'செட்டிநாடு அனுபவப் பயணம்' - பாரம்பரிய ஹோட்டல் ஆன 230 ஆண்டுகள் பழமையான வரலாற்று வீடு!
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தானில் 1795-இல் கட்டப்பட்ட பழமையான அரண்மனை வீடு ஒன்று, பழமை மாறாமல் சில மாடர்ன் அம்சங்களோடு புதுப்பிக்கப்பட்டு 5 ஸ்டார் ஹோட்டலாக மாற்றப்பட்டு, செட்டிநாட்டின் அழகை ரசிக்க வருவோருக்கு மண் சார்ந்த சிறந்த அனுபவத்தை தருகிறது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டத்தில் அமைந்துள்ள கானாடுகாத்தானில் 230 ஆண்டுகள் பழமையான அரண்மனை வீடு ஒன்று தற்போது புதுப்பிக்கப்பட்டு 5 ஸ்டார் ஹோட்டலாக மாற்றப்பட்டு, செட்டிநாட்டின் அழகை ரசிக்க வருவோருக்கு மண் சார்ந்த சிறந்த அனுபவத்தை தருகிறது.
சென்னை டு கானாடுகாத்தான் - ஒரு அனுபவப் பயணம்
சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு திருச்சியை அடைந்தோம். திருச்சி டு கானாடுகாத்தான் 81 கி.மீ தூரம் கார் மூலம் சென்றால் ஒன்றரை மணி நேரத்தில் சென்றுவிடலாம். ‘தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம்’ என்று அழைக்கப்படும் கானாடுகாத்தனில் நுழையும்போது, சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. தெருக்களின் இருபுறத்திலும் வீடுகளும், பாழடைந்த அரண்மனைகளுமாக ஆள் அரவமின்றி காட்சி அளிக்கின்றன.
ஆனால், அவற்றையும் தாண்டி, அங்கு வியாபித்திருக்கும் மண்வாசமும், இயற்கைப் பேரெழிலும், செட்டிநாட்டின் வரலாற்றைத் தாங்கிப் பிடித்திருப்பதை நமக்கு உணர்த்துகின்றன. பயணத்தை ரசித்தவாறே சி.வி.சி.டி தெருவில் நுழைந்தபோது, பளிச்சென வண்ணமயமான செட்டிநாட்டு அரண்மனை பாணியில் இருந்த அந்த வீட்டின் அழகு நம்மை வெகுவாக வசீகரித்தது.
17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அரண்மனைகளையே வீடுகளாகக் கொண்டிருக்கும் கானாடுகாத்தான் வரலாறு மற்றும் பாரம்பரியத்தைக் குறிக்கும் பூமியாக இன்றும் இருப்பதை நேரில் கண்டுணரலாம்.
கிட்டத்தட்ட 230 ஆண்டுகளுக்கு முன் 1795-ல் கட்டப்பட்ட அரண்மனை ஒன்று தற்போது புதுப்பிக்கப்பட்டு, செட்டிநாட்டுக்கு சுற்றுலா வருவோர் தங்கி சுற்றிப் பார்க்கும் ஹோட்டலாக ஜொலிக்கிறது.
‘என்னது..? இத்தனை பழமைவாய்ந்த அரண்மனையை தங்கும் ஹோட்டலாக மாற்ற முடியுமா?’ என்றுதானே கேட்கிறீர்கள்?!
ஆம்... 230 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு, 150 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் பாழடைந்து இருந்த செட்டியார் குடும்பத்தின் அரண்மனையை லீஸுக்கு எடுத்து, கட்டிடத்தின் பாரம்பரியத்தை 95% தக்கவைத்து, ஓர் அழகிய தங்குமிடமாக மாற்றியமைத்துள்ளனர் பிரபல ஏபிஜே சுரேந்திரா பார்க் ஹோட்டல் குழுமத்தினர்.
