Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

அஞ்சேல் 9 | அர்ப்பணிப்பு அவசியம்! - 'அருவி' இயக்குநர் அருண் பிரபு [பகுதி 2]

'அருவி' மூலம் கவனம் ஈர்த்த இளம் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் பகிரும் அனுபவக் குறிப்புகளின் நிறைவு பகுதி!

அஞ்சேல் 9 | அர்ப்பணிப்பு அவசியம்! - 'அருவி' இயக்குநர் அருண் பிரபு [பகுதி 2]

Wednesday December 27, 2017 , 5 min Read

(தமிழ்த் திரைத்துறையின் நம்பிக்கை நட்சத்திரங்கள் தாங்கள் எதிர்கொண்ட சவால்களையும், மேற்கொண்ட போராட்டங்களையும் பகிரும் தொடர்.)

'சினிமாவை வணிக ரீதியில் எப்படி அணுகுவது?', 'இந்தத் தொழிலுக்கு எவ்வித அர்ப்பணிப்புகள் தேவை?', 'திரைப்படத்துக்கான முதலீட்டையொட்டி எப்படி கவனத்துடன் செயல்படுவது?' என இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் சாரிடம் கற்றுக்கொள்வதற்கு நிறையவே இருந்தது. காலதாமதம் என்பதே அவரிடம் இருக்காது. மிகவும் ஈடுபாட்டுடனும் அர்ப்பணிப்புடனும் செயலாற்றுவார். திரைப் பார்வையாளர்கள் மீது அக்கறை கொண்டு ஒவ்வொரு காட்சியையும் அவர் யோசிப்பதைப் பார்க்க முடியும்.
ரஜினியின் வாழ்த்து...

ரஜினியின் வாழ்த்து...


'மன்மதன் அம்பு' படத்தில் அவரிடம் உதவியாளராக சேர்ந்தேன். 'கோச்சடையான்' படத்திலும் பணிபுரிந்தேன். 'சாமி' படத்தின் இந்தி ரீமேக்கான 'போலீஸ்கிரி'யிலும் உதவியாளராக இருந்தேன். அவரிடம் இருந்த சுமார் நான்கு ஆண்டுகளும் பள்ளி, கல்லூரி வாழ்க்கைப் போல மிகவும் ஜாலியான அனுபவம் கிடைத்தது.

பாலு மகேந்திரா சாரிடமும், பேராசிரியர் ராஜநாயகம் அவர்களிடமும் இருந்த மக்கள் சினிமா மீதான அக்கறைதான் கே.எஸ்.ரவிக்குமார் சாரிடமும் இருந்தது. ஆனால், இவரது படங்கள் திரைக்கு வரும்போது ஜனரஞ்சக சினிமா என்ற அடையாளத்தைப் பெற்றுவிடுகின்றன. காசும் நேரமும் செலவிட்டு தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு நிறைவான அனுபவத்தைத் தருவதற்குச் செய்ய வேண்டிய அனைத்தையும் தன் சினிமா மூலம் செய்வதில் கவனம் அவர் செலுத்துவார். சினிமாவைப் படிப்பதற்கும் தெரிந்துகொள்வதற்கும் நிறைய விஷயங்கள் இருந்தன. நான் அவரிடம் இருந்த காலத்தில், என்னுடன் இருந்தவர்கள் எல்லாருமே இளம் உதவி இயக்குநர்கள்தான். எந்த விதமான அழுத்தங்களும் இல்லாமல் சினிமாவை அவரிடம் கற்றுக்கொள்ள முடிந்தது.

2011 இறுதியில் ஒரு கதையை முடிவு செய்த பிறகு கே.எஸ்.ரவிக்குமார் சாரிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தேன். முதலில் இயக்கும் படத்தின் திரைக்கதை தொடர்பாக நண்பர்களிடம் விவாதித்தேன். 'அருவி'யில் பணியாற்றிய எடிட்டர், ஒளிப்பதிவாளர், டைரக்‌ஷன் டீமில் இருந்தவர்களிடம்தான் திரைக்கதை குறித்து அவ்வப்போது ஆலோசித்தேன். நாங்கள் அனைவரும் சேர்ந்து ப்ரீ-ப்ரொடக்‌ஷன் வேலைகளில் தீவிரமானோம். இன்னொரு பக்கம் தயாரிப்பாளரைத் தேடினேன்.

மன்மதன் அம்பு படப்பிடிப்பில்...

மன்மதன் அம்பு படப்பிடிப்பில்...


