இளம் பெண்ணுக்கு உபெரில் கிடைத்த ஒட்டக சவாரி - இது துபாய் இணைய கலாட்டா!
துபாய் பாலைவனத்தில், வாகனம் பழுதாகி தவித்த போது, உபெர் மூலம் ஒட்டக சவாரியை ஆர்டர் செய்து பிராயணம் செய்ததாக, இளம்பெண் ஒருவர் இன்ஸ்டாவில் பகிர்ந்த வீடியோ வைரலாகி உள்ளது.
துபாய் பாலைவனத்தில், வாகனம் பழுதாகி தவித்த போது, உபெர் மூலம் ஒட்டக சவாரியை ஆர்டர் செய்து பிராயணம் செய்ததாக, இளம்பெண் ஒருவர் இன்ஸ்டாவில் பகிர்ந்த வீடியோ வைரலாகி இணையத்தை திகைக்க வைத்துள்ளது.
இது துபாய் குறுக்குச்சந்தா? என்பது போல பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பாலைவன சொர்கமான துபாய் என்றதும், அடுக்கு மாடி நட்சத்திர ஓட்டல்களும், நவீன ஷாப்பிங் மால்களும் தான் நினைவுக்கு வரும். பேரிட்சை மரம், ஒட்டகம் போன்ற விஷயங்களும் நினைவுக்கு வரலாம் என்றாலும், நிச்சயம், ஒட்டக சவாரியை உபெரில் ஆர்டர் செய்ய முடியும் என கற்பனையில் கூட நினைத்துப்பார்க்க மாட்டோம்.
ஆனால், துபாய் பாலைவனத்தில், உபெரில் ஆர்டர் செய்து ஒட்டக பயணம் மேற்கொண்டதாக இளம் பெண்கள் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெற்றிக்கொடி கட்டு திரைப்படத்தில் வருவது போல, என்னது துபாய் குறுக்கச்சந்தா? என கேட்க வைத்திருக்கும் இந்த வீடியோ, ஜெட்செட்.துபாய் எனும் இன்ஸ்டா பக்கத்தில் பகிரப்பட்டது.
இரண்டு இளம்பெண்கள் தங்கள் வாகனம் பழுதானதால் பாலைவனத்தில் தவிப்பதாக தெரிவித்த அந்த வீடியோ, அவர்களில் ஒருவர் தன்னிடம் இருந்த உபெர் செயலியை இயக்கி பார்த்த போது, ஓட்டக சவாரி எனும் சேவை கண்ணில்பட்டதாகவும், உடனே அந்த சேவையை புக் செய்ததாகவும் தெரிவிக்கிறது.
இதன் பிறகு தான் அந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.
ஆம், அடுத்த சில நிமிடங்களில், ஓட்டகத்தை அழைத்துக்கொண்டு ஒருவர் வந்திருக்கிறார். தன்னை உபெர் ஒட்டக டிரைவர் என்றும் அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார். இதையடுத்து, அந்த இளம் பெண்கள் உற்சாகமாகி ஒட்டகத்தில் ஏறி அமர்வதையும் வீடியோ காட்டுகிறது.
அதே வீடியோவில், ஓட்டக டிரைவர் தனக்கு இது தான் தொழில் என்றும் பாலைவனத்தில் சிக்கியவர்களை மீட்கும் உபெர் ஓட்டக டிரைவர் தான் என்றும் தெரிவிக்கிறார்.
துபாய்- ஹட்டா சாலை அருகே இந்த வீடியோ படமாக்கப்பட்டுள்ளது. என்னது, உபெரில் ஒட்டக சவாரியா என பலரையும் வியக்க வைத்த இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி லட்சக்கணக்கில் பார்க்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை பார்த்து, இது தான் துபாய் என்பது போல கருத்து தெரிவித்திருந்தாலும், பெரும்பாலானோர், இது நிகழ்த்தப்பட்டதாக இருக்க வேண்டும், என கருத்து தெரிவித்துள்ளனர். இன்னும் சிலரோ, நிஜமோ இல்லையோ செம்மையாக இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.
இன்ஸ்டாவில் கருத்து தெரிவித்துள்ள ஒரு சிலர், ஒட்டக டிரைவர், இன்ஸ்டா சானலின் jetset.dubai பெயர் கொண்ட டிஷர்ட் அணிந்திருந்தப்பதாக தெரிவித்து இது விளம்பர முயற்சி என தெரிவித்துள்ளனர். நம் பங்கிற்கு எதற்கும் துபாயில் குறுக்கச்சந்து இருக்கிறதா என ஆய்வு செய்து விடலாம்.
Edited by Induja Raghunathan