காலை 3மணிக்கு எழுப்பி, தளர்ந்த கால்களை பிடித்து விட்டு வெற்றி மகளை வளர்த்த தந்தை!
உலக சாம்பியன்ஷிப் வென்று இந்தியாவை பெருமைப்பட வைத்த பிவி சிந்துவின் பின்னால் இருந்து, தனது வாழ்க்கையை இடைவிடாமல் தியாகம் செய்த இந்த பெருமைமிக்க தந்தையைக் கொண்டாடாமல் இருக்க முடியுமா.
உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவிற்காக முதல் தங்கம் வென்று இந்தியாவை பெருமை படுத்தினார் பி வி சிந்து. அவரது விடாமுயற்சியும், உழைப்பும் அவரை முன்னேற்றி வெற்றிப்பாதைக்கு வழிவகுத்துள்ளது. ஆனால் இந்தியா தனது முதல் பேட்மின்டன் உலக சாம்பியனைப் பெற, அந்த வீராங்கனையின் தந்தையும் தாயும் செய்தத் தியாகங்கள் எண்ணற்றதாக இருக்கும்.
நம்முடைய சமூகத்தில் ஒரு பெண் முன் வந்து விளையாட்டுத் துறையில் சாதிப்பது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. முன்னணியில் இருக்கும் இந்திய வீராங்கனைகளான சானிய மிர்சா, சாய்னா நேவால், பிவி சிந்து பல தருணங்களில் தாங்கள் விளையாட்டுத் துறையில் சாதிக்க தங்களது பெற்றோர், சமூகத்தை எதிர்த்து பல சவால்களை சந்தித்துள்ளதாக தெரிவித்தனர்.
சாய்னா நேவாலின் பாட்டி, பேரன் பிறக்கும் என்று எதிர்பார்த்ததால் தன் முகத்தை கூட பாட்டி பார்க்க மறுத்துவிட்டதாக சாய்னா இதற்கு முன்பு ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். ஆனால் அவரது பெற்றோர், சமூகத்தின் மரபுவழி மற்றும் நியாயமற்ற சிந்தனைகளைக் காரணம் காட்டி தன் மகளின் கனவை அழிக்க நினைக்கவில்லை, மாறாக அவருக்கு உறுதுணையாக நின்றுள்ளனர்.
சாய்னாவை போல பி வி சிந்துவின் வெற்றிக்குப்பின் நின்றுள்ளவர் அவரது தந்தை ரமணா. அவருடைய தந்தையின் ஆதரவால் தான் சிந்து நினைத்தததை அவரால் இன்று சாதிக்க முடிந்துள்ளது.
சிந்து தந்தையின் எண்ணற்ற ஆதரவும் தியாகமும்
பிவி சிந்து உலக சாம்பியன் ஆனபோது, தன் மகள் உச்சத்தை அடைய உதவுவதில் தனது வாழ்க்கையை இடைவிடாமல் தியாகம் செய்த இந்த பெருமைமிக்க தந்தையைக் கொண்டாட எல்லாக் காரணங்களும் இருக்கிறது.
“அவள் உலகை வெல்வாள் என்ற நம்பிக்கை எனக்கு எப்பொழுதுமே இருந்தது. என் நம்பிக்கைக்கு ஏற்ப இன்று என்னை மிகவும் பெருமைபடுத்திவிட்டாள். தங்கத்தை மெல்லிய கோட்டில் இரண்டு முறை தவறவிட்டாள், ஆனால் இன்று துவக்கத்தில் இருந்தே முன்னிலையில் இருந்து வென்றுவிட்டாள்.”
என் மகளை நினைத்து பெருமைகொள்கிறேஎன் என சிந்துவின் தந்தை ரமணா அவரின் வெற்றிக்கு பின் சொன்னார். தேசிய அளவிலான வாலிபால் அணியில் இருந்த ரமணா தனது மகளின் விளையாட்டுக் கனவை நனவாக்க உதவியுள்ளார். ஏன், வலிமையுடன் ஆக்ரோஷமாக விளையாட சிந்துவிற்கு கற்றுத் தந்ததே அவரது தந்தை தான்.
