'கேபிஆர் மில் கதை' - 30,000 பெண்களின் வாழ்வை மேம்படுத்தி ரூ.30,000 கோடி மதிப்பு பிசினஸ் கோட்டை அமைத்த விவசாயி மகன்!
இந்தியாவின் மிகப் பெரிய ஆடை உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான கேபிஆர் மில் நிறுவனத்தின் கதை நெகிழ்ச்சி நிறைந்தது.
Key Takeaways
- பெண்களுக்கு உகந்த பணிச்சூழலை உருவாக்குதன் மூலம் நிறுவன வளர்ச்சிக்கு வித்திட்டது கேபிஆர் மில்.
- கேபிஆர் நிறுவனத்தின் 30,000 பணியாளர்களில் 95% பேர் பெண் ஊழியர்கள்.
- இந்தியாவின் மிகப் பெரிய ஆடை உற்பத்தி நிறுவனமான கேபிஆர் மில்லின் சந்தை மூலதனம் ரூ.28,400 கோடி.
“நீங்கள் ஓர் ஆணுக்கு கல்வி கற்பித்தால், நீங்கள் ஒரு நபருக்கு மட்டுமே கல்வி கற்பீர்கள். ஆனால், நீங்கள் ஒரு பெண்ணுக்கு கல்வி கற்பித்தால், நீங்கள் ஒரு முழு குடும்பத்திற்கும் கல்வி கற்பீர்கள்..." - இது மகாத்மா காந்தி உரைத்த பொன்மொழி.
கேபிஆர் மில்லில் இது ஒரு பொன்மொழி மட்டுமல்ல, அவர்களை வழிநடத்தும் கொள்கையும் கூட. அதைவிட அவர்களின் நிறுவனர் கே.பி.ராமசாமியின் தத்துவமும் இதுதான்.
ரூ.28,400 கோடி சந்தை மூலதனம் கொண்ட கே.பி.ராமசாமியின் நிறுவனம், இந்தியாவின் மிகப் பெரிய ஆடை உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகும். தனது லீடர்ஷிப், நிறுவனத்தின் சந்தை மூலதனத்தை தாண்டி கேபிஆர் மில்லின் கதை நெகிழ்ச்சி நிறைந்தது.
கே.பி.ராமசாமி அல்லது கே.பி.ஆர் என்றும் அழைக்கப்படும் அவர், பரிவுடன் தொழில்களை உருவாக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர். இதுதான் கேபிஆர் மில்லில் அவர் கடைபிடிக்கும் தத்துவம் கூட.
கேபிஆர் நிறுவனத்தின் மொத்தம் 30,000 பணியாளர்கள் உள்ளனர். இதில் 95% பெண் ஊழியர்கள். அதிலும் பெரும்பாலானோர் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள். கிராமப்புறத்தில் இருந்து வந்தவர்கள் என்றாலும் முறையான பயிற்சி பெற்றவர்கள்.
“எங்கள் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்கள் தொலைதூர கிராமங்களை சேர்ந்தவர்கள். அதிலும் அடிப்படை வசதிகள்கூட இல்லாத கிராமங்களில் இருந்து வந்தவர்கள். அப்படியான இடத்தில் இருந்து வந்த அவர்களின் அனைத்து தேவைகளும் எங்களின் மில்லில் கவனிக்கப்படுகின்றன. அதனால் அவர்கள் பணியிடத்தில் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருக்கிறார்கள். இது உற்பத்திக்கும் பலனளிக்கிறது,” - என்று ‘யுவர் ஸ்டோரி’க்கு அளித்த பேட்டியில் கே.பி.ராமசாமி தெரிவித்தவை.
கேபிஆர் மில், நாட்டின் மிகப் பெரிய ஆடை உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று. கடந்த நிதியாண்டில் கேபிஆர் மில்லின் வருவாய் ரூ.6,127 கோடி. அதில், ரூ.1,040 கோடிக்கு மேல் லாபம் மட்டுமே. இப்படி நிறுவனத்தின் வணிகம் வலுவான நிலையில் இருக்க முக்கிய காரணம், வெளிநாடு ஏற்றுமதி. 60 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது கேபிஆர் குழுமம். இதன் மூலமாக கிடைக்கும் வருவாய் மட்டும் ரூ.1000 கோடிக்கும் அதிகம்.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், 1,617.4 கோடி ரூபாய் வருவாயும், இதில் 203.3 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது. உலக அளவில் பொருளாதார நிலைமைகள் மோசமடைந்து வரும் இந்தச் சூழலில் இந்த அளவு லாபம் என்பது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
இவ்வளவு பெரிய சாதனைக்கு காரணமாக அமைந்தது,
“இரக்கமுள்ள முதலாளித்துவ மனப்பான்மையுடன் லாப நோக்கமற்ற பிசினஸை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் ஜவுளித் தொழிலில் நிறுவனத்தை எங்களை ஒரு வலிமைமிக்க சக்தியாக மாற்ற உதவியது,” என்பதுதான். இது கேபிஆர் கருத்து.
