2021: IMDB-யின் டாப் 10 இந்திய படங்கள் பட்டியலில் 3 தமிழ் திரைப்படங்கள்!
மக்களின் ரேட்டிங்களை மையமாக வைத்து இயங்கும் பிரபல திரைப்பட ரேட்டிங் தளமான IMDB (Internet Movie Database) 2021ம் ஆண்டிற்கான டாப் 10 இந்திய திரைப்படங்கள் என்னவென்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 3 தமிழ் படங்கள் இடம்பெற்றுள்ளன. முதலிடத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம், 4வது இடத்தில் தளபதி விஜய்ய
மக்களின் ரேட்டிங்களை மையமாக வைத்து இயங்கும் பிரபல திரைப்பட ரேட்டிங் தளமான IMDB (Internet Movie Database) 2021ம் ஆண்டிற்கான டாப் 10 இந்திய திரைப்படங்கள் என்னவென்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் 3 தமிழ் படங்கள் இடம்பெற்றுள்ளன. முதலிடத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம், 4வது இடத்தில் தளபதி விஜய்யின் மாஸ்டர், 7வது இடத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் ஆகிய திரைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
2021ம் ஆண்டை பொறுத்தவரை சினிமாவிற்கு சிறப்பான ஆண்டாகவே அமைந்துள்ளது. தியேட்டரானாலும் சரி, ஓடிடி என்றாலும் சரி நல்ல கருத்து மற்றும் கதையம்சம் கொண்ட படங்களை இந்திய ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
மொழிகளைக் கடந்தும் 'த்ரிஷ்யம் 2', 'சூர்யவன்ஷி' ஆகிய படங்கள் தமிழ், தெலுங்கு டப்பிங்கிலும் நல்ல வரவேற்பை பெற்றது. கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்களில் குறைவான எண்ணிக்கையிலான படங்களே வெளியாகின. அதிலும், குறிப்பாக ஓடிடி தளங்களில் வெளியான பல படங்கள் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருப்பதை IMDB-யின் ரேட்டிங் பட்டியல் சுட்டிக்காட்டுகிறது.
IMDB-யின் டாப் 10 இந்தியத் திரைப்படங்கள் பற்றி தற்போது பார்க்கலாம்...
1. ஜெய்பீம்:
2021ம் ஆண்டிற்கான சிறந்த இந்திய திரைப்படங்களின் பட்டியலில் ‘ஜெய்பீம்’ முதலிடம் பிடித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 2ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் 'ஜெய்பீம்' திரைப்படம் வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் 240 நாடுகளில் இத்திரைப்படம் வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் 1995ம் ஆண்டு பழங்குடியின மக்களுக்கு காவல் துறையினரால் இழைக்கப்பட்ட கொடுமையை இயக்குநர் த.செ.ஞானவேல் ராஜா காட்சிப்படுத்தியிருந்தார். பழங்குடியின மக்கள் படும் இன்னல்களை வெளிச்சம் போட்டு காட்டிய ஜெய்பீம் திரைப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், விசிக தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் பாரதிராஜா, பா.ரஞ்சித், வெற்றிமாறன் உள்ளிட்ட பலரும் பாராட்டினர்.
2. ஷேர்ஷா:
1999ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் வீர மரணம் அடைந்த விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘ஷேர்ஷா’. சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 12ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது.