சிந்து ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிறகு ஒரு நேர்காணலில், இந்தியாவின் முன்னாள் இரட்டையர் வீரரான ஜே.பி.எஸ் வித்யாதர், சிந்துவை உலகத் தரம் வாய்ந்த வீரராக மாற்றுவதற்காக ஏற்பட்ட போராட்டங்கள் மற்றும் கடின உழைப்பை பற்றி பகிர்ந்திருந்தார். அப்பொழுது பேசிய அவர்,
“12 வருடங்களாக ஒவ்வொரு நாளும் அதிகாலை 3 மணிக்கு எழுந்து சிந்துவை பயிற்சிக்கு அழைத்துச் செல்வது என்பது எளிதல்ல. பயிற்சிக்காக மாரெட்பள்ளியில் இருந்து அவரது தந்தை கச்சிபவுலியில் உள்ள கோபிசந்தின் அகாடமிக்கு அழைத்து வந்து பின் கூட்டி செல்வார்; அதாவது நாள் ஒன்றுக்கு இரண்டு முறை 60கிமீ வரை பயணம் செய்வார்,” என்றார்.
இந்தியாவின் பேட்மின்டன் அசோசியேஷனின் இணைச் செயலாளர் ஏ. சவுத்ரி,
சிந்து பயிற்சியால் சோர்வைடையும் பொழுதெல்லாம் சிந்துவின் தந்தை அவரின் கால்களை நீவி விடுவார் என்றும், சிந்து அழைக்கும்போதெல்லாம் செல்வார் என்றும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “ரமணா சிந்துக்காக எல்லாவற்றையும் துறந்தார், மகளின் கனவிற்காக அவரை நிழல் போல தொடர்ந்தார் ரமணா. அவர் மாநில போட்டிகள் மற்றும் தேசிய நிகழ்வுகளில் கலந்துக்கொண்ட போது நெல்லூர், ராவலபாலம், பீமாவரம், சிராலா மற்றும் விஜயவாடா என்று எல்லா இடங்களுக்கும் சென்றுள்ளார். ரமணாவின் மனைவி விஜயலட்சுமி தனது மகளின் வாழ்க்கையை கவனித்துக் கொள்வதற்காக ரயில்வே வேலையில் இருந்து விஆர்எஸ் பெற முயன்றார்,” என்றார்.
இப்படி ஒரு பெற்றோர்கள் கிடைத்தது தனக்கு வரம் என்று பல தருணங்களில் சிந்து தெரிவித்துள்ளார்.
“விளையாட்டு வீரர்களே எனக்கு பெற்றோர்களாகக் கிடைத்தது எனக்கு அதிர்ஷ்டம். பெற்றோர் இருவரும் வாலிபால் வீரர்களாக இருந்ததால் ஏன் வாலிபால் இல்லை என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். இருப்பினும், பேட்மின்டன் விளையாட வேண்டும் என்று நான் எடுத்த முடிவை என் பெற்றோர் ஆதரித்தனர். நான் இப்பொழுது இந்த இடத்தில் இருக்கின்றேன் என்றால் என் பெற்றோர்கள் எனக்காக செய்த தியாகங்களே காரணம்,” என மனம் உருகியுள்ளார் சிந்து.
தேசமே அவரது வெற்றியை கொண்டாடும் இத்தருணத்தில் அவரது வெற்றிக்குப்பின் உறுதுணையாக நின்ற பெற்றோர்களைக் கொண்டாடுவதும் முக்கியம். பல சானிய மிர்சா, பி வி சிந்து உருவாகத் துணையாக நிற்கும் பெற்றோர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
தகவல் உதவி: www.iforher.com