புதிய யுக்திகள்...
கோடிகளை குவிக்கும் கேபிஆர் நிறுவனத்தின் பயணம் என்பது தனது தாய் மாமாவிடமிருந்து கே.பி.ராமசாமி பெற்ற ரூ.8,000 கடனுடன் தொடங்கியது. இத்தனைக்கும் அவரிடம் இந்தத் தொழிலில் போதிய அனுபவமோ, பணமோ இல்லை. ஓர் விவசாயி மகனாக, கடுமையான பொருளாதார சிக்கல் காரணமாக பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டவர் கேபிஆர். அவரிடம் இருந்தது எல்லாம் அசைக்க முடியாத உறுதியும், ஒழுக்கமும்தான். இவைதான் அவருக்கான உந்து சக்தி. இதைக் கொண்டு விடாமுயற்சியுடன் வெற்றி பெற்றார்.
1996-ல் கேபிஆர் குழுமம் முதல் ஸ்பின்னிங் மில்லை நிறுவியது. மில் தொடங்கப்பட்ட பேச்சுக்கள் பக்கத்தில் உள்ள அருகில் உள்ள கிராமங்களை எட்டியது. அங்கிருந்த இளம்பெண்கள் வேலை தேடி மில்லின் வாயிலில் நிற்கத் தொடங்கினர். ஆனால், இதில் இருந்தது ஒரு கவலை, பணிபுரிந்துகொண்டே அந்த இளம்பெண்கள் உயர் கல்வியையும் பெற விரும்பினர்.
“ஒருமுறை ஓர் இளம்பெண் என்னிடம் வந்து, இங்கு பணிபுரிந்து கொண்டே கல்வியைத் தொடர முடியுமா என்று கேட்டார். அது என்னை யோசிக்க வைத்தது. அதன்படி, நான் அதை எளிதாக்க முடிவு செய்தேன்,” என்று விளக்குகிறார் கேபிஆர்.
இதனையடுத்து, பெண் ஊழியர்களுக்கு தொழில், கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்கான பயிற்சித் திட்டங்களைத் தொடங்கியது கேபிஆர் குரூப். இதில் பங்கேற்று கிராமப்புற பெண்கள் பயன்பெற்றனர்.
“பெண் ஊழியர்களை ஆதரிக்க எங்களின் அணுகுமுறையானது சரியான பணிச்சூழலை உருவாக்குதல் மற்றும் தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குதல் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது. நாங்கள் எங்கள் சொந்த மகள்களை நடத்துவது போல் பெண் ஊழியர்கள்களை நடத்துகிறோம்” - கேபிஆர்.
தொலைதூர கிராமங்களில் இருந்து வந்து தங்கி வேலை செய்த பெண் ஊழியர்களுக்கு நர்சிங் பயிற்சி, கணினி பயிற்சி, தொழில் பயிற்சி, உயர் கல்வியும் கேபிஆர் குரூப் வழங்கியது. இன்று அங்கு சுமார் 5,000 இளம் பெண்கள் உயர் கல்விக்கான கல்விப் பயிற்சி பெறுகின்றனர். பெண்களின் முன்னேற்றத்திற்கான இந்த தொலைநோக்கு அணுகுமுறை பலனளித்துள்ளது.
கேபிஆர் மில்லில் பயிற்சிபெற்ற 194 பெண் ஊழியர்கள் டாடா எலக்ட்ரானிக்ஸ், டெக் மஹிந்திரா மற்றும் டைட்டன் போன்ற பிரபல நிறுவனங்களில் வேலை பெற்றனர்.
லீடர்ஷிப் என்பது மக்களை மையமாகக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ராமசாமியின் நம்பிக்கையே கேபிஆர் மில்லை வடிவமைத்தது.
