தமிழ்நாடு தொழில் மேம்பாடு வளர்ச்சிக்காக ஜெர்மனி தொழில்நுட்பக் கழகத்துடன் TIDCO ஒப்பந்தம்!
தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் முன்னணியில் உள்ள நிலையில், பிரான்ஹோபர் கழகத்துடனான இந்த கூட்டு முயற்சி உலக தரத்திலான நிபுணத்துவம் மூலம் மாநிலத்தின் உற்பத்தி, புதுமையாக்க பரப்பை மேம்படுத்தும்.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகமான டிட்கோ, உலகத் தரத்திலான அறிவுசார் மற்றும் புதுமையாக்க சூழலை உருவாக்கும் நோக்கத்தின் ஒரு பகுதியாக, ஜெர்மனியின் பிரான்ஹோபர் உற்பத்தி தொழில்நுட்ப கழகத்துடன் (Fraunhofer Institute for Production Technology - IPT) இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தொழில் மற்றும் தொழில்நுட்ப மாற்றத்திற்கான வரைவு திட்டத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த கூட்டு செயல்படும்.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் முன்னணியில் உள்ள நிலையில், இந்த கூட்டு முயற்சி பிரான்ஹோபர் கழகத்தின் உலக தரத்திலான நிபுணத்துவம் மூலம் மாநிலத்தின் உற்பத்தி, புதுமையாக்க பரப்பை மேம்படுத்தும். இதன் வாயிலாக டிட்கோ, உலகின் சிறந்த செயல்முறையை ஒருங்கிணைத்து, பல்கலை ஆய்வு பூங்காக்கள், சிறப்பாக்க மையங்கள், அறிவு நகரம் உள்ளிட்ட புதுமையாக்க தொகுப்புகள் செயல்பாட்டை ஊக்குவிக்கும்.
தமிழ்நாட்டை ஒரு லட்சம் கோடி பொருளாதாரமாக உருவாக்கும் மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைநோக்கு திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இது அமையும்.
"டிட்கோ மற்றும் Fraunhofer IPT இடையிலான கூட்டு முயற்சி தமிழ்நாட்டை இந்தியாவின் அறிவுசார் தலைநகராக மாற்றும் நம்முடைய பயணத்தை மேலும் வலுவாக்கும். மேம்பட்ட புதுமையாக்க மற்றும் அறிவுசார் சூழலை உருவாக்கும் அரசின் ஈடுபாட்டையும் இந்த கூட்டு முயற்சி உணர்த்துகிறது. இத்தகைய உலகத்தரம் வாய்ந்த அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றுவதன் மூலம், தொழில் 4.0 மையங்கள், அறிவுசார் நகரங்கள், பல்கலை பூங்காக்கள் அமைக்கப்படுவதற்கான பாதையை வகுக்கிறோம்,” என மாநில தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.
’நம்முடைய திறமையாளர்கள், தொழில் துறை வளம் மற்றும் கல்வி, தொழில் ஆய்வில் கவனம் ஆகிய தமிழ்நாட்டின் வலுவான அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த திட்டம் செயல்படும், என்றும் அமைச்சர் கூறினார்.
“இந்த முன்னோடி திட்டத்தில் Fraunhofer கழகத்துடன் இணைந்து செயல்படுவதும் உற்சாகம் கொள்கிறோம். புதுமையாக்க மற்றும் அறிவுசார் துறைகளில் தமிழ்நாட்டை உலக அளவில் நிறுத்தும் இலக்கின் ஒரு அங்கமாக இது அமைகிறது,” என டிட்கோ நிர்வாக இயக்குனர் சந்தீப் நந்துரி கூறினார்.
“டேவோசில் தமிழ்நாடு தொழில் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சில், நீடித்த வளர்ச்சி எதிர்காலத்திற்கான இணைந்த தொலைநோக்கு முக்கிய அம்சமாக அமைந்தது. தமிழ்நாடு மற்றும் ஜெர்மனி இரண்டிலும் முக்கியமாக விளங்குவதால் போக்குவரத்து சார்ந்த துறை சுழற்சி பொருளாதாரத்தின் கலங்கரை விளக்கமாக இருக்கும் வாய்ப்பு உள்ளது,” என Fraunhofer IPT டிவிஷன் இயக்குனர் Dr. Ing Günther Schuh கூறினார்.
இந்த கூட்டு முயற்சியின் முதல் கட்டத்தில், முக்கியத் துறைகள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் மாநில அளவில் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும். ஜெர்மனி கழகத்துடன் இணைந்து டிட்கோ சிறந்த செயல்முறை மாதிரிகள், தொழில் 4.0 மையங்கள் அமைவிடம் மற்றும் கூட்டு முயற்சி வாய்ப்புகளை கண்டறியும்.
மேலும், புதுமையாக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், தொழில் 4.0 போக்குகளை குறிப்பிட்ட துறைகளில் செயல்படுத்தும் வாய்ப்புகள் ஆய்வு செய்யப்படும். இந்த ஆய்வுகள் மற்றும் ஜெர்மனி கழகத்தின் மேம்பட்ட செயல்முறைகள் இணைந்து, மாநில தொழில் மேம்பாட்டிற்கு உதவும்.
இந்த திட்டத்தின் தயாரிப்பிற்காக, டிட்கோ நிர்வாக இயக்குனர் சந்தீப் நந்துரி தலையிலான தமிழ்நாடு உயர்மட்டக்குழு ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள Fraunhofer மையங்களில் விஜயம் செய்ய Fraunhofer அலுவலகம் ஏற்பாடு செய்திருந்தது.
Edited by Induja Raghunathan