செட்டிநாடு பாரம்பரியம்
‘நாட்டுக்கோட்டை செட்டியார்களின் நிலம்’ என்று சொல்லப்படும் செட்டிநாடு, தமிழ்நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பகுதியாகும். ஒரு காலத்தில் 96-க்கும் மேற்பட்ட நகரங்களை உள்ளடக்கியிருந்த இப்பகுதி, பல சோழர் மற்றும் பாண்டியர் கால கோயில்களின் இருப்பிடமாக இருந்துள்ளது. இதனால், இது இந்தியாவின் மிகவும் பாரம்பரிய சுற்றுலா இடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
புதுச்சேரிக்கு அருகிலுள்ள பண்டைய கடலோர நகரமான பூம்புகாரில் செட்டியார் சமூகத்தினர் அதிகம் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட சுனாமியில் மூழ்கி பூம்புகார் அழிந்த பிறகு, செட்டியார்கள் புதிய இடங்களுக்கு புலம்பெயர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
அப்போது, மதுரை, சிவகங்கை பகுதிகளை ஆண்டு வந்த பாண்டிய அரசர்கள்தான் செட்டியார்களுக்கு நிலங்களை வழங்கியதாகக் கூறப்படுகின்றது. அதுவே பின்பு புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களின் சில பகுதிகளை இணைக்கும் செட்டிநாடு பிராந்தியமாக உருவாகியுள்ளது.
அப்போது செட்டியார்கள் முதன்முதலில் குடியேறிய இடமான கானாடுகாத்தான், உண்மையில் ‘காணாதநாடுகாத்தான்’ என்று பெயரிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. அப்பகுதியை, வாணிபத்தில் சிறந்து விளங்கிய செட்டியார்கள் செழிப்படைந்த இடமாக மாற்றியமைத்துள்ளனர் என்கின்றது வரலாறு.
17-ம் நூற்றாண்டுகளில் செழிப்புடன் அங்கு வாழ்ந்து வந்த 'நகரத்தார்' என்றும் அழைக்கப்படும் செட்டியார்கள், தங்கள் வீடுகளை அரண்மனைகள் போல் கட்டி தங்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பறைசாற்றும் விதமாக திகழ்வதற்கு வழிவகுத்துள்ளனர். அப்படி 1795-ல் கானாடுகாத்தானில் கட்டப்பட்ட ஓர் அரண்மனை வீடே தற்போது புதுப்பொலிவுடன் மக்கள் தங்கும் ஆடம்பர ஹோட்டலாக மாறியுள்ளது.
பழமையும் - புதுமையும்
பார்க் ஹோட்டல் குழுமத்தினர் புதுப்பித்துள்ள அரண்மனையே ‘தி லோட்டஸ் பேலஸ், செட்டிநாடு’ (The Lotus Palace, Chettinad) என்று பெயரிடப்பட்டு, கடந்த அக்டோபர் மாதம் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்காக திறக்கப்பட்டுள்ளது. அந்த அரண்மனை வீட்டின் முகப்புப் பகுதியில் வீற்றிருக்கும் வியத்தகு ஓவியங்கள் மற்றும் ராமர், சீதை, லட்சுமணன் மற்றும் அனுமனின் சிலைகள் முதலானவை ‘ராமாயண வீடு’ என்று அந்த அரண்மனை வீட்டின் பெயரைக் குறிக்கும் விதமாக அமைந்துள்ளது.
உள்ளே நுழந்ததும், அழகிய வெண்ணிறக் கோலம் நம்மை வரவேற்க, இருபுறமும் விசாலமான இரு திண்ணைகளின் அமைப்பு செட்டிநாட்டு வீடுகளின் வசீகர அழகை நமக்கு தொடக்கத்திலேயே அறிமுகப்படுத்துகிறது. சுமார் 10 அடியில் இருக்கும் பிரம்மாண்ட பர்மா தேக்கு மரக்கதவைத் தாண்டியே நாம் அந்த அரண்மனை வீட்டிற்குள் செல்ல முடியும்.