‘பில்லா’, ‘ஆரம்பம்’ என தல அஜித்திற்கு ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் விஷ்ணுவர்தன் இந்த படம் மூலமாக முதன்முறையாக இந்தியில் அறிமுகமானார். மிக இளம் வயதிலேயே போரில் வீரமரணம் அடைந்து ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இந்திய அரசின் மிக உயரிய விருதான ’பரம்வீர் சக்ரா’ விருது பெற்ற கேப்டன் விக்ரம் பத்ராவின் பயோபிக் என்பதால் ரசிகர்களிடையே இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக கேப்டன் விக்ரம் பத்ரா சித்தார்த் மல்ஹோத்ராவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
3. சூர்யவன்ஷி:
ஆக்ஷன் அதிரடி சரவெடியாக பாலிவுட்டில் பட்டையைக் கிளப்பிய திரைப்படம் ‘சூர்யவன்ஷி’. ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட், தர்மா புரடெக்ஷனுடன் ரோஹித் ஷெட்டி இணைந்து தயாரிக்க ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் அக்ஷய் குமார், அஜய் தேவ்கன், ரன்வீர் சிங், காத்ரீனா கைஃப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
குறிப்பாக கேமியோ ரோலில் ‘சிங்கம் 1, 2’-வில் நடித்த அஜய் தேவ்கன், ‘சிம்பா’ படத்தில் நடித்த ரன்வீர் சிங் ஆகியோர் அதே கதாபாத்திரங்களில் நடித்தது ரசிகர்களுக்கு வேற லெவல் விருந்தாக அமைந்தது.
1993ம் ஆண்டு, மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை மேற்கோள் காட்டி ஆரம்பிக்கும் கதை அடுத்து பாகிஸ்தான் தீவிரவாதம், 40க்கும் மேலான ஸ்லீப்பர் செல்கள், காணாமல் போன கிலோ கணக்கிலான ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து ஆகியவையே கதைக்களம். ஹெலிகாப்டர், பறக்கும் தோட்டாக்கள், விறுவிறுப்பான சேஸிங் காட்சிகள் என அக்மார்க் எண்டர்டெயினர் திரைப்படமான இது IMDB ரேட்டிங்கில் 3வது இடம் பிடித்துள்ளது.
4. மாஸ்டர்:
தளபதி விஜய் - மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன் முறையாக ஒன்றாக இணைந்து நடித்த திரைப்படம் ‘மாஸ்டர்’. ‘மாநகரம்’, ‘கைதி’ போன்ற படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தான் இந்த படத்தையும் இயக்கி இருந்தார். ஆன்ட்ரியா, மாளவிகா மோகனன், சாந்தனு, கெளரி கிஷன் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். அனிருத் இசையில் சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த மாஸ்டர் படம் 2021 வருடத்தில் வெளியான படங்களின் IMDb பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளது.
5. சர்தார் உத்தம்:
அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி பாலிவுட்டின் வழக்கமான டெம்ப்ளேட்களை எல்லாம் அடித்து நொறுக்கிய திரைப்படம் ‘சர்தார் உத்தம்’. வழக்கமாக பாலிவுட் இயக்குநர்கள் எடுக்கும் தேச பக்தி படங்களுக்கு மாற்றாக, பயங்கரவாதிக்கும், புரட்சியாளனுக்கும் இடையிலான வித்தியாசத்தை அழகாக காண்பித்த விதத்தில் இயக்குநர் ஷூஜித் சிர்கார் ரசிகர்களை சபாஷ் போட வைத்துள்ளார்.
ஜாலியன்வாலா பாக் படுகொலை சம்பவத்தால் பாதிக்கப்படும் ஒரு பஞ்சாபிய வாலிபன், அந்தப் படுகொலைகள் நடந்தபோது, பஞ்சாபின் துணைநிலை ஆளுநராக இருந்த மைக்கேல் ஓ’டயரைப் பழிதீர்ப்பதற்காக, 21 ஆண்டுகள் காத்திருந்த கதையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமே ‘சர்தார் உத்தம்’.
இந்த படத்தில் சர்தார் உத்தம் கதாபாத்திரமாக வலி, அழுகை, சோகம் என அனைத்து உணர்ச்சிகளையும் விக்கி கௌஷல் அட்டகாசமாக வெளிப்படுத்தியிருப்பார். ஒரு உண்மையான போராளியின் கதையை மிகைப்படுத்தமால் கூறிய ‘சர்தார் உத்தம்’ IMDb பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ளது.
