பனிப்பிரதேசத்தில் வளரும் பன்னீர் ஆப்பிள்: 2 லட்சம் வருமானம் ஈட்டும் தருமபுரி ஆசிரியர்!
பனிப்பிரதேசங்களில் வளருக்கூடிய பன்னீர் ஆப்பிள்ளை வறட்சியான, தண்ணீர் பற்றாக்குறையுள்ள தருமபுரி மாவட்டத்தில் சாகுபடி செய்து வருடத்திற்கு ரூ.2 லட்சம் வரை லாபம் ஈட்டி வரும் ஆசிரியர் விவசாயிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
பனிப்பிரதேசங்களில் வளருக்கூடிய பன்னீர் ஆப்பிள்ளை வறட்சியான, தண்ணீர் பற்றாக்குறையுள்ள தருமபுரி மாவட்டத்தில் சாகுபடி செய்து வருடத்திற்கு ரூ.2 லட்சம் வரை லாபம் ஈட்டி வரும் ஆசிரியர் விவசாயிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகேயுள்ள திகிலோடு பகுதியைச் சேர்ந்த சரவணன் பாரம்பரிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், தனது நிலத்தில் சோளம், கேழ்வரகு, கத்தரிக்காய், வெண்டை போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகிறார். ஆனால், போதுமான அளவு வருமான கிடைக்கவில்லை.
மேலும், பாலக்கோட்டில் மாற்றுத் திறன் மாணவர்களுக்கான சிறப்பு ஆசிரியராக தற்காலிகமாக பணிபுரிந்து வருகிறார். எனவே மாற்றுப்பயிரை கண்டறிந்து வேளாண்மை செய்ய வேண்டும் என முயற்சித்து வந்தார். இது குறித்து பேசிய அவர்,
”எங்கள் குடும்பம் விவசாயப் பின்னணியைக் கொண்டது, எங்களுக்கு சொந்தமாக 3 ஏக்கர் நிலம் உள்ளது. மலையடிவாரம் என்பதால் விவசாயத்திற்கு போதுமான நீர் இல்லை. என்னுடைய தனிப்பட்ட ஆர்வத்தினால் 5 ஆண்டுகளுக்கு முன்னர் 100 பன்னீர் ஆப்பிள் செடிகளை ரூ.200 முதல் ரூ. 500 வரையிலான விலையில் இளங்கன்றுகளாக வாங்கி வந்து நட்டேன்.”
நான் இதனை நடவு செய்வதைப் பார்த்து இதனால் என்ன லாபம் வந்து விடப் போகிறது என்று பலரும் சிரித்தனர். ஆனாலும் நான் மனம் தளரவில்லை, மற்றப் பயிர்களைப் போல அதிக வேலை கிடையாது, மகசூலுக்கு மகசூல் நிலத்தை உழுது பண்படுத்தத் தேவையில்லை. எங்களிடம் கோழிப்பண்ணை மற்றும் கால்நடைகள் இருக்கின்றன, அவற்றின் கழிவுகளையே இந்தச் செடிகளுக்கு உரமாகப் போட்டுவிடுவேன்.
பெயரே பன்னீர் ஆப்பிள் என்பதைப் போல எவ்வளவுக்கு எவ்வளவு தண்ணீரை செடிகளுக்கு பாய்ச்சுகிறோம் அந்த அளவிற்கு பழங்களும் ஊட்டமாக இருக்கும். வறட்சி காலங்களில் கிணற்றில் இருந்து நீரை சொட்டு நீர் பாசன முறையில் செடிகளுக்கு இட்டு வந்தேன். பச்சை பன்னீர் ஆப்பிள் 6 மாதங்களிலேயே பழம் கொடுக்கத் தொடங்கிவிட்டது, சிவப்பு பன்னீர் ஆப்பிள் மட்டும் சற்று தாமதமாக கனிகளைத் தந்தது.
எப்போதும் பழம் கிடைக்கும் என்றாலும் 3 மாதத்திற்கு ஒரு முறை மகசூல் அதிகம் தருகிறது. சீசன் காலங்களில் ஒரு மரம் சுமார் 50 கிலோ வரை கூட பழத்தைத் தருகிறது, மற்ற நாட்களில் ஒவ்வொரு மரமும் 5 அல்லது 10 கிலோ மட்டுமே பழங்களைத் தருகிறது. இந்தச் செடிகளுக்கு 60 ஆண்டுகள் ஆயுள் காலம் என்று சொல்லப்படுகிறது, சரியான பராமரிப்பு இருந்தால் சீதோஷன நிலையால் உதிரும் பூக்கள், பறவை மற்றும் அணில்கள் உண்பது என சில சேதங்கள் இருந்தாலும் நிச்சயமாக ஆண்டுதோறும் நல்ல லாபத்தைப் பெயலாம் என்கிறார் சரவணன்.
தற்போது தருமபுரி மாவட்டத்தில் இப்படியான விளைச்சலா என்று பலரும் என்னைப் பார்த்து ஆச்சர்யப்படுகின்றனர், ஊடகங்கள் எனக்கு அளித்த லைம்லைட் வெளிச்சத்தினால் பல மாவட்டங்களில் இருந்து பன்னீர் ஆப்பிள் பழம் மற்றும் செடிகளைக் கேட்டு எனக்கு அழைப்புகள் வருகின்றன. பலர் தோட்டங்களுக்கும், சிலர் தங்கள் வீடுகளில் வைப்பதற்கும் செடிகளை வாங்கிச் செல்கின்றனர்.நான் தோட்டம் தொடங்கியது முதலே பருக்கும் செடிகளை நானே தயார் செய்து மரக்கன்றுகளாக கொடுத்து வருகிறேன்.
