விசிலடித்தல் டு தூங்குதல்: இந்த 7 ‘விநோத’ வேலைகளுக்கு இவ்வளவு சம்பளமா?
‘இப்படியெல்லாம் கூட வேலை இருக்கிறதா?’ எனத் தெரியாத அளவுக்கு சில ‘விநோத’ வேலைகள் இருக்கின்றன. அதுவும் வியத்தகு சம்பளத்தில் என்றால் நம்பமுடிகிறதா?
உங்களை அன்றாடம் பிழிந்து எடுக்கும் 9 டு 5 வேலையை விடுத்து தனித்துவமான வேலை வாய்ப்புகளை தேடுகிறீர்களா? அப்படியென்றால், இந்தக் கட்டுரை உங்களுக்குத்தான்!
‘இப்படியெல்லாம் கூட வேலை இருக்கிறதா?’ எனத் தெரியாத அளவுக்கு சில ‘விநோத’ வேலைகள் இருக்கின்றன. வழக்கமாக ‘கிக்ஸ் பே’ (gigs pay) எனப்படும் பணியாட்கள் பெறும் ஊதியத்தைவிட அதிகமாக சம்பாதிக்கலாம். அத்தகைய விந்தையான வேலை வாய்ப்புகளை உங்களுக்காகப் பட்டியலிடுகிறோம் இங்கே...

1. பாம்பு விஷம் சேகரித்தல்
Snake milker: படையே அஞ்சினாலும் உங்களுக்கு பாம்பைக் கண்டு அச்சமில்லை என்றால் இது உங்களுக்கான வேலைதான். கொடிய விஷப் பாம்புகளிடம் இருந்து அதன் விஷத்தை சேகரித்தல். இந்த விஷத்தைக் கொண்டு பாம்பு விஷ முறிவுக்கான மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இதனால் மருத்துவச் சந்தையில் இதற்கு நல்ல மவுசு. மேலும், இந்த பாம்பு விஷம் கொண்டு பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிகளும் கூட மேற்கொள்ளப்படுகின்றன.
சம்பளம்: ஆண்டுக்கு ரூ.30 லட்சம் வரை கூட சம்பாதிக்கலாம்.
2. விசில் அடிக்கத் தெரியுமா?
Professional whistler: விசில் அடிப்பதெல்லாம் ஒரு பிழைப்பா எனக் கேட்டால், ‘ஆம்’ என்கிறது ஒரு கட்டுரை. உங்களுக்கு மிகச் சிறப்பாக விசில் அடிக்க வருமேயானால் விளம்பரங்கள், லைவ் நிகழ்வுகள், சினிமாக்களில் விசில் அடிக்கும் வேலை செய்யலாம். மேலும், நீங்கள் விசில் அடிப்பதில் கைதேர்ந்தவர் என்றால் ஆன்லைனிலும் விசில் அடிக்கப் பயிற்றுவிக்கலாம்.
சம்பளம்: திறமைக்கு ஏற்ப விசில் அடிப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.40,000 முதல் ரூ.25 லட்சம் வரை கூட சம்பாதிக்கலாம்.

3. நறுமணம் மதிப்பாய்வர்!
Fragrance or odor judge: ‘அட இது என்ன... பெயரே வித்தியாசமாக இருக்கிறது?!’ எனக் கேட்கிறீர்களா? ஆம், வேலையும் வித்தியாசமானது தான். வாசனை மதிப்பாய்வர்கள் நறுமணப் பொருட்கள் தயாரிப்பு நிலையங்கள், உணவு உற்பத்தி தொழிற்சாலைகள் அல்லது ஆய்வகங்களில் பணியமர்த்தப்படுகின்றனர்.
சம்பளம்: வாசனை மதிப்பாய்வர் ஆண்டுக்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை சம்பாதிக்கின்றனராம்.
4. செல்லப் பிராணிகளுக்கான உணவு பரிசோதகர்
Pet food taster: நீங்கள் உணவுக் காதலர் என்றால், இந்த வேலை உங்களுக்கு ருசிகரமானதாகவே இருக்கும். செல்லப் பிராணிகளுக்கான உணவுப் பரிசோதகர் வேலை செய்வோர், அந்த உணவில் ருசி, தன்மை, தரம் ஆகியவற்றை பரிசோதித்து சொல்ல வேண்டும். எப்படி எனக் கேட்டால், புசித்து பரிசோதிக்க வேண்டும்.
சம்பளம்: செல்லப் பிராணிகள் உணவுப் பரிசோதகர்கள் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரை கூட சம்பாதிப்பதாக கூறப்படுகிறது. இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், இது ஆரம்ப நிலை பரிசோதகர்களில் ஆரம்பச் சம்பளமாம்!
5. தொழில்முறை தூக்கம்
Professional sleeper: ‘தூங்குவதற்கு சம்பளமா?’ என வியக்கலாம். ஆனால் கொடுக்கிறார்கள். மெத்தை, தலையணை, தூக்கம் சம்பந்தமான பிற பொருட்களின் தரப் பரிசோதனைக்காக இந்த தூங்குநர்கள் (தூக்க நிபுணர்கள்) பணியமர்த்தப்படுகின்றனர். நன்றாக தூங்கி எழுந்து மெத்தை, தலையணை, போர்வை உள்ளிட்ட தூங்கத் தேவையான பொருட்களின் தரத்தை அவர்கள் அறிக்கையாகக் கொடுக்க வேண்டும். இந்த வேலையின் ஒரே பின்னடைவு என்னவென்றால், இதற்கு கடும் போட்டி நிலவுகிறது. அதேபோல், மற்ற வேலைகளைப் போல் இதில் சம்பாத்தியம் உத்தரவாதம் இல்லை. நிறைய ஊதியமும் கிடைக்காது.
சம்பளம்: தொழில்முறை தூங்குநர்கள் ரூ.10 லட்சம் வரை ஒரு ப்ராஜக்ட்டில் சம்பாதிக்கலாம்.

