இந்தியாவின் 'இஞ்சி டீ’ வைத்து அமெரிக்காவில் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ப்ரூக் எடி..!
நமக்கு அனைத்துமே சாதாரணம். அம்மா செய்யும் இட்லியில் இருந்து கோழிக் குழம்பு வரைக்கும், வீட்டிற்கு வெளியே கிடைக்கும் முருங்கக் கீரையில் இருந்து வீட்டுக்கு மேல இருக்கும் கூரை வரைக்கும் அனைத்துமே சாதாரணம் தான். ஆனால் ஒரு சிலர் அந்த சாதரணமான பொருட்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அசாதாரணமான வாய்ப்புகளை காண்கின்றனர்.
சென்னையில் மட்டுமில்லாது வெளிநாடுகளில் கூட ’முருகன் இட்லி கடை’ கொடி கட்டி பறக்கின்றது. இங்கே பெரிதாக எந்த சந்தையிலும் முருங்கக் கீரையை பாக்க இயலாது. காரணம் டன் கணக்கில் அது ஏற்றுமதி ஆகிறது. பல லட்சங்கள் கொடுத்து வெளிநாட்டு கம்பெனி வாங்கி நமக்கே அதை மருந்தாக திருப்பி அனுப்புகிறான், அதுவும் அதிகப்பட்ச விலைக்கு. அதனால் தான் கூறுகிறேன் அனைத்துமே சாதாரணம் தான் நமக்கு.
அவ்வாறு நீங்கள் அசால்ட்டாக தினம்தினம் பருகும் தேனீரை வைத்து 227 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி உள்ளார் அமெரிக்க பெண்மணி ப்ரூக் எடி.
மும்பை நகரத்து தெருக்களில் நீங்கள் ’அதரக் சாய்’ அருந்தி இருந்தால், சென்னையின் தேநீருக்கும், அதற்கும் மலை அளவு வித்தியாசம் உணர்வீர்கள். அதே போன்று கேரளாவின் ’கட்டன் சாயா’, ஆசாமில் நீங்கள் அருந்தும் தேநீரும் வேறு வேறு சுவையோடு இருக்கும். பால் சேர்த்து, சேர்க்காமல், இஞ்சி சேர்த்து சேர்க்காமல், சுத்தமான மாட்டுப்பாலில் செய்யப்பட்ட தேநீர், பாக்கெட் பாலில் செய்யப்பட்ட தேநீர் என நமது நாட்டில் தேநீரின் சுவை பலவிதம்.
இந்த வகைகள் தான் 2002-ல் ப்ரூக் இந்தியா வந்திருந்த போது அவரை வியக்க வைத்தது. கொலராடோ நகரில் உள்ள க்லென்ஸ்ப்ரிங்க்ஸ் என்ற இடத்தில் ’ஹிப்பி’ வாழ்வியல் முறை கடைபிடித்த பெற்றோருக்கு பிறந்து, பின்னர் ப்ரூக் எடி இந்தியாவின் தீவிர ரசிகை ஆனார். அவர் பல பேட்டிகளில் கூறுவது,
“ஒவ்வொரு முறையும் இந்தியா வரும்போதும் அது எனக்கு புதிதாக ஒன்றை கற்றுத்தருகிறது.”
ப்ரூக்; இந்தியா வந்தது ஸ்வதை என்ற வாழ்வியல் முறையை கற்க. 20 மில்லியன் மக்கள் அதனை கடைபிடிப்பதாகவும், ஆனால் பலரும் அறியாமல் இருப்பதும் வியப்பாக இருக்கிறது என்கிறார் ப்ரூக். இப்படி தெனிந்தியாவில் பல பகுதிகளுக்கு சுற்றி வருகையில், அங்கு கிடைக்கும் தேநீர் மிகவும் பிடித்து விட்டது ப்ரூக்கிற்கு. எனவே அதனை எவ்வாறு செய்வது என்பதையும் கற்றுக்கொண்டார். வெவ்வேறு விதமாக , எதை எப்போது சேர்ப்பது, எதற்காக, எந்த அளவில் சேர்ப்பது போன்ற ’தேநீர் தந்திரங்கள்’ அவருக்கு எளிதாக விளங்கின. மீண்டும் அமெரிக்கா சென்று அவரது வீட்டில் தேநீர் செய்து பருகி வந்தார்.
அவரது இல்லத்திற்கு வந்த நண்பர்களுக்கு அதன் சுவை பிடித்துப்போக, அவரிடம் மீண்டும் வேண்டும் என கேட்க ஆரம்பித்தனர் (நமது தேநீரையா?? என நீங்கள் எண்ணினால், அவர்கள் மொக்கையாக கருதும் ஸ்டார் பக்ஸ்சில் பல ஆயிரங்கள் நாம் செலவழிப்பதை எண்ணிப்பாருங்கள்...). அதனை தயாரித்து தனது குளிர்சாதன பெட்டியில் வைத்து விட்டு வெளியே சென்று வந்து பார்த்தால், அவரது நண்பர்கள் அதனை அருந்திவிட்டு அதற்கான பணத்தையும் அந்த பெட்டி மீது வைத்துவிட்டு சென்று விடுவார்களாம். இந்த செயல் மற்றும் அவரது தயாரிப்புக்கு கிடைத்த வரவேற்பு, ஏன் நாம் இதை ஒரு தொழிலாக செய்யக்கூடாது என ப்ரூக்கை எண்ண வைத்தது.