கானாடுகாத்தானில் வசித்து வந்த அந்தக் கால செட்டியார்கள் பலரும் வணிகம் தொடர்பாக பர்மா சென்றது பலரும் அறிந்தது. ஒவ்வொரு செட்டிநாட்டு வீடுகளிலும் நூற்றாண்டுகள் தாண்டி கம்பீரமாக நிற்கும் பர்மா தேக்கு மரக்கதவுகளும், ஜன்னல்களும், இதற்குச் சான்று.
லோட்டஸ் பேலஸ் சிறப்பம்சங்கள்
‘தி லோட்டஸ் பேலஸ்’ உள்ளே நுழைந்ததும் நம்மை வரவேற்ற மேலாளர் கதிரவன் கருணாநிதி, ஹோட்டலை சுற்றிக்காட்டி ஒவ்வொரு இடமாக விவரித்துக்கொண்டே செட்டிநாட்டின் சிறப்புகளையும் பகிர்ந்துகொண்டார்.
“கானாடுகாத்தானில் இருந்த பழமை வாய்ந்த கட்டிடம் இது. கிட்டத்தட்ட 230 வயதாகும் இந்த வீட்டின் பாரம்பரியம் மற்றும் ஆழகை 95% பழமை மாறாமல், கட்டிடத்துக்குத் தேவையான உறுதிபடுத்தலையும், இக்கால மக்களுக்குத் தேவையான அம்சத்தையும் சேர்த்து பார்க் ஹோட்டல் குழுமம் புதுப்பித்துள்ளது, இந்தப் பணிகளை செய்து முடிக்க எங்களுக்கு நான்கரை ஆண்டுகள் ஆனது,” என்றார் கதிரவன்.
செட்டிநாட்டு அரண்மனையின் பாரம்பரியத்தை குலைக்காமல், அதேசமயம் சுற்றுலாப் பயணிகள் வந்து தங்கிச் செல்ல ஏதுவாக சில மாடர்ன் அம்சங்களையும் ஆங்காங்கே புகுத்தியுள்ளனர்.
“செட்டிநாட்டு வீடுகளின் முக்கிய அம்சமான ஆதங்குடி டைல்களே லோட்டஸ் பேலஸ் முழுவதும் பத்தித்துள்ளோம். இங்குள்ள சுவர்கள் அக்காலத்தில் முட்டை ஓடு, வெள்ளைக்கரு, கடுக்காய், எலுமிச்சை, வெல்லம், சிகப்புமண் கலந்து கட்டப்பட்டவை. அதுவே இன்றும் சுவர்கள் வலுவாகவும், ஜொலிப்புடன் இருக்க உதவுகிறது. அதனால், அந்தச் சுவர்களை அப்படியே தக்கவைத்து, அதன் மீது உறுதிப்படுத்தும் வேலைகளை மட்டுமே செய்து பழமையைக் காத்துள்ளோம். இந்தச் சுவர்களில் டிரில் செய்து ஒரு ஓட்டை போடுவது கூட சுலபமில்லை,” என்கிறார்.
ஹோட்டலின் நடுமுற்றத்தின் சிவப்புத் தரையில் வெள்ளை மார்பிள்களால் ஆன 1,000 தாமரை இதழ்கள் கொண்ட வடிவம், அந்த இடத்திற்குச் செல்லும் எவரையும் ஆட்கொண்டு, அழகில் திக்குமுக்காடும் அனுபவத்தைக் கடத்தும். அங்கிங்கேனதாபடி தாமரை வடிவம் கொண்ட டிசைன்கள் இருப்பதாலேயே இந்த இடத்துக்கு ‘லோட்டஸ் பேலஸ்’ என்ற பெயரிடக் காரணமாம்.
ராமாநாதபுரம் மாவட்டைச் சேர்ந்த ஸ்தபதிகள் கொண்டு சுவர்களை அழகுற அலங்கரிக்கும் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. கட்டிடம் முழுதும் செட்டிநாட்டுப் பாரம்பரியப்படி அமைக்கப்பட்டுள்ள மேற்கூரைகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு கிராமிய அனுபவத்தை நம்முள் பரவிட வைக்கிறது.