குளிரான பகுதிகளில் மட்டுமே கிடைக்கும் பழம் இங்கும் விளைகிறது என்பதால் பலரும் இப்போது இந்தச் செடியை நடவு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். நல்ல பொருளுக்கு சந்தையில் எப்போதுமே வரவேற்பு இருக்கும். இப்போது நான் மண்டிகளுக்கும், பழ மார்க்கெட்டுகளுக்கும் பழங்களை விற்பனை செய்து வருகிறேன்.
”கிராமப்புற மக்களுக்கு இந்தப் பழத்தின் நன்மைகள் அவ்வளவாக தெரியவில்லை என்றாலும் நகர்ப்புறங்களில் இருந்து நேரடியாகவே போன் செய்து பழங்களை கூரியர் கேட்டு வாங்குகின்றனர். எனவே உள்ளூர் சந்தைகளில் பன்னீர் ஆப்பிள் பழங்களை விற்க முடியாவிட்டாலும் நகர்ப்புறங்களில் இருக்கும் சூப்பர் மார்க்கெட், பழமுதிர் சோலை உள்ளிட்டவற்றுடன் கைகோர்த்து லாபம் பெற முடியும்,” என்கிறார் சரவணன்.
அப்போது தனது உறவினர் ஒருவர் ஒசூரில் பன்னீர் ஆப்பிள் சாகுபடி செய்யும் முறையை பார்த்து மிரண்டுள்ளார். வாட்டர் ஆப்பிள் எனப்படும் பன்னீர் ஆப்பிள் கடல் மட்டத்தில் இருந்து 1,500 மீட்டர் உயரத்தில் மட்டுமே விளையக்கூடியது.
வைட்டமின் சி, வைட்டமின் ஏ, நியாசின், கால்சியம் பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், புரதம், நார்ச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் அடங்கிய இந்த பழம், நீரிழிவு நோய், புற்றுநோய் தடுப்பு, குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி, செரிமான பிரச்சனைகள், வலிப்புத்தாக்கங்கள் உள்ளிட்ட நோய்களை எதிர்க்கும் திறன் கொண்டது.
இப்படிப்பட்ட சக்திகள் நிறைந்த பழத்தை தண்ணீர் பற்றாக்குறையும், வறட்சி நிறைந்த தருமபுரியில் நட்டு வளர்ப்பது என முடிவெடுத்தார். இதற்காக கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஒசூரிலுள்ள நர்சரி ஒன்றில், நூறு பன்னீர் ஆப்பிள் செடிகளை வாங்கி வந்து தங்களுக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தில் அரை ஏக்கர் நிலத்தில், சிவப்பு, பச்சை, பச்சை சிவப்பு உள்ளிட்ட பன்னீர் ஆப்பிள் செடிகளை நட்டு வளர்த்து வந்துள்ளார்.
தற்போது வாட்டர் ஆப்பிள் மகசூல் குறித்து சரவணன் கூறுகையில்,
“பன்னீர் ஆப்பிள் செடி வளர்ந்த இரண்டு வருடங்களிலேயே மகசூல் பிடித்தது. இது ஆண்டு அறுவடைக்கு மூன்று முறை மகசூல் கிடைக்கிறது. மருத்துவக் குணங்கள் நிறைந்தது என்பதால் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. எனவே வியாபாரிகள் தோட்டத்திற்கே வந்து கொள்முதல் செய்கின்றனர்,” எனக்கூறியுள்ளார்.
சிகப்பு மற்றும் பச்சை நிறம் கொண்ட இரண்டு வகையான பன்னீர் ஆப்பிள் விலை கிலோ ஐம்பது ரூபாய், மற்ற ரகங்கள் ரூ.70 முதல் 100 விற்பனையாகிறது.
ஒரு செடிக்கு தற்போது 50 கிலோ வரை பன்னீர் ஆப்பிள் அறுவடை செய்து வருகின்றனர். இதனால் நூறு செடிகளிலும் வருடத்திற்கு 2 லட்ச ரூபாய் அளவிற்கு வருமானம் ஈட்டி வருகிறார்.
மேலும், இதனை பராமரிக்கவும், மரத்தில் இருந்து பழத்தை பறிக்கவும் கைதேர்ந்த கூலியாட்கள் தேவையில்லை. எனவே சரவணனும், அவரது மனைவியுமே பழங்களை பறிக்கும் வேலைகளை செய்து வருகின்றனர்.
தண்ணீர் மற்றும் கூலி ஆட்கள் பற்றக்குறை என அனைத்தையும் சமாளிக்க முடியும் என்பதால் வாட்டர் ஆப்பிள் சாகுபடியை மேற்கொள்ள விவசாயிகள் முன்வர வேண்டும் என சரவணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பன்னீர் ஆப்பிள் பழம் மற்றும் செடிகள் தேவைக்கு ஆசிரியர் மற்றும் விவசாயி சரவணனை தொடர்பு கொள்ளலாம் : 8883740415