பக்தி சாய் :
முதலில் தனது நிறுவனத்திற்கு ஒரு பெயர் வேண்டும் என்பதால் அதனை முடிவு செய்ய யோசித்துள்ளார் எடி. பின்னர் இந்தியாவில் இருந்துதான் இந்த யோசனை தனக்கு கிடைத்தது என்பதால், வெளியுலகிற்கு இந்தியா என்றால் உடனே மனதிற்கு தோன்றுவது இங்கே இருக்கும் பக்தி மார்க்கம், என்பதால் நிறுவனத்தின் பெயரையும் ’பக்தி’ 'Bhakti' என்றே வைத்துள்ளார்.
முதலில் தான் வசித்து வந்த போல்டர் நகரில் உள்ள கபேக்களில் இது போன்று ஒரு பானத்தை தேடிபார்த்து அது கிடைக்காமல், அதற்கு மாற்றாக நமது 'சாய்' இருக்கும் என்ற எண்ணத்தில் 2007 ஆம் ஆண்டு அவரது காரின் பின்புறத்தில் தனது தயாரிப்பை வைத்து விற்பனையை துவக்கியுள்ளார். அதற்கான வரவேற்பு நன்றாக இருக்க, அடுத்தகட்டமாக மேஷன் ஜாடிகளில் தனது தேநீரை விற்பனை செய்துள்ளார்.
முக்கியமாக இஞ்சி டீ தான் அங்கு பலரும் விரும்பி அருந்தும் பானமாக உள்ளது. இதற்காகவே இவரது நிறுவனம் ஒரு வருடத்திற்கு, பெரு நாட்டில் இருந்து 3 லட்சம் பவுண்ட் இஞ்சியை இறக்குமதி செய்கிறது.
முதலீடு :
2007-ல் துவங்கிய நிறுவனம் படிப்படியாக வளர்ந்து 2010ஆம் ஆண்டு 10 லட்சம் அமெரிக்க டாலர்களை முதலீடாக பெற்றது. இதுநாள் வரை இந்நிறுவனத்தின் வளர்ச்சி அற்புதமாக இருந்துள்ளது. துவங்கியது முதல் இப்போது வரை 35 மில்லியன் டாலர்கள் வருமானமாக ஈட்டியுள்ளது இந்நிறுவனம். 2018 இல் 7 மில்லியன் டாலர்கள் வருமானம் வந்துள்ளது.
2011ஆம் ஆண்டு ’ரெடி டு ட்ரின்க்’ வடிவில் தேநீரை இவர் களமிறக்க, தேசிய அளவிலான விற்பனைக்கு வாய்ப்பு வந்தது. தற்போது இவரது நிறுவனத்தில் 26 தொழிலாளிகள் வேலைபார்க்கின்றனர். தேநீர் சுவை கலவையை தயாரித்து, பாக் செய்து அனுப்பி வைப்பது வரை அவர்கள் கையாளுகின்றனர்.
கீதா (GiveInspireTakeAction) :
2015 ஆம் ஆண்டு இந்நிறுவனத்தின் சார்பில் ப்ரூக் GITAவை துவக்கினார். கீதா என்றால், “கிவ், இன்ஸ்பையர், டேக் ஆக்ஷன்” என்ற வார்த்தைகளின் சுருக்கமாகும். ஆங்கிலத்தில் நமது பகவத் கீதையை, பகவத் கீதா என கூறுவர். அதில் இருந்து இந்த பெயரை உருவாக்கியுள்ளார். பெயருக்கு ஏற்ப இதுவரை நன்கொடையாக $ 500,000 அளித்துள்ளார் ப்ரூக். இதன் மூலம் வீடில்லாதவர்களுக்கு உணவு உடை உறைவிடம் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விரிவாக்கம் :
ஒரு நிறுவனம் பெரிதாகின்றது என்றால் அதன் சிக்கல்களும் பெரிதாகின்றது என்பதை உணர்ந்துள்ளார் எடி. அதிகமான வாடிக்கையாளர்களை சென்றடைந்தால் போட்டியும் அதிகமாகும், அதற்கு ஏற்ப செலவுகளும் கைமீறும். எனவே வளர்ச்சியை பொருத்த வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார் ப்ரூக். இன்க் வலைதளத்திற்கு அவர் அளித்த பேட்டியில்,
“என்னுடைய வாடிக்கையாளர்கள் கூற வேண்டியது யாதெனில், பக்தி நிறுவனம் எதை செய்தாலும் அது அற்புதமாக இருக்கும். அவர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு. அவர்கள் பொருட்களுக்கு ஆன்மா உண்டு,” என்பதே என்கிறார்.
அவரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது, யோசனையும் வாய்ப்பும் கடவுளை போன்று. தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும். அதனை உணர்ந்து, வெளிக்கொணர்வது நமது நம்பிக்கையிலும், முயற்சியிலும் தான் உள்ளது.