6. மிமி:
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி பல விவாதங்களை உருவாக்கிய திரைப்படம் ‘மிமி’. கனவு உலகமான பாலிவுட் திரையுலகில் மிகப்பெரிய நடிகையாக வர வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் இளம் பெண்ணுக்கும், தங்களுடைய சொந்த குழந்தையை பெற்றுக்கொள்ள வாடகைத் தாயை தேடி இந்தியா வரும் தம்பதிக்கும் இடையில் நிகழும் கதைதான் மிமி.
கர்ப்ப காலத்தை ஒரு புரோஜெக்ட் போல கடந்து செல்லும் நாயகிக்கு இடியாய் வந்து இறங்குகிறது அந்த செய்தி, குழந்தைக்கு Down Syndrome இருக்கலாம் என மருத்துவர் கூற அமெரிக்க தம்பதியோ குழந்தையை ஏற்க மறுத்து தமது நாட்டிற்கே திரும்பிவிடுகிறார்கள். வேறு வழி இல்லாமல் வீட்டிற்கு திரும்பும் ’மிமி’ (க்ரீத்தி சனோன்) தாய் மற்றும் பாட்டியிடம் இருந்து கிடைக்கும் அன்பு மற்றும் ஆறுதல் பலமாக அமைகிறது.
குழந்தையை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தாலும், தனது சினிமா கனவு கலைந்தது எண்ணி கலங்கும் இடத்தில் க்ரீத்தி சனோன் ரசிகர்களின் பாராட்டுக்களை குவிக்கிறார். சோகம், ஏமாற்றம், பாசம் என உணர்ச்சிகளின் கலவையாக வெளிவந்த மிமி திரைப்படம் IMDb பட்டியலில் 6 வது இடத்தை பிடித்துள்ளது.
7. கர்ணன்:
ஜெய்பீம் திரைப்படத்தைப் போலவே ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அதிகாரவர்க்கத்தின் கொலைவெறி தாக்குதலை கட்டவிழ்த்துவிடுவது காட்சிப்படுத்திய திரைப்படம் ‘கர்ணன்’. 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்திற்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இரண்டாவது படம் இது. அசுரன் படத்தை அடுத்து தனுஷ் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படமாக வெளியான கர்ணன் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
இதுவும் உண்மைக் கதையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமே ஆகும்.
1995ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியங்குளம் கிராமத்தின் மீது காவல்துறை கொடுமையான தாக்குதல் ஒன்றை நடத்தியது. அதில் பலர் கொல்லப்பட்டனர். பல கிராமங்கள் சூறையாடப்பட்டன. தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். இந்தப் பின்னணியை மையமாக வைத்து 'கர்ணன்' திரைப்படம் உருவானது.
கர்ணன், திரெளபதி என ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வைக்கப்படும் பெயர்கள் கூட அதிகார வர்க்கத்தை அவர்கள் மீது கொலைவெறி தாக்குதலை தூண்டிவிடும் என்ற சர்ச்சையான கதைக்களத்தை சிறப்பாக கையாண்ட கர்ணன் திரைப்படம் IMDb பட்டியலில் 7வது இடத்தை பிடித்துள்ளது.
8. ஷித்தாத்:
குணால் தேஷ்முக் இயக்கத்தில் சன்னி கௌஷல், ராதிகா மதன், மோஹித் ரெய்னா, டயானா பென்டி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஷித்தாத்’. காதலிக்கும் பெண்ணிற்காக தன்னுடைய போக்கை மாற்றிக்கொள்ளும் இளைஞன் சந்திக்கும் பிரச்சனைகளும், காதல் கைகூடியதா? என்ற ‘புதிய பாட்டிலில் பழைய ஒயின்’ கதை. ஆனால் ரொமான்ஸ் காட்சிகளால் இளம் தலைமுறையினரின் மனம் கவர்ந்த இந்த திரைப்படம் 4.8 ரேட்டிங் உடன் IMDb பட்டியலில் 8வது இடத்தை பிடித்துள்ளது.