2012 முழுவதுமே தயாரிப்பாளரைத் தேடும் பணியில் ஈடுபட்டேன். சுமார் 60, 70 பேரிடம் கதையைச் சொல்லியிருப்பேன். அது, 'அருவி'யை விட சுவாராசியமான கதை. திரைக்கதையை விவரித்தாலே 'நிச்சயம் ஜெயிக்கும்' என்று உறுதியாகச் சொல்லக் கூடிய அளவில் இருந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் ஆன பிறகுதான் சில விஷயங்கள் பிடிபடத் தொடங்கியது. அது 'அருவி'யை விட அதிக பட்ஜெட் தேவைப்படும் படம். அதைத் தாங்குவதற்கு பிரபல ஹீரோ தேவை எனும் நிலை இருந்தது. சில ஹீரோக்களை நாடியபோது, அவர்களுக்காக சிற்சில சமரசங்கள் செய்ய வேண்டிய சூழல். சரி, புது முகங்கள் வைத்துக்கொள்ளலாம் என்றால், இந்தப் பட்ஜெட்டுக்கு புதியவர்களைப் பயன்படுத்துவது சரியாக வராது என்று தயாரிப்பாளர்கள் கருதினர்.

காலையில் எழுவது, தயாரிப்பாளர்களைச் சந்திப்பது, கதை சொல்வது, விவாதிப்பது... இப்படியேதான் 2013 முழுவதுமே கழிந்தது. எழுதுவதும் சினிமா பேசுவதும் முற்றிலும் குறைந்துவிட்டது. 

ஒரு கட்டத்தில் கடும் விரக்திக்கு ஆளாக நேரிட்டது. 'புறச்சூழல்களால் நம் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளத் தேவையில்லை' என்ற எண்ணத்தில் அந்த முதல் கதையை படமாக்கும் முயற்சியைக் கைவிட்டேன். என் படக்குழுவினரும் நிலைமையைப் புரிந்துகொண்டனர்.

பின்னர், அதே ஆண்டு ஜூலையில் நண்பர்களுடன் சினிமா பற்றி வழக்கமாகப் பேசிக்கொண்டிருக்கும்போது உதித்த 'அருவி' ஐடியாவை பகிர்ந்தேன். எல்லாருக்குமே பிடித்திருந்தது. அதை மேம்படுத்தினோம்.

எனக்கு ஒரு சம்பவம், கதாபாத்திரத்தை மையமாக வைத்து கதை, திரைக்கதை அமைப்பதில் பழக்கம் இல்லை. மனதில் தோன்றும் ஐடியாவை ஒரு கட்டுரையாக எழுதுவேன். அதிலிருந்து சினிமாவில் உணர்வுகளை எப்படிக் கடத்துவது என்பதில் கவனம் செலுத்துவேன். 'அருவி'யை எழுதும்போதே பார்வையாளர்கள் பெறக்கூடிய உணர்வுபூர்வ அனுபவங்களைப் பட்டியலிட்டோம். அதையொட்டி வெவ்வேறு கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டன.

அந்த நேரத்தில்தான் மக்களிடம் ரியாலிட்டி ஷோ பற்றிய பேச்சு அதிகம் இருந்தது. குறிப்பாக, வீட்டில் நடக்கும் பிரச்சினைகளையும், இன்னொரு மனிதரின் நிஜ வாழ்க்கையையும் மையமாகக் கொண்ட நிகழ்ச்சிகள் குறித்து பலரும் ஆர்வத்துடன் பேசுவதைக் கேட்டேன். இதையும் கதைக்குள் கொண்டுவருவது என்று தீர்மானித்தேன். பின்னர், நண்பர்களுடன் குற்றாலம் பயணம் சென்றோம். ஐந்து நாட்கள் அங்கு தங்கியிருந்தபோது 'அருவி' திரைக்கதையை இறுதி செய்தோம்.