“உங்கள் மக்களை முன்னேற்றுங்கள், அதன்பின் உங்கள் பிசினஸை முன்னேற்றுங்கள்...” என்ற அவரின் தத்துவம் வெற்றிக்கான படியாக அமைந்தது.
ஒருங்கிணைந்த முயற்சிகள் கேபிஆர் ஆலையை நூல் உற்பத்தி தொழிலில் இருந்து ஆடை ஏற்றுமதி வணிகமாக மாற்றியுள்ளது. இன்று, கேபிஆர் குழுமம் படிப்படியாக தனது செயல்பாடுகளை சர்க்கரை, எத்தனால், சொகுசு - கார் டீலர்ஷிப்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் கல்வி போன்ற வேறு தொழில்களிலும் முதலீடுகளை விரிவுபடுத்தியுள்ளது. இதுதவிர, கேபிஆர் குழுமம் கேபிஆர் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்லூரி மற்றும் கேபிஆர் ஐஏஎஸ் அகாடமியை நடத்துகிறது.
எதிர்காலம்...
கேபிஆர் மில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் கவனம் செலுத்துவதோடு, சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்தியாவை உருவாக்கவும் முயற்சித்து வருகிறது. அவர்களின் பசுமை வளாகம், 200,000-க்கும் மேற்பட்ட மரங்கள், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான அவர்கள் எடுத்துக்கொண்டுள்ள உறுதிப்பாட்டுக்கு சான்று.
“நான் ஒரு விவசாயி குடும்பத்திலிருந்து வந்தவன். மரங்களை நடுவதும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும் எனது முக்கிய அடையாளம். கோவிட் சமயத்தில் இந்தியாவில் துரதிருஷ்டவசமாக ஏராளமான உயிர்கள் பலியாகியபோது தான், ஆக்ஸிஜனின் முக்கியத்துவத்தை நாங்கள் மேலும் உணர்ந்தோம்” - கேபிஆர்.
சுற்றுசூழலை தாண்டி நேரடியாகவும் மறைமுகமாகவும், கேபிஆர் மில் மற்றும் ராமசாமி 10 லட்சத்துக்கும் அதிகமான பெண்களின் வாழ்க்கையை முன்னேற்றி வருகின்றனர்.
“பெண்களின் அந்தஸ்து எதுவாக இருந்தாலும், அனைவரையும் சமமாக நடத்துவதை நான் நம்புகிறேன். மனிதநேயம்தான் என்னை இயக்குகிறது,” என்கிறார் கேபிஆர்.
கேபிஆர் மில் தனது ஆரம்ப கட்டங்களில் இருந்தே பெண்கள் மீது முதலீடு செய்வதில் வெற்றிகண்டுள்ளது. இந்த வெற்றிக்கு காரணம், சமூகத்தின் மீதான வலுவான உணர்வு, தோழமை மனப்பான்மை, ஊழியர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதில் உதவியாக இருக்கும் ஹெச்.ஆர் குழு.
“மற்ற மில்களை விட எங்கள் மில்லில் உற்பத்தியும் அதிகரித்தது, பொருளின் தரமும் மேம்பட்டது. இதற்கு ஆரம்ப காலங்களில் பெண்கள் மேம்பாட்டில் நாங்கள் செலுத்திய கவனம்தான். எங்கள் பெண் ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருந்தால், அவர்கள் மகிழ்ச்சியான உற்பத்திச் சூழலை உருவாக்குவார்கள்,” என்று பெண்கள் மீது செய்த முதலீடுகளால் கிடைத்த பலன் பற்றி பேசுகிறார் கேபிஆர்.
ராமசாமி தனது பெண் ஊழியர்களின் நலனை மேம்படுத்துவதற்கும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும், இந்தியாவின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கும் பங்களிப்பதில் உறுதியாக இருக்கிறார். அவர் தன்னை ராமாயணத்தில் உள்ள அணிலுக்கு ஒப்பிடுகிறார். ஒரு பெரிய முயற்சிக்கு சிறிய, ஆனால் குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராக உள்ளதாக குறுப்பிடுகிறார்.
ராமர் சேது பாலம் கட்ட அணில் உதவியதைப் போல, வலிமையான இந்தியாவை உருவாக்குவதில் தானும் தனது நிறுவனமும் ஓர் அர்த்தமுள்ள பங்கை வகிக்க முடியும் என்று கே.பி.ராமசாமி நம்புகிறார்.
மூலம்: ஷ்ரத்தா சர்மா
Edited by Induja Raghunathan