அறைகள், வசதிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள்
சொகுசு ரூம்கள்: ஸ்டார் ஹோட்டலில் இருக்கக் கூடிய அனைத்து வசதிகளும் இங்கு உள்ளன. ரூம்களும் செட்டிநாட்டு பாரம்பரியப்படியே அலங்காரப்படுத்தப்பட்டு, உள்ளூர் கலைப் பொருட்கள் மற்றும் பனை ஓலையால் செய்யப்பட்ட பொருட்கள் வைக்கும் கூடைகள், கொட்டான்கள் நிறைந்து நம் மனத்தை ஈர்க்கின்றன.
இந்த அரண்மனையில் 85 தூண்கள் இருந்ததால், இவர்களின் ரெஸ்டாரன்ட்டின் பெயர் ‘86’ என்று வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், 1795-ம் ஆண்டில் இக்கட்டிடம் கட்டப்பட்டத்தால், ஹோட்டலின் பாருக்கு ‘1795’ என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது.
“இங்கே மதிய உணவிற்கு ‘செட்டிநாடு ராஜா விருந்து’ போடப்படுகிறது. சைவத்தில் பர்மா அத்தோ வாழைத்தண்டு சூப், மயோனீஸ் சாஸுடன் முறுக்கு, இரு வகை குழம்பு, ரசம், சேனைக்கழங்கு ரோஸ்ட், கத்திரிக்காய் மசாலா, துவையல், உக்கரை, கருப்பு கவுனி அரிசி பாயசம் என தினமும் புதுப்புது மெனு இருக்கிறது. அதேபோல், அசைவத்தில் செட்டிநாடு சிக்கன், மீன் வறுவல், உப்புக்கரி மற்றும் பர்மா ஸ்டைலுடன் கலந்த செட்டிநாட்டு உணவுகளும் இங்கே கிடைக்கும்,” என்கிறார் லோட்டஸ் பேலஸின் தலைமை சமையல் கலைஞர் வினோத்.
லோட்டஸ் பேலஸில் தங்க வருவோருக்கு பல பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்பாடு செய்துள்ளனர். மண் மனம் மாறாமல் அதேசமயம், நல்ல ஓர் அனுபவத்தை தந்திட பார்க் ஹோட்டல் குழுமத்தினர் இந்த ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
மாலை வேளை டீ மற்றும் ஸ்னாக்ஸ் சாப்பிட ‘ரெட் ரூம்’ என அழைக்கப்படும் ஓர் அழகிய இடத்தை பர்மா கட்டிடக் கலை வடிவமைப்பில் அமைத்துள்ளது கண்களைக் கவரும் வனப்புடன் இருக்கிறது. அறை முழுவதும் சிவப்பு நிறத்தில் அமைக்கப்பட்டு, அங்கு பர்மா தேக்கு மற்றும் அவர்களின் பாரம்பரிய சிலைகள் மற்றும் கலைப் பொருட்களும் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது, தனித்துவ ‘வைப்’ ஏற்படச் செய்கிறது.
அடுத்து, ஹோட்டலில் வந்து தங்குவோருக்கு கிளி ஜோசியம், நடுவீட்டுக் கோலம் (கோலம் போட கற்றுக் கொடுத்தல்), பாரம்பரிய விளையாட்டுகளான பல்லாங்குழி, பரமபதம் என குழந்தைகளை கவரும் பல அம்சங்களும் நிறைந்துள்ளன.
‘தி லோட்டஸ் பேலஸ்’ ஹோட்டலில் தங்க 18,000 ரூபாய்+ டேக்ஸ் (இதில் ப்ரேக் ஃபாஸ்ட் மட்டும் அடங்கும்). மற்ற சேவைகளுக்கு தனியாகக் கட்டணம் ஆகும்.