ஒரு சினிமாவுக்கான கதை எப்படி இருக்கிறது என்பதை அறிய சிறுவர்களிடம் விவரித்து, அவர்களின் ரியாக்‌ஷன்களை அறிவது என் வழக்கம். குழந்தைகளுக்கு கதை சொல்வது மூலம் திரைக்கதையை விவரிக்கும் கலையில் தேர்ந்துவிட முடியும். அதன்படி, அருவி திரைக்கதையை முழுமையாக எழுதி முடித்த பிறகு, அக்கா பசங்களிடம் ஆக்‌ஷனுடன் விவரித்தேன். நான் எதிர்பார்த்ததை விட விரைந்து ரியாக்ட் செய்தனர். வயிறு குலுங்க சிரித்தார்கள்; கண்ணீர் விட்டு அழுதார்கள். 'அவர்கள் சிறுவர்கள் என்பதால் நான் சொன்ன கதையை உண்மை என்று நம்பிவிட்டார்கள். அதனால்தான் இப்படி பயங்கரமாக ரியாக்ட் செய்கிறார்கள்' என்று கருதினேன். ஆனால், என் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் பெர்ஃபார்மன்ஸுடன் கதையைச் சொன்னபோது ஏறக்குறைய அந்தக் குழந்தைகள் போலவே ரியாக்ட் செய்தார்கள். "ரொம்ப சூப்பரா இருக்கு. இதெல்லாம் அப்படியே படமாக வருமா?" என்று அவர்கள் கேட்டனர். நம்பிக்கை வலுவானது.

நடிகர் அதிதி பாலனுடன் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன்

நடிகர் அதிதி பாலனுடன் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன்


'அருவி'க்கு இரண்டு பக்க சினாப்சிஸ் தயார் செய்து நண்பர்கள் வட்டத்துக்கு அனுப்பினேன். அதில், ஒளிப்பதிவாளர் சக்தி சரவணனும் ஒருவர். அவர் மூலம் 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' பிரபு சாரிடம் இருந்து உடனே அழைப்பு வந்தது. இரவு 11 மணிக்குச் சென்றேன். மூன்று மணி நேரம் 'அருவி'யை விவரித்தேன். மீண்டும் காலையில் வரச் சொன்னார்கள். அப்போதே ஒப்பந்தம் கையெழுத்தானது. 2013 இறுதியில் பட வேலைகள் தொடங்கின. 2014 டிசம்பரில் படப்பிடிப்பைத் தொடங்கினோம். இடைப்பட்ட ஓராண்டு காலத்தில் நடிகர்கள் தெரிவு உள்ளிட்ட ப்ரீ-ப்ரொடக்‌ஷன் பணிகள் நடந்தன.

என் நண்பர்களின் வாயிலாக தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பின்னணி குறித்து ஓரளவு முழுமையாகத் தெரியும். அதேபோல், கல்லூரிக் காலத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு சார்ந்த கள ஆய்வுகள் மேற்கொண்ட அனுபவம் இருந்ததால் அருவிக்காக பெரிய அளவில் ஆய்வு மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. 'காஸ்டிங்'காக நிஜ கதாபாத்திரங்களை நாட முயற்சி செய்தோம். ஆனால், சம்பந்தப்பட்டவர்களை நடிக்கவைப்பது கஷ்டம் என்பது தெரிந்தது. அதேநேரத்தில், கதாபாத்திரங்களையும் திரைக்கதையையும் மென்மேலும் செதுக்குவதற்குத் தேவையான தகவல்கள் கிடைத்தன.

2015 ஏப்ரலில் படப்பிடிப்பை முடித்தோம். அதன்பின், ஐந்து மாதங்களுக்கு போஸ்ட்-ப்ரொடக்‌ஷன் பணிகள் நடந்தன. அந்த ஆண்டின் இறுதியில் படம் தயாரானது. 'அருவி'யை 2016 முழுவதுமே பல்வெறு திரைப்பட விழாவுக்கு அனுப்பினோம். ஷாங்காய் சர்வதேசத் திரைப்பட விழா மூலம் சினிமா ஆர்வலர்களின் பார்வை பட்டது. திரைப்பட விழாக்களுக்குப் பிறகு படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது. 2016-ல் சென்சார் ஆன நிலையில், படத்தை தேசிய விருதுக்கு முறைப்படி அனுப்பினோம். ஆனால், அவர்கள் எந்தப் பிரிவிலும் 'அருவி'யை தெரிவு செய்யவில்லை. இதேபோல், கோவா சர்வதேச திரைப்பட விழாவிலும் 'இந்தியன் பனோரமா'வில் அருவி தேர்வு செய்யப்படவில்லை. சென்னை சர்வதேசப் பட விழாவிலும் இதே கதிதான். படத்தில் உள்ள 'கன்டென்ட்'டில் உடன்பாடு இல்லாததால் தேர்வு செய்யவில்லை என்று சென்னை படவிழா தெரிவுக் குழுவினர் சொன்னதாக அறிந்தேன்.

கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் இப்படத்தை தேர்வு செய்யவில்லை என்றாலும், அங்கு ஒரு தரப்பினர் 'அருவி'க்கு ஆதரவாக இருந்தனர். பனோரமாவில் திரையிடக் கூடிய அனைத்துத் தகுதியில் இப்படத்துக்கு உண்டு என்றனர். அந்தக் குழுவில் இருந்தவர்கள்தான் அருவியை வெவ்வேறு இடங்களில் எடுத்துச் செல்வதற்கு உதவியாக இருந்தனர். அந்த வகையில், மும்பை சர்வதேசத் திரைப்பட விழாவிலும் அங்கம் வகித்த தீப்தி குன்ஹாவின் பங்கு முக்கியமானது. அவர்தான் மும்பைத் திரைப்பட விழாவில் 'அருவி'யை கவனம் ஈர்க்கவைத்தார். அதேபோல், தீனா பால் எனும் எடிட்டரின் பரிந்துரையில் கேரள தேசிய திரைப்பட விழாவில் 'அருவி' கவுரவிக்கப்பட்டது.

2017 தொடக்கத்தில் இருந்தே 'இந்த வாரம் ரிலீஸ்.. அடுத்த வாரம் ரிலீஸ்' என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. பெரிய படங்கள் ரிலீஸாகும்போது தியேட்டர் கிடைக்காத சூழல்தான் முக்கியக் காரணம். இதனிடையே, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் படங்கள் வரிசையாக வெளியாகின. செப்டம்பருக்குப் பிறகு கவுண்டவுன் தீவிரமானது. கிட்டத்தட்ட 15 தடவை தேதி மாற்றப்பட்டது. ஒருவழியாக டிசம்பர் 15-ல் வெளியானது.

'அருவி' தயாராகி, ரிலீசாவதற்கு இடைப்பட்ட காலத்தில் நிறைய பயணங்கள் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டேன். அடுத்தப் படத்துக்கான கதை, திரைக்கதையை உருவாக்குவது, மனிதர்களைச் சந்திப்பது, கள ஆய்வுகளில் ஈடுபடுவது போன்ற வேலைகளில் தீவிரம் காட்டினேன். ஆனால், இந்தப் படத்தில் பணிபுரிந்த 15-க்கும் மேற்பட்டோர் புதுமுக நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள். அவர்களின் நிலைமையை யோசிக்கும்போதுதான் கவலைத் தொற்றியது. எல்லாருமே முழுக்க முழுக்க அர்ப்பணிப்புடன் ஈடுபட்டவர்கள். அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். தங்களது மூன்றாண்டு கால உழைப்புக்கு பலன் கிடைக்குமா? கிடைக்காதா? என்று காத்துக் கிடந்தனர். 

படக்குழுவில் இடம்பெற்ற நண்பர்களை விட அவர்களது உறவினர்களின் காத்திருப்புக்குப் பதில் சொல்வதுதான் பெரிய சவாலாக இருந்தது. என்னளவில் அவர்களுக்குப் பக்கபலமாக இருந்தேன். படம் ரிலீஸான பின்புதான் எல்லாருக்கும் மிகப் பெரிய மகிழ்ச்சி கிட்டியது. ப்ரீமியர் ஷோவில் கிடைத்த வரவேற்பைப் பார்த்துவிட்டு, படத்தில் பணிபுரிந்த நண்பர்களின் உறவினர்களுக்கு மகிழ்ச்சியும் திருப்தியும் கிடைத்தது.

'அருவி'யை மக்கள் கொண்டாடுவதும், மிகப் பெரிய வெற்றியை எட்டியதும் ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றால், என் நண்பர்களும் சக கலைஞர்களுமான படக் குழுவினர் மீது அவர்களது குடும்பத்தினருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது, அளவு கடந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தந்தது.

அருண் பிரபு புருஷோத்தமன் (28): 2017 இறுதியில் வெளியானாலும் மக்கள் மனதிலும் விமர்சகர்கள் பார்வையிலும் முன்னிலை இடத்தைப் பிடித்திருக்கும் 'அருவி' படத்தின் இயக்குநர். தனது தனித்துவமான திரைமொழி மூலம் முதல் படைப்பிலேயே கவனத்தை ஈர்த்துள்ள நம்பிக்கை நட்சத்திரம். சினிமா மூலம் மக்களை மகிழ்விப்பதும் நெகிழ்விப்பதும் ஒருசேர நிகழ்த்திக் காட்டியிருப்பதால் இவரது அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.

முந்தைய அத்தியாயம்: அஞ்சேல் 8 | வியப்பில் ஆழ்த்து! - 'அருவி' இயக்குநர் அருண் பிரபு [பகுதி 1]

அஞ்சேல்... தொடரும்