Audi, BMW கார்களை விடவும் விலை உயர்ந்த ஜீவராசி: குப்பைகளில் வாழும் 'கொம்பன் வண்டு' விலை என்ன தெரியுமா?
இந்த பூச்சி பழச்சாறு மற்றும் மரச்சாறுகளை சாப்பிட்டு சுமார் 7 ஆண்டுகள் வரை வாழ்கிறது. இந்த வண்டுகளின் தலையில் 5 அங்குல நீளமான கருப்பு கொம்புகள் இருக்கும். அதனால் தான் இவை கொம்பன் வண்டுகள் என்று அழைக்கப்படுகின்றன
குப்பைகளில் வாழும் உலகின் விலை உயர்ந்த 'கொம்பன் வண்டு' (stag beetle) பல விலை உயர்ந்த சொகுசு கார்களை விடவும் அதிக விலை கொண்டதாக விளங்குகிறது.
இதன் விலை என்ன தெரியுமா? 75 லட்சம் ரூபாய்...!
அளவில் 2 அல்லது 3 அங்குலம்தான் இருக்கும் இந்த கொம்பன் வண்டு. தேசிய வரலாற்று காட்சியகத் தரவுகளின் படி, இந்த ஜீவராசி எண்ணிக்கையில் குறைந்து வருகின்றது. ஆனால், லண்டன் தேம்ஸ் பள்ளத்தாக்குப் பகுதி இந்த அரிய கொம்பன் வண்டின் புகலிடமாக இருந்து வருகிறது. ‘லுகானிடே’ குடும்பத்தைச் சேர்ந்த இந்தப் பூச்சிகளில் உலகம் முழுவதும் 1200 இனங்கள் உள்ளன.
இந்த பூச்சி பழச்சாறு மற்றும் மரச்சாறுகளை சாப்பிட்டு சுமார் 7 ஆண்டுகள் வரை வாழ்கிறது. இந்த வண்டுகளின் தலையில் 5 அங்குல நீளமான கருப்பு கொம்புகள் இருக்கும். அதனால் தான் இவை கொம்பன் வண்டுகள் என்று அழைக்கப்படுகின்றன. அவை அதிக வெப்பம் உள்ள பகுதிகளில் உள்ளவை. ஆனால் ஐரோப்பாவில் இதன் இனம் அழிந்து வருகிறது.
இந்தக் கொம்பன் வண்டுகள் குளிர் தாங்க முடியாமல் சில சமயங்களில் இறக்கின்றன. இந்த வண்டு ஆபத்தான நோய்களுக்கு மருந்து தயாரிக்க பயன்படுகிறது. அதனால்தான் இவ்வளவு மதிப்புடையதாக இருக்கிறது.
மேலும், மூட நம்பிக்கைகள் தலைவிரித்தாடும் சில சமூகங்களில் இந்த கொம்பன் வண்டுகள் அதிர்ஷ்டத்தின் சின்னமாகவும் கருதப்படுகிறது. அதிக விலை கொடுத்தால்தான் இந்த கொம்பன் வண்டு கிடைக்கும், ஆனால், இது இருந்தால் செல்வம் சேரும் என்று நம்பும் மக்கள் திரளின் நகைமுரணை என்னவென்று சொல்வது?
லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் கூற்றுப்படி, இந்த வண்டுகள் பொதுவாக 2 முதல் 6 கிராம் எடையுள்ளவை. சராசரி ஆயுட்காலம் 3 முதல் 7 ஆண்டுகள். பெண் வண்டுகளின் நீளம் 30-50 மிமீ, ஆண் வண்டுகளின் நீளம் 35-75 மிமீயாகும்.
லண்டன் நகரின் பூங்காக்களிலும் தோட்டங்களிலும் இந்தக் கொம்பன் வண்டுகள் சுற்றித்திரிகின்றன, இது லண்டன் மக்களை மிகவும் கவர்ந்த ஒரு ஜீவராசி என்கின்றனர்.
கொம்பன் வண்டின் விஞ்ஞானப் பெயர் லுகானஸ் செர்வஸ் (Lucanus cervus). அதாவது, ‘ஒளி’ என்ற பொருள் கொண்ட Luz என்ற வேர்ச்சொல்லிலிருந்து கிளக்கும் லுகானஸ். அதாவது, ஒளியும் பளபளப்பும் கொண்டது என்று பொருள்.
பார்க்க பயங்கரமாக இருக்கும் இந்த வண்டுகளினால் ஆபத்து எதுவும் இல்லை என்கிறது ஆய்வுகள். தூண்டினால் கடிக்கும் தன்மை கொண்டவை, ஆனால் இயல்பில் ஆக்ரோஷமற்ற ஜீவராசி என்கின்றன ஆய்வுகள்.