கானாடுகாத்தான் சுற்றியுள்ள சுற்றலாத்தலங்கள்
கானாடுகாத்தானில் தங்குவோர் அதனைச் சுற்றியுள்ள சில நல்லனுபவம் தரும் இடங்களை நிச்சயம் சுற்றிப் பார்த்துவிட்டு வருவது அவசியம். லோட்டஸ் பேலஸ் ஹோட்டலில் தங்குவோருக்கு அவரவர் விருப்பப்படி அங்குள்ள இடங்களுக்கு சென்றுவர ஏற்பாடும் செய்து தருகிறார்கள். அதில், சில சுவாரசிய இடங்கள் இதோ:
* கானாடுகாத்தான் - திருமயம்கோட்டை (தூரம் 12 கி.மீ) - கலை அழகு சூழ்ந்த, நிச்சயம் பார்க்கவேண்டிய இடம். விஜயரகுநாத சேதுபதி என்ற ராமநாதபுரம் மன்னா் 1687-ம் ஆண்டு திருமயம் கோட்டையை நிர்மாணித்தார்.
* கானாடுகாத்தான் - பிள்ளையார்பட்டி கோயில் (தூரம் 17 கி.மீ) - நகரத்தார் வணங்கிய 9 முக்கியக் கோயில்களில் ஒன்றுதான் ‘பிள்ளையார்பட்டி’. கம்பீரமாக காட்சியளிக்கும் விநாயகனை இங்கே சென்று தரிசித்து வரலாம்.
* கானாடுகாத்தான் - குன்றக்குடி முருகன் கோயில் (தூரம் 13 கி.மீ) - அண்ணனைப் பார்த்து விட்டு தம்பியைப் பார்க்காமல் எப்படி? பிரபல குன்றக்குடி முருகன் கோயிலுக்கு நிச்சயம் சென்று வாருங்கள்.
* கானாடுகாத்தான் - காரைக்குடி 'Antique Market' (தூரம் 14 கி.மீ) - செட்டிநாட்டில் பயன்படுத்தப்பட்ட பழமையான பொருட்கள், சமையல் சாமான்கள், விளக்குகள் மற்றும் பலவிதமான கலைப் பொருட்கள் இங்கே கொட்டிக் கிடக்கின்றன.
* கானாடுகாத்தான் - ஆத்தங்குடி (தூரம் 6.5 கிமி) - ஆத்தங்குடி என்றாலே அந்த அழகிய வண்ணங்கள் நிறைந்த ‘ஆத்தங்குடி டைல்ஸ்’ நினைவுக்கு வரும். கட்டாயம் அங்குள்ள ஃபேக்டரிக்கு சென்று கைகளால் செய்யப்படும் ஆத்தங்குடி டைல்களை பார்த்து ரசித்துவிட்டு வாருங்கள்.
செட்டிநாடு வரை சென்றுவிட்டு ஷாப்பிங் செய்யாமல் திரும்பினால் எப்படி? உலகப் புகழ்வாய்ந்த ‘செட்டிநாட்டு காட்டன்’ நெய்யும் நெசவாளர்கள் தெருவுக்குத் தெரு இருக்கின்றனர். இங்கிருந்துதான் இந்தியா மட்டுமில்லாமல் உலகெங்கிலும் உள்ள பருத்திப் பிரியர்களுக்கு வகை வகையான ஆடைகள் செல்கின்றன. காட்டன் சேலைகள் முதல் துண்டு, வேட்டி, சுடிதார் செட் என அனைத்தும் கைகளால் நெய்யப்பட்டு இங்கே கிடைக்கிறது.
செட்டிநாட்டின் அழகைக் கண்டு ரசித்து மகிழ, உங்களுக்குக் குறைந்தது மூன்று நாட்களாவது தேவைப்படும்.
கானாடுகாத்தானை அடைய திருச்சியில் இருந்து ஒன்றரை மணி நேரம், மதுரையில் இருந்து 2 மணி நேரம், ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 3 மணி நேரம் மட்டுமே ஆகும். அதனால், அதற்கேற்றாற்போல் பிளான் செய்து புறப்படுங்கள். இதுவரை கிட்டிடாத பேரனுபவத்தை தவறாமல் அனுபவித்து மகிழுங்கள்...