9.த்ரிஷ்யம் 2:
மோகன்லால், மீனா நடிப்பில், ஜீத்து ஜோசப் இயக்கிய 'த்ரிஷ்யம்' திரைப்படம் 2013-ல் வெளியாகி மெகாஹிட் ஆனது. அதன் இரண்டாம் பாகமாக உருவான 'த்ரிஷ்யம் 2' அமேசான் பிரைமில் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட்டது. மகளின் மானத்தை காப்பதற்காக நடந்த கொலையை குடும்பத்துடன் சேர்ந்து எப்படி மறைக்கிறார் என்பதை முதல் பாகத்தில் மோகன்லால், கமல் ஹாசன், வெங்கடேஷன், அஜய் தேவ்கன் என முன்னணி நடிகர்கள் பிரதியெடுத்து நடித்து, சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றனர்.
இதன் 2வது பாகம் தயாரான போதே முதல் பாகத்தை முந்த வாய்ப்பே கிடையாது. நிச்சயம் படுதோல்வி அடையும் என கடும் விமர்சனங்கள் எழுந்தன. முதல் பாகத்தில் கொலை செய்யப்பட்ட வருணின் சடலம் எங்கே புதைக்கப்பட்டது என்ற மில்லியன் டாலர் கேள்வியைக் கையில் வைத்துக்கொண்டு அல்லாடும் காவல்துறையையும், ஓர் எதிர்பார்க்காத சாட்சியின் உதவியுடன் அந்த இடத்தை கண்டறியும் காவல்துறை ஜார்ஜ் குட்டியின் குடும்பத்தின் குற்றத்தை நிரூபிக்க முடிந்ததா இல்லையா? என்பதும், ஜார்ஜ் குட்டி ப்ளே செய்யும் எதிர்பாராத ட்விஸ்ட் அண்ட் டர்ன் என்ன என்பதுதான் 'த்ரிஷ்யம் 2'-வின் ஒன்லைன்.
முதல் பாகத்தையே தட்டித்தூக்கும் அளவிற்கு இரண்டாவது பாகத்தை சிறப்பாக இயக்கியிருந்தார் ஜித்து ஜோசப். எதிர்பாராத திருப்பங்கள், யாருமே நினைக்காத கிளைமேக்ஸ் என விறுவிறுப்பாக நகர்ந்த த்ரிஷ்யம் 2 திரைப்படம் IMDb பட்டியலில் 9வது இடத்தை பிடித்துள்ளது.
10. ஹசீன் தில்ரூபா:
தமிழ், தெலுங்கு, இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் டாப்ஸி நடிப்பில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ‘ஹசீன் தில்ரூபா’. திருமணமாகி வந்த சில நாட்களிலேயே கணவனை கொலை செய்ததற்காக இளம் பெண் ராணி கைது செய்யப்படுகிறாள்; கொலை செய்யும் அளவுக்கு அவளது வாழ்க்கையில் என்ன நடந்தது?, உண்மையில் அதை செய்தது ராணி தானா? என்ற கேள்விகளுக்கான விடை தான் ‘ஹசீன் தில்ரூபா’.
க்ரைம் நாவல் படிப்பதில் ஆர்வம் கொண்ட பெண்ணான ராணி, கணவனை கொலை செய்துவிட்டு நாவல்களில் வருவது போலவே மறைக்க முயல்வதாக போலீசாரை நம்ப வைக்கிறாள். ஆனால் உண்மையில் என்ன நடந்தது, இறந்தது யார்? என்பதை எதிர்பார்க்காத திருப்பத்துடன் வெளிப்படுத்தியிருக்கின்றனர். இந்த திரைப்படம் IMDb பட்டியலில் 10வது இடத்தை பிடித்துள்ளது.