தி செய்யும் முன்னணி டாடா, மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார் உற்பத்திக் களத்தில் இறங்கியுள்ளது.
எலக்ட்ரிக் கார்களினால் கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பற்றி பார்ப்போம்:
இயங்கும் செலவு குறைவு:- எலக்ட்ரிக் கார்கள் பேட்டரிகள் கொண்டு இயங்குகின்றன. பேட்டரிகள் மின்சாரத்தின் மூலம் சார்ஜ் செய்யப்படுகின்றன. இதனால் இயக்கத்திற்கான செலவு மிகவும் குறைவு. பெட்ரோல் மூலம் இயங்கும் கார்களுடன் ஒப்பிடுகையில் எலக்ட்ரிக் கார்கள் இயங்குவதற்கு மிகக்குறைவாகவே செலவிடவேண்டியிருக்கும்.
பராமரிப்பு செலவு குறைவு:- சர்வீஸ் செய்வதற்கு மிகக்குறைவாக செலவிடும் வகையிலேயே எலக்ட்ரிக் கார்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. எலக்ட்ரிக் வாகனங்களில் நகரும் பாகங்கள் குறைவு. இதனால் சர்வீஸ் செய்வதற்கு திரவங்கள் தேவைப்படாது. மொத்தத்தில் எலக்ட்ரிக் வாகனங்களை பராமரிப்பதற்கான செலவு குறைவு.
சுற்றுச்சூழலுக்கு உகந்தது:- எலக்ட்ரிக் வாகனங்களில் புகை அதிகம் வெளியேறுவதில்லை. கார்பன் உள்ளிட்ட வாயுக்களில் வெளியேற்றமும் குறைவு. இதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீங்கு குறைகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை விட எலக்ட்ரிக் கார்கள் மிகக்குறைந்த அளவு கார்பனை மட்டுமே வெளியேற்றுவதால் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக உள்ளது.
சிறந்த அனுபவம்:- எலக்ட்ரிக் வாகனங்கள் அமைதியாகவும் மென்மையாகவும் இயங்குகின்றன. இவற்றில் எக்ஸாஸ்ட் சிஸ்டம் இருப்பதில்லை. இதனால் மிகச்சிறந்த டிரைவிங் அனுபவத்தை வழங்குகிறது. சாலைகளில் செல்லும் மற்ற வாகனங்களின் இரைச்சல்களுக்கு மத்தியில் எல்க்ட்ரிக் வாகனங்கள் அமைதியாக இயங்கி ஓட்டுநர்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தை வழங்குகிறது.
உடனடி வேகம்:- எலக்ட்ரிக் கார்களின் வேகத்தை உடனடியாக அதிகப்படுத்த முடியும்.
உட்புற இடவசதி:- எலக்ட்ரிக் கார்களின் பவர்ட்ரெயின்களுக்குக் குறைவான பாகங்கள் மட்டுமே தேவைப்படும். இதனால் காரின் உட்புறம் இடவசதியும் சௌகரியாக இருக்கும்.
வரிச் சலுகை:- எலக்ட்ரிக் கார்களை வாங்கும்போது வரிச் சலுகை கிடைக்கும். 2020-21 மதிப்பீட்டு ஆண்டு முதல், செக்ஷன் EEB-ன் கீழ் எலக்ட்ரிக் கார் வாங்க கடன் வாங்கும்போது செலுத்தப்படும் வட்டியில் 1.5 லட்ச ரூபாய் கழிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் 2023-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை அனுமதிக்கப்படும் எனத் தெரிகிறது. வரி செலுத்தும் தனிநபர்கள் அல்லது வணிகத்தை நடத்தும் தனிநபர்களுக்கு மட்டுமே இந்த அனுமதி பொருந்தும்.
தொகுப்பு: ஸ்ரீவித்யா