பழங்கால பொருட்களை சேகரித்து பொக்கிஷங்களால் அறையை நிறைத்த 93 வயது தாத்தா!
’மகிழ்ச்சியின் நகரம்’ என்று பிரபலமாக அழைக்கப்படும் கொல்கத்தாவின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் பல சுவாரஸ்யமான விஷயங்கள் மறைந்துள்ளன. அப்படிப்பட்ட ஒன்றுதான் 93 வயதான சுஷீல் குமார் சாட்டர்ஜியின் வாழ்க்கைப் பயணம். இவருக்கு பயணம் மேற்கொள்வதும் பொக்கிஷங்களான பழங்கால பொருட்களை சேகரிப்பதும் பிடித்தமான விஷயமாகும்.

’நக்கூ பாபு’ என்று பிரபலமாக அழைக்கப்படும் சுஷீல் வட கொல்கத்தாவின் நளின் சர்கார் வீதியில் உள்ள மூன்று மாடி கட்டிடம் ஒன்றில் வசிக்கிறார். அவரது வீட்டின் முதல் தளத்தில் 10X12 அடி அளவில் ஒரு சிறிய அறை உள்ளது. இந்த அறை முழுவதும் பழங்கால சேகரிப்புகளை நிரப்பி வைத்துள்ளார் சுஷீல். உள்ளே இரண்டு நபர்கள் நிற்கும் அளவிற்கு மட்டுமே இடம் இருக்கும்.
பழங்கால பொருட்கள் மீதான ஆர்வமானது அவருக்கு பத்து வயதிருக்கையில் துவங்கியது. அவர் ஒவ்வொரு பொருளை சேகரிக்கவும் ஒரு சக்தி தூண்டுதலாக அமைந்ததாக தெரிவிக்கிறார்.
கொல்கத்தாவின் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் பட்டம் பெற்ற இவர் அவரது இளம் வயது அனுபவம் குறித்தும் பிரபல கவிஞர்கள், நடிகர்கள், எழுத்தாளர்கள் போன்றோருடனான உரையாடியது குறித்தும் பல மணி நேரம் செலவிட்டு விவரிக்கிறார்.
’ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ உரையாடலில் சுஷீல் தெரிவிக்கையில்,
”நான் முதலில் கற்களை சேகரிக்கத் துவங்கினேன். கற்களின் விநோத வடிவங்கள் என்னை பெரிதும் கவர்ந்ததால் தெருக்களிலிருந்தும் காட்டுப்பகுதிகளிலிருந்தும் கூழாங்கற்களை சேகரித்தேன். அதன் பிறகு பழங்கால பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படத்துவங்கியது.”
’லாஜிக்கல் இந்தியன்’ தகவலின்படி சுஷீலின் பழங்கால சேகரிப்புகளில் முதல் உலகப் போர் சமயத்தில் இராணுவத்தில் பயன்படுத்தப்பட்ட தொலை தொடர்பு சாதனம், இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அழைப்பு மணி, 1930-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ROCAR-ன் சுவிஸ் ஸ்டாப்வாட்ச், 200 ஆண்டு பழமையான இசைக்கருவி, அரக்கினால் தயாரிக்கப்பட்ட 3,000 இசைத்தட்டுகள் போன்றவை அடங்கும். ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட 16 மிமீ ஒலி ப்ரொஜெக்டர் ஒரு மூலையில் உள்ளது. மற்றொரு மூலையில் மிகப்பழமையான இசைக் கருவிகள் காணப்படுகிறது. இவரது சேகரிப்புகளின் முடிவில்லா பட்டியலில் கொல்கத்தாவிற்கு முதன் முதலாக இறக்குமதி செய்யப்பட்ட ஹெட்ஃபோனும் அடங்கும்.
அந்த அறையும் அதிலுள்ள பொக்கிஷங்களின் அழகும் மணிக்கணக்காக பார்த்து ரசித்து வியக்கும்படி அமைந்துள்ளது. பழங்கால பொருட்களை உற்சாகமாக சேகரித்து பாதுகாத்து வரும் 93 வயதான சுஷீல் அவர்களின் செயல் பலர் தங்கள் வாழ்வின் சின்னச் சின்ன சந்தோஷங்களையும் போற்றுவதற்கு உந்துதளிக்கிறது.
கட்டுரை : Think Change India