6. காது சுத்தப்படுத்துபவர்
Ear cleaner: இந்திய நகரங்கள், பரபரப்பான பகுதிகள், சந்தைகளில் காது அழுக்கு அகற்றுவோரை நாம் பார்த்திருப்போம். பஞ்சு, சிறிய கம்பிகள் ஆகியனவற்றுடன் சுத்துவதைப் பார்த்திருக்கலாம். அவர்கள் நம் காதுகளில் இருக்கு அழுக்கை லாவகமாக சுத்தப்படுத்துவார்கள். இது ரொம்பவே வினோதமாக இருந்தாலும் கூட இன்னும் சிலர் இந்தச் சேவையை விரும்பி நாடுகின்றனர்.
சம்பளம்: காது சுத்தப்படுத்துவோர் அன்றாடம் ரூ.1500 முதல் ரூ.2500 வரை கூட சம்பாதிக்கின்றனர்.
7. அனுதாபி!
Empathetic listener: அனுதாபியா? பெயரே வினோதமாக இருக்கிறது எனத் தோன்றாமல் இருக்காது. ஆம், இந்த பரபரப்பான உலகில் யாரும் யாருக்கும் ஆறுதல் சொல்லக்கூட நேரமில்லாமல் தான் இயங்கிக் கொண்டிருக்கிறோம். அதுதான் இந்த அனுதாபிகளின் வேலை. இவர்கள் முன்பின் தெரியாதவர்களிடம் அவர்களின் மனத்தாங்கல்களை பொறுமையாகக் கேட்டு அதன் மீது அனுதாபப்பட்டு ஆறுதல் கூறுவார்கள்.
அனுதாபப்படக் கூட ஆள் இல்லாத உறவுச் சூழலில், அது இன்று தொழிலாக உருவெடுத்துள்ளது. அண்மைக் காலத்தில் அரும்பியுள்ள புதிய தொழில் என்பதால் இதன் நிமித்தமான வருமானம் பற்றிய தரவுகள் இல்லை.
ஆனாலும் கூட லிங்க்ட் இன், அப்ஒர்க் போன்ற செயலிகளில் இந்தத் திறமையை தெரிவித்து, நீங்கள் உங்களையும் தொழில்முறை அனுதாபிகள் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்.
சம்பளம்: அனுபவத்துக்கு ஏற்ப வேறுபடுமாம்.
வேலை வாய்ப்புகளுக்கு எல்லை இல்லை!
உலகில் இதுபோன்று இன்னும் இன்னும் நிறைய விநோதமான வேலைகள் இருக்கின்றன. இவற்றை நாம் யோசித்துக்கூடப் பார்த்திருக்க மாட்டோம். வாசனை மதிப்பாய்வர் தொடங்கி பாம்பு விஷம் சேகரிப்பாளர் வரை ஒவ்வொன்றும் தனித்துவமானவையே. உங்களுக்கு இதுபோல் சவாலான வேலைகள் வேண்டும் என்றால் இவற்றை முயற்சி செய்து பார்க்கலாம்.
உங்களுக்கான கனவு வேலை, நீங்கள் சற்றும் எதிர்பாராத இடத்தில் இருந்து கிடைக்கலாம். உங்கள் கனவுகளைத் துரத்தும் காலம் இப்போதும்கூட கடந்துவிடவில்லை. இதுபோன்ற விந்தையான, விநோதமான, புதுமையான வேலைகள்தான் விருப்பம் என்றால், தேடிக் கண்டடையுங்கள். யாருக்குத் தெரியும்... இதுவரை இல்லாத வேலையில் சேர்ந்து அதில் நிறைவாக சம்பாதிக்கும் சூழல் உருவாகலாம்!

புதிய வேலையில் சேரும் முன்பு நீங்கள் கேட்க வேண்டிய 7 கேள்விகளும் கைடன்ஸும்!
Edited by Induja Raghunathan